அயோத்தியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, முக்கிய கோயில்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். கோயில்களைப் பாதுகாப்பது நீதிமன்றங்களின் வேலை அல்ல என்று கூறி, உச்சநீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆக, கோயில்களை யார் தான் பாதுகாப்பது என்று, பக்தர்கள் கேட்கிறார்கள்! கடவுள் தன்னைப் பாதுகாத்துக் கொள்வார் என்பதை மட்டும் யாரும் நம்பத் தயாராக இல்லை. “நல்ல” பக்தி.

“நல்ல” கொள்கை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  விசுவ இந்து பரிஷத் தலைவர் தொகாடியா தொழிலதிபர்கள் கூட்டம் ஒன்றை ராம்பட்டேல் என்ற தொழிலதிபர் வீட்டில் கூட்டி  தொழிலதிபர்களிடமிருந்து பெரும் தொகையைத் திரட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார். முதல் கட்டமாக, ஒரு கோடி நிதி திரட்டப்படுகிறது. அத்வானியைப் பதவியிலிருந்து விரட்டுவதற்கும், விசுவ இந்து பரிஷத்தை வலிமைப்படுத்துவதற்கும், இந்தப் பணம் செலவிடப்படுமாம்.

‘டெக்கான் குரானிக்கல்’ ஏடு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அடுத்த நாளே தொகாடியா மறுப்பு தெரிவித்து, அந்த ஏடு மன்னிப்புக் கோர வேண்டும் என்று, வழக்கறிஞர் மூலம் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளார். ‘டெக்கான் குரோனிக்கல்’ நாளேடு, ‘நாங்கள் வெளியிட்டது உண்மையான செய்திதான், மன்னிப்பு கோர முடியாது’ என்று அறிவித்து விட்டது. இனி ‘டெக்கான் குரானிக்கல்’ மீது வழக்கு தொடர, தொலதிபர்களிடம் தொகாடியா நிதி திரட்டக் கூடும். “நல்ல” கொள்கை.

“நல்ல” நம்பிக்கை

விருதுநகர் மாவட்டம் கல்ல குறிச்சியைச் சார்ந்த ஏ.சு.கணேசன் என்ற கிறிஸ்தவ மத பிரச்சாரகர், தனது மனைவி, இரண்டு குழந்தைகளை உயிரோடு எரித்துவிட்டு, தனக்கும் தீ வைத்துக் கொண்டார். ஏ.சு.கணேசன் மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் இறந்து விட்டனர். “பரலோகத்துக்கு வர கர்த்தர் எங்களை அழைத்துள்ளார்” என்று கடிதம் எழுதி வைத்துள்ளார், அந்த கிறித்துவ மதப் பிரச்சாரகர். “நல்ல” நம்பிக்கை.

நல்ல முடிவு

ஜெயேந்திரரின் சங்கர மடம் நடத்தி வரும் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரத்தை பல்கலைக் கழக நிதி உதவிக்குழு ரத்து செய்யும் என்று தகவல்கள் கூறுகின்றன. பல்கலைக் கழகத்தில் படிக்கும் பார்ப்பன மாணவர்கள், இதை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறார்கள். இந்தப் பல்கலை விடுதியில் படிக்கும் பார்ப்பன மாணவர்களும், பார்ப்பனரல்லாத மாணவர்களும் தனித்தனியாக சாப்பிட வேண்டும் என்ற ‘வர்ணாஸ் ரமத்தை’ப் பின்பற்றி வரும் நிறுவனம் இது! காலம் தாழ்ந்தாலும்  நல்ல முடிவு.

Pin It