உடுமலை சங்கரை நேரடியாகப் படுகொலை செய்தவர்களுக்கு திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை அறிவித்திருந்தது. அதை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (22.06.2020) ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளது. இந்த ஜாதி ஆணவப் படுகொலைக்குப் பின்னணியாக இருந்த தோழர் கவுசல்யாவின் பெற்றோரை விடுதலை செய்து விட்டது. ஜாதி எதிர்ப்புக் களத்தில் போராடும் பல அமைப்புகளின் தோழர்கள் சமூக வலைத்தளங்கள் வழியாகத் தங்களின் கோபங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
"மேற்கண்ட நேரடிக் குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். தமிழக அரசு நீதிமன்றத்தில் இன்னும் அக்கறையோடு வழக்காடியிருக்க வேண்டும்
இதுபோன்ற ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுமையான தனியான சட்டம் இயற்றப்பட வேண்டும்."
என்பவை போன்ற பல கருத்துக்களை பல அமைப்புகளின் தோழர்களும், தலைவர்களும் தெரிவித்து வருகிறார்கள். இவையெல்லாம் நேரடியாகக் குற்றத்தில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க அவசியம் தேவை தான்.
ஆனால் இந்தக் குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் ஜாதி, ஜாதியைக் காப்பாற்றும் இந்து மதம், இந்து மத சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் தான் என்பதில் உண்மையான ஜாதி ஒழிப்பாளர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது.
திருப்பூர் நீதிமன்றத்தில் இந்த ஜாதி ஆணவக் கொலையாளிகளுக்கு எதிராக மரண தண்டனையே அறிவிக்கப்பட்டு விட்டது. அதைக் கண்டு எந்த ஜாதி வெறியனும் ஆணவப் படுகொலையை நிறுத்தி விட்டானா? கொரோனா ஊரடங்குக் காலத்திலும்கூட தொடர்ச்சியாக ஜாதி ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஜாதி மறுப்பு இணையர்கள் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, பிரித்து வைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இந்த சமூகச் சூழலில் கடுமையான தனிச் சட்டம் வந்தாலோ - அக்கறையோடு வழக்காடும் அரசுகள் அமைந்து விடுவதாலோ – ஜாதி ஒழிப்புச் சிந்தனையாளர்களே உச்சநீதி மன்றத்திற்கும் நீதிபதிகளாக வந்து விடுவதாலோ சமுதாயத்தில் நிலவும் இந்து மதப் பொதுப் புத்தியில் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது?
வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்தவர் தனது மகளைத் திருமணம் செய்தால் அவரை வெட்டிக் கொல்ல வேண்டிய அளவுக்கு காட்டுமிராண்டிகளாக வாழ்கிறார்கள் என்றால், அந்தக் காட்டுமிராண்டித்தனத்தை அவர்களுக்குள் திணித்தது இந்து மதமும், அதன் சாஸ்திரங்களும், கீதையின் உபதேசங்களுமே ஆகும்.
சங்கர் படுகொலை வழக்கில் நேரடியாக கொலையில் ஈடுபட்டவர்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்களை இயக்கிய, இயக்கிக் கொண்டிருக்கும் சீரழிவுச் சிந்தனையான இந்து மதத்தை நாம் இன்னும் குற்றவாளிக் கூண்டில்கூட ஏற்றவில்லை.
அந்த இந்து மத உளவியலை வாழ்வியலாக ஏற்று வாழ்ந்து கொண்டு, இதுபோன்ற பல ஆணவப் படுகொலைகளுக்கும், ஆயிரக்கணக்கான தீண்டாமை வன்கொடுமைகளுக்கும் காரணமாக இருந்தும்கூட - இந்தக் குற்றங்களுக்கு நாமும் காரணம் என்ற குற்ற உணர்ச்சி சிறு துளியும் இல்லாத பல கோடி மக்களையும் பற்றி நாம் யோசிப்பதில்லை. இந்த மனநோயாளிகளை இந்து மத நோயிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுவதில்லை.
ஆணவப் படுகொலைகளுக்கு கடுமையான தனிச் சட்டம் வேண்டும் என்று கூறும் பல அமைப்புகளின் தலைவர்கள்கூட அந்த ஆணவப் படுகொலைகளுக்கு அடிப்படைக் காரணமான இந்து மதத்தைப் பற்றி விவாதிப்பதில்லை.
இதோ மனு சாஸ்திரம் கூறுவதைப் பாருங்கள்...
