2012 மார்ச் 5ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. மும்பை புற நகர் பகுதியான ‘இர்லா’வில் வேளாங்கண்ணி மாதா தேவாலயம் ஒன்று இருக்கிறது. அதன் வாயிலில் ஏசு சிலுவையில் அறையப்படும் சிலை ஒன்று உண்டு. அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு பெண், அந்த சிலுவை சிலையில் கால் பகுதியிலிருந்து தண்ணீர் சொட்டுவதை பார்த்தார். உடனே கூட்டத்தைக் கூட்டி சிலையின் காலடியில் தண்ணீர் வடிகிறது என் கூறினார்.
அந்தப் பெண் கிறிஸ்துவப் பெண் அல்ல. ஒவ்வொரு நாளும் கூட்டம் திரளத் தொடங்கி விட்டது. ‘ஏசு சிலையின் அற்புதம்’ என்று பிரச்சாரம் கட்டவிழ்க்கப்பட்டது! (இதே போல் நாடு முழுதும் ஒருநாள் பிள்ளையார் சிலை பால் குடிப்பதாக ஒரு புரளி கிளப்பப்பட்டது. பின்னர் அறிவியல் வழியில் ‘அது அதிசயம் அல்ல’ என்று நிரூபிக்கப்பட்டது. (பால் குடித்த விநாயகர், அதை எப்போது சிறுநீராக வெளியேற்றினார் என்ற பகுத்தறிவாளர் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.) ‘ஏசு சிலையின் காலடியில் தண்ணீர் சொட்டுகிறது’ என்ற புரளிக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரடியாக களமிறங்கினார், கேரள பகுத்தறிவாளர் சேனல் எடமருகு. நேராக அந்த இடத்துக்குச் சென்று அருகே இருந்த குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பே தண்ணீர் வருவதற்குக் காரணம் என்பதை நிரூபித்துக் காட்டினார். இதைத் தொடர்ந்து மும்பையில் தொலைக்காட்சி நிறுவனம் ஒரு விவாதத்துக்கு ஏற்பாடு செய்தது. சேனல் எடமருகுவும் மும்பை பாதிரியார் ஒருவரும் வாதிட்டனர். விவாதத்தில் சேனல் எடமருகு கேட்ட கேள்விக்கு பாதிரியார் திணறினார்.
சேனல் எடமருகு கூறிய சில கருத்துகள் ‘மத நிந்தனை’ என்று கூறி பாதிரியார் அமைப்பு அவர் மீது வழக்கு தொடர்ந்தது. காவல்துறை பிணையில் வெளிவர முடியாத இந்திய தண்டனைச் சட்டம் 295(ஏ) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சேனல் எடமருகுவை கைது செய்ய வலை வீசியது. சேனல் எடமருகு வெளிநாடு ஒன்றுக்கு சென்று விட்டார். சாமியார்கள் ‘அற்புத சக்தி’ என்று கூறிக் கொள்ளும் பலரின் மோசடிகளை அம்பலப்படுத்தியவர் சேனல் எடமருகு. ஏராளமான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வாதிட்டுள்ளார். 2008ஆம் ஆண்டு பண்டிட் சுரேந்தர் சர்மா என்ற பார்ப்பனருடன் தொலைக் காட்சியில் அவர் நேருக்கு நேர் நடத்திய விவாதம் மிகவும் பிரபலமானதாகும். இந்த பார்ப்பனர், தொலைக்காட்சியில் ‘மாந்திரீக’ நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவர். தனது ‘மாந்திரீக’ சக்தியைப் பயன்படுத்தி சேனல் எடமருகுவை சாகடித்து விடுவதாக அவர் சவால் விட்டார். ‘செய்து காட்டு’ என்று சேனல் எடமருகு எதிர் சவால் விட்டார். சாவுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. தொலைக்காட்சி பார்வையாளர்கள் சேனல் எடமருகுவிடம் தொடர்பு கொண்டு ‘நலமுடன் இருக்கிறீர்களா?’ என்று விசாரித்துக் கொண்டே இருந்தனர். வழக்கம்போல பார்ப்பன ‘மாந்திரிகவாதி’தான் தோற்றுப் போனார்.
