பெண் என்பவள் சமூதாயத்தில் ஆணுக்கு நிகரான உரிமை பெற்றவள். இவள் பெற்ற தாயாகவும், பூமியாகவும், நதியாகவும், மொழியாகவும், விளை நிலமாகவும் பாவிக்கப்படுகிறாள். இவளே ஆதிப் பொதுவுடமைச் சமூகத்தில் தலைமைப் பொறுப் பேற்று வழி நடத்திச் சென்றாள் என்பது மானிடவிய லாளர்களின் கருத்தாகவும் உள்ளது. இவ்வாறாக சுதந்திரமாக இருந்த பெண் சமுதாயம் காலப் போக்கில் கற்பு, அகமணம் என்ற கருத்தாக்க நிலையில் உருவகப்படுத்தியும் பெண்களின் விடுதலை பறிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘சாதி’ என்னும் போர்வையில் பெண்ணின் உடைமையும் உரிமையும் மூடி மறைக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் வருகிறது. இவற்றை எல்லாம் சுருக்கமாக மானிடவியல் நோக்கில் ஆராய விரும்புகிறது இக்கட்டுரை.
ஆதிப்பொதுவுடமைச் சமூகமானது வேட்டைச் சமூகமாகவும் உற்பத்திமுறை இல்லாத காலமாகவும் இருந்தது. கிடைத்த பொருளை பகுத்துண்டு கூடி வாழ்ந்தனர். பெண் உறவும் தாயன்பும் பெண்ணுக்கு முதலிடம் தந்தன. கூட்டுக்கிளையே பெண்ணால் பரவிற்று.
தாய்வழிச் சமூகத்தைப் பற்றி ஆராய்ந்தவர்களுள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்களுள் ஒருவர் ஆங்கிலேய மானிடவியலாளர் எட்வர்ட் பர்னட் டைலர் ஆவார். இவரின் கூற்றுப்படி, வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலை தொடங்கி இறுதி நிலையான நாகரிகம் வரையில் பல படிநிலைகளில் மாற்றங்கள் காணப்படுகின்றன. நீண்ட படிநிலை வரிசையானது கடந்த காலப் படிநிலைகளை அறிவதற்கு உதவும் நிகழ்கால வடிவம் என்று டைலர் கருதினார். அதாவது பழங்கற்காலப் பண்பாட்டிற்குப் பிறகு தோன்றிய வேட்டுவச் சமூகம் தொடங்கிப் பழம்பெரும் நாகரிகங்கள் தோன்றியது வரையிலான படிமலர்ச்சியை இன்றைய நிகழ்காலப் படிநிலைகளைக் கொண்டு ஒப்பிடமுடியும் என்று டைலர் கருதினார். மேற்கூறிய அணுகுமுறையைக் கொண்டு டைலர் பேறுகாலத்தனிமை, சேய்வழி அழைத்தல் ஆகிய இரண்டு கூறுகளின் வழி தாய்வழிச் சமூகமே முதலில் தோன்றிய சமூகம் என்பதை நிறுவுகிறார் (பக்தவத்சலபாரதி 2008: 02).
சங்க காலத்தில் கணச் சமூகத்துக்குத் தாயே தலைமை பெற்றிருந்தாள். தாய்வழியாகவே வம்சாவளி குறிக்கப்பட்டது. இத்தகைய கணச்சமூகத்தில் தாயே அவளுடைய வம்சத்திற்குத் தலைமை ஏற்றிருந்ததைப் பின்வரும் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. புறம். 270, 276, 277 (மேலது: 06). போன்ற பாடல்கள் மூலம் தாய்வழிச் சமூகம் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. இவற்றின் மூலம் டைலர் குறிப்பிடும் தாய்வழிச் சமூகமானது தமிழ்ச்சமூகத்திற்குப் பொருந்தி வருவதைப் பார்க்க முடிகிறது.