“உயர்ந்த ஜாதி கன்னிகையை மணந்த தாழ்ந்த ஜாதியானுக்கு மரணம் வரையில் தண்டனை விதிக்க வேண்டியது” - மனுசாஸ்திரம், அத்தியாயம் 8 ஸ்லோகம் 366
இந்த மனுசாஸ்திரமே 20 நூற்றாண்டுகளாக இந்த நாட்டில் அரசியல் சட்டமாகவும், சிவில், கிரிமினல் சட்டங்களாகவும் ஆட்சி செலுத்தியுள்ளது. அந்த சட்டங்களின் விதிகளே இந்து மதத்தை ஏற்றுக் கொண்ட பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் அனைவருக்கும் பண்பாடாகவும், வாழ்க்கை நெறியாகவும் அன்றாட வாழ்விலும் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த நிலையைப் பற்றி தோழர் பெரியார் பேசிய ஒரு உரையைப் பாருங்கள்.
…ஒரு மனிதன் தன்மேலெல்லாம் மலத்தை எடுத்துப் பூசிக் கொண்டு வந்து எதிரில் நின்று “என்னைப் பார்த்து யாரும் அசங்கயப் படக்கூடாது. என்னை எட்டிப் போ என்று யாரும் சொல்லக் கூடாது” என்று சொன்னால் யாராவது கேட்பார்களா? அல்லது அது நியாயமாகவாவது இருக்குமா? அல்லது “மலம் பூசிக் கொண்டு வருபவர்களைப் பார்த்து யாரும் அசங்கயப் படக்கூடாது எட்டி நில் என்று சொல்லக் கூடாது” என்று இந்தியன் பினல் கோடில் அதாவது கிரிமினல் சட்ட புஸ்தகத்தில் ஒரு செக்ஷன் போட்டு அதற்கு ஒரு வருஷ தண்டணை என்றும் போட்டு விட்டதினாலேயே அந்தப்படி அசங்கயப்பட்டு எட்டி நில் என்று சொன்னவர்களில் இரண்டொருவரை தண்டித்து விட்டதினாலேயே அசங்கயப்படும் குணத்தை மக்களிடமிருந்து மாற்றிவிட முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.
இதுபோலவேதான், இந்துக்களில் மற்றொரு சாரார் தங்கள் மதத்தைச் சேர்ந்த மற்ற மக்கள் தங்களை சூத்திரர் என்று யாரும் கூப்பிடக் கூடாது என்றும், “சூத்திரனென்றால் ஆத்திரம் கொண்டடி” என்றும் சொல்லுகிறார்கள், எழுதி ஆங்காங்கு தொங்க விடுகிறார்கள். இதுவும் பேதமைத் தன்மை என்றே சொல்லுவேன். ஏனெனில் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளும் எவனையும் ( அதாவது அவன் பார்ப்பனரல்லாதவனாய் இருந்தால்) அவனை ‘சூத்திரன்’ என்று கூப்பிட உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. அதை மறுப்பவன் மூடனேயாவான். ஏனெனில் இந்து மதத்தில் சூத்திரன் என்கின்ற வகுப்பு உண்டு என்பதும், அது பார்ப்பனரொழிந்த ஏனையோருக்கும் உரித்தானது என்பதும் இந்து வாய் இருக்கும் ஒவ்வொருவனும் ஒப்புக் கொள்ள வேண்டியதே யாகும். இந்துக்களுக்குள் எத்தனை உட் பிரிவு சமயக்காரர்கள் இருந்தாலும் அத்தனை சமயமும் சூத்திரனையும், பிராமணனையும், பஞ்சமனையும் பறையனையும்] ஒப்புக் கொண்டே இருக்கின்றது.
...ஆகவே நம்மவர்கள் தங்களுக்கு சூத்திரப் பட்டமும், தீண்டாதார், பஞ்சமர் என்கிற பட்டமும் வேறு யாராலோ கொடுக்கப் பட்டதாய் கருதி மற்றவர் பேரில் கோபப்படுவது வடிகட்டின அறிவீனமே யாகும். ஏனெனில் எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல்லாம் சூத்திரப் பட்டமும், பஞ்சமப் பட்டமும் தானே எடுத்து தன் தலையில் சூட்டிக்கொண்டு திரிகின்றவனாவானே தவிர வேறில்லை.
