உ.பி. ஹத்ராஸ் மாவட்டம் இப்போது நாடு முழுவதும் உச்சரிக்கப்படும் பெயராகி விட்டது. அயோத்தியில் ‘இராமனு’க்கு கோயில் கட்டும் வேலையும் தீவிரமாக நடக்கிறது. ‘ஹத்ராசில்’ 18 வயது தலித் பெண், உயர் ஜாதி தாக்கூர் வெறியர்களால் கடத்தப்பட்டு கொடூரமான சித்திரவதை, பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிரிழந்து விட்டார்.
காவல்துறை பெற்றோர்களுக்கு பெண்ணின் சடலத்தைக் காட்டாமலேயே நள்ளிரவில் எரியூட்டும் வேலையை முடித்ததோடு மாவட்ட ஆட்சித் தலைவர் பெண்ணின் பெற்றோர்களை மிரட்டியுள்ளார். வீடியோ ஆதாரங்கள் வெளி வந்திருக்கின்றன. ‘எங்கள் மகளை எவரும் வல்லுறவு செய்யவில்லை’ என்று ஒப்புதல் வாக்குமூலம் தர, பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்.
நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு ஆளும் பா.ஜ.க.விலிருந்தே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதை சான்றாகக் கூறலாம். பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜ்வீர் தைலர், “இரவோடு இரவாக உடலை எரியூட்ட வேண்டாம் என்று மன்றாடினேன்; மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்கவில்லை. ஒரு எம்.பி.யாக இந்தக் கொடுமைக்கு வெட்கப்படுகின்றேன்.
நீதி கிடைக்கவில்லையெனில் எம்.பி. பதவியையும் துறந்து விடுவேன்” என்று கூறி இருக்கிறார். இதேபோல், கவுஷல் கிஷோர், வினோத் கொங்கார் என்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், உமாபாரதியும் வெளிப்படையான கண்டனங்களை உ.பி. அரசுக்கு எதிராகப் பதிவு செய்துள்ளனர்.
நேரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள் ராகுல், பிரியங்கா கடும் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு தொடர் போராட்டத்துக்குப் பிறகு குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.
இவ்வளவுக்கும் பிறகு மனித நேயமற்ற உயர்ஜாதி வெறியர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக 144 தடை உத்தரவையும் மீறி முன்னாள் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ரஜ்வீர்சிங் பெகல்வின் என்பவரது இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தலித் மக்கள் மீதான அடக்குமுறைகளும், தலித் பெண்கள் மீதான பாலுறவு வன்முறைகளும் நாடு முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ‘தேசியக் குற்றப் பதிவு ஆவணக் காப்பகம்’ கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2018ஆம் ஆண்டை விட, 2019ஆம் ஆண்டில், பழங்குடிப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒப்பீட்டளவில் 26 சதவீதமும், தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7.3 சதவிதமும் அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டுகிறது. உ.பி.யில் தலித் பெண்களுக்கு எதிராக 11 ஆயிரத்து 829 வழக்குகளும், இரண்டாவது இடத்தில் இராஜஸ்தானும் (6,794 வழக்குகள்), மூன்றாவது இடத்தில் பீகாரும் (6,544 வழக்குகள்) இடம் பெற்றுள்ளன.
இந்து சமூகமும் ஜாதிய கட்டமைப்பும் பிரிக்க முடியாமல் பிணைந்து இருக்கும் நிலையில் ஜாதியை அதன் கொடூரமான ஒடுக்குமுறைகளை அப்படியே வைத்துக் கொண்டு ‘இந்து’ ஒற்றுமை பேசுவதும், ‘இந்து தேசம்’ என்று கூப்பாடு போடுவதும் மக்களை ஏமாற்றும் நாடகம் அல்லவா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. ‘இந்து’ அடையாளத்துக் குள்ளேயே புதைந்து கிடக்கும் ஜாதிய முரண்பாடுகள் பற்றி பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் ஏன் கள்ள மவுனம் சாதிக்கின்றன?
இந்து மதம் கட்டமைத்துள்ள ஜாதியமைப்பை எதிர்ப்பதாக இதுவரை பா.ஜ.க.விடமிருந்தோ, சங் பரிவாரங்களிடமிருந்தோ ஒரே ஒரு குரல் கூட ஏன் எழவில்லை?
பா.ஜ.க.விற்குள்ளேயே இப்போது ‘தலித்’ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குரலாகவும், பார்ப்பன உயர்சாதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு ஒரு குரலாகவும் பேசக் கிளம்பியிருப்பதற்கு என்ன பதிலை கூறப் போகிறார்கள்?
‘இந்து’ என்ற போர்வைக்குள் பார்ப்பனிய மேலாதிக்க ஜாதியப் படி நிலைகளைக் கட்டிக் காப்பதே இவர்கள் பேசும் ‘இந்து ராஷ்டிரம்’, ‘இந்துத்துவா’.
இராமன் கோயில் ‘அடிக்கல்’ பூஜைக்கு புரோகிதர்கள் மட்டுமே வருவார்கள். ஆனால் கோயில் கட்டுமானத்துக்கு பாறைகளையும் செங்கல்லையும் சுமக்க உழைக்கும் வர்க்கமான ‘சூத்திர-பஞ்சமர்கள்’ மட்டுமே வருவார்கள். இதைத்தான் நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஹத்ராஸ் தலித் பெண்ணின் மீதான கொடூரச் செயலை எங்கோ நடந்த, ஒரு கிரிமினல் குற்றமாகக் குறுக்கிப் பார்த்து விட முடியாது. இந்து தர்மத்தின் ஜாதிய கட்டமைப்போடு இணைத்துத்தான் பார்க்க வேண்டும்.
- விடுதலை இராசேந்திரன்