• வைக்கத்தில் ‘முறை ஜெபம்’ என்ற சடங்கு நிகழும்போது, தீண்டப்படாதவர்கள் கோயிலைச் சுற்றி எந்த வீதிகளிலும் நடப்பதற்கு அனுமதிப்பது இல்லை. டி.கே. மாதவன் என்ற ஈழவ சமுதாய வழக்கறிஞர் நீதிமன்றம் போவதற்கான பாதை அடைக்கப்பட்டதால்தான் பிரச்சினை தீவிரமாகியது. அது என்ன முறை ஜெபம்? 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நம்பூதிரி பார்ப்பனர்களுக்காக மட்டும் திருவிதாங்கூர் அரசர் நடத்தும் ஒரு சடங்குதான் ‘முறை ஜெபம்’.
 
• 150 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மன்னர் ‘பிராமணன்’ ஒருவனைக் கொன்றதற்காக நடத்தப்படும் பிராயச்சித்த சடங்கு. 60 நாட்கள் இந்த ஜபம் நடக்கும்.  அனைத்து நம்பூதிரிகளும் பங்கேற்பார்கள். ஒவ்வொரு நம்பூதிரிக்கும் ஏதாவது வசதி குறைவுகள் இருக்கிறதா என்பதை அரசர் நேரில் கேட்டு அறிந்து குறைகளை உடனடியாகத் தீர்த்து வைப்பார். அவர்கள் தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படும். 25 ஆண்டுகாலம் இந்த சடங்கை நடத்த வேண்டும் என்று தொடங்கியபோது முடிவு செய்யப்பட்டது. பார்ப்பனர்கள் விடுவார்களா? 25 ஆண்டுகாலத்துக்குப் பிறகும் இந்த சடங்கைத் தொடர்ந்து நடத்தி அரசுப் பணத்தை வாரி சுருட்டி வந்தனர். 28ஆவது ஆண்டு தான் 1924இல் நடந்ததாகும். அப்போது அதற்கு சமஸ்தானம் ஒதுக்கிய தொகை ரூ.6 இலட்சம்.
 
• களங்கப்படுத்துதல் (Defile) என்ற சொல்லுக்கு பார்ப்பன அகராதியில் ஒரு விளக்கம் தருகிறார்கள். 1885இல் முத்துசாமி அய்யர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அவரிடம் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. ‘ஆசாரி’ சமூகத்தைச் சார்ந்த ஒருவர் கோயிலுக்குள் சென்று அவரே ‘அபிஷேகம்’ செய்து சாமி சிலையை களங்கப்படுத்தி விட்டார் என்பது வழக்கு. விசாரணையில் அய்ரோப்பிய நீதிபதி போர்ட்டர், “இயற்கையாக உருவாகும்  அசுத்தம் தான் களங்கம்; இதுதான் ஆங்கில அகராதி தரும் அர்த்தம்” என்றார். ஆனால் நீதிபதி முத்துசாமி அய்யர், “பிராமணர்கள் அதை எந்தப் பொருளில் எடுத்துக் கொள்கிறார்களோ அந்தப் பொருளைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இது தாந்திரிகமான அசுத்தம்; களங்கப்படுத்துதல் ஆகும்” என்று விளக்கம் தந்தார். ‘அபிஷேகம்’ செய்த ஆசாரி சமூகத்தைச் சார்ந்தவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதே அடிப்படையில் தீண்டாமையை நியாயப்படுத்தும் பல தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இதுதான் ஆளுநர் ரவி பேசும் சனாதனப் பாரம்பர்யப் “பெருமை”.
 
• நீதிபதி சதாசிவம் அய்யர் ஒரு தீர்ப்பில், “எண்ணெய் ஆட்டும் வாணிய செட்டியார் விதைகளின் உயிரை அழிக்கிற பாவச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் என்பதால் அவர்களின் கோயில் நுழைவு ‘தீட்டாகி’ விடும் என்று தீர்ப்பளித்தார். பார்ப்பனர் உண்ணும் காய்கறிகளின் உயிர்களும் அழிக்கப்படுகிறது என்பது சதாசிவ அய்யருக்கு தெரியாதா?
 
