திராவிட இயக்கங்களுக்கும் இஸ்லாமி யர்களுக்குமிடையே கடந்த காலங்களில் தலைவர்கள் கட்டிக் காத்த நல்லுறவை குலைத்துவிட கூடாது என்று ‘எஸ்பிஇசட் - ஈமெகசைன்’ என்ற இணைய ஏடு வெளியிட்டுள்ள கட்டுரை.

“பகுத்தறிவுச் சிங்கம்” ஈ.வெ.ரா. பெரியார். தமிழகத்தில் திராவிடர்களுக்கும் தமிழ் முஸ்லிம்களுக்கும் மத்தியில் இவ்வளவு ஆழமான உறவு இருப்பதற்கு, பெரியாரின் கொள்கைகளே காரணம். பெரியார் எதை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ அவையனைத் தும் இஸ்லாத்தில் இயல்பாகவே தடை செய்யப்பட்டு இருந்தது. பெரியார் எதை வலுவாக ஆதரித்தாரோ அவை இஸ்லாத் தில் இயல்பாகவே வலியுறுத்தப்பட்டிருந்தது.

தீண்டாமையை எதிர்த்தார். இஸ்லாத் தின் இயல்பிலேயே தீண்டாமை இல்லை. மாறாக அனைவரையும் அரவணைக்கும் குணாதிசயம் இருந்தது. குறிப்பிட்ட இனத்தவர்கள்தான் இந்த சாலையில் நடக்க வேண்டும். பிற இனத்தவர் இந்தப் பக்கமே வரக்கூடாது என்றிருந்தபோது இரண்டு இஸ்லாமியர்கள் ஒருசேர அமர்ந்து ஒரே தட்டில் இருவரும் சேர்ந்து சாப்பிட்டது பெரியாரை ஈர்த்தது.

குறிப்பிட்ட இனத்தவர்கள் கோவிலுக் குள் வரக்கூடாது என்றிருந்தபோது பக்கீர்கள் முதல் பணக்காரர்கள் வரை ஒரு அணியில் நின்று தோளோடு தோள் உரசி இறைவனை வணங்கிய காட்சி பெரியாரை ஈர்த்தது. நீ வேறு நான் வேறு. என்றைக்கும் நாம் இருவரும் ஒன்றாக மாட்டோம் என்றிருந்தபோது அனைவரும் சகோதரர்களே என்ற இஸ்லாத்தின் சகோதரத்துவம் பெரியாரை ஈர்த்தது. இப்படி பலவற்றைச் சொல்லலாம். பெரியாரின் கருத்தியலும் இஸ்லாத்தின் கருத்தியலும் ஒரு புள்ளியில் இணைந்தது. அதன் தொடர்ச்சியாக, பெரியார் பல மேடைகளில் இஸ்லாத்தைப் சிலாகித்துப் பேசினார்.

பெரியார் இஸ்லாத்தைப் பற்றி அறிந்த காலத்தில் குர்ஆன் மொழிபெயர்ப்பு இல்லை. பெரிய அளவில் நூல்களும் இல்லை. ஆனால் பெரியார் இஸ்லாத்தை தெரிந்துகொண்டார். மௌலவி. அப்துல் ஹமீது பாகவி அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். இஸ்லாத்தின் ஆழமான கொள்கைகளைக் கண்டு வியப்படைந்தார்.

பல இஸ்லாமியர்கள் பெரியாரோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடினார்கள். பெரியாரை இறை மறுப்பாளர் என்று குறுகிய வட்டத்தில் சுருக்காமல், சக மனிதனின் சுயமரி யாதையை காப்பாற்றும் போராளியாக பார்த்து பல முஸ்லிம் தலைவர்கள் அவரோடு கைகோர்த்தனர்.

முதன் முதலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு விழா எடுத்த முஸ்லிம் அல்லாத தலைவர் பெரியார் தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பெரும் மதிப்புக் கொண்டிருந்தார்.

காயிதே மில்லத் அவர்கள் திராவிட இயக்க தலைவர்களோடு மிகுந்த ஆழமான தோழமை கொண்டிருந்தார். சமூக நலனுக்காக அரசியலில் அவர் களோடு சேர்ந்து களப்பணியாற்றினார். காயிதே மில்லத் அவர்கள் மறைந்தபோது இறுதிச் சடங்கில் பங்கேற்ற பெரியார், இனிமேல் இந்த சமூகத்தை யார் காப்பாற்றுவார். நான் மறைந்து இவர் வாழ்ந்திருக்கக்கூடாதா என்று குமுறி அழுதார். பெரியார் மட்டுமல்ல. கலைஞர், எம்.ஜி.ஆர் போன்ற பல திராவிட இயக்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பெரியாரின் கொள்கைகளை பாடல் வாயிலாக தமிழகம் முழுவதும் பரப்பினார் நாகூர் ஹனீபா. பெரியார் நாகப்பட்டிணம் பக்கம் வரும்போதெல்லாம் ஹனிபாவை அழைத்து பாடச் சொல்லி கேட்டிருக்கிறார். “ஹனிபா ஐயாவுக்கு மைக்கே தேவை யில்லை” என்று புகழ்ந்திருக்கிறார். பல மேடைகளில் நாகூர் ஹனிபா அவர்களின் திராவிடக் கொள்கை பாடல்கள் ஓங்கி ஒலித்திருக்கிறது.