தாய்வழிச் சமூகத்தைப் பற்றி ஆய்வு செய்த மானிடவியல் அறிஞர்களைப் பற்றிக் காண்போம். இந்தியாவில் ‘தாய் உரிமை’ (1941) என்னும் பொருளில் ஆய்வு செய்த யூ.ஆர்.எரன்ஃபெல்ஸ் பழந்தமிழகத்தில் தாய் உரிமை முறை இருந்தது என்கிறார். மேலும் தாய்த் தலைமைப் பண்பானது இந்திய பண்பாட்டில் குறிப்பாகத் திராவிடப் பண்பாட்டில் ஓங்கியிருக்கிறது என ஸ்கிமிட், காப்பர்ஸ் ஆகிய இனவியலர்கள் சுட்டுவதையும் எரன்ஃபெல்ஸ் குறிப்பிடுகிறார். ‘இந்தியாவில் சாதி’ (1961) என்னும் நூலை எழுதிய ஹட்டன் என்பாரும் பழந்தமிழகத்தில் தாய்த் தாயகம் இருந்திருக்க வேண்டும் என்கிறார் (மேலது :15). இந்தக் குறிப்புகள் அனைத்தும் பழந்தமிழகத்தில் தாய்ச் சமூகம் இருந்ததை வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளன.
அடுத்ததாக சங்க இலக்கியத்தில் பெண்களின் திருமணம் பல்வேறு நிலைகளில் நிகழ்ந்துள்ளது என்பதை சங்க இலக்கிய பாடல்கள் மூலம் அறியமுடிகிறது. அவை கற்பு மணம், களவு மணம், உடன்போக்கு மணம், பொருள் மணம், சேவை மணம், ஏறுதழுவல் மணம், மடல் மணம், திணைக் கலப்பு மணம், பலதார மணம், பரத்தை மணம், கடத்தல் மணம் போன்ற மணங்கள் நிகழ்ந்ததை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளது. இம்மணங்களைப் பார்க்கும் போது திருமணத்தின் வகைகளும் பல வகையாக இருந்துள்ளன என்பது புலப்படும்.
இவற்றைப் பார்க்கும் போது பெண்களின் சுதந்திரம் சில பகுதிகளில் உடைக்கப்பட்டும் சில பகுதிகளில் சுதந்திரமாக இருந்ததையும் காணமுடிகிறது.
ஆதிப்பொதுவுடமைச் சமூகத்தின் எச்சமாக களவு மணமும், திணைக்கலப்பு மணமும் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. பெற்றோர் அறியாமல் தலைவனும் தலைவியும் கண்டு இணைவது களவு மணம் ஆகும். பிறர் அறியாமல் ஆணும் பெண்ணும் மணந்து கொள் வதாகிய களவு மணத்தை ‘ஒன்று மணம்’ என்று குறிப்பிடுகிறார் (மனோன்மணி சண்முகதாஸ் 2007:27). அவர்கள் வாழும் சூழலுக்கேற்பச் சிந்திக்கின்ற இடம் மாறுபடும். திணைப்புனத்திலோ நீர்ச்சுனைகளிலோ கடற்கரைச் சோலைகளிலோ கண்டு கூடினர். இயற்கை வளம் நிறைந்த குறிஞ்சியைப் புணர்ச்சிக்குரிய நிலமாகக் கொண்டனர். களவுக் காதலும் கற்புக் காதலும் எல்லா நிலத்திலும் நிகழ்வது உலக வழக்கமாகும் (வ.சுப.மாணிக்கம் 2007:38).
யாயும் ஞாயும் யாரா கியரோ ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயனீர் போல
......................... (குறுந். 40)
எனும் பாடல் வழி அறியலாம்.
களவு மணம் போல திணைக்கலப்பு மணம் நிகழ்ந்துள்ளது. தலைவனும் தலைவியும் வெவ் வேறு நிலத்தவர்கள். இத்திணைக் கலப்பு மணத்தைப் புறமணத்திற்குச் சான்றாகக் கொள்ளலாம். இதனையே,
இதற்கிது மாண்ட தென்னா ததற்பட்டு
ஆண் டொழிந்தன்றே (குறுந்.184:3-4)
என்ற பாடலின் மூலம் குலத்தகுதி பார்க்காமல் காதல் ஏற்பட்டதை அறிய முடிகிறது.
