10 ஆண்டு காலத்துக்குப் பிறகு மீண்டும் தமிழ் நாட்டில் புட்டபர்த்தி சாய்பாபா! கடந்த காலங்களில் இல்லாத வரவேற்புடனும் - அறிவிக்கப்படாத, தமிழக அரசின் வரவேற்போடும் - புட்டபர்த்தி சாய்பாபா, தமிழகத்துக்கு வந்திருக்கிறார். 10 நாட்கள் சென்னையில் சாய்பாபா முகாம்; 132 வேத பார்ப்பனர்கள் - பல லட்சம் ரூபாய் செலவில் விலை மதிப்புள்ள பொருள்களை நெருப்பில் கொட்டி - உலக நன்மைக்காக புட்டபர்த்தி சாய்பாபா முன்னிலையில் 11 நாட்கள் யாகம் நடத்துகிறார்களாம். திருவான்மியூரிலிருந்து 132 பார்ப்பனர்கள் வேதத்திலிருந்து 14641 நாமங்களையும், 1331 சமஹங்களையும், தவளை கத்துவதுபோல் கத்தினாலே அந்த சத்தம் ‘அண்ட பிண்ட சராசரங்கள்’ அத்தனைக்கும் ஊடுருவி, உலகத்துக்கே அமைதியைக் கொண்டு வரும் என்று பார்ப்பனர்கள் புளுகுகிறார்கள். அதாவது அடுத்த 11 நாட்களில் ஈராக்கில், சோமாலியாவில், அமெரிக்காக்காரன், தனது தாக்குதலை நிறுத்திக் கொண்டு விடுவான்.
ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதை அப்படியே நிறுத்திவிட்டு, ‘வேதச் சத்தம்’ கேட்டவுடன் வேட்டுச் சத்தம் கேட்டதுபோல், சிங்களவன் தலைத்தெறிக்க ஓட்டமெடுக்கப் போகிறான். இப்படி உலகத்திலே பீரங்கி - துப்பாக்கி சத்தங்கள் அப்படியே ஒடுங்கிப் போய் மகா புத்தர் அணிந்த மஞ்சள் துண்டுகளை, உலகம் முழுதும் மக்கள் அணிந்து கொண்டு, அமைதி வழிக்குத் திரும்பப் போகும் மகா அதிசயம் நடக்கப்போகிறது என்று, பார்ப்பனர்கள் கதைவிடுகிறார்கள். ஆமாம்! ஆமாம்! என்று புட்டபர்த்தியும் - பார்ப்பன யாகத்தில் ‘எழுந்தருளி’ ஆசிர்வதிக்கிறார்.
காஞ்சிபுரத்தில் - இப்படி ஒரு பேர் வழி - இதுவரை எல்லோரின் காதுகளிலும் பூச்சுற்றிக் கொண்டிருந்தார். அவர் கோயிலுக்குள் நடந்த ஒரு கொலை வழக்கில் வசமாகச் சிக்கிக் கொண்டுவிட்டதால் - செய்வதறியாது திகைத்து நின்ற பார்ப்பனர்கள் - புட்டபர்த்தி சாய்பாபாவை பிடித்துக் கொண்டு வந்து - தங்களது வேத பார்ப்பன மகிமைகளைப் பறைசாற்றத் துவங்கிவிட்டனர்.
தமிழ்நாட்டில் அதிகாரத்துக்கு வருவோருக்கு எல்லாம் சொக்குப்பொடி போட்டு, தனது வலையில் வீழ்த்தி வரும் டி.வி.எஸ். அய்யங்கார்கள் இந்தியாவின் அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டு, சாய்பாபாவின் தரிசனத்திற்காக ஏங்கிக் கிடக்கும் ‘மூடநம்பிக்கை’ அரசியல்வாதிகளையெல்லாம், அப்படியே அணி திரட்டிக் கொண்டு வந்து - சென்னையிலே ஒரு விழாவையே நடத்தியுள்ளார்கள். தமிழக முதலமைச்சர் கலைஞர் தலைமையில், அமைச்சர்கள் பட்டாளமே புட்டபர்த்தி பாராட்டு விழாவில் பூரிப்போடு கலந்து கொண்டிருக்கிறது.
கிருஷ்ணா நதி நீர்க் கால்வாயை 200 கோடி செலவில் புட்டபர்த்தி சீரமைத்தார் என்பது - பாராட்டுக்குரியது தான். அதற்காக - தமிழ்நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதிலும் நமக்கு கருத்து மாறுபாடு இல்லை. பார்ப்பன சங்கராச்சாரிகள் தங்களிடம் குவிந்து கிடக்கும் பணத்தை - பார்ப்பனர்களுக்காக மட்டுமே கொட்டி அழும் போது, ‘சூத்திர’ புட்டபர்த்தி மக்களுக்காக செலவிடுகிறாரே என்பதிலும், சாய்பாபா பாராட்டுக்குரியவர் தான்! ஆனால் பாராட்டின் எல்லை அத்தோடு மட்டுமே நிற்க வேண்டும். அது எல்லை தாண்டக் கூடாது என்பதே நமது கவலை!
