வேத மந்திரங்கள் ஓத கருணாநிதி வீடு தெய்வகடாச்சமாய் மாறிய நிலையிலான புகைப்படமும், காணொளியையும் பார்த்தோம். எதற்காக இந்த சந்திப்பு என்றால் "பெரியாரின் வாரிசு", மன்னிக்கவும் "ஒரே வாரிசு" கருணாநிதி, திராவிட, பெரியாரிய கொள்கைகள் தொய்வடைந்திருப்பதால், அதை "தூக்கி நிறுத்த" எழுதிய ராமானுஜ காவியத்தை மொழிமாற்றம் செய்து வெளியிட திருப்பதி தேவஸ்தானத்தினர் ,கருணாநிதி அனுமதி பெறுவதற்காக வந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம், காணொளியாகும் அவைகள்.

karunanidhi ttd team

இந்தக் காட்சிகளை பெரியாரிஸ்ட்கள் சங்கடத்தோடு பார்ப்பதைக் கண்டு சுப.வீ தொடங்கி மற்ற கருணாநிதி தொண்டரடியார்கள் வரை பலர் அரிய விளக்கங்களைக் கொடுத்து கருணாநிதியின் "பெரியாரின் ஒரே சீடர்" வேடத்திற்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். வீட்டுக்கு வந்தவர்கள் மந்திரம் ஓதினால் கருணாநிதி என்ன செய்வது? என்கிறார்கள். சரி ஒத்துக்கொள்வோம். ஆனால் வேத மந்திரங்கள் ஓதியவர்களிடம் என்ன சொல்லி இருக்க வேண்டும்? நீங்கள் ராமானுஜர் தொடரை வாங்க வந்திருக்கிறீர்கள். அதோடு ராமானுஜர் விரும்பியவண்ணம் தாழ்த்தப்பட்டோரை திருப்பதி மலையானுக்கு அர்ச்சனை செய்விக்க செய்தால், நீங்கள் ராமானுஜரின் தொடரை ஒளிபரப்புவதில் பொருளிருக்கும் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? அப்படி கருணாநிதி வற்புறுத்தல் அல்லாமல் வேண்டுகோளாகக்கூட வைத்திருப்பாரேயானால், மந்திரம் ஓதிய மாண்பாளரெல்லாம் மறுவினாடியே மறைந்திருப்பார்கள். அப்படி எதுவும் கருணாநிதி கேட்டதாக தெரியவில்லை. அவர் அப்படி தம்மிடம் கேட்கமாட்டார் என்பதுவும் அவர்களுக்குத் தெரியும்.

ராமானுஜரை கருணாநிதி எவ்வளவு தூக்கி நிறுத்தினாலும், அதில் எதை மட்டும் எடுத்துக் கொள்வது என்பது அவர்களுக்குத் தெரியும். ராமானுஜர், விவேகானந்தர் போன்றவர்களை எவ்வளவு தூரம் பயன்படுத்தலாம், எங்கு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்பனர்கள் கருணாநிதியைவிட நன்கு அறிவார்கள். எனவேதான் ராமானுஜரைப் பற்றி பார்ப்பனர்களுக்கு எந்த சங்கோஜமும் இல்லை. அவரின் "புரட்சி"யையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தங்களுக்கு சாதகமாக காட்டமுடியும். ஏனெனில் ராமானுஜரும் அடிப்படையில் இந்துமதவாதி. அவ்வளவுதான்.

திராவிட இயக்கம் தொய்வடைந்துவிட்டது, திமுகவினரே பூவும், பொட்டுமாகத் திரிகிறார்கள் என்று கருணாநிதி வருந்துவாரானால், அவர் என்ன செய்திருக்க வேண்டும்? புவியில் புரட்சி செய்த மகான் என்று பெரியாரைப் பற்றியோ, அரசியலில் அதிசயம் செய்த மகான் என்று அண்ணாவைப் பற்றியோ அல்லவா தொடரெழுதி கலைஞர் தொலைக்காட்சியில் வெளியிட்டிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, புண்ணுக்கு புனுகு போடும் வேலையை செய்த ராமானுஜரைப் பற்றி தொடர் எழுத வேண்டிய அவசியமென்ன?

