பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (7)

வைக்கம் போராட்டத்துக்காக நான் வருகிறேன் என்ற விஷயம் தெரிந்து கொண்டு, போலீஸ் கமிஷனர் பிட், இன்னொரு அய்யர் (அவர் பெயர் இப்போது சரியாய் ஞாபகத்திற்கு வரவில்லை. திவான் பேஷ்தாரர் சுப்பிரமணிய அய்யர் என்று நினைக்கிறேன்), ஒரு தாசில்தார் (விசுவநாத அய்யர்) எல்லோரும் என்னைப் படகிலிருந்து நான் இறங்கும் போதே வரவேற்றார்கள். மகாராஜா அவர்கள், எங்களை அவர்கள் சார்பில் வரவேற்று வேண்டிய எல்லா சவுகரியங்களையும் பண்ணித் தரச் சொன்னார் என்று சொல்லி எங்களை வர வேற்றார்கள். இது எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்தது என்றாலும், ஏன் மகாராஜா அப்படிச் செய்தார் என்றால் அதற்கு 3 மாதத்திற்கு முன்பு இருந்த இராஜா டெல்லிக்குப் போகிறதற்கு ஈரோடு வழியாக வந்து, ஒரு நாள் ஈரோட்டிலே தங்கிவிட்டு, அடுத்த நாள் டெல்லிக்கு இரயில் ஏறிப் போவது வழக்கம். அப்படி ஈரோட்டிலே தங்கும்போது, அதற்கு வேண்டிய வசதிகளையும், மகாராஜா எங்கள் பங்களாவிலும் தான் தங்க ஏற்பாடு செய்யப்பட் டிருக்கும். அப்படி 3 மாதத்திற்கு முன் வந்தபோது அவருடன் இந்த போலீஸ் அதிகாரி, இன்னும் இராஜாவுக்கு உதவிக்குத் தேவையான எல்லா அதிகாரிகளும் வந்து போனதில் இவர்கள் ஈரோட்டில் என்னை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறவர்களாகவும், நானும் அவர்களை எங்கள் வீட்டிற்கு வந்தபோது, சந்தித்துப் பேசியவர்களாகவும் இருந்திருக்கிறோம். இதனால் மகாராஜா சற்று மரியாதை காட்டினார்.

சத்தியாகிரகத்தைத் தொடர்ந்து நடத்த வந்த என்னை மகாராஜா சார்பில் இந்தப் பெரிய அதிகாரிகளே வரவேற்கின்றார்கள் என்று கண்டதும் இப்பக்கத்தில் பாமர மக்களுக்கு ஒரே மகிழ்ச்சியாக ஆகி விட்டது. என்னை விருந்தினராக மகாராஜா கருதினாலும்கூட நான் பல இடங்களில் சென்று பொதுக் கூட்டம் போட்டு சத்தியாக்கிரகத்தைப் பற்றிப் பேசினேன். காரசாரமாகப் பேசினேன், கீழ்ச்சாதி மக்களான நாம் உள்ளே தெருவில் போவதால் தீட்டுப்பட்டுவிடும், செத்துப் போகும் என்று சொல்லும் வைக்கத்தப்பனைப் போட்டு வேட்டி துவைக்கணும் என்றெல்லாம் கடுமையாகப் பேசினேன். சுற்று வட்டார மக்கள் ஆயிரக்கணக்கில் வைக்கம் வந்து கூடி விட்டார்கள். அது இராஜாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 5, 6 நாள் வரை சும்மா தான் இருந்தார். பலரும் போய் அவரிடத்தில் நான் பேசுவது குறித்து முறையிட்டார்கள். பிறகு இராஜாவினால் சும்மா இருக்க முடியவில்லை.

