“அடிப்படை உரிமைகள் மனிதர்களுக்கானதே தவிர, விலங்குகளுக்கு அல்ல” என்றார் அம்பேத்கர்.
பசுவதை தடை சட்டத்தை மாநில அரசுகள் இயற்ற வேண்டும் என்பது அரசியல் சட்டத்தின் நோக்கத்துக்கே எதிரானது என்பதை விளக்கி, ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளி வந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள்.
அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்தி லிருந்து விலகிப் போய் நீதிமன்றம் சட்டத்துக்கு மாறான தீர்ப்புகளை வழங்கி வருகிறது என்பதற்கு, ஒரு உதாரணம், ‘பசுவதைத் தடைச் சட்டம்’ குறித்து 2005ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14 அன்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
மக்களின் பாதுகாப்புக்காக உறுதி செய்யப்பட்ட சட்டங்களை அதன் நோக்கத்திலிருந்து திரித்து விடுவதும் அதிலிருந்து விலகி நின்று முடிவுகள் எடுப்பதும் கடும் எதிர்விளைவுகளை உருவாக்கி விடும் என்று கட்டுரை எடுத்துரைக்கிறது. இதற்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’வை உதாரணம் காட்டியிருக்கிறார் கட்டுரை யாளர். 1986ஆம் ஆண்டு ‘நாசா சேலஞ்சர்’ என்ற விண்வெளி ஆய்வு விமானம் (ளுயீயஉந ளாரவவடந) ஒன்றை 7 பேருடன் அனுப்பியபோது அது வெடித்துச் சிதறி, 7 பேரும் பலியானார்கள். அந்த ஆய்வு விமானத்தை வடிவமைக்கும் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத் திடம் நாசா வழங்கியது. உரிய பாதுகாப்புகளுடன் அது வடிவமைக்கப்படாததே விபத்துக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. வழக்கமாக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு தரக் கட்டமைப்பு களிலிருந்து நாசா விலகிப் போனதும் ஆபத்துகள் இருந்தால் அதை சந்திக்கத்தான் வேண்டும் என்ற அலட்சிய மனநிலைக்கு நாசா விஞ்ஞானிகள் வந்திருந்ததுமே இதற்குக் காரணம் என்று விசாரணையில் தெரிந்தது. இந்த உதாரணத்தோடு கட்டுரையாளர் பசுவதைத் தடுப்புக் குறித்து உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பையும் அரசியல் நிர்ணய சபையில் இது குறித்து நடந்த விவாதங்களையும் அக்கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
1948ஆம் ஆண்டு அம்பேத்கர் எழுதி வெளியிட்ட ‘தீண்டப்படாதவர்கள் யார்? அவர்கள் எப்படி தீண்டப்படாதவர்கள் ஆக்கப்பட்டார்கள்’ என்ற நூலில் செத்த மாட்டை சாப்பிடும் வழக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டதே தீண்டாமைக்கு அடிப்படையான காரணமாக இருந்தது என்பதை விளக்குகிறார். புத்த மார்க்கத்துக்கு மாறிய பிறகும் தீண்டப்படாத மக்கள் மாட்டுக்கறியை உண்ணும் வழக்கத்தைப் பின்பற்றினார்கள். அவர்கள் மீது வெறுப்பை உண்டாக்குவதற்கு பார்ப்பனர்கள் இந்த மாட்டுக்கறி உண்ணும் பழக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். புத்த மதம் மாறிய தீண்டப் படாதவர்களை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்ற பார்ப்பனர்களின் உணர்வு தான் பசுவைப் புனிதமாகப் போற்ற வேண்டும் என்று பேசும் நிலைக்கு அவர்களை கொண்டு சென்றது. ‘பசுப் புனிதத் தத்துவத்தின்’ அடிப்படையே தீண்டப்படாதவர் களின் மீதான வெறுப்பில் உருவானதுதான் என்ற கருத்தை அம்பேத்கர் நிறுவுகிறார்.
அரசியல் நிர்ணய சபையில் பசுவைப் பாதுகாக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தியபோது அவையில் அம்பேத்கர் அவர்களுக்கு எதிராக பேசுவதை தவிர்த்துக் கொண்டார். பசுப் பாதுகாவலர்கள் ஆவேச எதிர்ப்புகளை அவர் அமைதியாகவே எதிர் கொண்டார்.
1948 பிப்ரவரியில் அரசியல் நிர்ணய சபையில் சட்ட வரைவு மசோதாவை அம்பேத்கர் முதலில் தாக்கல் செய்த போது அதில் பசு பாதுகாப்பு குறித்து எந்த அம்சமும் இடம் பெறவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். சில தீவிர ‘பசுப் பாது காவலர்கள்’ அவையில் பசுவைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அம்பேத்கரும் அவரோடு இணைந்து பணியாற்றிய வரைவுக் குழுவினரும் பசுப் பாதுகாப்புப் பிரிவை அரசியல் சட்டத்தில் இணைக்காமல் அரசியல் சட்டத்துக்கான வழி காட்டும் கொள்கைகளில் (Directive Priniciple) இணைத்துக் கொள்ளலாம் என்ற உடன்பாட்டுக்கு வந்தனர். வழிகாட்டும் கொள்கை களுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. அரசியல் சட்டம் எந்தத் திசையில் எதிர்காலத்தில் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தை விவரிப்பவை.