இவ்வகையான திருமணங்கள் இன்று மறுக்கப்பட்டும் எதிர்க்கப்பட்டும் வருகின்றன. ஒவ்வொரு சமூகத்தாரும் அவர்களுக்குள்ளே பெண் எடுத்து பெண் கொடுக்கும் அகமண முறை வழக்கில் இருந்து வருகிறது. இதிலிருந்து பெண்களின் திருமண விருப்பம் முடக்கப்பட்டு உள்ளது. மாறாக இன்றும் பெண் விருப்பமுறை மணம் பழங்குடி பெண்களிடம் காணமுடிகிறது. உதாரணமாக நீலகிரிப் படகர் இனத் திருமணங்களில் இந்த வழக்கம் நிலவுகிறது. ‘பொன்னைக் கொடுத்தோம், பெண்ணைக் கூட்டிச் செல்கிறோம்’ என்று மணமகன் வீட்டுக்குப் பெண்ணை அழைத்துச் செல்வர். அவள் அங்கே கருத்தரித்த பின்னரே, அவளது குழந்தைக்குத் தகப்பன், அவளுக்கு தாலி கட்டும் சடங்கு நிகழும். அப்படி அவள் தாயாகும் நிலை ஏற்படவில்லை யெனில் அவள் மீண்டும் தாய் வீட்டுக்கே திரும்பி விடுவாள். ‘பெண்ணைக் கொண்டு விட்டு விட்டோம். நாங்கள் கொடுத்த பொருளைத் தாருங்கள்’ என்று திரும்பப் பெற்று இன்னொரு பெண்ணைத் தேடிச் செல்வார்கள். ஒரு குடும்பத்தில் இருந்து திரும்பி வந்தாலும் வேறு குடும்பத்தினர் பொன் கொண்டு வந்து பெண் கேட்கும் வழக்கம் உண்டு (ராஜம் கிருஷ்ணன் 1994: 57). இந்த இடைநிலைக் காலத்திலும் கற்புக் கொள்கை பெண்ணைப் பிணைத்திருக்கவில்லை.
தமிழ்ச் சமூகங்களில் தாய்வழிச் சமூகம் இருந்ததை ஏற்கெனவே பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இன்றும் பல சமூகங்கள் இருந்து வருகின்றன என்பதை பல்வேறு மானுடவியல் அறிஞர்களின் கூற்று மூலம் அறியமுடிகிறது. இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் உள்ளனர். கோட்டைப் பிள்ளைமார், நாங்குடி வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், அரும்புக்கட்டி வேளாளர், இல்லத்துப் பிள்ளைமார், ஆப்பநேரி மறவர், அஞ்சு கொத்து மறவர், கிருத்துவ மறவர் போன்றவர்களிடம் தாய்வழிச் சமூகம் இருப்பதைக் காணமுடியும் (பக்தவத்சல பாரதி 2008: 15-29).
இந்தியாவில் மக்கள் (People of India) என்னும் மாபெரும் ஆய்வுத் திட்டத்தை 1985இல் மேற் கொண்ட இந்திய மானிடவியல் மதிப்பாய்வகம் (Anthropological survey of India) தமிழகத்தின் 364 சமூகங்களையும் பற்றிய விவரங்களை இத்திட்டத்தின் 40ஆவது தொகுதியாக வெளியிட்டது. இத்தொகுதி மூன்று பகுதிகளைக் கொண்டது. இந்நூல் வரிசை களுக்கு முன்னுரை எழுதிய மதிப்பாய்வகத்தின் தலைமை இயக்குநராக இருந்த கே.எஸ்.சிங் தென்னிந்தியச் சமூகங்களில் மிகவும் பரவலாகக் காணப்படும் மூன்று தாய்வழி எச்சக் கூறுகளைக் குறிப்பிடுகிறார். முதலாவது பெண்கள் தங்கள் தலைப்பிரசவத்தை தாய் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எச்சக்கூறு.
அதோடு சில சமூகங் களில் தலைப்பிரசவம் மட்டுமல்லாமல் முதலிரண்டு பிரசவங்களையும் தாய் வீட்டிலேயே நிகழ்த்த வேண்டும் என்றும் விரும்புகின்றனர். இனச் சந்ததியின் தோற்றமும் தொடர்ச்சியும் தாய்வழித் தாயகத்தில் நிகழ வேண்டும் என்பது தாய்வழி மனப்பான்மையாகும். தாய்வழி என்பது தன் தாயாதிகளின் வீடாகக் கொள்வது ஆதிகாலத் தாய்வழிச் சமூக மரபாகும் என்பார் சிங். அவ்வாறே திருமணமான தம்பதியினருக்குச் செய்யப்படும் ‘சாந்தி முகூர்த்தம்’ மணப்பெண்ணின் தாயகத்தில் நிகழ வேண்டும் என்பது மேற்கூறிய கருத்தாக்கத்தின் தொடர்ச்சியேயாகும் என்கிறார். தென்னிந்தியச் சமூகங்களில் பெண் குழந்தைகளுக்கு மொட்டையடித்தலும் மேற்படி ஆய்வுத்திட்டத்தின் மூலம் பரவலாகக் கிடைத்த தரவாகும் என்கிறார் சிங் (1997 : xxxx).