மதத்தில் புரட்சி செய்த மகான் என்பதே அடிப்படையில் தவறல்லவா? மதத்துக்காரன் எப்படி புரட்சியாளனாக முடியும்? புரட்சியாளன் எப்படி மதவாதியாக இருக்கமுடியும்? அதுதானே பெரியாரின் அடிப்படைக் கேள்வி? போப் புரட்சியாளனாக முடியாது. புரட்சியாளன் போப் ஆகமுடியாது என்பது நாம் அடிக்கடி மேற்கோள் காட்டும் ஒன்றல்லவா. அப்படி இருக்கையில் ராமனுஜ காவியத்தின் அவசியமென்ன? அதுவும் பெரியாரின் வாரிசு என்பவருக்கு.

பெரியார் இந்துமதம் என்பதை அடியோடு புரட்டிப் போட்டவர். ராமனுஜர்- தாழ்த்தப்பட்டவர் என்பதன் தேவையென்ன? அதன் இருப்பிற்கான தத்துவங்கள் எவை? அவை அழிய வேண்டும் என்பதற்காக பாடுபட்டவரில்லை. பார்ப்பனர், தாழ்த்தப்பட்டவர் என்பதன் அடிப்படைகளில் கைவைத்தவரில்லை. தாழ்த்தப்பட்டவரை கோவின் உள்ளே அழைத்துச் செல்வதால் ஏற்படும் விளைவைவிட, "தாழ்த்தபட்டவர்" என்பதற்கான அடிப்படையை தகர்க்கப் பாடுபடுவதே சாதிய மூலத்திற்கெதிரான போராகும். அந்தப் போரை நடத்துவதுதான் புரட்சியாகும். அந்தப் புரட்சியை செய்தவர் பெரியார் மட்டுமே. அப்படி இருக்க ராமானுஜரை புரட்சியாளராக சமுதாயத்திற்கு முன் நிறுத்துவது, அதுவும் திராவிட சிந்தாந்தங்கள் தொய்வடைந்து, சீரழிந்து இருக்கும் காலத்தில் செய்வது ஓட்டு அரசியலே தவிர, ஒரு பெரியாரிஸ்ட் வேலையாக இருக்கமுடியாது.

இன்றைய இளைஞர் கூட்டம் திராவிட இயக்கங்களை, அவற்றின் தேவையை உணராமல், பெரியார் மீது புழுதிவாரித் தூற்ற, மூளை சலவை செய்யப்படும் சூழலில், திராவிட இயக்க முன்னோடியாக பெரியாரின் கருத்துகளை பரப்ப தொடர் எழுதுவதை விட்டுவிட்டு ராமானுஜர் தொடர் எழுதுவது சரியாகுமா?

ஒரு வாதத்திற்காக, கருணாநிதி ராமானுஜர் அவ்வளவு பெரிய புரட்சி மகான் என்று கருதப்பட வேண்டியவராக எண்ணினால், திமுகவின் மேடைகளில், பெரியார், அண்ணா படங்களோடு ராமானுஜர் படங்களையுமல்லவா வைத்திருக்க வேண்டும்? ஏன் இதுவரை வைத்ததில்லை? கருணாநிதி கருத்துப்படி பார்த்தால் , பல நூற்றாண்டுகளுக்கு முன்னேயே பெரியாரைப் போல் புரட்சி செய்தவர் அல்லவா ராமானுஜர்? அவருக்கு உரிய இடத்தை பெரியாரோ, அண்ணாவோ ஏன் திராவிட இயக்க மேடைகளில் கொடுக்கவில்லை? கருணாநிதிக்கு தெரிந்த உண்மை பெரியாருக்குத் தெரியவில்லையா?

ஆக, தேர்தலுக்காக பெரியாரின் வாரிசு கருணாநிதியின் மற்றுமொரு வேடந்தான் ராமானுஜ காவியம். ஆனால் ஒன்று எனக்கு விளங்குவதில்லை. என்னவென்றால், கருணாநிதி தலைகீழாக தண்ணீர் குடித்தாலும், பார்ப்பனர்கள் கருணாநிதிக்கு ஓட்டு போட்டதில்லை. போடப்போவதில்லை .சங்கராச்சாரியையே கூட கைது செய்தாலும் ஜெயாவிற்கு ஓட்டுப் போடாமல் இருக்கப் போவதில்லை என்பது தொன்னூறைக் கடந்தும் கருணாநிதிக்கும், அவரின் தொண்டரடிப் பொடிகளுக்கும் ஏன் புரிவதில்லை என்பதுதான்.

- பூங்குமரன்

Pin It