அய்.நா. நியமித்த குழு அறிக்கை
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் நடந்துள்ள போர்க் குற்றங்கள், வன்னி முகாம்களில் நடந்த அத்து மீறல்கள் ஆகிய வற்றின் மீது பன்னாட்டு அமைப்பு கண்காணிப்பின் கீழ் இலங்கை அரசு விசாரணை நடத்தி, போர்க் குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப் பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இலங்கையில் நடந்த போரில் நடந்த அத்து மீறல்கள், படுகொலைகள் குறித்து பன்னாட்டு மனித உரிமை சட்டங்களின்படி எப்படிப்பட்ட நட வடிக்கை எடுப்பது என்பது குறித்து தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த மூன்று பேர் கொண்ட நிபுண்hகுழு தனது அறிக்கையை பான் கி மூனிடம் அளித்தது.
அக்குழுவின் அறிக்கை அப்போதே ஐ.நா.விற் கான இலங்கை அரசின் இரண்டாம் நிலை தூதர் ஷாவேந்திர சில்வாவிடம் அளிக்கப்பட்டது. இலங்கை அரசின் பரிசீலனையில் அந்த அறிக்கை உள்ள நிலையில், அதன் முழு விவரத்தையும் இலங்கை அரசு சார்பு ஏடான ‘ஐலண்ட்’ வெளியிட்டுள்ளது.
இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞரான மார்சுகிதாருஸ்மான் தலைவராக வும், தென் ஆப்ரிக்காவின் யாஷ்மின் சூக்கா, அமெரிக்க சட்ட நிபுணர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் கொண்ட அக்குழு அளித்த அறிக்கையின் முக்கிய விவரங்கள் வருமாறு:
1. இலங்கை அரசு கூறியது உண்மையல்ல: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை மீட்க மனிதாபிமான நடவடிக்கையைத் தான் அரசு மேற்கொண்டது என்றும், அதனை ஒரு அப்பாவி கூட கொல்லப்படாத நிலையில் நிறைவேற்றுவதுதான் நோக்கம் என்றும் இலங்கை அரசு கூறியதற்கு நேர் மாறாகவே உண்மை இருக்கிறது என்பதையே எங்களிடம் உள்ள ஆதாரங்கள் தெளிவாக்குகின்றன. இந்த ஆதாரங்கள் உண்மையானவை என்று நிரூபிக்கப் பட்டால், அங்கு மிகப் பெரிய அளவிலான போர்க் குற்றங்களும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ளது உறுதி யாகும். இதனை இலங்கை அரசு படைகள் செய்துள்ளன. போர்க் காலத்திலும் மனித கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்ற நோக்ககோடு உருவாக்கப்பட்ட பன்னாட்டுச் சட்டங்கள் அனைத்துக்கும் எதிரான இந்தப் போரில் நடத்தப்பட்ட பெரியத் தாக்குதல் நிரூபிக்கிறது.
2. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி வரை நடந்த இறுதி கட்ட யுத்தத்தில் பெருமளவில் நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களில் ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3,30,000 மக்கள் நாளுக்கு நாள் சுருங்கி வரும் நிலப் பகுதியில், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கடுமை யான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் போரில் மக்கள் பெருமளவிற்கு கொல்லப் பட்டதை வெளியே கொண்டு செல்ல முயன்ற ஊடகங்களை இலங்கை அரசு மிரட்டி அடக்கி யுள்ளது. அப்படிப்பட்ட மிரட்டல்களுக்கு வெள்ளை வேன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
3. அரசு அறிவித்த 3 மக்கள் பாதுகாப்பு வளையப் பகுதிகளுக்கு வருமாறு போர் நடந்த பகுதியில் இருந்த மக்களை அழைத்துவிட்டு, அப்பகுதியின் மீதே இலங்கை அரசு படைகள் பெரும் தாக்குதல் நடத்தியுள்ளன. கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்துவிட்டு, அப்படிப்பட்ட ஆயதங்களை பெருமளவிற்கு இலங்கை அரசு பயன்படுத்தியுள்ளது. ஐ.நா. அமைத்திருந்த உணவு வழங்குமிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமுற்றவர் களை அழைத்துச் செல்ல வந்த செஞ்சிலுவைச் சங்க கப்பலுக்கு அழைத்துவரப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவை யாவும், முன்னறிவிப்பு அளிக்கப்பட்ட பகுதிகளாகும். இறுதிக் கட்ட போரில் இலங்கை அரசு படைகளின் பீரங்கித் தாக்குதலிலேயே பெருமளவிற்கு மக்கள் கொல்லப்பட்டனர்.