இந்து மதம் உள்ளவரை
இந்தியாவில் இந்து மதம் உள்ளவரை சூத்திரனும், பஞ்சமனும் ஒரு நாளும் மறைந்து போக மாட்டார்கள். அதுபோலவே இந்து மத வேதமும், சாஸ்திரமும், இராமாயண பாரதமும், பெரிய புராணம், சிவபுராணம், திருவிளையாடல் புராணம் முதலியவைகளும் உள்ள வரையிலும் சூத்திரப் பட்டத்தையும், பஞ்சமப் பட்டத்தையும் ஒழித்து விடுவது என்பது முடியவே முடியாது.
...ஆகவே எனதருமைச் சகோதரர்களே! தீண்டப்படாத சகோதரர்களே!! தெருவில் நடக்க - குளத்தில் தண்ணீர் மொண்டு குடிக்க - கண்ணில் தென்பட உரிமை இல்லாத சகோதரர்களே!!! நீங்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டுமானால் ஒன்று:- இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள். இரண்டு:- முகமதியர்களைச் சாருங்கள். இந்த இரண்டு காரியத்தாலும் நாம் உலக மக்களுக்கே சுயமரியாதை கொடுக்கலாம். மற்றபடி நமக்கு வேறு விமோசனமே இல்லை! இல்லை!! இல்லை!!!
- தோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 25.10.1931 (http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-53-32/30218-2015-10-08-05-45-22)
தோழர் பெரியார் 23.10.1938 நாளிட்ட குடி அரசு இதழில் “தமிழர் செய்ய வேண்டிய வேலை” எனும் தலைப்பில் ஒரு அறைகூவலை வெளியிட்டார். “தமிழ்நாடு தமிழருக்கே” என்று பச்சை குத்திக் கொள்ள அறிவித்தார். அந்தக் கட்டுரையில் முதற்காரியம் என்று அறிவித்தவற்றைப் படியுங்கள்.
முதற்காரியம்
தமிழ் மக்கள் இன்று தங்களை உண்மைத் தமிழரென்றும் கலப்படமற்ற தனித்தமிழ் ஜாதி என்றும் ஒருவன் சந்தேகமாய்க் கருதுவானாயின் அவன் உடனே தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் தனக்கு எவ்வகையிலும் எப்போதும் சம்மந்தமிருந்திராததான, தன்னை (தமிழ்மகனை) “சூத்திரன்” என்றும் “சண்டாளன்” என்றும் கூறும்படியான சமயத்தை (மதத்தை) உதறித் தள்ளிவிட வேண்டியது முதற்காரியமாகும்.
அடுத்தாற்போல் அத்தமிழ்மகன் தமிழ்நாட்டின் விடுதலையும், சுதந்திரமும், செல்வப் பெருக்கும், தொழில் மேம்பாடும்தான் தன்னுடையது என்றும், இவற்றிற்காக உழைப்பதுதான் தனக்காக தமிழ் மக்களுக்காக, தமிழ்நாட்டுக்காகச் செய்யும் தொண்டு கடமை என்றும் கருத வேண்டும். இப்படிக் கருதாததாலேயேதான் தமிழன் இன்று முற்கூறப்பட்ட பல இழிவுகளுக்கு ஆளாகி நிரந்தர இழிமகனாய் இருக்க வேண்டியவனாய் இருக்கிறான்.
தமிழ்நாடு தமிழருக்கே! தமிழ்நாடு தமிழருக்கே!! தமிழ்நாடு தமிழருக்கே!!! - (குடி அரசு - தலையங்கம் - 23.10.1938)
பிற்படுத்தப்பட்டவர்களோ, தலித்துகளோ யாராக இருந்தாலும் இந்து மதத்திலிருந்து வெளியேறுவதே 'முதற்காரியம்' என்பதைப் பெரியார் பிரகடனப் படுத்துகிறார். “இந்து மதத்திலிருந்து வெளியேறுவதே முழு விடுதலைக்கான வழி” என்று அம்பேத்கர் பிரகடனம் செய்கிறார்.
சங்கரைப் படுகொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கப் போராடுவோம். அதேவேளையில், தொடரும் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க என்ன செய்யப் போகிறோம்? தோழர் பெரியார் பிரகடனப்படுத்திய முதற்காரியத்தைப் பற்றிய விவாதத்தையாவது தொடங்குவது ஒன்றேதான் சங்கர், இளவரசன், கோகுல்ராஜ் என்ற வரிசைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
- அதிஅசுரன்