இப்படி சுமார் 10 நாள் ஆனவுடனேயே, ஒரு போலீசு (சூப்பிரண்ட்) அதிகாரி அவர்கள் அய்யங்கார் - அவர் முயற்சியால் பி.சி.26 படி தடையுத்தரவு போட்டார். அந்நாட்டிலே 26 என்பது இப்போது இங்கே 144 தடையுத்தரவு போன்றது. நானும் சட்டம் மீறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டறிந்தேன். உடனே நான் சட்டத்தை மீறிப் பேசினேன். என்னுடன் (தற்போது காங்கிரசுக்காரராக இருக்கும்) கோவை திரு. அய்யாமுத்து அவர்களும், மற்றும் இருவரும் சட்டம் மீறினோம். எங்களைக் கைது செய்தார்கள். எல்லோருக்கும் ஒரு மாதம் வெறுங்காவல் போட்டார்கள்! என்னை அருவிக்குத்தி என்ற ஊரில் உள்ள ஜெயிலில் (சிறையில்) வைத்தார்கள். அதற்குப் பிறகு என் முதல் மனைவியார் திரு. நாகம்மையாரும் பிறகு நான் வெளியே வந்தவுடன் என் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாளும் மற்றும் சிலரும் வந்து நாடெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தார்கள். நான் விடுதலை ஆகி வந்து அதே மாதிரி மறுபடியும் திட்டம் போட்டேன்.

நான் வெளியே வருவதற்குள் இந்தக் கிளர்ச்சிக்கு ஏராளமான அளவில் ஆதரவு பெருகிவிட்டது. மளமளவென்று ஆட்களும் வந்து சேர ஆரம்பித்தனர். ஏராளமான பேர்கள் பல பகுதிகளிலும் சென்று சுற்றுப் பயணம் செய்து தீவிரப் பிரச்சாரம் செய்தார்கள். எதிரிகளும் அடிதடி, காலித்தனம், கலவரங்கள் முதலியவற்றில் ஈடுபட்டு இதை எப்படியாவது ஒடுக்கிவிட வேண்டுமென்று பலவித முயற்சிகளும் செய்து பார்த்தார்கள்.

ஆனால், போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டேயிருந்தது. வெளிநாடுகளிலிருந்து மலையாளிகளும் சாதிக் கொடுமை என்பதைக் கண்டு மனம் துடித்து, அதற்குத் தங்கள் எதிர்ப்பையும் சாதிக் கொடுமைகளை எதிர்த்துச் செய்யப்படும் போராட்டத்திற்குத் தங்கள் ஆதரவையும் காட்டும் வண்ணம் தினம் ரூ.50-60-100 என்று மணியார்டர் அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள்.

பெரிய பந்தல் போட்டு தினசரி போராட்ட வீரர்கள் முகாம் செய்திருந்த வீட்டில் 200-300 பேர் சாப்பிடுவார்கள்! தேங்காயும், மற்ற காய்கறிகளும், மலைமலையாகக் குவிந்து கிடக்கும். பெரிய கலியாண வீடு மாதிரி காரியங்கள் நடைபெறும்.

திரு. இராசகோபாலாச்சாரியார் எனக்குக் கடிதம் எழுதினார். நீ ஏன் நம் நாட்டை விட்டுவிட்டு இன்னொரு நாட்டிலே போய் இரகளை செய்கிறாய்? அது சரியல்ல. அதை விட்டுவிட்டு நீ இங்கு வந்து, நீ விட்டு விட்டுச் சென்ற வேலைகளைக் கவனி என்று. அப்போது இருந்த எஸ். சீனுவாசய்யங்காரும் இப்படித்தான் என்னை வைக்கத்திற்கு வந்தே அழைத்தார்; வரச் சொன்னார். அதே மாதிரி பத்திரிகையிலேயும் எழுதினார்கள். ஆனால், இதற்குள் சத்தியாக்கிரக ஆசிரமத்தில் 1000 பேருக்கு மேல் சேர்ந்தார்கள். தினமும் ஊர் முழுவதும் சத்தியாக்கிரக பஜனையும், தொண்டர்கள் ஊர்வலமும் நடந்து உணர்ச்சி வலுத்து விட்டது.