4. வன்னிப் பகுதியில் இயங்கி வந்த மருத்துவ மனைகள் அரசு படைகளால் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகளின் இருப்பிடங்கள் அனைத் தும் அரசுக்கு தெரிந்தவையே அவ்வாறிருந்தும் அவைகள் தொடர் தாக்குதலிற்கு உட்படுத்தப் பட்டுள்ளன. போர் நடந்த பகுதியில் சிக்கியிருந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் எதுவும் சென்று சேராமல் திட்டமிட்டு தடுத்துள்ளது இலங்கை அரசு. உணவு, மருந்துப் பொருள்கள், அவசர அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் என்று எதையும் அனுமதிக்கவில்லை. போர் நடந்த பகுதியில் சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டியே இப்படிப்பட்ட உதவிகளை இலங்கை அரசு மறுத்துள்ளது. இதனால் 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை பல பத்தாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக கடைசி இரண்டு நாட்களில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
5. போர் முடிந்த பிறகு தங்களுடைய கட்டுப்பாட் டிற்கு வந்த மக்களை மேலும் துன்புறுத்தலுக்கு இலங்கை அரசு ஆளாக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் என்ற ஐயத்திற்குள்ளானவர்கள் எவ்வித வெளி பார்வையாளர் கண்காணிப்பும் இன்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். விடுதலைப் புலிகள் என்ற அடையாளம் காணப்பட்டவர்கள் அப்போதே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புலிகள் இயக்கத்தின் பெண் போராளிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட் டுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். இவையாவும் இலங்கை அரசு அமைத்த ஆணையத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. போரினால் இடம் பெயர்ந்த மக்கள் அனைவருக்கும் ஒரே இடத்தில் நெருக்கமாக அமைக்கப்பட்ட முகாம்களில் சிறை வைக்கப் பட்டனர். குறைவான நிலப் பகுதியில் பல இலட்சக்கணக்கான மக்கள் அடைத்து வைக்கப் பட்டதால் அங்கு மோசமான சூழல் உருவானது. அவர்களின் சமூக, பொருளாதார உரிமைகள் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதனால் பல உயிர்கள் பலியாயின. இந்த முகாம்களில் இருந்த பலர் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் என்ற ஐயப்பாட்டிற்குட் பட்டவர்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இருப்பிடங்கள் தெரிவிக்கப்படவில்லை. அங்கு அவர்கள் மேலும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.
எனவே, இலங்கை அரசு கீழ்கண்ட அத்து மீறல்களை செய்துள்ளதாக நம்பத் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நிபுணர் குழு முடிவு செய்கிறது:
1. பீரங்கித் தாக்குதல்கள் மூலம் பொது மக்களை கொன்று குவித்துள்ளது.
2. மருத்துவமனைகள் உள்ளிட்ட மனிதாபிமான பகுதிகளை குறி வைத்து தாக்குதல்களை நடத்தி யுள்ளது.
3. மனிதாபிமான உதவிகளை மறுத்துள்ளது.
4. இடம் பெயர்ந்த மக்களிடமும், புலிகள் என்று ஐயப்பட்டவர்களிடமும் மனித உரிமை மீறல்களைச் செய்துள்ளது.
5. போர் நடந்த பகுதிக்கு வெளியே, ஊடகங்கள் மீதும், அரசை விமர்சித்தவர்கள் மீதும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியுள்ளது.
இலங்கையில் நடந்த போர் குறித்து விசாரிக்க இலங்கை அதிபர் அமைத்த ஆணையம் (கற்ற பாடங்கள் மற்றும் சமசரத்துக்கான ஆணையம்) பன்னாட்டு அளவில் ஏற்கத்தக்க சுதந்திரமான, நடுநிலையான ஆணையமாக இல்லை. அக் குழுவில் இடம் பெற்ற உறுப்பினர்கள் சிலரே அதன் நோக்கத்திற்கு எதிரானவர்களாக உள்ளனர். போரில் நடந்த மனித உரிமை, போர்க் குற்ற அத்துமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நோக்குடனோ அல்லது இப்போருக்கு அடிப்படையான காரணங்களை ஆராயவோ இந்த ஆணையம் அமைக்கப்படவில்லை. அது அரசியல் ரீதியான பொறுப்பு மற்றும் இணக்கப்பாடு குறித்த விஷயங்களுக்காகவே அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை அது நடத்திய விசாரணையில் இருந்து, அது உண்மையை கண்டறியும் நோக்குடன் செயல்படவில்லை என்பதை நிரூபிக்கிறது. எனவே, இந்த ஆணையம்,போரில் நடந்த குற்றங்களுக்குக் காரணமானவர்களை பொறுப்பாக்க பன்னாட்டு தரத்தில் அமைக்கப்பட்டதன்று. எனவே, அது இலங்கை அதிபரும், ஐ.நா. பொதுச் செயலரும் ஒப்புக் கொண்ட உறுதி மொழியை நிறைவேற்று வதாக இல்லை.