அடுத்த நிலையில் பெண் நிலத்தோடு பிணைந் திருப்பதை காலந்தோறும் காணமுடிகிறது. ஆதி சமூதாயத்தில் ஆண்கள் வேட்டைக்குச் சென்றும் பெண்கள் விவசாயம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டும் வந்தனர். குறிப்பாக விதை விதைத்தல், நாற்று நடுதல், களை பறித்தல், அறுவடை செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். இன்றும் சில பழங்குடியினரிடையே விதைப்பு சடங்கானது பலியிட்ட மறியின் குருதியில் விதையைத் தேய்த்து விதைக்கின்றனர். இரத்தம் உயிர்ச் சக்தியின் அறிகுறி. இரத்தத்தில் விதை நனைக்கப்பட்டால் வளரும் என்பது அக்கால நம்பிக்கையாகும். இதனை பழங் குடியினத்தவர் கோயர்களிடமும் காணமுடிகிறது (சுப்பிரமணியன் 2011: 22). ஆண் சமூகம் தலைமைப் பொறுப்பேற்றபோது விவசாயமும் பெண்களின் கையில் இருந்து ஆண்களிடம் மாறியது. இவர்கள் நிலவுடமையாளர், மிராசுதார் என்றும் அழைக்கப் பட்டார்கள். ஆனால் பெண்களை நிலவுடைமை யாளர்களாக எங்கும் குறிப்பிடப்படுவதில்லை.
ஆதிகாலம் முதல் பெண் தலைமைப் பொறுப் பேற்றவளாக உள்ளதால் பெண் ஆனவள் தெய்வமாக வழிபடப்பட்டாள். இவளைத் தாயாகவும் கன்னி யாகவும் உருவகப்படுத்திக் கூறுவது மிகப் பழங்காலத்திலிருந்தே மரபாகவும் உள்ளது. சங்க இலக்கியங்களில் தாய்த் தெய்வம் காட்டில் உறை பவளாகவே கூறப்பட்டுள்ளது மிகவும் முக்கியமான செய்தியாகும். ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்று தொல்காப்பியர் கூறினும் மாயோனுக்கு முன்னுரை காடுறை கடவுளாகத் தாய்த் தெய்வமே இருந்திருக்கிறாள். இதனையே,
‘............... ஓங்கு புகழ்
கானமர் செல்வி அருளலின் வெண்காற்
பல்படைப் புரவி எய்திய தொல்லிசை (அகம்:.345)
இப்பாடல் கானமர் செல்வி என்ற தாய்த் தெய்வத்தைக் கூறுகிறது. மேலும் இவள் தொன் மூதாட்டி, முது மூதாட்டி, முதியாள் என்று கூறப் படுவதைக் காணலாம். செல்வம் என்றாலே செழிப்பு என்ற பொருள் தோன்றுகிறது. தாய்த் தெய்வங்கள் செழிப்புத் தெய்வங்களாகும். படைப்புச் சக்தியைக் கொண்ட தெய்வங்களாகும் (சாமி 2011: 04).
பழையர் போன்ற பழங்குடிகளின் கடவுளே பழயோள் என்பதைக் கவனிக்க வேண்டும். இலை யுடையணிந்து தொழும் வழக்கம் சங்க காலத்திலும் இருந்தது தெளிவாகிறது. மற்றும் ‘நக்னசபரி’ என்ற பெயரில் இந்தத் தெய்வத்தை இந்துக்களும் தொழுதனர். ஆடையற்ற பெண் தெய்வம் என்பது இதன் பொருள் (மேலது: 13). இதைத் தவிர விலங்குகளிலும் பெண் விலங்குகளை வணங்குகின்றனர். எடுத்துக்காட்டாக பசுவை புனித விலங்காகவும், தெய்வமாகவும் இந்துக்கள் வழிபடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் பசு தன்னுடைய இனப்பெருக்கத்திற்காகவும், பால் உற்பத்தி முறை என்பது மனித இனத்திற்கு இன்றி யமையாததாக இருந்ததால் பசுவை வணங்கினர்.
