பார்ப்பனர்களின் புனித பீடங்களாக கருதப்படுவதில் ஒன்று கலாஷேத்ரா. நாடாளுமன்றத்தில் தனிச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து அதன் மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனம். அந் நிறுவனம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருக்கிறது. இங்கு நடைப்பெறுகிற நடனக் கல்லூரியில் நடனம் பயில்வதற்கு ஏராளமான வெளிநாட்டு மாணவ மாணவிகள் வருகிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த மாணவிகள் நிறுவனத்தின் இயக்குனர்களாக இருக்கிற ரேவதி ராமச்சந்திரன், நடனத்துறை தலைவராக இருக்கிற ஜோஷ்னா மேனன் ஆகியோரிடம் பாலியல் தொல்லைக் குறித்து பல புகார்கள் கூறியும் அதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக புகார்களை தந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவிகள் போராட்டம் தீவிரமடைந்தது.

இதற்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு ஒரு பேராசிரியர் மீது பாலியல் தொந்தரவு செய்ததாக வழக்குப் பதிவு செய்யுமாறு தமிழ்நாடு காவல்துறை இயக்குனருக்கு அறிவுறுத்தியது. அதற்குப் பிறகு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அதே தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா இந்த நிறுவனத்திற்கு வந்து மாணவிகள், நிர்வாகிகள், பேராசிரியர்கள் என அனைவரையும் சந்தித்தார். இவரது நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளை தனியாக சந்திக்காமல் பேராசிரியர்கள் இயக்குநர்களை வைத்துக் கொண்டு கருத்து கேட்டுள்ளார். தமிழ்நாடு மகளிர் ஆணையம் தலையிட்டு கலாஷேத்ரா இயக்குநருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. பாலியல் புகாருக்கு உள்ளான ஹரிபத்மன் என்ற பேராசிரியர் தலைமறைவான நிலையில் அவரை வடசென்னையில் காவல்துறை கைது செய்துள்ளது.

அதன் பிறகு மாணவிகள் கூறுகிற புகார்களில் எந்தவித உண்மையும் இல்லை, பத்திரிக்கை செய்தி யூகத்தின் மூலம் அவர்கள் பேசுகிறார்கள் என்று கூறிவிட்டு ஏற்கனவே இந்த ஆணையம் சம்பந்தப்பட்ட பேராசிரியரை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறைக்கு அறிவுறுத்தியதை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துவிட்டு அவர் டெல்லிக்கு புறப்பட்டு விட்டார்.

ரேகா சர்மா தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர், அதே ஆணையத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக குஷ்புவும் அதில் இடம் பெற்றுள்ளார். ஆனால் இந்த பிரச்சனையில் இருந்து குஷ்பு முழுவதுமாக விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்.

நியாயமாக இந்த நிறுவனத்திற்கு தலைவர் ரேகா சர்மா வந்தபோது குஷ்புவும் உடன் சென்று இருக்க வேண்டும். ஆனால் குஷ்பூவை அவர்கள் ஏன் அழைக்கவில்லை என்பதற்கு மகளிர் ஆணையம் தான் விளக்கம் கூற வேண்டும்.

இந்த நிலையில் இது குறித்து எதிர்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை சட்டமன்றத்தில் கொண்டு வந்தனர். கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதலமைச்சர், “யார் தவறு செய்திருந்தாலும் உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்திருப்பது பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்றாகும். இது குறித்து விசாரிக்க அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவையும் அமைத்திருக்கிறார் முதலமைச்சர்.

ஒரு பேராசிரியர் மீது முன்னாள் மனைவி தந்த புகாரின் பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. கலாஷேத்ரா பெருமை மிக்க நிறுவனம், இதன் பெருமை சீர்குலைந்து விடக்கூடாது என்று பார்ப்பனர்கள் ஒரு வாதத்தை முன்வைத்து இங்கே எந்தவித முறை முறைகேடுகள் நடந்தாலும் மூடி மறைக்க வேண்டும் என்பதற்கான செயல்களை செய்து வருகின்றனர்.

தேசிய மகளிர் ஆணையமும் ஒன்றிய கலாச்சார துறையும் மூடி மறைக்கின்ற உண்மைகளை தமிழ்நாடு அரசு தலையிட்டு உண்மைகளை வெளிக்கொண்டு வந்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அறிவித்திருப்பதை நாம் பாராட்டி வரவேற்க வேண்டும்.

தமிழக பா.ஜ.க.வோ அதன் தொங்கு சதையாக மாறியுள்ள அதிமுகவோ இது குறித்து வாய் திறக்கவில்லை.

- விடுதலை இராசேந்திரன்

Pin It