ஐ.நா. நிபுணர் குழுவின் பரிந்துரைகள்
• போர்க்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித நல மற்றும் மனித உரிமைக் குற்றங்கள் குறித்து, பன்னாட்டு, மனிதாபிமான மனித உரிமை சட்டங்களின்படி நியாயமான விசாரணையை அரசு உடனடியாக துவக்க வேண்டும்.
• வன்னி போரில் பாதிக்கப்பட்டவர்கள், தப்பியவர்கள் ஆகியோருக்கான குறுகிய கால நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும். அரசு மற்றும் துணை ராணுவப் படையினரின் அத்து மீறல்களை நிறுத்துவது, போரில் இறந்த போனவர்களின் உடல்கள், அஸ்தி உள்ளிட்ட வற்றை உறவினர்களிடம் ஒப்படைப்பது, இறந்து போனவர்களுக்கான இறப்புச் சான்றிதழ்களை உரிய மரியாதையுடன் எந்தக் கட்டணமும் இல்லாமல் வழங்குவது, போரில் பிழைத்தவர் களுக்குத் தேவையான மனநல ஆலோசனை களைத் தருவது, முகாம்களில் வசிப்பவர்களை உடனடியாக விடுவிப்பது, மறுகுடியமர்வுப் பணிகளை மேற்கொள்வது, இடைக்கால நிவாரண உதவிகளைச் செய்வது போன்றவை இதில் அடக்கம்.
• கடத்தப்பட்டு பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பான உண்மை நிலையை அறிவிக்க வேண்டும்.
• அவசர நிலையைத் திரும்பப் பெற வேண்டும், சர்வதேச சட்டங்களுக்குப் பொருந்தும் வகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
• விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் பிடித்து வைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர் களை வெளியிட வேண்டும். அவர்கள் மீது சட்ட ரீதியாகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தில் அவர்கள் சார்பில் வழக்குத் தொடுப்பதற்கு குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்க வேண்டும். கொடிய குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லாதவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
• அரசே நிகழ்த்தும் வன்முறைகளை நிறுத்த வேண்டும். மக்கள் கூடுவதற்கும், இடம் பெயர் வதற்கும், கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் எதிராக நடவடிக்கைகள் எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.
• அய்.நா. மனித உரிமைக் குழு இலங்கையின் போர்க் குற்றங்களை மறைத்து, ‘உள்நாட்டுப் பிரச்சினையில் பிற நாடுகள் தலையிடக் கூடாது’ என்று நிறைவேற்றிய தீர்மானத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
• இனப் பிரச்னை, பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடந்த கடுமையான போர் உள்ளிட் டவை தொடர்பாக அனைத்து சமூகத்தினரும் பங்கேற்று ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.
• இறுதி கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அரசு தனது பொறுப்பையேற்று, அதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
• போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையிலான திட்டங்களை அமல்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதில் சிறப்பு; கவனம் அளிக்கப்பட வேண்டும்.
இலங்கைக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் இவ்வறிக்கை அமைந்துள்ள நிலையில், இவ்வறிக்கை தொடர்பாக மௌனம் காப்பதே நல்லது என இலங்கை அரசு கருதுவதாகவும், எது நடந்தாலும் தாம் அதனைப் பற்றி அலட்டிக் கொள்ளாது இருப்போம் என அவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் அரசு வட்டாரங்களில் பேசப்படுகிறது. ட
அய்.நா.வின் தீர்மானம் மாற்றப்படுமா?
2009, மே 26, 27 ஆகிய நாட்களில் அய்.நா.வில் அய்ரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் 17 நாடுகள் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தன. இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும். முகாம்களில் வதைபடும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைக் கொண்டு வரவேண்டும் என்று அத் தீர்மானம் வலியுறுத்தியது.
