ஈரோட்டில் ‘இந்து எழுச்சி மாநாடு’ நடத்திய பார்ப்பனிய சக்திகளின் புரட்டல்களுக்கு ‘மதவெறி எதிர்ப்பு இயக்கம்’ பதிலடி தந்தது! 9.4.06 அன்று நடைபெற்ற மதவெறி எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கப் பொதுக் கூட்டத்தில் பேசிய பல்வேறு அமைப்புத் தலைவர்களின் உரைச் சுருக்கம்...
இராம. இளங்கோவன்
(கழக மாவட்டச் செயலாளர்)
வெவ்வேறு பெயர்களில் மதவெறிச் சக்திகள் படர்ந்து, பரவி ஒற்றுமையைக் குலைக்கின்றன. மதவெறித் தீ மேலும் பரவினால் மனித சமூகம் பிளந்து, அழிவுபட்டுவிடும். சாதிக் கட்டமைப்பை நிறுவி பார்ப்பனர்கள் நம்மைப் பிரித்து விட்டார்கள். இந்துத்துவாவைத் தக்க வைக்கவே மதக் கலவரங்களை உருவாக்குகிறார்கள். பெரியார் மண்ணில் இதற்கெல்லாம் இடமில்லை என்று நிரூபித்தாக வேண்டும்.
வழக்குரைஞர் பாவேந்தன்
(தமிழ்த் தேசிய வழக்குரைஞர் நடுவம்)
பகுத்தறிவு மண்ணில் பார்ப்பனக் குடுமிகள் ஆட்டம் போடுகின்றார்கள். பெரியார் என்பதெல்லாம் ஒன்றுமில்லை என்று அகங்காரத்துடனும், துணிச்சலுடனும் விசுவ இந்து பரிசத் போன்றவர்கள் ஈரோட்டிலேயே வந்து மாநாடு நடத்துகிறார்கள். தமிழக மண்ணிலிருந்தே மதவெறி துரத்தியடிக்கப்பட வேண்டும். 11 அமைப்புகள் உள்ள மதவெறிக்கு எதிரான இந்தக் கூட்டியக்கம் தமிழ்நாடு முழுவதும் பரவ வேண்டும்.
கண. குறிஞ்சி
(தமிழர் கொற்றம்)
“கிராமப் பூசாரிகள் சங்கம்” என்ற பொய் ‘லட்டர் பேடை’க் கொடுத்து, சி.என்.சி. கல்லூரி நிர்வாகத்தை ஏமாற்றித்தான் வி.எச்.பி. அமைப்பினர் அனுமதி பெற்று ஈரோட்டில் மாநாட்டை நடத்தியிருக்கிறார்கள். இந்து முன்னணி ராம கோபாலன் ஒன்றேகால் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ராமன் பாலத்துக்கு, சேது சமுத்திரத் திட்டத்தால் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்று பதறுகிறார். புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். சங் பரிவாரங்கள் அம்பேத்கர் பிறந்த நாளையும் விட்டு வைக்காமல் கொண்டாடுகிறார்கள் - ஆனால் பெரியாரிடம் அவர்கள் அண்ட முடிய வில்லை!
பாலகோகிலம், வித்யா மந்திர், சிசு மந்திர் போன்ற பெயர்களில் ஆர்.எஸ்.எஸ். 20000-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை பார்ப்பனர் நலன் காக்க நடத்துகிறார்கள். முந்தைய ஆட்சியில் கல்வி சீரமைப்புக்குத் தலைவராகப் பார்ப்பனரையே நியமித்தார்கள். அதனால் கல்வியைக் காவியமயமாக்கும் அக்கிரமங்கள் தடையில்லாமல் நடந்தன. சமீபத்தில் உச்சநீதி மன்ற நீதிபதி ஒருவர் இந்துத்துவா என்பது வாழ்க்கை நெறி என்று கூறியிருக்கிறார். இவர் போன்றவர்களிடம் சமூகநீதியை எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்?
தேசிய இனப் பிரச்சினை, இடஒதுக்கீடு, பெண்ணுரிமை போன்ற உரிமைப் போராட்டங்கள் அனைத்துக்கும் எதிரிகளாக சங்பரிவாரங்களும் அவர்தம் கூட்டமும் இருந்து வருகின்றனர்!
தமிழரசன்
(தமிழக இளைஞர் இயக்கம்)
தமிழை நீச மொழி என்று ஒருபுறம் கூறிக் கொண்டே தமிழைச் செம்மொழியாக்கு என்றும் கூறி இரட்டை வேடம் போட்டு வருகிறார்கள் பி.ஜே.பி. கூட்டத்தினர். காங்கிரசும் மசூதியில் வழிபாட்டை அனுமதித்தும், பாபர் மசூதியை இடிக்கப் பார்த்துக் கொண்டிருந்ததையும், நாம் மறந்து விட முடியாது. பல லட்சம் ராணுவத்தை நிறுத்தி வைத்துள்ள காஷ்மீரிலும், தீவிரவாதப் பிரச்சினை உள்ளதாகக் கூறும் ஆந்திராவிலும், தேர்தல் நடத்த முடிகிறது.