பாராட்டு விழாவிலே தமிழக முதல்வர் கலைஞர் இப்படிப் பேசியிருக்கிறார்:
“நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நாட்டில் வேடதாரிகள் பலர் உண்டு. அந்த வேடதாரிகளை ஒரு பகுதியாகவும், இப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த துறவுக்கோலம் பூண்டவர்களை ஒரு பகுதியாகவும் பிரித்துப் பார்க்க நான் தவறியதே இல்லை. மக்களுடைய கஷ்டங்களைப் போக்க வேண்டுமென்று கருதுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் துறவிகளைவிட மேலானவர்கள். இன்னும் சொல்லப் போனால் ஆண்டவனுக்கே ஒப்பான வர்கள்.” - கலைஞர் பேச்சு ‘முரசொலி’ (ஜன.22)
இதுவரை புட்டபர்த்தி சீடர்கள்தான் சாய்பாபாவை - “இதோ ஆண்டவனே வந்துவிட்டார்; அவதாரம் எடுத்து வந்திருக்கிறார்; உங்களுக்கு எந்தப் பிரச்சினையானாலும், இந்த ஆண்டவனிடம் வாருங்கள்; உடனே பிரச்சினைகள் பறந்தோடி விடும்” என்று கூவி கூவிப் பிரச்சாரம் செய்தார்கள். இந்த மூடநம்பிக்கை சகதியில் சிக்கிப் போய் - தன்னை மறந்து - தன்னுரிமையை மறந்து - தன்மானத்தை இழந்து இத்தகைய மோசடி மனிதர்களை தேடி தேடிப் போனார்கள் நமது அப்பாவித் தமிழர்கள்.
இந்த மக்களை இந்த மூடத்தனத்திலிருந்து முதலில் விடுவித்து அவர்களை சிந்திக்கச் செய்வதற்கு இந்த நாட்டில் மிகப் பெரும் இயக்கம் நடந்தது. அதுதான் பெரியாரின் பகுத்தறிவு இயக்கம். கல்லடி, சொல்லடி, அவமதிப்பு, எதிர்ப்புகளையெல்லாம் சந்தித்து - மக்களிடையே தமிழ் மண்ணில் பெரியார் இயக்கம் நடத்திய பகுத்தறிவுப் பிரச்சாரம் தான் - தமிழர்களை விழிப்படைய வைத்தது; பார்ப்பனிய கொட்டத்தை உணர வைத்தது.
அந்தத் தமிழ் மண்ணில் ‘பெரியார்’ ஆட்சி நடப்பதாகக் கூறிக் கொண்டு - புட்டபர்த்தியின் புனிதத்தைப் போற்றக் கிளம்பியிருக்கிறது தி.மு.க. ஆட்சி!
குடிக்கத் தண்ணீர் தந்து - கூவத்தை மணக்கச் செய்துவிட்டால் போதும் - புட்டபர்த்தி மகான் தான்; கடவுள்தான்; அவர் கையசைப்பில் விபூதியை வரவழைப்பார்; மோதிரங்களை வரவழைப்பார்; இப்படிப்பட்ட ‘ஆண்டவன்’ தான் நமக்குக் குடிக்கக் கிருஷ்ணா நீரைக் கொண்டு வந்துள்ளார். எனவே தண்ணீரை நன்றாக குடித்துவிட்டு அந்தத் தண்ணீருக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமானால், அந்த சாய்பாபாதான் உண்மையான ஆண்டவன் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர் மிகப் பெரிய சக்தி” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கா, தி.மு.க. ஆட்சிக்கு வந்தது?
நேரு விளையாட்டு அரங்கில் அந்த விளையாட்டுத்தான் நடந்திருக்கிறது.
வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட புட்டபர்த்தி சாய்பாபா - மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும், மாநில அமைச்சர் துரைமுருகனுக்கும் - வெறும் கையை ஆட்டி, மோதிரத்தை வரவழைத்துக் கொடுத்தாராம்! “சாய்பாபா அவர்களே; இந்தத் தந்திர வித்தையை செய்தது எப்படி என்று எங்களிடம் விளக்குங்கள்” என்று இவர்கள் கேட்டிருப்பார்களேயானால், அதைப் பாராட்டலாம்.
அருகிலிருந்த முதல்வர் கலைஞராவது அப்போது குறுக்கிட்டு, “உங்கள் தந்திரங்களையெல்லாம் எங்களிடம் காட்டி விட்டீர்களே! இவை எல்லாம் அற்புதங்கள் அல்ல; தந்திரங்கள் என்று நாங்கள் பிரச்சாரம் செய்கிறவர்கள்” என்று சொல்லியிருக்கலாம். ஆனால் - இவை எதுவுமே பேசப்படவில்லை; நீண்ட மவுனம்... மவுனம் தான் நீடித்திருக்கிறது.
இந்த ‘மவுனத்தை’ அமைச்சர் துரைமுருகன் பாராட்டு விழாவிலே கலைத்து விட்டார்.