சுவிட்சர்லாந்து, செர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, கனடா, சிபி, மெக்சிக்கோ, போஸ்னியா, கெர்சகோவினா, நெதர்லாந்து, சுலோவேக்கியா, சுலோவேனியா உள்ளிட்ட 17 நாடுகள், இத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன.
இத் தீர்மானத்தை முறியடிப்பதில் இந்தியா தீவிரமாக செயல்பட்டது. இந்தியாவின் ‘பகைமை’ நாடுகளான சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரவைத் திரட்டி, அத் தீர்மானத்தை இந்தியா முன்னின்று தோற்கடித்தது. தீர்மானத்தை தோற்கடித்ததோடு மட்டுமல்ல; இலங்கை அரசே கொண்டு வந்த ஒரு தீர்மானத்தை ஆதரித்தது; போரில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளை வன்மையாக அத் தீர்மானம் கண்டித்தது. போரில் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள் பற்றியோ, அகதிகள் முகாமில் அல்லல்படும் தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வது பற்றியோ அத் தீர்மானத்தில் எதுவும் இல்லை.
படுகொலைகள் - வன்முறைகள் எல்லாம் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை என்றும், அதில், பிற நாடுகள் தலையிடக் கூடாது என்றும் கூறிய அத்தீர்மானத்தை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் - ஆதரித்து நிறைவேற்றச் செய்தன. இது அய்.நா.வுக்கே தலைகுனிவு என்று சர்வதேச ஏடுகளான ‘பைனான்சியல் டைம்ஸ்’, தி ‘டைம்ஸ்’ ஆகிய நாளேடுகள் கண்டித்தன.
அந்தத் தீர்மானத்தை (மே 2009, அய்.நா. சிறப்பு கூட்ட தீர்மானம் எண்.ஹ/ழசுஊ/8-11/டு.1/சுநஎ2) - அய்.நா. குழு அம்பலப்படுத்தியுள்ள உண்மைகளின் அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இதற்கு, அய்.நா. மனித உரிமைக் குழுவை கூட்ட வேண்டும் என்றும், அய்.நா. குழு இப்போது தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசு வற்புறுத்தல்
இலங்கை அதிபரையும் - ராணுவ அதிகாரிகளையும் கூண்டில் ஏற்ற வேண்டும்
நாடு கடந்த தமிழீழ அரசின் முதன்மை அமைச்சர் உருத்திர குமார் விடுத்துள்ள அறிக்கை:
அய்.நா. குழுவின் இந்த அறிக்கை நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், மற்றையோரும் ஒட்டு மொத்தத் தமிழர் படுகொலை சம்பந்தமாகக் கூறி வந்ததை உறுதிப்படுத்துகின்றது. போர்க் குற்றங்கள், மனிதாபிமானக் குற்றச் செயல்கள் ஆகியவை பற்றி அறிக்கை தெளிவுபடக் குறிப்பிடுகின்றது. இவ்வறிக்கை வெளியனதுடன் சிறிலங்கா அரசின் தமிழர் படுகொலை சம்பந்தமான கண் துடைப்புப் பிரச்சாரம் தோல்வியுற்றுள்ளது. இறுதியாக, சிறிலங்காவின் தலைவர்கள், அவர்கள் தமிழர்களின் மேல் நடத்திய கொலைகளுக்குரிய விலையைக் கொடுப்பதுடன் நீதி வழங்கப்படும் எனும் நம்பிக்கை ஏற்படுவதற்குக் காரணமாயும் அமைகிறது.
அறிக்கையில், கற்பழிப்பு, சட்டத்திற்கு முரணான உயிர்ப் பறிப்பு, ஆட்கடத்தல், பரந்துபட்ட குண்டுத் தாக்குதல், உணவு மருந்து மறுப்பு, ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் மிரட்டல் முயற்சிகள் ஆகியன கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற தமிழ் மக்கள் ஆதியிலிருந்தே அபிப்பிராயப்பட்டது போன்று அரசால் ஏற்படுத்தப்பட்ட “கற்ற பாடங்களும் சமரசத்திற்குமான ஆணையம்” (டுடுசுஊ) பலத்த விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது. “கற்ற பாடங்களும் சமரசத் திற்குமான ஆணையம்” கணிசமான அளவு குறைபாடுகளுடையது என்பதுடன் சர்வதேசத் தரத்திற்கு அமைய நம்பகத் தன்மையற்றதும், செயற்திறன் அற்றதும் ஆகும்” என அறிக்கை கூறுகிறது.