பழங்காலச் சமூதாயத்தில் தேவராட்டி (மந்திரப் பூசாரிணி) புகழ் நிறைந்து விளங்கியதற்குக் காரணம் தொல் சமூகமே ஆகும். திருமுருகாற்றுப்படையில் ‘குறமகள் வெறியாட்டு’ நிகழ்த்துதல் கூறப்பட்டு உள்ளது. சிலப்பதிகாரம் கொற்றவை வழிபாட்டைச் சாலினி நடத்துவதாகச் சித்திரிக்கிறது. கொற்றவையாகக் கோலம் கொண்டதும் எயினர் குலக்குமரியே ஆவாள். ‘படிமத்தாள்’ முன்னும் கூறுதலை அகநானூறு உணர்த்தும். ‘அகவன் மகள்’ குறிசொல்லுதலைக் குறுந்தொகை சுட்டிக்காட்டுகிறது. ‘கட்டுவிச்சி’ கழங்கு கொண்டு குறிசொல்வதை அகநானூறு உணர்த்துகிறது. இவ்வாறு பெண் என்பவள் தெய்வமாக மட்டும் போற்றப்படாமல் பூசாரி யாகவும் இருந்துள்ளனர் என்பதும் புலப்படும்.
சுதந்திரமாக இருந்த பெண் சமூகம் சாதியம் உருவான காலத்தில் கீழ்நிலையில் தள்ளப்பட்டாள். பெண்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று மனுதர்மம் சில சுலோகங்கள் மூலம் வெளிப்படையாக விவரிக்கிறது. இவை,
V.152. கணவனைத் தவிர வேறொருவர் மூலம் ஒருத்தி பெறும் குழந்தை அவளுடையதல்ல. வேறொருவனுடைய மனைவி மூலம் பெறும் குழந்தை பெற்றவனுக்குரியதில்லை. கற்புடைய பெண்ணின் இரண்டாவது கணவனுக்குப் பிறக்கும் குழந்தை அவளுக்குரியதல்ல.
IX .86. கணவனைப் பிரிந்த பெண், தந்தை, மகன், சகோதரன், மாமியார் அல்லது தனது மாமா ஆகியோரைப் பிரிந்து வாழக்கூடாது. அவ்வாறு இல்லையெனில் தண்டைக்கு உள்ளாவாள்.
IX .88. உரிய வயதை அடையாவிட்டாலும் அதாவது பருவமடையாவிட்டாலும் தந்தை தன் மகளை விதிமுறைகளுக்கேற்ப சமமான சாதியைச் சேர்ந்த சிறப்பான ஒருவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
V .161. குழந்தைகளைப் பெற வேண்டும் என்ற விருப்பத்தில் மறுமணம் செய்து கொள்ளும் ஒரு பெண் தன் கணவனை அவமதிப்பதோடு தனக்குத் தானே இழிவையுந் தேடிக் கொள்கிறாள். அவள் சொர்க்கத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவாள்.
9:18. பெண்களுக்கும் வேதங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அடுத்ததாக மனு குறிப்பிடும் அனுலோம, பிரதிலோம எனும் கலப்பு மணமுறையாகும். அனுலோம என்பது உயர்குல ஆணுக்கும் தாழ்ந்த குலப் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தை. இக்குழந்தை தந்தையின் வருணமாகவே கருதப்படுவர். அதே போல் உயர்குல தாய்க்கும் தாழ்ந்த குல ஆணுக்கும் பிறக்கும் குழந்தை பிரதிலோம முறையாகும். இவர் களுக்குப் பிறக்கும் குழந்தை வருணத்தில் சேர்க்கப் படாமல் தனித்தே நிற்கும். இவற்றை ஒட்டு மொத்த மாகக் காணும் போது பெண் என்பவள் தனித்து இருக்கக் கூடாது என்றும் காலம் முழுவதும் யாரேனும் ஒருவரோடு சார்ந்து வாழ வேண்டும், என்றும் தன்னுடைய சாதி ஆண்களை மணக்க வேண்டும் என்றும் இன்னும் பல விதிகளை பெண்களின் மீது சுமத்துகிறது. ஆனால் ஆண் என்பவன் சமூதாயத்தில் தன் விருப்பம் போல வாழ உரிமை அளிக்கும் மனு பெண்களின் சுதந்திரத்தைப் பறிப்பது எந்தவிதத்தில் நியாயம்?
