மக்களைத் திரட்டி தீண்டாமைக்கு எதிராக நடந்த முதல் போராட்டம் வைக்கத்தில் தான் வெடித்தது. தலைமையேற்றவர் பெரியார். 1994ஆம் ஆண்டில் அங்கே நினைவகம் உருவானது. திராவிட மாடல் ஆட்சி ரூ.8 கோடி செலவில் புதுப்பித்துள்ளது. அதன் திறப்பு விழாவில் தமிழ்நாடு முதல்வரும், கேரள முதல்வரும் பங்கேற்கிறார்கள். திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முன்னிலை வகிக்கிறார். வைக்கம் போராட்டம் பற்றி சில வரலாற்றுக் குறிப்புகள்.
- வைக்கம் போராட்டத்தில் இரண்டு முறை சிறை சென்ற ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. முதலில் அருவிக்குட்டியில் ஒரு மாதம் சிறை; பிறகு திருவனந்தபுரத்தில் 4 மாதம் கடும் சிறை.
- பெரியாருக்கு முன் கைது செய்யப்பட்ட அனைவரும் அரசியல் கைதிகளாகவே நடத்தப்பட்டனர். பெரியார் மட்டுமே கிரிமினல் கைதியாக கடும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.
- பெரியாருக்கு சிறையில் சிறப்பு சலுகை எதுவும் தரப்படக் கூடாது என்று நீதிமன்றமே உத்தரவிட்டது. 24 மணி நேரமும் திருவனந்தபுரம் சிறையில் கை, கால்களில் விலங்குகளுடன் கிரிமினல் கைதிக்கான உடையோடு கழுத்தில் கைதி எண் பட்டை தொங்கவிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வைக்கம் போராளிகளில் ஒருவரான கே.பி. கேசவமேனன், ‘பந்தனத்தில் நின்னு’ என்ற நூலில் இதைப் பதிவு செய்திருக்கிறார். தனக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமைகள் குறித்து பெரியார் வெளிப்படுத்தவே இல்லை.
- வைக்கம் போராட்டக் களத்தில் 141 நாள்கள் இருந்தவர் பெரியார். அதில் 74 நாள்கள் சிறையிலும் 67 நாள்கள் போராட்டக் களத்திலும் தன்னை ஒப்படைத்தார்.
- பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் தான் தனக்கு உந்துதலைத் தந்தது; மகத் குளத்தில் தீண்டப்படாத மக்களைத் திரட்டி, நீர் எடுக்கும் போராட்டம் நடத்தக் காரணமாக இருந்தது என்று அம்பேத்கரே எழுத்து வழியாகப் பதிவு செய்துள்ளார்.
- திரு.வி.க. ‘நவசக்தி’ பத்திரிகையில் பெரியாரின் பங்களிப்பைப் பாராட்டி ‘வைக்கம் வீரர்’ என்று பட்டம் தந்தார்.
- பெரியார் களத்துக்கு வந்த பிறகு தான் அது மக்கள் போராட்டமாக வெடித்தது. திருவாங்கூர் சமஸ்தானம் அதிர்ச்சி அடைந்தது. திருவாங்கூர் மன்னர் இறந்தவுடன் பதவிக்கு வந்த மகாராணி, சாலைகளைத் திறந்து விட முடிவு செய்தார். ஆனால் பேச்சு வார்த்தையைப் பெரியாரோடு நடத்த திவான் விரும்பவில்லை. அவ்வளவு கோபம். ராஜாஜியை அழைத்து பெரியாரிடம் பேச மாட்டோம்; காந்தியை அழைத்து வாருங்கள் என்று கூறி விட்டார்.
- காந்தி சமரசம் பேச முன்வந்தபோது ஈ.வெ. ராமசாமி, வீதி உரிமையைத் தொடர்ந்து கோயில் நுழைவு உரிமைப் போராட்டம் நடத்தக் கூடாது என்று திவான் நிபந்தனை விதித்தார். அதைத் தொடர்ந்து காந்தி பெரியாரிடம் பேசினார். பெரியார் கோயில் நுழைவு உரிமைக்குப் போராடுவேன் என்றாலும் இப்போது ‘வீதி உரிமை’யோடு நிறுத்திக் கொண்டு மக்களைப் பக்குவப்படுத்தி அடுத்த போராட்டத்துக்கு தயாராவேன் என்றார். அதைக் காந்தி திவானிடம் கூறினார். அதற்குப் பிறகு தான் மூன்று வீதிகளில் ‘தீண்டப்படாத’ மக்கள் புழங்குவதற்கு உரிமை கிடைத்தது.
- வைக்கம் வெற்றி விழாப் பொதுக்கூட்டம் 1925 நவம்பர் 29இல் வைக்கத்தில் நடந்தது. இந்த வெற்றி விழாவுக்குத் தலைமை தாங்கும் தகுதி படைத்த ஒரே தலைவர் பெரியார் என்று கருதி, பெரியாரை மட்டுமே அழைத்து தலைமை தாங்கச் சொன்னார்கள். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. மற்றவர்கள் அனைவருமே கேரளத்திலிருந்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தான்.
இந்த வரலாறுகளைப் புரியாமல் வாய்க்கு வந்தபடி பேசுவதா? இந்த வரலாற்றுச் செய்திகளை மறுக்க முடியுமா?
