பெரியாரின் இணையர் நாகம்மையார், சகோதரி கண்ணம்மாள் மற்றும் பெரியாரின் உறவுப் பெண்கள் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றனர். 1924 - மே, ஜூன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் நாகம்மையார் வைக்கத்திலேயே தங்கி போராட்டத்தை நடத்தினார்.
 
nagammaiyar• நாகம்மையார் ‘தீண்டப்படாத’ பிரிவைச் சார்ந்தவர் அல்ல; எனவே அவர் வீதியில் அனுமதிக்கப்பட்டார். தன்னுடன் ‘தீண்டப்படாத’ ஜாதிப் பெண்ணையும் அழைத்துச் சென்றதால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வீதியில் நடந்து சென்று கோயிலுக்குள்ளும் நுழைந்து வழிபாடு நடத்த முயலுகிறார். உடன் தீண்டப்படாத ஜாதிப் பெண்ணை அழைத்து வந்ததால் எதிர்த்தார்கள். பிறகு கோயிலுக்கு வெளியே ‘தீண்டப்படாத’ ஜாதிப் பெண்ணுடன் சேர்ந்து வழிபாடு செய்தார். தனக்குக் கிடைத்த வீதிகளில் நடக்கும் உரிமையை கோயில் வழிபாட்டு உரிமையையும் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்துக்குப் பயன்படுத்தினார் நாகம்மையார்.
 
• நாகம்மையார் ‘சாணார்’ பெண்களுடன் கோயில் வழிபாட்டுக்கு போகும்போது ஒரு பார்ப்பனர் பெரிய தடியை வைத்துத் தடுத்தார். அந்தப் பார்ப்பனர் பேச்சுத் திறனும் கேட்கும் திறனும் இழந்தவர். அருகில் நின்ற பார்ப்பனர்களுடன் நாகம்மையார் எதிர்வாதம் செய்தார். அடுத்த நாள் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு 3 மணி நேரம் போராட்டம் நடத்தினார்.
 
• அடுத்த நாள் (1924, ஜூலை 13) நாகம்மையார், பெரியார் சகோதரி கண்ணம்மாள், பெரியார் சித்தி, பி.கே. கல்யாணி அம்மாள் தடையை மீறி போராடச் சென்றபோது காவலர்கள் தடுத்து நிறுத்தி, “பாம்புகள் இருக்கின்றன; போனால் கடிக்கும்” என்று மிரட்டினார்கள். எங்களைக் கடிக்காது என்று கூறி நாகம்மையார் மறியல் செய்தார்.
 
• பெரியார் சிறைப்பட்டிருந்த காலத்தில் நாகம்மையார் வீடு திரும்பி விடவில்லை. ஒரு முறை நாகம்மையாரும் கைதாகி ‘ரிமாண்ட்’ செய்யப்பட்டுப் பெரும் துன்பத்தை அனுபவித்தார்.
 
தகவல் : பழ. அதியமான் எழுதிய ‘வைக்கம் போராட்டம்’ நூல்
 
***
 
“பெரியார் எனும் பெருவிளக்கு நமக்கு உறுதுணை”
 
அண்ணல் காந்தியும், தந்தை பெரியாரும் ஒப்பற்றத் தியாகிகளும் இணைந்து முன்னெடுத்த வைக்கம் போராட்டம், தமிழ்நாட்டில் சமூக நீதிப் போராட்டங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. இதுவே பின்னாளில் இந்தியாவிற்கே சமூக நீதிக்கான விதையாக அமைந்தது. 
 
பெரியார், அய்யா முத்து, டி.கே. மாதவன், கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப், நீலகண்ட சாஸ்திரி, காந்திராமன், மண்ணத்து பத்மநாபன் போன்ற தியாகிகளை மீண்டும் அறிமுகப்படுத்தி, அவர்களின் உணர்வுகளை இளைய சமுதாயத்திற்கும், மக்களுக்கும் ஊட்ட வேண்டிய பொறுப்பு இப்பொழுதும் நமக்கு இருக்கிறது. 
 
சனாதனக் கொடுமைகளைத் தகர்த்தெறிய வேண்டிய இந்த நேரத்தில் ஜாதிய மதவாத சக்திகளும் தலைதூக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். தேசத்தை இருளில் ஆழ்த்தும் இவர்களை விரட்ட பெரியார் எனும் பெருவிளக்கு நமக்கு உறுதுணையாக இருக்கும். எனக்கு மனிதப் பற்றைத் தவிர வேறு எந்தப் பற்றும் இல்லை என்று சொன்ன மாசற்றத் தலைவராய் சமூக சீர்திருத்தத்திற்கு வித்திட்டவர் தலைவர் பெரியார்.
 
அவரது தேவை தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகத்திற்கே தேவை. இதை உணர்ந்து சகோதரர்களாய் கரம் கோர்த்து சமத்துவம் படைக்க உறுதி ஏற்போம்.
 
- வைக்கம் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
 
Pin It