நாகூர் ஹனிபா அவர்கள் எந்தளவிற்கு திராவிட இயக்கத்தோடு தன்னை ஈடுபடுத்திருயிக்கிறார் என்பதை நாகூர் ஹனிபா அவர்கள் இறந்த பிறகு அவரின் உடலைப் பார்க்க வந்த கலைஞர் “என்னுடைய ஆருயிர் தோழரை இழந்து தவிக்கிறேன்” என்று கண்கலங்கிய காட்சி மூலம் காணலாம். இதுபோன்று இஸ்லாமியத் தலைவர்கள் பல பேர் திராவிட இயக்கத்தோடு நல்லுறவு பேணி சமுதாயத்திற்காக போராடினார்கள். அவரவர்கள் ஏற்றுக் கொண்ட மார்க்கத்தையும் திராவிட இயக்கத்தோடு உள்ள தோழமையையும் சேர்த்து குழப்பிக் கொள்ளவில்லை. எந்த இடத்திலும் காயிதே மில்லத் தன் மார்க்கத்தை விட்டுக் கொடுக்கவில்லை. அதே நேரம் சமூக நலனுக்காக திராவிட இயக்கங்களையும் கைவிடவில்லை. மார்க்கத்தையும் இயக்கத்தையும் தனித் தனியாக பிரித்தறிந்து செயல்படும் அளவிற்கு முதிர்ச்சிப் பெற்றிருந்தார்கள்.

பெரியார் மற்றும் பிற திராவிடத் தலைவர்களுக்கும் இஸ்லாத்தில் சில விமர்சனங்கள் இருந்தது. ஆனால் அது அவரவர் நிலைபாடு. அவர்கள் அவர் களுடைய நிலைப்பாட்டில் இருந்தார்கள். முஸ்லிம் தலைவர்கள் அவர்களுடைய நிலைப்பாட்டில் இருந்தார்கள். மக்களுக்காக சேர்ந்து போராடினார்கள்.

காயிதே மில்லத் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது தொப்பியும் தாடியும் தான் ஆனால் அதே உருவம் தான் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தது. நாகூர் ஹனிபா மார்க்கத் திற்காக தன்னை வளைக்கவில்லை. பல கட்டங்களில் உடனிருந்த பல பேர் கலைஞருக்கு தன் முதுகை வளைத்து மரியாதை செலுத்துவார்கள். ஆனால் நாகூர் ஹனிபா நெஞ்சை நிமிர்த்தி மரியாதை செலுத்தினார்.

இறைவனே இல்லை என்ற கொள்கை யிலிருப்பவர்களும் ஒரே இறைவன் என்ற கொள்கையிலிருப்பவர்களும் ஒன்று சேர்ந்து மக்களுக்கான அரசியலை கையிலெடுத்திருக்கிறார்கள். அதனால் காயிதேமில்லத் அவர்களோ, நாகூர் ஹனீபா அவர்களோ மார்க்கப்பற்று இல்லாதவர்களா? எந்த இடத்திலும் முஸ்லிம் தலைவர்கள் மார்க்கத்தையும் இயக்கத்தையும் குழப்பிக் கொண்ட தில்லை. ஆனால் இன்று நம் சமூகம் குழப்பிக் கொண்டிருக்கிறது. யாரோடு சேர்ந்து போராட வேண்டுமோ அவர் களோடு மார்க்கக் கொள்கைகளைக் கொண்டு மோதலாமா? அல்லது மார்க்கம் இதைத் தான் வழிகாட்டுகிறதா?

திராவிட இயக்கங்களுக்கும் தமிழ் முஸ்லிம்களுக்குமான உறவு மிக நீண்ட பாரம்பரியம் கொண்டது. மிக வலிமையான அடித்தளத்தை கட்டமைத்து வைத்திருக் கிறார்கள் முஸ்லிம் முன்னோர்கள். முஸ்லிம் சமூகத்திற்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தது என்றால், உடனுக்குடன் வரிந்து கட்டி வந்து கைகோர்ப்பவர்கள் திராவிட இயக்கத் தோழர்கள். இன்றைய அரசியல் சூழலில் தற்போது இருக்கும் உறவைவிட இன்னும் வலிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டபோது, இந்தியாவின் பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியானது. ஆயிரக் கணக்கில் பொருட்சேதங்களும் உயிர்சேதங்களும் ஏற்பட்டது. ஆனால் தமிழகத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தின் பிற சமயத்தவர்கள் குரல் கொடுத்தார்கள். இவ்வளவு வலிமையான ஒரு சமூகம் உருவானதற்குக் காரணம் திராவிட இயக்கங்கள் தானே!

Pin It