• வைக்கம் போராட்டம் நடந்தபோது வைதீகப் பார்ப்பனர்கள் ‘பகவான்’ வைக்கத்து அப்பனிடம் பூக்கட்டி வைத்து, தாழ்த்தப்பட்ட மக்களை சாலைகளில் அனுமதிக்கலாமா என்று கேட்டபோது, அனுமதிக்கலாம் என்று வைக்கத்து அப்பன் கூறி விட்டான். உடனே, ‘பிராமணர்கள்’ சாமிக்கு சக்தி குறைந்து விட்டது. ஹோமம் நடத்தி உத்தரவு கேட்கலாம் என்று கூறி மூன்று நாள் ‘ஹோமம்’ (வேத சடங்கு) நடத்தி உத்தரவு கேட்டபோது அப்போதும் நடமாட அனுமதிக்கலாம் என்று ‘பூவரம்’ கொடுத்து விட்டது கடவுள். அதற்குப் பிறகுதான் நம்பூதிரிகளும் நாயர்களும் கூடி ஆலோசித்துப் போராடும் சத்தியாகிரகிகளைக் குறிப்பாக “ஈ.வெ.ராமசாமி நாயக்கரை” அழித்து ஒழிக்க சத்ரு சம்ஹார யாகம் நடத்தினார்கள். 
 
காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி; பெரியாருக்கு ஒரு நீதி
 
வைக்கம் போராட்டத்தில் பெரியார் சிறைச் சாலைகளையும் அடக்குமுறைகளையும் சந்தித்தார். அதே நேரத்தில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் பார்ப்பனர்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.
 
• வைக்கம் போராட்டத்தைப் பார்வையிட வந்த காங்கிரஸ் தலைவர் சீனிவாச அய்யங்கார் வைக்கம் திவான் வீரராகவ அய்யங்கார் வீட்டில் தங்கினார்.
 
• மற்றொரு காங்கிரஸ் தலைவர் எஸ்.வி. வெங்கட்ரமண அய்யங்கார், காவல்துறை ஆணையர் அனுப்பிய காரைப் பயன்படுத்தினார். தீண்டாமையை ஆதரித்த வைதீகர்களுடன் சேர்ந்து விருந்து உண்டார்.
 
• வைக்கம் போராட்டத்தில் மன்னர் மரணமடைந்த வுடன் மகாராணி அதிகாரத்துக்கு வந்தவுடன் போராட்டத்தின் கோரிக்கைகளை ஏற்க முன் வந்தார். அப்போது திவான் பெரியாரோடு நாங்கள் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டார். காரணம் பெரியார், திருவாங்கூர் சமஸ்தானத் துக்கும் வைதீகர்களுக்கும் எதிராக சமரசமின்றி போராடியது தான். இந்த நிலையில் ராஜாஜியை திவான் அழைத்து காந்தியாரோடு சமரசம் பேச ஏற்பாடு செய்யுமாறு கூறுகிறார். வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்பதையே விரும்பாத ராஜாஜி, திவான் வேண்டுகோளை ஏற்று காந்தியாரோடு பேசி வைக்கம் வரவழைத்தார்.
 
• வைக்கம் வந்து சேர்ந்த காந்தியாரை சமஸ்தான அரசு தனது விருந்தினராகவே நடத்தி கவுரவித்தது. அதே நேரத்தில் பெரியார் வைக்கம் வந்தபோது மன்னர் தந்த வரவேற்பைப் புறக்கணித்து போராட்டக் களத்தில் குதித்தவர் பெரியார். 
இதுதான் சனாதனம்; இதுதான் பார்ப்பனியம்!