• வைக்கம் மகாதேவன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ‘தீண்டப்படாத’ சமூகத்தினர் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடங்கியது வைக்கம் போராட்டம். தொடங்கிய நாள் 1924, மார்ச் 30. 1925 நவம்பர் 23இல் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஒரு வருடம் 9 மாதங்கள். அதாவது 604 நாட்கள் போராட்டம் நடந்தது. தீண்டாமைக்கு எதிராக மக்களைத் திரட்டி நீண்ட காலம் நடந்த இந்த உரிமைப் போர் தான் பிறகு கோயில் நுழைவுப் போராட்டத்துக்கு வித்திட்டது.
• போராட்டம் தொடங்கிய 15ஆவது நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார், போராட்டக்காரர்களான நீலகண்டன் நம்பூதிரிபாத், ஜார்ஜ் ஜோசப், டி.ஆர். கிருஷ்ணசாமி அய்யர் எழுதிய அவசர கடிதத்தை ஏற்று, வைக்கம் புறப்பட்டார். நீங்கள் வந்தே தீர வேண்டும்; போராட்டத்தைத் தொடர முடியவில்லை; 18 பேர் சாகக் கிடக்கிறார்கள் என்று அந்தக் கடிதம் கூறியது.
• கடிதம் ராஜாஜி - காந்திக்கும் எழுதப்பட்டது. அவர்கள் செவிசாய்க்கவில்லை. ராஜாஜியிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து விட்டுப் புறப்பட்டார் பெரியார். ராஜாஜிக்கு பெரியார் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதில் உடன்படவில்லை.
• வைக்கம் வந்து சேர்ந்தவுடன் பெரியார் நடத்திய 15 நாள் பிரச்சாரத்தில் திருவாங்கூர் சமஸ்தானம் அலறியது. திருவாங்கூர் அரசர் உயர்பதவிகளில் தாழ்த்தப்பட்டோரையும் பணியாட்களாக “பிராமணர்’களையும் நியமித்து தனது வர்ணாஸ்ரம எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார். நம்பூதிரிகளும், நாயர்களும் தான் தீண்டாமையை நியாயப்படுத்துகிறார்கள் என்றார் பெரியார்.
• இந்துக்கள் சில குறிப்பிட்ட வேலையை செய்வதால் தீண்டத்தகாதார் ஆகி விடுவாரா? மனித உடலில் வலது கைக்கு ஒரு வேலை; இடது கைக்கு ஒரு வேலை என்று பிரித்து வைத்திருக்கிறீர்கள். அதேபோல் சமூகத்திலும் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு வேலை என்று ஏன் பிரிக்கிறீர்கள்? ஒவ்வொரு கைக்கும் தனித்தனியாக தந்தை தாய் உண்டா என்று கேட்டார் பெரியார்.
• திருவிதாங்கூர் சமஸ்தானம் கோட்டயம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய பெரியாருக்கு முதலில் தடை போட்டது. தடையை மீறுவேன் என்றார் பெரியார். அடுத்து திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குள் நுழையத் தடை போட்டது. தடைகளை உடைத்து வைக்கம் ஆசிரம கட்டிடத்துக்கு வெளியே பெரியார் பேசினார். மக்கள் உணர்ச்சி ஆரவாரம் செய்தனர். அடுத்த மூன்று நாட்களில் பெரியார் கைது செய்யப்பட்டார்.
• காவல்துறை அதிகாரிகள் பிச்சு அய்யங்கார், நாராயணபிள்ளை நீதிமன்றத்தில் பெரியாருக்கு எதிராக சாட்சியமளித்தனர். பெரியார் எதிர்வழக்காட மறுத்து விட்டார்.
- பழ. அதியமான் நூலிலிருந்து
வைக்கம் : சில வரலாற்றுக் குறிப்புகள் நம்பூதிரிகளின் திமிர்
• வைக்கத்தில் தீண்டாமையை நம்பூதிரிகளும் நாயர்களும் நியாயப் படுத்தினர். போராட்டத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவர் தேவன் நீலகண்டன் நம்பியாத்திரி என்ற நம்பூதிரிப் பார்ப்பனர். காந்தி இவரை சந்தித்துப் பேச விரும்பினார். ‘இண்டம் துருத்திமனை’ என்ற இடத்தில் வாழ்ந்த இந்த நம்பூதிரி ஒரு நிலப்பிரபு. இவரது கட்டுப்பாட்டின் கீழ் 48 “பிராமணக்” குடும்பங்கள் இருந்தன.
• காந்தி வைசியர் என்பதால் இவரை தனது வீட்டுக்குள் விட மறுத்த இவர், தனியாக ஒரு தாழ்வாரத்தை உருவாக்கி காந்தியுடன் பேசினார். அவர் காந்தியுடன் பேசிய கருத்துகள் பச்சையான பார்ப்பன வெறியை வெளிப்படுத்தின.
“முற்பிறப்பின் மோசமான கர்மாவின்படி நெருங்க முடியாத ஜாதியில் அவர்கள் பிறந்திருக்கிறார்கள்; எனவே அவர்களை அப்படித்தான் நடத்த வேண்டும்.”
“கொள்ளையர்கள், குடிகாரர்களைவிட இவர்களை மோசமாக நடத்த வேண்டும்; இவர்கள் சட்டபடி குற்றவாளிகள் என்பதால் அவர்களை ஒதுக்கி வைக்க முடியும்; ஆனால் தீண்டப்படாத வர்களை சட்டம் தண்டிக்காத நிலையில் எங்களிடம் நம்பிக்கையால்தான் தண்டிக்க வேண்டும். எங்களது ஆச்சாரியார்கள் இதைத்தான் எங்களுக்கு கற்பித்திருக்கிறார்கள்.”
“எங்களால் தண்டனை பெறுவதற்காகவே அவர்கள் இந்த உலகத்தில் பிறந்திருக்கிறார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”
“இவர்கள் கோயில் வீதிகளில் நடக்க நீதிமன்றம் அனுமதித்தால் அந்தக் கோயில்களையே நாங்கள் புறக்கணித்து விடுவோம்”
- என்று பேசினார், அந்த நம்பூதிரி.
(இந்த உரையாடல் முழுவதையும் சுருக்கெழுத்தில் எழுதி பதிவு செய்தவர் கிருகத்துவ அய்யர். இது ஆவணமாக இருக்கிறது. ஆதாரம்: பழ. அதியமான் நூல்)