சிறிலங்கா அரசாங்கம் நடாத்திய தமிழ்ப் பொது மக்களின் படுகொலைகள் சம்பந்தமான விவர அறிக்கை ஒன்று ஏற்கனவே ஐ.நா. குழுவிற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினரால் சமர்ப்பிக்கப்பட்டதுடன், நடேசன் அவர்களின் மகனுடைய நேர்முக வாக்குமூலத்திற்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நடேசன் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்தவர். அவருடைய மகனது வாக்குமூலம், நடேசனின் இறுதிக் கணங்கள் சம்பந்தமான உண்மையான தகவல்கள் அடங்கியது. இன்னுமொரு நம்பகரமான சாட்சியம், கேணல் ரமேஷ் மனைவியால் வழங்கப்பட்டது.
சிறிலங்கா அரச தலைவர்களையும், படைத் தலைவர்களையும் கூண்டிலேற்ற இதுவே முதற்படி என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நம்புவதுடன் இவர்கள் நாளடைவில் போர்க் குற்றங்கள், மனித விரோதக் குற்றங்கள், இனப் படுகொலைக் குற்றங்கள் ஆகியவற்றிற்கும் முகம் கொடுத்தே ஆக வேண்டுமெனவும் நம்புகின்றது.
இவ்வறிக்கை, இறுதிப்போர் நடைபெற்ற காலத்திலும் போர் முடிவுற்ற அண்மைக் காலத்திலும் ஐ.நா.வினதும், மனித உரிமைகள் குழுவினரதும் மோசமான நடவடிக்கைகளையும் கண்டிக்கத் தவறவில்லை. இவ்வறிக்கை ஐ.நா.வின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த உந்துதலாக அமையுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.
நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கருத்துப் பரிமாறலை இவ்வறிக்கை ஆரம்பித்து வைக்கும் என்பது எங்கள் உளமார்ந்த நம்பிக்கை. தமிழ் தேசத்தையும், சிங்கள தேசத்தையும் ஒவ்வாத பிணைப்பால், நல்ல அயலவர்களாக நிரந்தர முரண்பாட்டுப் போருடன் கூடியிருக்கச் செய்வது உசிதமல்ல என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இங்கே கோடிட்டுக் காட்டுகிறது.
அய்.நா. குழு அறிக்கை:
தி.மு.க. - அ.தி.மு.க. மவுனம் ஏன்?
இலங்கை அரசு தமிழர்கள் மீதான போரில், போர்க் குற்றம் இழைத்துள்ளது என்ற குற்றச்சாட்டு, ‘மறுக்க முடியாதது’ என்று அய்.நா. பொதுச் செயலாளர் நியமித்த குழு - அறிக்கை வெளிவந்த தமிழ்நாட்டில், பெரியார் திராவிடர் கழகம், தமிழ் ஈழ ஆதரவு அமைப்புகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளான தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியோ, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ, எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் உறுதியாக மவுனம் சாதிக்கிறார்கள் என்று ‘டெக்கான் கிரானிக்கல்’ (ஏப்.19) நாளேடு சுட்டிக் காட்டியுள்ளது.
2009 நாடாளுமன்ற தேர்தலில் ஈழத் தமிழர்களுக்காக தி.மு.க. தலைவர் உண்ணாவிரதம் இருந்ததையும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர், இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழ் ஈழத்தை அமைக்க பாடுபடுவேன் என்று பேசியதையும், அந்த ஏட்டின் செய்தியாளர் மு. குணசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அய்.நா. குழுவை அவமதித்த ராஜபக்சே
அய்.நா. பொதுச் செயலாளர் நியமித்த குழு இலங்கையில் விசாரணை நடத்த அந்நாட்டு அரசு அனுமதி மறுத்து விட்டது. இது அய்.நா.வை அவமதிக்கும் செயலாகும். இந்நிலையில் இறுதி கட்டப் போரில் சிக்கி உயிர் பிழைத்து, அங்கிருந்து தப்பி வந்தவர்களையும் உலக நாடுகளில் போருக்குப் பிறகு, குடிபெயர்ந்தவர்களையும் ராணுவத்தின் தாக்குதலில் உடன்பாடு இல்லாத பல ராணுவ அதிகாரிகளையும் சந்தித்து இந்தக் குழு அறிக்கையை தயாரித்துள்ளது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2011
போர்க் குற்றம் புரிந்த ராஜபக்சே: பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்
- விவரங்கள்
- விடுதலை இராசேந்திரன்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2011