வைக்கம் என்ற சொல் கேரளாவில் பலவற்றுடன் தொடர்பு உடையது. எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர், பாடகர் வைக்கம் விஜயலட்சுமி, வைக்கத்தப்பன் கோயில் என வைக்கம் பல வகையில் பிரபலமானது. பெரும்பாலான இந்தியர்கள் காந்தியுடன் வைக்கத்தை தொடர்புப்படுத்தி பேசுவார்கள். தமிழ்நாட்டில் வைக்கம் என்றால் அது பெரியாரின் அடையாளமாக இருக்கிறது.
ஆனால் சமூக இயக்கத்தின் அடிப்படை யிலான விளைவுகள் வைக்கத்திற்கு அதற்கும் மேல் இருக்கிறது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தோடு தொடர்புடைய மிக முக்கிய நாள் மார்ச் 30. வைக்கம் கோயில் தெரு நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு, இந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி எட்டியிருக்கிறது. 1924ஆம் ஆண்டில் இதே நாளில்தான் அப்போராட்டம் தொடங்கப் பட்டது. இந்தியாவில் கோயில் நுழைவுப் போராட்டங்களின் மிக முக்கிய மைல்கல் வைக்கம் போராட்டம். வைக்கம் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளைப் பயன்படுத்துவதில் ‘தீண்டப்படாதோர்’ எனக் கருதப்படும் சமூகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இந்த அகிம்சை இயக்கம் நடத்தப்பட்டது.
1936ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டத்தின் முன்னோடியாகவும் வைக்கம் போராட்டமே இருந்தது. டி.கே.மாதவன், கே.பி.கேசவ மேனன் உள்ளிட்டோரால் வைக்கம் போராட்டம் தொடங்கப்பட்டது. காந்தியின் ஆலோசனையும் இப்போராட்டத்திற்கு இருந்தது.
இந்த போராட்டம் நிலையாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர் பெரியார். அன்றைக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார் பெரியார்.பெரியாரின் நுழைவும், நிபந்தனைகளும்: கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த நபர்கள் நுழைய அனுமதிக்க மறுக்கப்படுவதை எதிர்த்து, கேரள காங்கிரஸின் ஆதரவுடன், தீண்டாமைக்கு எதிரான குழு மார்ச் 30, 1924 அன்று போராட்டத்தைத் தொடங்கியது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இந்தப் போராட்டம் நீடித்தது. போராட்டத்தில் பங்கெடுத்த பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திடீரென ஏப்ரல் 9-ஆம் தேதி எல்லோரையும் கைது செய்வதை காவல்துறை நிறுத்தியது. காவல்துறையின் கோபம் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை நோக்கி மட்டும் திரும்பியது. தலைவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டதால், ஒருகட்டத்தில் போராட்டத்தை தலைமையேற்று நடத்த தலைவர்கள் இல்லாமல் போனது.
இதனால் நீலகண்டன் நம்பூதிரி, ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்ட தலைவர்கள் பெரியாரை போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்த அழைத்தார்கள். அதனைத் தொடர்ந்துதான் பெரியார் வைக்கம் சென்று, போராட்டத் திற்கு தலைமை தாங்கினார். பெரியார் அங்கு ஆற்றிய பங்களிப்பிற்காகவே நவசக்தி ஆசிரியரும், தமிழ் அறிஞருமான திருவிக, பெரியாரை வைக்கம் வீரர் என போற்றினார்.
கைதுகள், விசாரணைகள், சிறைக் கொடுமைகள், எதிர்ப்புகள், இந்து மேலாதிக்கவாதிகளின் தாக்குதல்கள் என ஒவ்வொரு நாள் போராட்டத்திற்கும் பல பக்கங்கள் இருக்கின்றன. பஞ்சாபில் இருந்து அகாலிகள் வைக்கத்திற்கு வருகை புரிந்து போராட்டக்காரர்களுக்கு உணவளித்தார்கள். தலைநகரை நோக்கிய 13 நாள் பேரணிக்கு உயர் ஜாதியினரின் ஆதரவும் கூட இருந்தது. கோயில் தெருக்களில் அனைத்து சமூகத்தினரும் நுழைய (சஞ்சாரா என போராட்டம் அழைக்கப்பட்டது) அனுமதிக் கும் வகையில் கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றும் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது. அரசு, போராட்டக்காரர்கள், பார்ப்பன உயர்ஜாதி இந்துக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண காந்தியும் வருகை புரிந்தார்.
இது உள்ளூர் போராட்டமாக மட்டுமே இருக்க வேண்டுமென்று காந்தி அறிவுறுத்தி யதால், அகில இந்திய போராட்டமாக உருப்பெற வாய்ப்பு ஏற்படாமல் போனது. அரசு மற்றும் நிர்வாகத்தைக் கொண்டு போராட்டத்தை ஒடுக்கவும் மேலாதிக்க உயர்ஜாதி இந்துக்கள் பல சதிகளில் ஈடுபட்டனர். வன்முறைகளைத் தூண்டும் விதமாக எதிர்ப்புப் பேரணிகளையும் நடத்த அவர்கள் தயங்கவில்லை. மேலாதிக்க இந்துக்களின் வெளிப்படையான ஆதரவும், அரசாங்கத்தின் மறைமுக அழுத்தமும்தான் சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்தது. ஆனால் அனைத்துத் தடைகளையும் வைக்கம் சத்தியாகிரத்தினர் தாண்டினர். போராட்டத்தில் தமிழர்கள் பங்கெடுத்தனர். கோயில் தெருக்களில் அனைத்து சமூகத்தினரும் நுழைய தமிழர்கள் ஆதரவுக்கரம் நீட்டினர்.
