ஆதிக்க வாதிகளின் கோட்டை யாக
அறமன்றச் செயற்பாடு மாறிப் போன
தீதொழிக்கும் நாளேநம் திருநாள் என்ற
தெளிவோடே நம் ‘தந்தை பெரியார் தி.க.’
தேதியினைத் திடுமெனவே குறித்தது காண்
தீர்ப்பாளர் உருஎரிக்க முயன்றது காண்
பாதிக்கப் பட்டோருக்காய்ப் புயல்வே கத்தில்
பாய்புலியாய்ச் செயல்பட்ட படைஅதுவே காண்
ஊர்ப்புறத்து மாணவனை ஒழித்துக் கட்டி
ஒய்யாரக் கொண்டைக்குத் தாழம் பூவா?
பாருக்கே புதுவெளிச்சம் பாய்ச்சும் அந்தப்
பாமரனின் பிள்ளைகண் பிடுங்கச் சூதா?
வேர்ப்புறத்தில் வெந்நீரைப் பாய்ச்சும் இந்த
வேலையினைச் சட்டத்தின் பேரால் செய்ய
யார் கொடுத்தார் அதிகாரம்? ஒப்ப மாட்டோம்
போர் தொடுப்போம்; பொய்வலைகள் அறுத்தெறிவோம்.
எட்டாத தூரத்தில் உள்ள தில்லி
எசமானன் கல்வியினைப் பிடுங்கிக் கொண்டான்
முட்டாளா நாமெல்லாம்? மாநிலத்தின்
முழுஅதிகா ரத்தின்கீழ் கல்வி வேண்டும்
சட்டத்தில் நுழைவுத் தேர்(வு) இருக்கு தென்று
சாதிக்கும் பார்ப்பனரே! மற்றை யோரே!
சட்டத்தை உடையுங்கள்; தூள்ஆக் குங்கள்
தரைமேடு பள்ளம்ஏன்? சமம்ஆக் குங்கள்!
ஒதுக்கீடு பிச்சையல்ல; உழைக்கும் மக்கள்
உரிமையது; அதையிங்கு மொத்த மாக
பகுக்கிவைத்த கன்னக்கோல் திருட்டுக் கும்பல்
பார்ப்பனரே; அவர்பருப்பு இனிவே காது!
அதைச்சொல்லி இதைச்சொல்லி இனியும் எம்மை
அடிமைசெய எவரேனும் முனைவா ராயின்
உதைகிடைக்கும் என்பதனை மட்டும் தானே
உரிமைக்காய் போராட முனைவோர் சொல்வர்?
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
ஒதுக்கீடு பிச்சையல்ல!
- விவரங்கள்
- தமிழேந்தி
- பிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2006