மகாராஷ்டிராவை ‘இந்து இராஜ்ய மாக்குவோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து அங்கே ஆட்சியைப் பிடித்தது சிவசேனை. அதேபோல் தமிழ்நாட்டை இந்துக்களின் தேசமாக மாற்றிக் காட்டுகிறாம் என்று கூறி வாக்கு கேட்கும் துணிவு தமிழக பா.ஜ.க. வுக்கோ, அதன் சார்பு அமைப்புகளுக்கோ இருக்குமா? இத்தனைக்கும் ‘இந்தியா இந்துக்களுக்கான நாடு’ என்பதற்காகவே தொடங்கப்பட்டதுதானே பாரதிய ஜனதா! மகாராஷ்டிராவில் முன் வைத்த முழக்கத்தை தமிழ்நாட்டில் கூறிவிட்டு, தங்கள் அரசியலை முன்னெடுக்க முடியாது என்பது அதன் தமிழக தலைவர்களுக்கே தெரியும்!
தமிழ்நாடு, மத தேசியத்திலிருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொண்டிருக்கிற ஒரு மாநிலம். தமிழ், தமிழன், சமூக நீதி, சமூக நல்லிணக்கம் என்பதே தமிழக அரசியலுக்கான மய்ய நீரோட்டம், இதற்கான விதைகள், 1920ஆம் ஆண்டுகளிலேயே இங்கே விதைக்கப்பட்டு விட்டன. திராவிடர் இயக்கம், திராவிட அரசியல் கட்சிகளின் வேரை தமிழகத்தில் கிள்ளி எறிந்து விடுவது அவ்வளவு எளிதானது அல்ல. தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக இருந்த இராஜாஜியை தமிழர்கள் ஏற்க மறுத்ததும் அதே காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த காமராசரை தலை மீது வைத்து கொண்டாடியதற்குமான காரணங்களை ஆராய்ந்தாலே போதும். இது “குலக்கல்வி”க்கும் அனைத்து மக்களுக்குமான “இலவச கல்வி”க்கும் இடையே எழுந்த முரண்பாடு; முந்தையது - ‘மதவழி தேசியம்’; பிந்தையது ‘இனவழி சமூக தேசியம்’!
1967ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் நாட்டில் அகில இந்திய கட்சிகள் அரசியலைக் கைப்பற்ற முடியாமல் திராவிட கட்சிகளின் ‘தயவுகளோடு’ தங்களுக்கான சில இடங்களை மட்டுமே அவர்களால் பிடிக்க முடிந்திருக்கிறது. ‘மத நல்லிணக்கம்’ பேசும் காங்கிரசு கட்சியையே தமிழகம் ஏற்காதபோது, ‘மத வெறுப்பு’ அரசியலை முன்னிறுத்தும் பா.ஜ.க.வை தமிழகம் எப்படி ஏற்கும்? தமிழகத்தில் பா.ஜ.க. வேர் பிடிக்காது என்பதற்கான காரணங்களை அலசுவோம்.
முதலாவதாக மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் உரிமைகளானாலும் சரி; கல்விக் கொள்கையானாலும் சரி; மொழிப் பிரச்சினை களானாலும் சரி; தமிழகம் வரலாறு நெடுக தனித்துவமாகவே பயணித்திருக்கிறது. இந்த தனித்துவத்தை தமிழக பா.ஜ.க. ஏற்க வேண்டும். இதற்கு அகில இந்திய பா.ஜ.க.வும் ஒப்புதல் தர வேண்டும். மக்கள் நம்பிக்கை பெறுவதற்கு இதுவே அடிப்படை. அதற்காக பா.ஜ.க. மேற் கொண்டு வரும் சந்தர்ப்பவாதங்களும் இரட்டை வேடங்களும் தமிழக மக்களிடமிருந்து அவர்களை அன்னியப்படுத்தியே வருகின்றன.
இரண்டாவதாக, தமிழ்நாடு மக்களின் ‘இந்து மத உணர்வு’ தங்களுக்கான சமூகநீதியை யும் இணைத்துக் கொண்டிருக்கிறது. இது வடமாநில இந்துமத வெறியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. தன்னை ஒரு ‘இந்து’வாக நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழக மக்கள், தங்களுக்கான இடஒதுக்கீடு உரிமைகளை பலிகடாவாக்கிக் கொண்டு ‘இந்து’க்களாக வாழ்வதற்கு தயாராக இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வேலை, வாய்ப்பு, பண்பாடு களுக்கு எதிராக நடுவண் பா.ஜ.க. ஆட்சி நடைமுறைப்படுத்தும் கொள்கைகள் தமிழ்நாட்டு மக்களிடையே எதிர்வினைகளையே உருவாக்கி வருகின்றன.
