ஒவ்வொரு நாளும் இந்தியாவில் நான்கு தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டாலும் இந்திய சமூகம் அதிசயமாக இன்றுதான் ஒரு தலித் பெண்ணின் படுகொலைக்கு நீதிகேட்டு வீதிக்கு வந்திருக்கின்றது.
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் 19 வயது தலித் பெண்ணை ஆதிக்க சாதியை சார்ந்த நான்கு பேர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
பொதுவாக பாதிக்கப்பட்ட பெண் ஆதிக்க சாதியை சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே அதை ஒரு பெரிய பிரச்சினையாக காட்ட முற்படும் ஊடக சாதி வெறியர்கள் எதிர்க் கட்சிகள் அனைத்தும் பிரச்சினையை கையில் எடுத்ததால் வேறு வழியின்றி செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக பாலியல் குற்றவாளிகளை எம்.எல்.ஏ, எம்.பிக்களை கொண்ட கட்சியாக விளங்கும் பாஜவை பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வைப்பது அவ்வளவு ஒன்றும் சாதாரணமான ஒன்றல்ல. அதுவும் உபியை ஆளும் யோகி ஆதித்யாநாத் பற்றி சொல்லவே தேவையில்லை. யோகியின் ஆபாச வீடியோ ஒன்று சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி அவரின் ஆன்மீக புகழைப் பரப்பியதை நாம் அறிவோம்.
அப்படிப்பட்ட உத்தமன் உபியில் இதற்கு முன்னால் பெண்கள் பாலியல் வன்புணர்வு நிகழ்வுகளை எப்படி கையாண்டார் என்று தெரிந்தால்தான் ஹாத்ரஸ் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் உபி அரசு செய்த கேடுகெட்ட அயோக்கியத்தனங்களை நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.
உத்திரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் மத்திய முன்னாள் இணை அமைச்சரும், பாஜக தலைவருமான சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டைத் தெரிவித்து, வீடியோ வெளியிட்டிருந்தார்.
பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராகப் புகார் கொடுத்தார். ஆனால் அந்தப் புகாரை உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல் சுமார் மூன்று நாட்கள் கழித்து ஏற்றுக் கொண்டது காவல்துறை. அதேநேரம் இது போன்று வீடியோவை வெளியிட்டு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த அந்த மாணவியும், அவரது குடும்பத்தாரும் முயற்சி செய்ததாக சின்மயானந்தா அளித்த புகாரை உடனடியாக காவல்துறை பதிவு செய்தது.
அதே போல உத்திரப் பிரதேச மாநிலத்தில் உன்னவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அப்பெண் 16 வயதாக இருந்த போது, வேலை குறித்து கேட்க எம்.எல்.ஏ குல்தீப்பின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது அவரை எம்.எல்.ஏ குல்தீப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் புகார் அளித்தார் ஆனால் என்னவானது? அப்பெண்ணின் தந்தை 2018 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுச் சிறையிலிருக்கும் போது காவலர்களால் அடித்தே கொல்லப்பட்டார். அப்பெண் தனது தாய், வழக்கறிஞர் மற்றும் ஒரு உறவினருடன் காரில் ரேபரேலி சென்று கொண்டிருந்தபோது, அவரின் கார் மீது லாரி மோதி அப்பெண்ணின் தாய் மற்றும் உறவினர் உயிரிழந்தனர்.
இதுதான் பாஜவின் உண்மை முகம். பெண்களை பாலியல் வன்புணர்பு செய்வதும், கொலை செய்வதும், குடும்பத்தையே காலி செய்வதும் தான் அவர்களின் மொழியில் ராமராஜ்ஜியம். ராமன்கள் சீதைகளை வன்புணர்வு செய்துக் கொடூரமாக கொன்று வீசி எறிவதற்கு பெயர்தான் ராமராஜ்ஜியம்.
இப்படிப்பட்ட ராமராஜ்ஜியத்தை கொண்டுவரத்தான் ராமராஜ்ஜியத்தின் தலைமை பீடமாக இருக்கும் உபியில் முதலமைச்சர் தொடங்கி கட்சியின் கடைமட்ட உறுப்பினர் வரை எல்லோருமே போராடிக் கொண்டு இருக்கின்றார்கள்.
அவர்கள் போராட்டத்தின் விளைவுதான் இந்தியாவிலே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாக உத்தர பிரதேசம் மாறி இருக்கின்றது. அங்கு 2018ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 3,78,236 வழக்குகள் பதிவாகி இருந்தது. அதுவே, 2019ம் ஆண்டில் 4 லட்சமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019-இல் 7.3 சதவிகிதமும், பழங்குடியினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
தலித் பெண்களுக்கு எதிராக பதிவாகி இருக்கும் மொத்த வழக்குகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 11,829 வழக்குகள் பதிவாகியுள்ளன என தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பெண்களை தெய்வமாக வணங்கும் நாடு என்று சொல்லும் அதே கும்பல்கள்தான் அவர்கள் கடித்துக் குதறும் ஓநாய்களாகவும் இருக்கின்றனர். அந்த ஒநாய்கள்தான் காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா மிகக் கொடூரமாக பிஜேபி- ஆர்.எஸ்.எஸ் காவி பயங்கரவாதிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட போது, குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தினார்கள்.
இப்போதும் அதே ஒநாய்கள்தான் ஹாத்ரஸில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு முன்னாலும் சென்று போராட்டம் நடத்திப் பாதிக்கப்பட்ட குடும்பத்தை மிரட்டி இருக்கின்றது.
ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து முதுகுதண்டை உடைத்து. கழுத்தை நெறித்து, நாக்கு அறுத்து, மிக கொடூரமாக கொலைச் செய்து, கொல்லப்பட்ட பெண்ணின் உடலை இரவோடு இரவாக பெற்றோர்களின் சம்மந்தமின்றி எரித்து ஆதாரத்தை அழித்தாலும் அதைப் பற்றி யாருமே கேட்கக்கூடாது, பேசக்கூடாது, எழுதக்கூடாது என ஜனநாயக சக்திகளையும் பிஜேபி கும்பல் மிரட்டுகின்றது.
கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்திக்கக் கூட அனுமதி மறுத்து சண்டித்தனம் செய்கின்றது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்க்கச் சென்ற ராகுல்காந்தி அவரது சகோதரி பிரியங்கா காந்தி போன்றவர்கள் கூட தாக்கப்பட்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்ல பாலியல் வன்புணர்வே நடைபெறவில்லை என நிறுவ தற்போது மோடியின் கூலிப்படையான சிபிஐயின் விசாரணைக்கு உத்திரவிட்டிருக்கின்றது.
உபியின் ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் ரவுடிகளால் நடத்தப்படுகின்றதோ என எண்ணும் அளவுக்கு அந்த மாநிலத்தை பிஜேபி மாற்றியிருக்கின்றது. ஆனால் நாட்டின் பிரதமரோ எவன் வீட்டில் இழவு விழுந்தால் எனக்கென்ன என்று இந்தப் பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் மெளனம் காத்து வருகின்றார்.
பிணங்களை நுகர்ந்துக் கிளர்ச்சியடையும் கொடூர மனிதர்களின் புகலிடமாக இருக்கும் பிஜேபியிடம் இருந்து நாம் வேறு எதையும் எதிர்ப்பார்க்க முடியாது. இவை எல்லாம் இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற மோடியின் கனவை நிறைவேற்ற சங்கி கும்பல் செய்யும் அர்ப்பணிப்பு மிக்க பணியாகும்.
ஹாத்ரஸில் நடைபெற்ற சம்பவம் என்பது உபிக்கு மட்டுமே உரித்தான ஒன்றல்ல இந்தியா முழுமைக்கும் எடுத்துக் கொண்டால் 80 மில்லியன் தலித் பெண்கள் பல்வேறு வடிவங்களிலான ஒடுக்கு முறைகளை சந்தித்து வருவதாக சர்வதேச அறிக்கையொன்று கூறுகின்றது. பொதுவாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து ஒரு மணி நேரத்துக்கு 26 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இதுதான் ஒட்டுமொத்த இந்தியாவில் தலித் பெண்களின் நிலை என்றால் மனுநீதி ஆட்சி செய்யும் உபியில் எப்படி தலித் பெண்கள் நிம்மதியாக வாழ அனுமதிக்கப்படுவார்கள்?. மோடியின் ஆட்சி உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியாவை மாற்றியிருக்கின்றது.
இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்கள் கூட இந்தியா வந்தால் மீண்டும் உயிரோடு திரும்ப முடியுமா என அச்சப்படும் அளவிற்கு மிக இழிவான நிலையை நோக்கி இந்தியச் சமூக சென்று கொண்டிருக்கின்றது.
பாலியல் வன்முறைக்கு எல்லா சாதி பெண்களும் இலக்கானாலும் தலித் பெண்கள் மிக அதிகபட்சமாக இலக்காகின்றார்கள். தலித் பெண்களை பாலியல் வன்முறை செய்வது தங்களின் பிறப்புரிமை என்று நினைக்கும் ஆணாதிக்க திமிர்பிடித்த சாதி வெறியர்களே இதற்குக் காரணம்.
நிச்சயம் அரசும் ஊடகங்களும் பொதுச் சமூகமும் ஒரு போதும் தலித் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தாலோ, கொன்றாலோ தங்களை ஒருபோதும் தண்டிக்காது என உறுதியாக இவர்கள் நம்புகின்றார்கள்.
ஹாத்ரஸில் தலித் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இன்று இத்தனை கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது நமக்குத் தெரிந்து இந்தியா வரலாற்றில் இதற்கு முன்பு நடந்திருக்கின்றதா என்று தெரியவில்லை.
எப்போதுமே பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் பெரும்பாண்மை வாக்குகளை கொண்ட ஆதிக்கம் செலுத்தும் சாதியா என பார்த்து போராடவரும் அரசியல்வாதிகள் முதல் முறையாக தலித் பெண்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான் அவர்களுக்கும் உயிர்வாழ தகுதி உள்ளது என அங்கீகரித்து அவர்களுக்காக போராட முன் வந்திருக்கின்றார்கள்.
உள்ளபடியே இது ஒரு ஆரோக்கியமான தொடக்கமாக இருந்தால் இந்த நாட்டின் சட்டங்கள் செய்யாததை இனி மக்களின் போராட்டம் செய்யும் என நாம் நிச்சயம் எதிர்ப்பார்க்கலாம். இனியும் பொதுச் சமூகம் பாலியல் வன்முறைகளை பார்த்துக் கொண்டு ஒருபோதும் அமைதியாக இருக்காது என்ற நிலை ஏற்பட்டாலே ஒழிய இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் இழிபிறவிகளை நம்மால் நிச்சயம் ஒன்றும் செய்ய முடியாது.
- செ.கார்கி