உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் சென்னையில் புட்டபர்த்தி சாய்பாபாவை சந்தித்து ‘ஆசி’ பெற்றுள்ளார். புட்டபர்த்தி அமர்ந்திருக்க நீதிபதி நின்று கொண்டு - தலை வணங்கி ‘ஆசி’ பெறும் புகைப்படத்தை ஏடுகள் வெளியிட்டுள்ளன.

நரேந்திர மோடி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னையில் புட்டபர்த்தி சாய்பாபாவிடம் கூனிக் குறுகி, முதுகு வளைந்து கும்பிட்டு நிற்க - புட்டபர்த்தி சாய்பாபா, சக்கர நாற்காலியில் அப்படியே அமர்ந்திருக்கும் படத்தை ‘தினத்தந்தி’ நாளேடு வெளியிட்டுள்ளது.

லல்லுபிரசாத்: சென்னையில் புட்டபர்த்தி பாராட்டு விழாவில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் லல்லுபிரசாத் இப்போது, தமது சொந்த கிராமமான கோபால் கஞ்ச் மாவட்டத்திலுள்ள பல்வாரியா கிராமத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ‘கிராம தேவதை’ கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட போது கூட்டத்திலிருந்த ஒரு பெண் ‘பேய்’ பிடித்து ஆடினாராம். உடனே லல்லு ‘மந்திரவாதி’யைப் போல் ‘பேயை’ விரட்டினாராம்.

பீகார் தொலைக்காட்சி, இந்தக் காட்சியை ஒளிபரப்பியது. பீகாரில் - அரசு கொண்டு வந்துள்ள பில்லி-சூன்யம் தடுப்புச் சட்டத்தின் கீழ் லல்லுவைக் கைது செய்ய வேண்டும் என்று, ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் சிவானந்த் திவாரி வலியுறுத்தியுள்ளார்.

அத்வானி: பெங்களூர் வந்துள்ள முன்னாள் துணை பிரதமர் அத்வானி சங்கரபாரதிசாமி என்ற பார்ப்பன மடாதிபதியின் காலில் ‘நெடுஞ்சாணாக’ வீழ்ந்து ஆசி வாங்கும் காட்சியை ‘தினத்தந்தி’ ஏடு வெளியிட்டிருக்கிறது.

துரைமுருகன்: கலைஞர் வீட்டுக்கு வந்த புட்ட பர்த்தி சாய்பாபாவை வாசலிலே - தாம்பூலத் தட்டு கொடுத்து வரவேற்ற தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் - புட்டபர்த்தி காலில் விழுந்து ‘ஆசி’ வாங்கினார் என்று தி.மு.க.வின் ஆதரவு இதழான ‘நக்கீரன்’ செய்தி வெளியிட்டிருக்கிறது.

கலைஞரின் துணைவியார் தயாளு அம்மாள்: புட்டபர்த்தி காலில் கலைஞர் முன்னிலையிலேயே விழுந்து ‘ஆசி’ பெறும் காட்சியை ‘தினமலர்’ பார்ப்பன ஏடு முதல் பக்கத்திலேயே வெளியிட்டது. ‘நக்கீரன்’ ஏடு - சாய்பாபாவின் லிங்கம் எடுக்கும் மோசடிகளை படத்துடன் அம்பலப்படுத்தி, தனது பகுத்தறிவுக் கொள்கையில் உறுதிகாட்டி நின்றது பாராட்டுக்குரியதாகும்.

அதிகாரமட்டம்: ‘ஆனந்த விகடன்’ ஜன.31, 2007 ஏட்டுக்கு பேட்டி அளித்துள்ள கவிஞர் கனிமொழி - இந்தியாவின் அதிகார மட்டம் முழுதும் பாபாவைச் சுற்றி இயங்குவதைக் கண்டு தான் வியந்ததாகக் கூறுகிறார். அவரது பேட்டியிலிருந்து:

“பாபா பாராட்டு விழாவில் இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர் டி.வி.எஸ். வேணு சீனிவாசன் வாசல்ல நின்னு எல்லாரையும் வரவேற்கிறார். இந்தியாவின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பாபாவின் பக்கத்தில் சகஜமாக சாய்ந்து உட்காராமல், சீட் நுனியில் பவ்யமாக உட்காருகிறார்.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியோ எல்லார் முன்னாலேயும் பாபாவின் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கறார். இரண்டு மாநில கவர்னர்கள், மூன்று மாநில முதலமைச்சர்கள், பல மத்திய, மாநில அமைச்சர்கள்னு மொத்த இந்தியாவோட அதிகார மட்டமும் கலந்துக்கிட்ட நிகழ்ச்சி அது. பெரும்பாலான வி.ஐ.பி.க்கள் பேசும்போதே பரவசத்தில் குரல் உடைஞ்சு பேசுறாங்க. ஓர் ஆன்மிகவாதிக்கு இவ்ளோ செல்வாக்கு இருக்குதேன்று வியந்தேன்.”

Pin It