2001ஆம் ஆண்டு மே மாதம் டெல்லி புறநகர் பகுதியில் ஒரு பீதி பரவியது. 4 அடி உயரமுள்ள குரங்குபோல தோற்றம்கொண்ட ஒரு உருவம், புறநகர் பகுதியில் மனிதர்களைத் தாக்கி வருகிறது என்று புரளி. மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அஞ்சினார்கள். குரங்கு உருவப்பிராணியைப் பிடிப்பதற்கு 3000 போலீசார் குவிக்கப்பட்டனர். மக்களிடம் உளவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அச்சமே சமூகத்தைப் பிடித்து ஆட்டுகிறது என்பதை அறிந்த சேனல் எடமருகுவும், அவரது பகுத்தறிவாளர் புலனாய்வுக் குழுவும் களமிறங்கியது. பல நாள்கள் தொடர்ந்து டெல்லி புறநகர்ப் பகுதியை கண்காணித்து, இது ‘அச்சத்தால் உருவாக்கப்படும் வீண் புரளி’ என்ற உண்மையை மக்களிடம் உணர்த்தியது. அதற்குப் பிறகே மக்கள் அமைதி நிலைக்கு திரும்பினர். குரங்கு உருவமும் வரவில்லை. தங்களை குரங்கு போன்ற உருவம் தாக்கியதாகக் கூறப்பட்டவர்களை இக் குழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர். தங்களின் அச்சத்தில் உருவான அதீதமான கற்பனை உணர்வுகளே தாங்கள் தாக்கப்பட்டதாக கூறியதற்கான காரணம் என்பதை அவர்களிடம் வாக்குமூலங்களாகப் பெற்று அம்பலப்படுத்தினார்கள்.
‘பிரன்ட் லைன்’ ஏட்டுக்கு (அக்.4, 2013) சேனல் எடமருகு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“வாழ்க்கை முறையில் வேகமான மாற்றங்கள் உருவாகி வருகின்றன. பழைய மூடநம்பிக்கைகள் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. இந்தச் சூழலில் தங்களால் ஏற்கெனவே நம்பப்பட்டு வந்த நம்பிக்கைகள் வாழ்க்கை குறித்த மதிப்பீடுகள் மாறிப் போய் விடுமோ என்ற அச்ச உணர்வுக்கு உந்தப்பட்டு, அதைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஒரு காலத்தில் ‘கடவுள்’, ‘மாந்திரிகம்’, ‘பிரார்த்தனை’ என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள், புதிய சூழலில் ‘ஆன்மீகக் குரு’க்களை தேடிப் போகிறார்கள். இந்த ‘குரு’க்கள் கூறுவதுபோல் தங்களின் வாழ்க்கையின் எதிர்காலம் அமையும் என்று நம்புகிறார்கள். இன்னும் சிலர், தங்களின் பழைய நம்பிக்கைகளை வேகவேகமாக புதுப்பித்து பாதுகாத்துக் கொள்ள துடிக்கிறார்கள். அதற்காக பழமைச் சிந்தனைகளுக்கு போலி அறிவியலைப் பயன்படுத்தி விளக்கம் கூறத் தொடங்கிவிட்டனர். அத்தகைய விளக்கங்களில் மயங்கிப் போகிறார்கள்.
படித்தவர்களாக வளர்ச்சியுற்ற சமூகத்தினராக இருந்தாலும் படிக்காத கிராமத்து மக்களாக இருந்தாலும் விஞ்ஞானத்தைப் பற்றிய பொதுவான புரிதல்கூட அவர்களிடம் இல்லை. கிராமத்து மக்களோ தங்களின் துயரச் சுமை நிறைந்த வாழ்க்கையில் இந்த நம்பிக்கைகள் திடீர் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்புவதோடு இந்த மூட நம்பிக்கைகள் அவர்களுக்கு ஆறுதலான உணர்வுகளை வழங்குகிறது. அதன் காரணமாகவே மீண்டும் மீண்டும் சாமியார்களையும் சோதிடர்களையும் நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வாக்குப் படைத்த அரசியல்வாதிகள் பெரும் பணக்காரப் புள்ளிகள். ‘அதீதமான சக்தி’ ஒன்று இருப்பதாக நம்பி அதை மூர்க்கத்தனமாக பின்பற்றுகிறார்கள். தங்களின் நேர்மையற்ற செயல்பாடுகளை இந்த முகமூடிக்குள் மறைத்துக் கொள்வதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது. எல்லாம் மோசடி என்று தெரிந்தே அவர்கள் பரப்பும் ‘நம்பிக்கை’ இது. எனவே இந்த மனிதர்களை அம்பலப்படுத்துவதும் அறியாமையில் மூடநம்பிக்கைகளை நம்பிக் கொண்டிருக்கும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே எங்கள் நோக்கம்” என்கிறார் சேனல் எடமருகு.