பெண்ணியம் பற்றி பலர் பேசி இருந்தாலும் இக்கட்டுரை குறிப்பாக இரண்டு அறிஞர்களான அம்பேத்கர், பெரியார் பார்வையில் சில கருத்துகளை முன்வைக்க விழைகிறது. அம்பேத்கர் கூற்றுப்படி, ‘இந்து சமூதாயம் என்பது பரஸ்பரம் தனித்தனியே இயங்கும் அலகுகளின் கூட்டமைப்பாக மட்டும் இருக்குமேயானால் இப்பிரச்சினை எளிதாகவே இருக்கும். ஆனால், சாதியோ ஏற்கெனவே ஓரியல்பாய் இருப்பதைப் பிணைத்திருப்பதாய் இருக்கிறது’. எனவே, சாதியத்தின் தோற்றத்தை விளக்குவது என்பது இந்தப் பிணைத்திருக்கும் நிகழ்வுப் போக்கை விளக்குவதாகும்.
அகமணம் கொள்பவையாக உள்ள இச்சமூகங்கள், ஏறத்தாழ இடம் பெயர்க்கப்பட்ட இடங்களிலேயே தங்கள் உறைவிடங்கள் அமைத்துக் கொண்டவையும் ஒன்றுக்கொன்று ஒரு சிறிதும் தொடர்பில்லாதவையுமாக ஆகியிருப்பதைக் கண்கூடாகக் காணலாம். ஆகவே சாதி என்பது இன்னமும் புதுமையான இயல்பு கொண்டதாகிறது. இப்புதிய இயல்பு இரத்த உறவுள்ள அகமணச் சமூக அல்லது கணவழியிலான குழுக்களை மட்டுமே கருதி மேற்கொள்ளப்பட்ட நிலைபாடுகளில் காணப்படாதது ஆகும். அகமண வழக்கம் வாயிலாக மக்களைக் குறிப்பிட்டதும் வரை யறுக்கப்பட்டதுமான தனித்தனி அலகுகளாக்கி, எந்தவொரு அலகும் மற்ற வேறு எந்தவொரு அலகோடும் பிணைவதிலிருந்து தந்திரமாகத் தடுப்பதே சாதி என்பதன் பொருளாகும். ஆகவே அகமணமே, சாதிக்கு உரிய தனித்தன்மையான ஒரே இயல்பு என்பது தவிர்க்க முடியாத முடிவாகப் பெறப்படுகிறது (அம்பேத்கர் 1990: 05). இவர் குறிப்பிடும் அகமண முறை என்பது பெண்ணைச் சார்ந்தே உள்ளதே தவிர ஆண் சமூகத்தைச் சார்ந்து இருப்பதில்லை. அகமணம் உடைந்தால் பெண் விருப்பத்திற்கு ஏற்ப வெளியே திருமணம் செய்து கொள்ளமுடியும். ஆகவே இங்கு அகமணம் என்பது உடைக்கப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.
பெரியாரின் பார்வையில் பெண்ணியம் பற்றி சற்று தொட்டுச் செல்வோம். இவர் சாதி ஒழிப்பிற்கு சாதிக் கலப்புத் திருமணம் செய்வதே சிறந்த வழி என்று குறிப்பிடுகிறார். மேலும் இவர் கூறுவது, சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரம், சமத்துவம் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாததே யாகும். மனித சுபாவங்களுக்கு இவ்விரண்டு வார்த்தைகளும் பொறுத்தமற்றதேயாகும். வாழ்க்கை ஒப்பந்தப் போதிலும் அவை இயற்கைக்கு முரணானது என்பதை யாவரும் ஒப்புக் கொண்டு தானாக வேண்டும். அதற்கு ஆதாரம் என்னவென்றால், மேலே சொல்லப்பட்டது போலவே அவ்விரண்டு வார்த்தையின் தத்துவங்களும் பெண்கள் மீது சுமத்தப்பட்டு ஆண்களின் மீது சுமத்தப்பட்டாலும், ஆண்கள் அதற்காகப் பயப்படவோ அவமானப் படவோ கட்டுப்பட்டிருக்கவோ இல்லாமல் இருப்பதும் அதைப் பற்றி லட்சியம் செய்யாமையாகும். கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு என்பதும் மற்றவர்களை அடிமையாக்கவும், கட்டுப்படுத்தவும் உண்டாக்கப்பட்ட சுயநலச் சூழ்ச்சி நிறைந்த தன்மை கொண்டது என்பதும் தானாகவே விளங்கிவிடும் (பெரியார் 2010: 39).
இவர்கள் இருவரும் குறிப்பிட்டு பேசும் சாதியமைப்பு என்பது பெண்களை மையப்படுத்தி உள்ளது. பெண்கள் இல்லாமல் சாதி இல்லை, சாதி இல்லாமல் பெண்கள் இல்லை என்கிற முடிவுக்கு வரமுடிகிறது. எனவே சாதியமைப்பு ஒழிந்தால்தான் பெண் விடுதலை சாத்தியம்.