பஞ்சாபில் சுவாமி சிரத்தானந்தா என்பவர் ஒரு அப்பீல் போட்டார். அதன் பிரகாரம் பஞ்சாபிலேயிருந்து சீக்கியர்கள் 20-30 ஆள்களையும், இரண்டாயிரம் ரூபாயையும் கையிலெடுத்துக் கொண்டு நேரே வைக்கத்துக்கு வந்தார்கள். தாங்கள் சாப்பாட்டுச் செலவை ஏற்றுக் கொண்டு ஆதரவு தருவதற்காக. உடனே இங்கிருந்த பார்ப்பனர்கள் எல்லாரும் சீக்கியர்கள் வந்து, இந்துமதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள் என்றெல்லாம் காந்திக்கு எழுதினார்கள்.

உடனே அதன் பேரில் காந்தியார் துலுக்கன், கிறிஸ்தவன், சீக்கியன் ஆகிய பிற மதக்காரன் எவனும் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று எழுதி விட்டார்கள்.

காந்தி எழுதினவுடனே இதில் கலந்திருந்த சீக்கியன், சாயபு, கிறிஸ்தவன் எல்லாரும் போய் விட்டார்கள். அதுபோலவே, தீவிரமாக இதில் ஈடுபட்டு முன்னோடியாக உழைத்த காலஞ்சென்ற ஜோசப் ஜார்ஜீக்கும் இராஜகோபாலாச்சாரியார் கடிதம் எழுதினார். இந்து மதச்சார்புள்ள இந்தக் காரியத்திலே நீ சேர்ந்திருப்பது தப்பு என்றார்.

அதை ஜோசப் ஜார்ஜ் அவர்கள் இலட்சியம் பண்ணாமல் திருப்பி எழுதினார். நான் என் சுயமரியாதையை விட்டுவிட்டு இருக்க மாட்டேன். வேண்டுமானால் என்னை விலக்கி விடுங்கள் என்றார். தற்போதைய நாகர்கோயில் பயோனீர் டிரான்ஸ் போர்ட்டைச் சேர்ந்த சேவு என்பவரும் அண்மையில் காலஞ்சென்ற டாக்டர் எம்.இ. நாயுடு அவர்களும் என்னுடனேயே இருந்து தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் இதை விட்டுப் போக மாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்து விட்டார்கள் என்றாலும், காந்தி சத்தியாக்கிரகத்திற்கு விரோதமாக எழுதிப் பணத்தையும் ஆளையும் தடுத்து விடுவாரோ என்று சிலர் பயப்பட்டார்கள்.

அந்தச் சமயம் சாமி சிரத்தானந்தா அவர்கள் வைக்கம் வந்து தான் பணத்துக்கு வகை செய்வதாகச் சொன்னார். பிறகு காந்தி கட்டளைக்கு விரோதமாவே சத்தியாக்கிரகம் நடந்து வந்தது.

இதற்கிடையில் நடந்த ஒரு நிகழ்ச்சியும் கவனிக்கத்தக்கது. எங்கள் போராட்டத்துக்குப் பெரிய மரியாதையையும், செல்வாக்கையும், தேடிக் கொடுத்துவிட்டது, இந்தக் காந்தி கட்டளை. இந்த சமயத்தில் என்னை மறுபடியும் பிடித்து 6 மாதக் கடினக் காவல் விதித்து ஜெயிலில் போட்டு விட்டார்கள். பிறகு சத்தியாகிரகத்தை நிறுத்து வதற்காகவும், எங்களை அழிப்பதற்காகவும் என்று நான் ஜெயிலில் இருக்கிற சமயத்தில் இந்த நம்பூதிரி பார்ப்பனர்களும், சில வைதீகர்களும் சேர்ந்து கொண்டு சத்துரு சங்கார யாகம் என்னும் ஒன்றை வெகு தடபுடலாக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து நடத்தினார்கள். ஒரு நாள் நடுச்சாமத்தில் தொடர்ந்து வேட்டுச் சத்தம் கேட்டது. நான் ஜெயிலில் விழித்துக் கொண்டிருந்தேன். ரோந்து வந்தவனைப் பார்த்துக் கேட்டேன், என்ன சேதி? இப்படி வெடிச் சத்தம் கேட்கிறது? இந்தப் பக்கம் ஏதாவது பெரிய திருவிழா நடக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு அவன் சொன்னான், மகாராஜாவுக்கு உடம்பு சவுக்கியமில்லாமல் இருந்தது. மகாராஜா நேற்று இராத்திரி திருநாடு எழுந்துவிட்டார் என்றான்.