வழக்கறிஞரும் வைதீகப் பார்ப்பனருமான பண்டிட் தார்குன்ட பார்கவா என்பவர் இதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். விவசாயத்தையும் அதற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும் எதிர்காலத்தில் வளர்ச்சி நோக்கில் நவீனப்படுத்த வேண்டும். அந்த நோக்கத்தில் பசு, காளை, எருது உள்ளிட்ட அனைத்து கால்நடை களையும் பாதுகாக்க வேண்டும். பால் தரும் பசு உள்ளிட்ட எந்த கால்நடைகளையும் விவசாயத் துக்குப் பயன்படுத்தும் கால்நடைகளையும் வெட்டக் கூடாது என்று அந்தத் திருத்தம் கூறியது. அம்பேத்கர், பசு பாதுகாப்பு பற்றிய விவாதங்களே அர்த்தமற்றவை என்று கருதினார். எதிர்வாதம் செய்யாமல் வழிகாட்டும் கொள்கைப் பிரிவில் இணைக்க ஒப்புக் கொண்டார். ஆனாலும் பார்கவாவுக்கு இதில் முழு திருப்தி இல்லை. பசுவைக் காப்பாற்றுவது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தார். பிறகு சேத்கோவிந்ததாஸ் என்ற உறுப்பினரும் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போதுதான் அம்பேத்கர் வாய்திறந்து பதிலளித்தார். அம்பேத்கரின் அபாரமான அறிவுப் புலமைக்கு சான்று அவர் அளித்த பதில். அவர் இவ்வாறு கூறினார்:
“தீண்டாமை சட்டப்படி குற்றம் என்று இந்த சட்டத்தில் நாம் அறிவித்திருக்கிறோம். அதைப் போலவே பசுவதையும் குற்றம் என்று அறிவிக்க வேண்டும் என்கிறார்கள். ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தீண்டாமைக் குற்றம் நேரடியாக மனிதர்களைப் பாதிப்பதாகும். பசுவை வெட்டுவது விலங்குகளைத்தான் பாதிக்கிறது. அடிப்படை உரிமைகள் என்பவை மனிதர்களுக்கானதே தவிர, விலங்குகளுக்கு அல்ல. எனவே பசு பாதுகாப்பை அடிப்படை உரிமையாக்க முடியாது” என்றார் அம்பேத்கர்.
இந்துக்களின் மதக் கண்ணோட்டத்தில் அரசியல் நிர்ணய சபையில் இந்த விவாதம் நடக்கவில்லை. நாட்டின் எதிர்கால விவசாய வளர்ச்சி, பொருளாதாரம், விவசாயத்தை நவீனமாக்குதல் என்ற கண்ணோட்டத்தில் தான் விவாதம் நடந்தது. பசுவுக்கு மட்டுமல்ல, பயன்தரும் எந்த கால்நடைகளையும் வெட்டக் கூடாது என்றுதான் வழிகாட்டும் கொள்கையில் (48;(2) சேர்க்கப்பட்டது.
1959ஆம் ஆண்டு இதே பிரச்சினை உச்சநீதி மன்றத்துக்கு வந்தது. (முகம்மது அனீஃப் குரேஷி எதிர் பீகார் அரசு வழக்கு) 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பசுவதைக்கு ஒட்டு மொத்த தடை வழங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பில் இருந்தவர் - அரசியல் நிர்ணய சபையில் பசுவுக்காக வாதாடிய அதே பார்ப்பனர் பார்கவா என்பது குறிப்பிடத்தக்கது. “பால் தருவதற்கும் விவசாயத்துக்கும் பயன்படும் கால்நடைகளை வெட்டக் கூடாது என்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் பயன்படாத நிலையில் அவைகளை வெட்டக் கூடாது. முழுமையாக தடைவிதிக்க வேண்டும் என்ற வாதத்தை பொது மக்கள் நலன் கருதி ஏற்கவே முடியாது” என்று உச்சநீதிமன்றம் கூறியது.
2005இல் இதே கோரிக்கையோடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஆர்.சி. லகோத்தி தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் 5 நீதிபதிகள் சைவ உணவுக்காரர்கள். (பார்ப்பன உயர்ஜாதியினர்-ஆர்)
6 நீதிபதிகள் பசுவதையை முழுமையாக தடை செய்து மாநில அரசுகள் சட்டம் இயற்றலாம் என்று தீர்ப்பளித்தனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம். “காலம் மாறிவிட்டது; எனவே சமூக, பொருளாதார காரணிகளும் மாறியிருக்கின்றன. தேசத்தின் பொரு ளாதார நலன் கருதி பசுவையும் கன்றையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு மாநில அரசுகள் சட்டம் இயற்றுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது” என்று தீர்ப்பு எழுதினார்கடள. ஏ.கே. மாத்தூர் என்ற நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை எழுதினார்.
“ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒட்டு மொத்த தடை போட முடியாது என்று வழங்கிய தீர்ப்பை இப்போது தலைகீழாகப் புரட்டிப் போடுவதற்கான அவசியமோ, தேவையோ எழவில்லை” என்று தனது தீர்ப்பை எழுதினார்.
இப்போது சில கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.
அரசியல் சட்டம் மதச் சார்பின்மையை வலியுறுத்துவதால் அம்பேத்கர், ‘பசு பாதுகாப்புக்கு’ மதத்தின் கண்ணோட்டத்தை ஏற்காமல் விவசாயப் பொருளாதார கண்ணோட்டத்தோடு அதை அணுகினார். அரசியல் சட்டம் அதன் அடிப்படை நோக்கத்திலிருந்து விலகிச் சென்று விடக் கூடாது என்று அவர் கருதினார். உச்சநீதிமன்றம் அரசியல் சட்டத்தின் அடிப்படையான நோக்கத்திலிருந்து விலகிப் போய் ஒரு தீர்ப்பை வழங்கியது சரியானதா? இன்றைய ‘அரசியல் தேவைகளுக்காக’ - அரசில் சட்டத்தின் நோக்கத்தையே திசை திருப்பி சிதைத்துவிட முடியுமா? என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறது, இந்த கட்டுரை.