தொகுப்பாக, இதுவரை தமிழ்ச் சமூகமானது இன்றும் சில இடங்களில் தாய்வழிச் சமூகத்தின் எச்சம் இருந்து வருகிறது என்பது தெளிவாகிறது. பெண் என்பவள் நதியாகவும், நிலமாகவும், மொழி யாகவும், நாடாகவும், கல்வியாகவும், செல்வத்தின் குறியீடாகவும், வளமையின் குறியீடாகவும் இன்னும் பல படிநிலைகளில் காட்டப்பட்டாலும், ஆண் சமூக மானது பெண்ணை தனக்குக் கீழ் கொண்டு வரும் போது மேலே கூறப்படும் பெண்ணின் பெருமைகள் எல்லாம் ஆண், பெண்ணை அடையும் பொழுது அவன் கையிலேயே ஒட்டு மொத்தமும் அடங்குகிறது. பெண் உடைமைப் பொருளாகவும், சொத்தாகவும் தான் பார்க்கப்படுகிறாள். இன்றும் பெண் என்பவள் அகமணம், கற்பு என்ற கருத்தாக்கத்தில் இருந்து வெளிவர முடியவில்லை. ஒரு காலத்தில் நிலத்திற்கு உரிமையாக இருந்த பெண் இன்று நிலத்தில் இருந்து விலகி இரண்டறக் காணப்படுகிறாள்.
பெண் தெய்வ வழிபாடு பரவலாகக் காணப் பட்டாலும் இன்று பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இயற்கையாக வழிபட்ட முறையில் இருந்து மாறி வைதீக வழிபாட்டு முறையில் பல மாற்றங்கள் தோன்றின. மூதாதையரின் பெயரில் இருந்தவை எல்லாம் வடமொழிப் பெயர்கள் பல புகுத்தப்பட்டன. சிறிய நடுகல் வழிபாட்டில் இருந்து உருவ வழிபாடு முறை தோன்றியது. ஒரு காலத்தில் கோயில் பூசாரியாக இருந்தவள் காலப்போக்கில் சில கோயில்களில் நுழைவதற்கு தடை ஏற்படுத்துவது எந்தவிதத்தில் நியாயமாகும்?
மனுதர்மம் பெண்ணை கீழ்நிலையிலேயே வைத்துள்ளது. பெண்கள் வேதம் கற்கக் கூடாது, ஆண்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதோடு இன்னும் பிற கீழ்நிலைகளில் வைத் துள்ளது. பெண் என்பவள் கணவனைத் தவிர மற்ற ஆண்களுடன் பழகக் கூடாது போன்ற விதிகளையும் வகுத்துள்ளது. மனுவின் மொத்த நோக்கத்தைக் கவனிக்கும் போது பெண் என்பவள் ஆண் சமூகத்தின் குலம், வருணத்தைப் பாதுகாக்க பெண் கற்புடன் வாழ்க்கை நடத்த வேண்டும் என்கிறது. சாதி உருவானதில் ஆண்களின் பங்கே மிக அதிகம் ஏனெனில் பிரம்மாவின் உடலில் இருந்து பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வருணங்கள் தோன்றின. இவ்வருணங்கள் எல்லாம் ஆண்களாகவே சித்திரிக்கப்படுகின்றனவே தவிர பெண் வருணங்கள் ஏதும் சித்திரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெண்ணே குடும்பத்தில் உள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும் பொறுப்பு ஆகின்றாள். குடும்பத்தில் நிகழும் சடங்கு முறையான பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்தும் சாதிய முறையில் நிகழ்வதால் பெண்ணானவள் முழு பொறுப்பேற்கிறாள். சாதியமானது சடங்குகளின் மூலம் இவளை காலம் காலமாக தொடர்ந்து துரத்தி வருகிறது. பெண்ணும் சாதியும் இரண்டறக் கலந்தே நிற்கிறது. அடுத்ததாக ‘கௌரவக் கொலைகள்’ என்ற பெயரில் பல மனித உயிர்கள் பறிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு சமூகமும் தங்கள் சாதிப் பெருமையை காப்பாற்றிக் கொள்வதாக நினைத்துக் கொள்கின்றனர். ஒரு சாதி தன்னை விட கீழ்சாதியில் திருமணம் செய்து கொள்ள விரும்பாத சாதி தன்னை விட மேல்சாதியில் திருமணம் செய்து கொள்வதை பெருமையாக நினைக்கின்றனர். இதில் பெண் காதலித்து வேறு கீழ்சாதியில் திருமணம் செய்ய முற்படும் போது அவள் கொலை செய்ய காரணம் அவள் கற்பு மூலம் தன்னுடைய குலத்தகுதி இழக்கப்படுகிறாள் என்பதே காரணம். ஆகவே சாதி முறை ஒழிந்தால்தான் பெண் விடுதலையும் சாத்தியமாகும்.
