புரட்சியாளர் அம்பேத்கர் வெளிநாட்டில் சென்று படிப்பதற்காக பரோடா மன்னர் சாயாஜிராவ் அவர்களிடம் உதவி பெற செல்கிறார். மன்னர் அம்பேத்கர் அவர்களிடம் கேட்கிறார். நீ என்ன கேட்க விருப்பப்படுகிறாய், நான் சமூகவியல், பொருளாதாரம், மற்றும் பொது நிதி பற்றி படிக்கப் போகிறேன் என்றார். இந்த படிப்பை பயின்று என்ன செய்யப் போகிறாய் என்று மன்னர் கேட்டார். என்னுடைய படிப்பை என் சமுதாயத்தை, அவர்களின் மோசமான நிலையில் இருந்து மேம்படுத்தவும், அவர்களுக்கு வழி காட்டுவதற்கும், மேலும் சமுதாயத்தை சீர்படுத்த பயன்படுத்துவேன் என்றார். மன்னரிடம் கல்வி உதவிக் கேட்டு படிக்க சென்ற அம்பேத்கர் தன் நலனுக்காக பயன்படுத்தாமல் சமுதாயத்தை இப்போதைய நிலையில் இருந்து உயர்த்த முடியுமா என்பதை யோசித்து பயன்படுத்தினார்.

இதை நான் கலைஞருடன் பொருத்திப் பார்க்கிறேன், 14 வயது சிறுவன் ஆன கலைஞர், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட போது, தங்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றி விடுவார்களோ என்ற கோபம் கலைஞருக்கு இருந்தது. அந்த கோபம் தான் பின்னாளில் மாநில சுயாட்சியாக உருவானது. அரசியலைப் பற்றி பிஸ்பார்க் என்பவர் சொல்வார், “Art of Possible” அதுதான் அரசியல் என்று இத்தாலியைச் சேர்ந்த பிஸ்மார்க் சொல்வார். சில மாற்றங்களை, கருத்துருவாக்கங்களை செய்ய வேண்டிய தேவை இருக்கும். அது இயக்கங்களுக்கு இல்லாத சிக்கல் தேர்தல் அரசியலில் இருக்கும் கட்சிகளுக்கு இருக்கிறது. ஆனால் அதை மாற்றியிருக்கிறார்கள், அண்ணா மாநிலங்களவையில் உரையாற்றுகிற போது “நாங்கள் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு விடுகிறோம், ஆனால் காரணங்கள் அப்படியே தான் இருக்கிறது“ சொன்னார். காரணங்கள் அப்படியே இருக்கும் வரை கோரிக்கைகள் வரத்தானே செய்யும். எனவே அதற்கு மாற்றாக தான் அண்ணா இந்த கோரிக்கையை வைத்தார், கலைஞர் அதை வளர்த்தெடுத்தார்.

மாநிலங்கள் உரிமை என்று வருகிறபோது ஆண்டு தோறும் அரசு சார்பாக இரண்டு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும். செங்கோட்டையில் குடியரசு நாளன்று குடியரசுத் தலைவரும், விடுதலை நாள் அன்று பிரதமரும் கொடியேற்றுவார்கள். உடனே கலைஞர் செங்கோட்டையில் குடியரசு நாளில் குடியரசுத் தலைவரும், விடுதலை நாளில் பிரதமரும் கொடியேற்றுகிறார்கள், ஆனால் மாநிலங்களில் மட்டும் இந்த இரண்டு நாட்களிலும் ஆளுநர்கள் மட்டுமே ஏன்? கொடியேற்றுகிறார்கள் என்று கேட்டார். அதன் பிறகு தான் இந்த முறை மாற்றப்பட்டது. விடுதலை நாளில் மாநில முதல்வர்கள் கொடியேற்றலாம் என்ற உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர்.

கலைஞர் தேசிய வளர்ச்சி குழு கூடிய போது ஒரு கோரிக்கையை வைத்தார். மாநில சுயாட்சி குறித்து பேசினார், குழுவை அமைத்தார், அறிக்கையை சமர்ப்பித்தார். இவையெல்லாம் யாரும் செய்யாத ஒன்று. நீதிபதி பி.வி.இராஜமன்னார் தலைமையில் குழுவை அமைத்து, அதில் கல்வியாளராக இருந்த லட்சுமண சாமி முதலியார், சந்திரா ரெட்டி ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்து அவர்கள் வகுத்த கொள்கையை ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைத்தார். மாநிலங்களவைக்கு என்ன பொருள்? மாநிலங்கள் தங்கள் கருத்துக்களை சொல்வதற்கான ஒரு இடம். அங்கு சிறிய மாநிலத்திற்கு ஒரு இடம், பெரிய மாநிலங்களுக்கு 10 இடம் என்றால் அங்கே நாங்கள் என்ன கருத்து சொல்லி வெற்றி பெறப் போகிறோம். எல்லா மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இதை கலைஞர் கோரிக்கையாக வைத்த போது பல்வேறு மாநில முதல்வர்கள் இந்த கருத்தை ஆதரித்து பேசத் தொடங்கினார்.