வைக்கம் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு: வைக்கம் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. தீண்டாமைக் கொடுமைக்கு ஆளானவர்களின் போராட்டத்தை அடையாளப்படுத்தியது. பெரியார், கோவை அய்யாமுத்து உள்ளிட்டோர் கேரளத் தலைவர்களுடன் இணைந்து செயல் பட்டனர். ஆனால் அவர்கள் அடக்குமுறை நடவடிக்கையை எதிர்கொண்டனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வைக்கத்தில் இருந்து மன்னத்து பத்மநாபன் தலைமையில் உயர்சாதியினரின் பேரணியும், நாகர்கோவிலில் இருந்து எம்பெருமாள் நாயுடு தலைமையில் கோயில் நுழைவுக்கு ஆதரவாக தெற்கில் மற்றொரு பேரணியும் நடந்தது. நாகர்கோவிலை (அன்றைக்கு திருவிதாங்கூரின் ஒருபகுதியாக இருந்தது) சேர்ந்த சிவதாணு பிள்ளை திருவனந்தபுரம் கடற்கரையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். போராட்டத்தில் பங்கெடுத்த தமிழர்களின் பெயர்களை எனது “வைக்கம் போராட்டம்” புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன்.
603 நாட்கள் நீடித்த போராட்டம்: 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வைக்கம் போராட்டம் 1925ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி முடிவுற்றது. இந்த 603 நாட்களில் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளன. புதிய அரசர் அரியணை ஏறியதை ஒட்டி பெரியார், கேசவ மேனன், டி.கே.மாதவன் உள்ளிட்டோர் 1924ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப் பட்டனர். நவம்பர் 1-ஆம் தேதி உயர் சாதியினர் தொடங்கிய பேரணி நவம்பர் 13-ஆம் தேதி திருவனந்தபுரத்தை அடைந்தது. அவர்கள் ராணியிடம் பேரணியின் விளக்கக் குறிப்பை சமர்ப்பித்தனர்.
கோயில் தெருக்களில் நுழைவதற்கு அனுமதி அளிக்கும் தீர்மானம் 1925-ஆம் ஆண்டு பிப்ரவரியில் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது ஒற்றை வாக்கு வித்தியாசத்தில்தான் தோற்கடிக்கப்பட்டது. காந்தி கேரளத்திற்கு வந்து திருவாங்கூர் ராணி, சமூக சீர்திருத்தவாதி நாராயணகுரு, பழமைவாதிகள், அன்றைய காவல்துறை ஆணையர் டபள்யூ.ஹெச்.பிட் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நவம்பர் 17ஆம் தேதி போராட்டக்காரர்கள் வைக்கம் சத்தியாகிரகத்தை கைவிடுவதாக அறிவித்தனர். வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள 4 தெருக்களில் 3 தெருக்களுக்குள் எல்லா சமூகத்தினரும் செல்லலாம் என நவம்பர் 23-ஆம் தேதி திருவாங்கூர் அரசு அறிவித்தது. அதன்மூலம் போராட்டம் முடிவுக்கு வந்தது. நவம்பர் 29, 1925 அன்று பெரியார் தலைமையில் வைக்கம் போராட்டம் வெற்றி விழா நடந்தது.
இந்த இயக்கத்தை நினைவுகூரும் வகையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. வைக்கம் போராட்ட வரலாற்றை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் ஒரு ஆண்டுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப் படும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். வைக்கம் நினைவிடத்தை கேரள அரசு தொடர்ந்து பராமரித்தும், அவ்வப்போது சீரமைப்புப் பணிகளை செய்தும் வருகிறது. பெரியார் நினைவிடம் ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசும் 1994ஆம் ஆண்டிலிருந்தே பராமரித்து வருகிறது. வைக்கத்தில் என்ன நடந்தது என்பதை தமிழர்கள் அறிந்துகொள்ளும் ஒரு கட்டமைப்பாக இருக்கிறது. குழந்தைகளுக்கு வைக்கம் என்று பெயர் வைக்கும் பழக்கமும் 1930 முதல் தமிழ்நாட்டில் இருக்கிறது.
வைக்கம் என்பது ஒரு நகரத்தின் பெயர் மட்டுமல்ல. அது சமூக நீதியின் சின்னம். ஜாதித் தடைகளை உடைப்பதற்கான சின்னமாய் விளங்குகிறது. வரலாற்றிலும் சமூக நீதி இயக்கத்திலும் இன்னும் அது பிரகாசமாய் எரிகிறது.
(‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் பழ.அதியமான் எழுதிய கட்டுரை)
தமிழில் : ர. பிரகாசு