பெண் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் பல சீர்திருத்த அமைப்புகள் தோன்றின. அரசின் சமூக சட்டங்கள் பல தோன்றின. 18,19ஆம் நூற்றாண்டில் பெண்கல்வி அறிமுகம், பெண்கள் வேலைவாய்ப்பு களில் பங்கேற்கத் தொடங்கினர். விஞ்ஞான வளர்ச்சி அடைந்த காலத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு
பல சட்டங்கள் இயற்றிய போதும் ஆங்காங்கே பெண்களின் வளர்ச்சி ஏதோ ஒரு காரணத்திற்காக முடக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் வருகின்றது. இந்த முடக்கம் என்பது குறிப்பிட்ட சாதிப் பெண்களுக்கு என்று இல்லாமல் மேல்சாதி பிராமணப் பெண்கள் முதல் அடித்தட்டு வரையில் உள்ள சூத்திரப் பெண்கள் வரையும் அடங்கியுள்ளனர். நவீன சமூகத்தில் பெண்கள் சுதந்திரம் பற்றிப் பேசப்பட்டு வந்தாலும் சமூகக் கட்டமைப்பு என்னும் விதி பெண்ணை இறுக்கியே பிடித்திருக்கிறது எனலாம். இதற்கு மாறாக சொத்துடமை, கல்வியறிவு இல்லாத பழங்குடி சமூகத்தில் இன்றும் பெண்கள் தங்களுடைய முழு சுதந்திரத்தை எவ்வித தடையுமின்றி அனுபவித்து வருகிறாள். ஆண்களும் பெண்களும் சமமாக வாழ்கின்றனர். ஆண்கள் பெண்களுக்கு எந்த விதமான தடையும் ஏற்படுத்துவதில்லை. சமகால மனித சமூதாயம் பேசும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், பெண் விடுதலை, பெண் உரிமை, பாலின சமத்துவம் பேசும் நவீன சமூதாயம் அதற்கான பல கூறுகளை தக்க வைத்திருக்கும் பழங்குடி சமூகத்தி லிருந்து இவையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
துணைநூற் பட்டியல்
1) அம்பேத்கர். 1990. இந்தியாவில் சாதிகள். மதுரை: கார்முகில் பதிப்பகம்.
2) ஐயங்கார். 2013. டாக்டர் அம்பேத்கர். சென்னை: வ.உ.சி.நூலகம்.
3) சசிவல்லி, வி.சி. 2010. தமிழர் திருமணம். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
4) சாமி, பி.எல். 2011. தமிழ் இலக்கியத்தில் தாய்த் தெய்வ வழிபாடு. சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
5) சுப்பிரமணி, கா. 2011. சங்க காலச் சமூதாயம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
6) தந்தை பெரியார். 2010. பெண் ஏன் அடிமையானாள்?. சென்னை: பாரதி புத்தகாலயம்.
7) பக்தவத்சல பாரதி. 2008. தமிழர் மானிடவியல். திருச்சி: புத்தாநத்தம்.
8) மாணிக்கம், வ.சுப. 2002 (1962). தமிழ்க் காதல். சென்னை: பாரி நிலையம்.
9) மனோன்மணி சண்முகதாஸ். 2007. சங்ககாலத் திருமண நடைமுறைகள். கொழும்பு - சென்னை: குமரன் புத்தக இல்லம்.
10) ராஜம் கிருஷ்ணன். 1994. காலந்தோறும் பெண்கள். புது டெல்லி: நேஷனல் புக் டிரஸ்ட்.
11) லெஸ்லி, சி. ஒர். (தமிழில்: வி. நடராஜன்). 2005. தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள். கோயம்புத்தூர். விடியல் பதிப்பகம்.
12) வீரமணி, கி. 2009 (2004). அசல் மனுதரும சாஸ்திரம். சென்னை: திராவிடர் கழக வெளீயிடு.