அம்பேத்கர் இறுக்கமான மத்திய அரசு என்று உரையாற்றினார். முதன் முதலில் அரசியலமைப்பு அவையில் அம்பேத்கர் பேசும் போது வலுவான ஒரு மத்திய அரசு வேண்டும் என்று தான் பேசினார். பின்னர் தன் கருத்தை மாற்றிக் கொண்டார். பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் சிறு சிறு வேறுபாடு உண்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, பட்டியல் இன மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுங்கள், அதுவும் ஊருக்குள் கட்டிக் கொடுங்கள் என்று பெரியார் சொன்னார். சிறிய இடமாக இருந்தாலும் அடுக்குமாடிகளாக கட்டிக் கொடுங்கள் என்றார். ஆனால் அம்பேத்கர், எங்களுக்கு தனியாக வீடு கட்டிக் கொடுங்கள், நாங்கள் ஒரே இடத்தில் குவிந்திருந்தால்தான் பாதுகாப்பாக இருப்போம் என்று தனது பார்வையில் பேசினார்.

கலைஞர் சமத்துவபுரங்களைக் கட்டினார். பெரியார், அம்பேத்கர் ஆகிய இரு தலைவர்களின் கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு ஊருக்குள் கட்டி, 40 விழுக்காடு இடங்களை பட்டியலின மக்களுக்கு ஒதுக்கினார் கலைஞர். இதை எளிதாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது, இந்த சமத்துவபுரங்கள் காலப்போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தும். இது எதிர்காலத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை குறித்து 50 ஆண்டுகள் கழித்து வரலாற்று ஆய்வாளர்கள் எழுதக்கூடும்.

சுயமரியாதை இயக்கம் என்ன மாற்றத்தை தந்தது என்று யார் யாரோ எழுதுகிறார்கள். திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஒருவர் ’திராவிடியன் இயர்ஸ்’ என்ற ஒரு புத்தகத்தை எழுதுகிறார். இதை எழுதியவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி அதுவும் பார்ப்பனர். அப்போது திமுக ஆட்சிக்கு வந்த 1967இல் திராவிட இயக்கத்தின் எதிர் கருத்து கொண்டவர்கள் தான் நிர்வாகத்தில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நீதிக் கட்சி ஆட்சி காலத்தில் வகுப்புவாரி உரிமை பிரதிநிதித்துவம் கொண்டு வந்த போதும் இதே சிக்கல்தான்.

கலைஞர் கொண்டு வந்த மிகப் பெரிய மாற்றம் என்பது உயர் அதிகாரிகளின் எண்ணிக்கையில் மாற்றத்தை கொண்டு வந்தார். யாரெல்லாம் பார்ப்பனர்களால் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு இருந்தார்களோ அவர்களை எல்லாம் உயரதிகாரிகளாக ஆக்கினார் கலைஞர். இந்த மாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு பிறகுதான் தமிழ்நாடு முன்னேற தொடங்கியது என்று எழுதினார்கள்.

கலைஞரின் ஆட்சிக்காலத்தில் 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் உயர்சாதியினர் ஒருவர் கூட இல்லை, 112 பேர் குரூப்-1 சர்வீஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அத்தனை பேரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர்கள் தான். அது மட்டுமல்லாமல் இதுவரை பதவி வாசனையையே அறியாத ஜாதியை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தினார் கலைஞர். கல் உடைப்பவர்கள், சவரம் செய்பவர்கள், சலவை செய்பவர்கள், குறவர்கள் என மிகவும் ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்தார்கள். இது எவ்வளவு பெரிய மாற்றம்.

இனிமேல் இந்த மதத்தை விட்டு வெளியே போ என்ற கருத்திற்கு இருவரும் வருகிறார்கள். 1935-இல் பெரியார் ‘சபாஷ் அம்பேத்கர்!’ என்று விடுதலையில் தலையங்கம் எழுதுகிறார். அப்போது சுதேசமித்திரனில் ‘ மூக்கு மயிர் பிடுங்கினால் ஆள் பாரம் குறைந்து விடுமா? என்று கிண்டலாக எழுதப்பட்டது. இதை பேசிய பிறகு சில நாட்களில் ஒரு விபத்துக்கு உள்ளாகிறார் அம்பேத்கர். அப்போது மிகவும் பதறிப் போனார் அம்பேத்கர், அருகில் இருப்பவர்கள் கேட்டபோது, நான் இறந்து போயிருந்தால் இந்துவாக அல்லவா இறந்திருப்பேன், எனக்கு அதுதான் வருத்தம் என்று கூறினார்.

கடைசியாக பாகிஸ்தான் பிரிவினை பற்றி ஒன்றை எழுதினார். எந்த பாடுபட்டாவது இந்து ராஜ்ஜியம் அமைவதை தடுத்தாக வேண்டும். பாகிஸ்தான் இஸ்லாமிய ராஜ்ஜியமாக போய்விட்டாலும் இந்தியா இந்து ராஜ்ஜியமாக அமைந்து விடக்கூடாது. அது மதச்சார்பற்ற அரசாக அமைய வேண்டும். இந்து ராஜ்ஜியம் அமையுமேயானால் அது சந்தேகத்திற்கு இடமில்லாமல் இந்த நாட்டிற்கு பெரும் ஆபத்தாகவே இருக்கும். இந்து தத்துவம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு எதிராகவே இருக்கும். அந்த வகையில் அது ஜனநாயகத்திற்கே ஒவ்வாத ஒன்றாகும். என்ன விலை கொடுத்தாவது இந்து ராஜ்ஜியம் அமைவதை தடுத்தாக வேண்டும் என்று எழுதினார் அம்பேத்கர்.

(தொடரும்)

- கொளத்தூர் மணி

Pin It