மூன்றாவதாக, ‘காவிரி மேலாண்மை வாரியம்’ அமைப்பதில் பா.ஜ.க. ஆட்சியின் இரட்டை வேடம். தமிழ்நாட்டில் தொடர்வண்டித் துறை உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில் பிற மாநிலத்தவர்களைக் குவிக்கும் போக்கு, சமஸ்கிருத திணிப்பு, மாட்டுக்கறி தடை என்று எத்தனையோ சான்றுகளைக் காட்ட முடியும்.
நான்காவதாக, அம்பேத்கரை, புரட்சியாளர், அண்ணல், டாக்டர் என்றே விளித்துப் பழகிய தமிழ்நாட்டில், ‘ஸ்ரீமான் அம்பேத்கர் ஜெயந்தி’யை ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தி கொண்டாடுகிறது. இதனால் தலித் மக்களை தங்கள் அணிக்கு இழுத்து வர முடியும் என்று நம்புகிறார்கள். மற்றொரு புறத்தில், தலித் மக்களோடு முரண் பாடுகளை கூர்மைப்படுத்திவரும் இடைநிலை ஜாதித் தலைவர்களை அரவணைக்கும் முயற்சிகளிலும் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், சமூக தளத்தில் ஜாதிகளை மறுப்பதே ‘இந்து’க்களின் ஒற்றுமைக்கான முன் நிபந்தனை என்ற கருத்தை ஏற்க பா.ஜ.க. தயாராக இல்லை. ஜாதிகளைக் காப்பாற்றும் இந்துக்களின் அணி திரட்டல், சமூகத்தில் சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகளே இல்லை. இந்த ‘முரண்பாடுகள்’ நீடிக்கும் வரை பா.ஜ.க.வும் தமிழகத்தில் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுக்கவே முடியாது.
தலித் மக்கள் மீது ஜாதி ஆதிக்கவாதிகள் நடத்தும் தாக்குதல்கள்; கவுரவக் கொலைகள்; கோயில் திருவிழாவில் ஜாதி மோதல்கள் என்று எத்தனையோ ஜாதியப் பிரச்சினைகள் தலைதூக்கி இங்கே நிற்கின்றன. இந்துக்களின் ஒற்றுமை பேசும் பா.ஜ.க. இந்த மோதல் களங்களில் தலையிட்டு இந்துக்களின் ‘ஓர்மை’யைப் பேச ஏன் முன்வரவில்லை? இந்த களங்களில் பா.ஜ.க. காணாமல் போகும்போது தமிழ்நாட்டிலும் அந்த கட்சி காணாமல் போய்த்தான் நிற்கும்!
மக்களிடம் இயல்பாக படிந்து நிற்கும் ‘மத உணர்வு’களை மதவெறியாகக் கட்டமைக்க முயலுகின்றன. அகில இந்திய பா.ஜ.க.வும், சங்பரி வாரங்களும், அதற்கு அவர்கள் எதிரியாக இஸ்லாமியர்களை முன்னிறுத்த வேண்டி யிருக்கிறது. ஆனால், இஸ்லாமியர் வெறுப்பு அரசியலை முன்னெடுக்க தமிழகத்தில் இவர்கள் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும் அவற்றை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ‘இந்து’ சமூகத்துக்குள்ளேயான ‘தலித் இடை நிலை ஜாதி’ முரண்பாடுகளே முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த முரண்பாடுகளுக்கு முகம் கொடுக்காமல் ‘அம்பேத்கர் ஜெயந்தி’ நாடகங்களை அரங்கேற்றினால் போதுமா? தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவராக ‘எச். ராஜா’வை கொண்டு வருவது ஆபத்து; ‘தமிழிசை’யே பொருத்தமானவர் என்ற மேலிடத்தின் முடிவுக்குப் பின்னால் நிற்கும் சமூக அரசியல் எதை உணர்த்துகிறது? ஜல்லிக்கட்டுவை நடத்தியே தீருவோம் என்று தமிழக பா.ஜ.க. தiலைவர்கள் முழங்குகிறார்கள். ஆனால் காட்சிப்படுத்தப்படும் விலங்குகளுக்கான தடை பட்டியலில் காளை மாடு இடம் பிடித்திருப்பதை நீக்காமலே ஜல்லி கட்டுக்கு தனி அவசர சட்டத்தை பிறப்பிக்கும் இரட்டை வேடத்துக்குப் பின்னால் பதுங்கி யிருக்கும் அரசியல் என்ன?
அகில இந்திய பா.ஜ.க. அதற்கான பார்ப்பனிய பண்புகளை மறைக்க ‘தமிழக பா.ஜ.க.வாக’ நடிக்க எத்தனை முகமூடிகளைப் போட்டுக் கொண்டு வந்தாலும் அரசியலில் இந்த இரட்டை வேடம் வேர் பிடிக்க வாய்ப்பே இல்லை. அவ்வப்போது எச். ராஜா, சுப்பிரமணியசாமியின் குரல்களுக்கும் - தமிழிசை, பொன். இராதா கிருஷ்ணன் குரல்களுக்கும் இடையே உள்ள ‘சுருதி’ பேதங்களை வைத்தே இதை உணர்ந்து கொள்ள முடியும்.