ஆனால் பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் நடத்த முடியவில்லையென்றால், சாதிக்கட்டுமானத்தின் கொடுமையைத் தெரிந்து கொள்ளலாம். முரண்பாடு களில் தான் இந்திய அரசு வாழ்கிறது. நமக்கு எதிரி இந்தியப் பார்ப்பனிய அரசு தான்!
வழக்குரைஞர் ப.பா.மோகன்
(இந்தியப் பொதுவுடைமைக் கட்சி)
ஈரோடு விசுவ இந்து பரிஷத்தினர் நடத்திய மாநாடு நமக்கெல்லாம் விடப்பட்ட சவால் ஆகும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வி.எச்.பி. பஜ்ரங்தள் போன்ற பார்ப்பன வெறியாட்டங்களைத் தடுக்க வேண்டுமென்றால் மதவெறி எதிர்ப்புக் கூட்டியக்கம் வெற்றி பெற வேண்டும். இந்துமதம் ஒன்றுதான் பிறக்கும் போதே தீண்டாமையை வலியுறுத்தும் அயோக்கிய மதமாக உள்ளது. இந்துமத வேரை - வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட வேண்டும்.
இரா. அதியமான்
(நிறுவனர், ஆதித் தமிழர் பேரவை)
பார்ப்பனியத்திற்கு எதிரான நடைமுறைத் திட்டங்களை நாம் வகுத்தாக வேண்டும். இந்தக் காலத்திலும் கையால் மனித மலத்தை மனிதன் அள்ளுவது தொடர்கிறது. அரசுத் துறையான ரயில்வேயில் இந்தக் கொடுமை இருப்பதைச் சுட்டிக் காட்டியும் பார்ப்பன அதிகாரிகள் எந்த அக்கறையும் காட்டவில்லை. இந்து மதத்தை வேரறுக்காமல் நமக்கு விடிவு கிடைக்கப் போவதில்லை.
பொழிலன்
(பொதுச்செயலாளர் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்)
கரூர் கோபியில் தமிழில் குடமுழுக்கு நடத்தியதற்காக சங்கராச்சாரி தூண்டுதலில் அந்த இடத்தைக் கழுவி சுத்தம் செய்திருக்கிறார்கள். பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்தவர்களை ஒழிக்கச் சொன்னது வேதங்கள். பார்ப்பனர்கள் வேதம் கூறியதை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள்.
தாழ்த்தப்பட்ட - பிற்பட்டவர்களின் உயிரும், பார்ப்பனர் மயிரும் ஒன்று என்று வேதம் கூறுகிறது. வேத வாழ்க்கை முறையின் தலைவனாக சங்கராச்சாரி இருந்து வருகிறார். சங்கராச்சாரியைப் பற்றிப் பேசினால், அவர்களின் கையை வெட்டுவோம் என்ற இல. கணேசனை கைது செய்ய எவருக்கும் துப்பில்லை. உன்னால் வெட்ட முடியுமா? வெட்டிப்பார்.
பார்ப்பான் - சாதிப் பிரச்சினை என்றால் மதத்தில் போய் ஒளிந்து கொள்கிறான். மதப் பிரச்சினை என்றால் சாதிக்குள் சென்று ஒளிகிறான். இரண்டும் என்றால் இந்தியாவில் ஒளிந்து விடுகிறான். இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை. சமஸ்கிருதப் பல்கலைக் கழகத்துக்கு ஆண்டுக்கு 800 கோடி ஒதுக்கும் இந்திய அரசு தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு ஒரே ஒரு கோடி மட்டும் ஒதுக்கும் கேவலத்தை என்னவென்று சொல்வது?
பார்ப்பனர்கள், மார்வாடிகளை வெளியே விரட்டியடிக்க வேண்டும். இந்தியக் கட்டமைப்பை எதிர்த்துப் போராட வேண்டும். நேபாளப் புரட்சிகர இயக்கங்கள் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுகின்றன. சமஸ்கிருத பல்கலைக் கழகத்தை தீயிட்டுப் பொசுக்கியிருக்கிறார்கள். தமிழகம் எங்கும் இப்படிப்பட்ட உணர்வுகள் நிலைபெற்று வளர வேண்டும்.
பெ.மணியரசன்
(பொதுச்செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி)
விசுவ இந்து பரிசத் மாநாட்டை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்திக் களம் கண்ட தோழர்கள், தமிழர்களின் உணர்வு இன்னும் செத்துவிடவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இந்துமதக் கட்டமைப்பில் பார்ப்பனர்கள் தலையங்கமாக உள்ளார்கள். அதைப் பார்க்க கீழே உள்ளவர்களை அரவணைப்பதுபோல் நடிக்கிறார்கள்.