நம்பூதிரிகளின் திமிர்
வைக்கத்தில் தீண்டாமையை நம்பூதிரிகளும் நாயர்களும் நியாயப் படுத்தினர். போராட்டத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவர் தேவன் நீலகண்டன் நம்பியாத்திரி என்ற நம்பூதிரிப் பார்ப்பனர். காந்தி இவரை சந்தித்துப் பேச விரும்பினார். ‘இண்டம் துருத்திமனை’ என்ற இடத்தில் வாழ்ந்த இந்த நம்பூதிரி ஒரு நிலப்பிரபு. இவரது கட்டுப்பாட்டின் கீழ் 48 “பிராமணக்” குடும்பங்கள் இருந்தன.
காந்தி வைசியர் என்பதால் இவரைத் தனது வீட்டுக்குள் விட மறுத்த இவர், தனியாக ஒரு தாழ்வாரத்தை உருவாக்கிக் காந்தியுடன் பேசினார். அவர் காந்தியுடன் பேசிய கருத்துகள் பச்சையான பார்ப்பன வெறியை வெளிப்படுத்தின.
“முற்பிறப்பின் மோசமான கர்மாவின்படி நெருங்க முடியாத ஜாதியில் அவர்கள் பிறந்திருக்கிறார்கள்; எனவே அவர்களை அப்படித்தான் நடத்த வேண்டும்.”
“கொள்ளையர்கள், குடிகாரர்களைவிட இவர்களை மோசமாக நடத்த வேண்டும்; இவர்கள் சட்டபடி குற்றவாளிகள் என்பதால் அவர்களை ஒதுக்கி வைக்க முடியும்; ஆனால் தீண்டப்படாத வர்களை சட்டம் தண்டிக்காத நிலையில் எங்களிடம் நம்பிக்கையால்தான் தண்டிக்க வேண்டும். எங்களது ஆச்சாரியார்கள் இதைத்தான் எங்களுக்கு கற்பித்திருக்கிறார்கள்.”
“எங்களால் தண்டனை பெறுவதற்காகவே அவர்கள் இந்த உலகத்தில் பிறந்திருக்கிறார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”
“இவர்கள் கோயில் வீதிகளில் நடக்க நீதிமன்றம் அனுமதித்தால் அந்தக் கோயில்களையே நாங்கள் புறக்கணித்து விடுவோம்” – என்று பேசினார், அந்த நம்பூதிரி.
(இந்த உரையாடல் முழுவதையும் சுருக்கெழுத்தில் எழுதி பதிவு செய்தவர் கிருகத்துவ அய்யர். இது ஆவணமாக இருக்கிறது. ஆதாரம்: பழ. அதியமான் நூல்)
சிறையில் பெரியார்; களத்தில் நாகம்மையார்
பெரியாரின் இணையர் நாகம்மையார், சகோதரி கண்ணம்மாள் மற்றும் பெரியாரின் உறவுப் பெண்கள் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றனர். 1924 – மே, ஜூன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் நாகம்மையார் வைக்கத்திலேயே தங்கிப் போராட்டத்தை நடத்தினார்.
நாகம்மையார் ‘தீண்டப்படாத’ பிரிவைச் சார்ந்தவர் அல்ல; எனவே அவர் வீதியில் அனுமதிக்கப்பட்டார். தன்னுடன் ‘தீண்டப்படாத’ ஜாதிப் பெண்ணையும் அழைத்துச் சென்றதால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வீதியில் நடந்து சென்று கோயிலுக்குள்ளும் நுழைந்து வழிபாடு நடத்த முயலுகிறார். உடன் தீண்டப்படாத ஜாதிப் பெண்ணை அழைத்து வந்ததால் எதிர்த்தார்கள். பிறகு கோயிலுக்கு வெளியே ‘தீண்டப்படாத’ ஜாதிப் பெண்ணுடன் சேர்ந்து வழிபாடு செய்தார். தனக்குக் கிடைத்த வீதிகளில் நடக்கும் உரிமையைக் கோயில் வழிபாட்டு உரிமையையும் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்துக்குப் பயன்படுத்தினார் நாகம்மையார்.
நாகம்மையார் ‘சாணார்’ பெண்களுடன் கோயில் வழிபாட்டுக்குப் போகும்போது ஒரு பார்ப்பனர் பெரிய தடியை வைத்துத் தடுத்தார். அந்தப் பார்ப்பனர் பேச்சுத் திறனும் கேட்கும் திறனும் இழந்தவர். அருகில் நின்ற பார்ப்பனர்களுடன் நாகம்மையார் எதிர்வாதம் செய்தார். அடுத்த நாள் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு 3 மணி நேரம் போராட்டம் நடத்தினார்.
அடுத்த நாள் (1924, ஜூலை 13) நாகம்மையார், பெரியார் சகோதரி கண்ணம்மாள், பெரியார் சித்தி, பி.கே. கல்யாணி அம்மாள் தடையை மீறி போராடச் சென்றபோது காவலர்கள் தடுத்து நிறுத்தி, “பாம்புகள் இருக்கின்றன; போனால் கடிக்கும்” என்று மிரட்டினார்கள். எங்களைக் கடிக்காது என்று கூறி நாகம்மையார் மறியல் செய்தார்.
பெரியார் சிறைப்பட்டிருந்த காலத்தில் நாகம்மையார் வீடு திரும்பி விடவில்லை. ஒரு முறை நாகம்மையாரும் கைதாகி ‘ரிமாண்ட்’ செய்யப்பட்டுப் பெரும் துன்பத்தை அனுபவித்தார்.
தகவல் : பழ. அதியமான் எழுதிய ‘வைக்கம் போராட்டம்’ நூல்
- விடுதலை இராசேந்திரன்