அதாவது ராஜா செத்துப் போனார் என்று சொன்னான். அவ்வளவுதான், மகாராஜா செத்தார் என்றவுடன் எங்களுக்கு ஜெயிலுக்குள்ளாகவே ரொம்ப பெருமை வந்துவிட்டது. அவர்கள் பண்ணிய யாகம் அங்கேயே திருப்பி மகாராஜாவைக் கொன்றுவிட்டது என்றும், அந்த யாகம் சத்தியாக் கிரகக்காரர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும், மக்களிடையே இது ஒரு தனி மதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதன் பிறகு அரசாங்கம் எங்களையெல்லாம் ராஜாவின் கருமாதியை முன்னிட்டு விடுதலை செய்தனர். எதிரிகள் குரலும், கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிவர ஆரம்பித்தது.

ராணியும் கூப்பிட்டு எங்களோடு ராஜி பண்ணி ஒரு உடன்பாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்தவுடன், அப்போது சமஸ்தானத்தில் திவானாக இருந்த ஒரு பார்ப்பான் என்னிடத்தில் நேரே ராணி பேசக் கூடாது என்று கருதி திரு. இராஜகோபாலாச்சாரிக்குக் கடிதம் எழுதினார். இராகோபாலாச்சாரியும் எங்கே என்னிடத்தில் ராஜி பேசி உடன்பாட்டிற்கு வந்தால் எனக்கு மரியாதையும், புகழும் வந்து விடுமே, அந்த மாதிரி வரக்கூடாது என்று கருதி, இதைக் காந்தியாருக்கே அந்த வாய்ப்பு அளித்து காந்தியின் மூலமே காரியம் நடந்ததாக உலகுக்குக் காட்ட வேண்டுமென்று தந்திரம் செய்து காந்திக்குக் கடிதம் எழுதினார். எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. எப்படியாவது காரியம் வெற்றியானால் போதும்; நமக்கு பேரும் புகழும் வருவது முக்கியமல்ல என்ற கருத்தில் நானும் ஒப்புக் கொண்டேன்.

காந்தியும் புறப்பட்டு வந்தார். ராணியோடு காந்தி பேசினார்.

ராணி காந்தியோடு பேசியபோது ராணி தெரிவித்தார்கள், நாங்கள் ரோடுகளைத் திறந்து விட்டுப் போகிறோம். ஆனால், அதை விட்டவுடன் நாயக்கர் கோயிலுக்குள் போக உரிமை வேண்டும் என்று கேட்டு ரகளை செய்தால் என்ன செய்வது? அதுதான் தயங்குகிறோம் என்றார்கள். உடனே காந்தி டி.பி.யில் தங்கியிருந்த என்னிடத்தில் வந்து ராணி சொன்னதைச் சொல்லி என்ன சொல்லுகிறாய்? இதை ஒப்புக் கொண்டு விடுவது நல்லது என்றார். நான் சொன்னேன் பப்ளிக் ரோடு திறந்து விடுவது சரி! ஆனால் அதை வைத்துக் கொண்டு கோயிலைத் திறந்து விடும்படி கேட்க மாட்டோம் என்று எப்படி நாம் உறுதியளிப்பது? கோயில் பிரவேசம் என்பது காங்கிரசின் இலட்சியமாக இல்லாவிட்டாலும் எனது இலட்சியம் அதுதானே! அதை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? வேண்டுமானால் ராணிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள். இப் போதைக்கு அது மாதிரி கிளர்ச்சி எதுவுமிருக்காது. கொஞ்ச நாள் அது பற்றி மக்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்து, கலவரத்திற்கு இடமிருக்காது என்று கண்டால்தான் கிளர்ச்சி ஆரம்பிக்கப்படலாம் என்று சொல்லுங்கள் என்று சொன்னேன்.

அதைக் காந்தி ராணியிடம் சொன்னவுடன் ராணியார் ரோட்டில் யார் வேண்டுமானாலும் நடந்து செல்லலாம் என்று உத்தரவு போட்டு பொது சாலையாக ஆக்கினார்கள்.

(தொடரும்)

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து.