இந்த மாநாட்டில் சுப்பிரமணியசாமி, ராஜ்யசபா, லோக் சபா இருப்பதுபோல ஆரிய சபா அமைக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இந்த ஆரிய சபாவில் கிராமப் பூசாரிகளையும், பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் போன்றோரையும் சேர்த்துக் கொள்வார்களா? ரோமாபுரியில் மதகுருமார்கள் ஆட்சி செய்தது போல, இங்கும் பார்ப்பனர்களின் ஆட்சியைக் கொண்டுவரத் துடிக்கிறார்கள்.
தந்தை பெரியார், 1947 ஆகஸ்டு 15 சுதந்திரம் பார்ப்பன - பனியாக்களுக்கான சுதந்திரம் என்று மிகத் துல்லியமாகத் தெரிவித்தார். பெரிய சமூகவியலாளர்கள்கூட ஆண்டுக்கணக்கில் ஆய்வு செய்து விளக்கம் கொடுக்க வேண்டிய செய்திகளை ‘திருக்குறள்’ போல் சொல்லியிருக்கிறார்.
மய்ய அரசு கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பு வந்தவுடன் பார்ப்பனர்கள் துடிக்கிறார்கள். என்.டி.டி. தொலைக்காட்சியில் மண்டல் குழுவுக்கு எதிரான கருத்துகள் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது. 27 சதவீத இடஒதுக்கீட்டையே சகித்துக் கொள்ளாத கும்பல் இந்து என்று கூறி சமத்துவத்தைப் போதிக்கிறதா? சங்கராச்சாரி, விஜயேந்திரனை விடுதலை செய்யக் கோரி பூசாரிகள் மாநாட்டில் தீர்மானம் போடுகிறார்கள். இது அரசியல் மாநாடா? ஆன்மிக மாநாடா?
சிறையில் இருந்த சங்கராச்சாரிக்கு பார்ப்பனரல்லாதவர் சமைத்த உணவு கொடுக்கப்பட்டது கண்டு துடித்துப் போன அசோக்சிங்கால், எதிர்ப்புக்குரல் எழுப்பியதால், வேறு ஏற்பாடு செய்து பார்ப்பனர்களைக் கொண்டு உணவு சமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த சாதித் திமிர் யாருக்கு வரும்? சிறையில் இப்படிப்பட்ட வசதி யாருக்குக் கிடைக்கும்?
இந்துக் கோயில்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரும் பார்ப்பனர்கள் அதைக் கட்டினார்களா? ஒரு சிறு கல்லையாவது எடுத்துத் தந்திருப்பார்களா? கோயில்கள் என்பன ஆயிரமாயிரம் ஆண்டு சமூகச் சொத்துக்கள். நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தப்பிறகுதான் பார்ப்பனர்களின் ஏகபோக உரிமையாக இருந்த கோயில்களை முறைப்படுத்த “இந்து அறநிலையத் துறையை” உருவாக்கினார்கள். இப்போது மீண்டும் கோயில்களுக்குள் புகுந்து கொள்ளையடிக்கத் துடிக் கிறார்கள்.
சேரிக்குள் செல்லும்போது யாராவது காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டால், கால் தீட்டாகிவிடும் என்று பாதத்திற்கு பட்டுத் துணியைக் கட்டிக்கொண்டு சென்றவன்தான் கிரிமினல் குற்றவாளி ஜெயேந்திரன். இது ஆரிய எதிர்ப்பு மண். இங்கு தளம் கிடைக்குமா என்று வலைவீசிப் பார்க்கிறார்கள். அவர்கள் எண்ணம் ஈடேறாது. தமிழர்கள் அவர்களை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தியாகு
(பொதுச்செயலாளர் தமிழ் தமிழர் இயக்கம்)
வைதீகத்தின் பெயரால் பார்ப்பனிய அரசியல் இங்கு நடத்தப்படுகிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்த அனைவரையும் இந்துக்கள் என முன்பு அழைத்தார்கள். இந்த நாட்டையே இந்துஸ்தான் என்றும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சாதி வேறுபாடு முன்யோசனை கொண்ட திட்டமிட்ட ஆதிக்க வெறியால் தோன்றியுள்ளது.
சென்னையில் மாநாடு போட்ட பார்ப்பனர்கள் சமஸ்கிருதம் படிக்கச் சொல்லி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். தமிழை மையப்படுத்திப் போராடினால் தமிழ் அரசியல் என்று கிண்டலடிக்கும் ‘இந்து’ ஏடு, பார்ப்பன மாநாட்டுத் தீர்மானத்தை சாதி ஆதிக்க அரசியல் என்று குறிப்பிடுமா?
தமிழ்நாட்டிலேயே சீந்துவாரற்ற கட்சியாக இல. கணேசன் கட்சி இருக்கிறது. ஏந்துவதற்குத் தோள் இல்லாததால் தனியே நிற்கிறார்கள். அவர்களை அம்பலப்படுத்துவோம். சாதி ஆதிக்கத்தை வேரறுப்போம்.