“பாபாவின் ஆன்மீக சக்தியால் அவர் எனக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும் மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். இதைப் பார்த்து வியந்தோம்”
இது அமைச்சர் துரைமுருகன் பேச்சு (‘தினத்தந்தி’ - ஜன.22)
பாபா கையசைப்பில் மோதிரத்தை வரவழைத்தது - அவரது ஆன்மீக சக்தி என்று அத்தாட்சிப் பத்திரம் வழங்கி விட்டார் துரைமுருகன். இனி மேடை தோறும் மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த மக்களைப் பார்த்து பெரியார் இயக்கம் கேட்ட கேள்விகளையெல்லாம் - இனி தி.மு.க. அமைச்சர்களைப் பார்த்துக் கேட்க வேண்டும் போலிருக்கிறது!
“துரைமுருகன் அவர்களே! அற்புத சக்தியால் மோதிரத்தை வரவழைத்துக் கொடுத்த பாபா - அதே சக்தியைப் பயன்படுத்தி ஒரு பூசணிக்காயை வரவழைப்பாரா?
அந்த மோதிரம் - ஏதேனும் ஒரு நகைத் தொழிலாளியின் உழைப்பால் உருவாக்கப்பட்டு - ஏதேனும் ஒரு கடையில் விற்பனைப் பொருளாக இருந்தது என்பதை மறுக்கிறீர்களா?
கிருஷ்ணா நதி நீருக்கு செலவிட்ட ரூ.200 கோடிக்கான காசோலையை அப்படியே தனது கையசைப்பில் பாபா வரவழைத்துக் காட்டுவாரா?
- இப்படி எல்லாம் அமைச்சரைப் பார்த்துக் கேட்டால் - “பாபாவின் சக்தி உங்களுக்குப் புரியாது; அது எங்களுக்குத்தான் புரியும்” என்று இவர்கள் பேச ஆரம்பித்தாலும் வியப்பதற்கில்லை!
நாடு முழுதும் சாமியார்கள் மோசடியில் மக்கள் ஏமாந்து கொண்டிருக்கும் செய்திகள் - ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கின்றன. சாமியார்களை நம்பி - நகைகளை இழந்தவர்கள்; பிள்ளை வரம் வேண்டி கற்பை இழந்தவர்கள்; பிணமான பெண்கள்; பெற்ற குழந்தைகளை நரபலி கொடுப்பவர்கள்; என்றெல்லாம் மூடநம்பிக்கையின் கொடூரங்கள் தலைவிரித்தாடுகின்றன. பெரியார் இயக்கங்கள் மட்டும்தான் இன்று வரை மக்களிடையே பகுத்தறிவைப் பிரச்சாரம் செய்கின்றனர். அதிலும் வீரமணியாருக்கு கலைஞருக்கு அன்றாடம் பாராட்டு அறிக்கைகள் எழுதுவதற்கே நேரமில்லை.
இந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய தி.மு.க.விலே ‘பகுத்தறிவுப் பாசறை’யை துவக்கப் போவதாக அறிவித்தவர் கலைஞர்தான். அதற்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் பாசறை பதுங்கி விட்டது.
இனி ‘முரசொலி’யில் எழுதும் உடன் பிறப்புக்கான கடிதங்களில் 50 சதவீதத்துக்கு மேல் பகுத்தறிவு சிந்தனைகளை விதைக்கவே பயன்படுத்துவேன் என்று உறுதிமொழி அளித்தவர்தான் கலைஞர். உறுதிமொழியோடு கதை முடிந்துவிட்டது.
இவர்கள்தான் - இப்போது மூட நம்பிக்கையின் தலைமையகமாகத் திகழும் ஒரு மோசடி பாபாவுக்கு ‘ஆண்டவன்’ முத்திரை குத்தி அற்புதங்களுக்கு அத்தாட்சிப் பத்திரம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது பெரியாரியல்வாதிகள் - பகுத்தறிவாளர்கள் - முற்போக்குச் சிந்தனையாளர்கள் - இடதுசாரிகளிடையே எழுந்திருக்கும் கேள்வி இதுதான்!
சாய்பாபாவின் அற்புதங்களை, சித்து விளையாட்டுகளை கலைஞரும், அமைச்சர்களும் எதிர்க்கிறார்களா? அல்லது ஆதரிக்கிறார்களா?
கிருஷ்ணா நீர் திட்டத்துக்கு புட்டபர்த்தி பணம் கொடுத்துவிட்டதாலே - அவர் மக்களை ஏமாற்றும் மோசடிகளும் மூடநம்பிக்கைகளும் உண்மைதான் என்று கூறுகிறார்களா?
மக்களிடம் இதைத் தெளிவாக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை!
இல்லையேல் - பெரியார் இயக்கத்தின் - பகுத்தறிவு இயக்கத்தின் ஆணிவேரையே இவர்கள் பிடுங்கத் துவங்கி விட்டார்களோ என்ற அய்யம் எழவே செய்யும்!
அதுமட்டுமல்ல - சாமியார்களிடையே தஞ்சம் புகுந்திருந்து விட்டதாக ஜெயலலிதாவை விமர்சிக்கும் தார்மீக உரிமைகளையும் தி.மு.க. இழந்துவிடும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.
புட்டபர்த்தி மோசடிகள்: குறுந்தகடு தயார் ஆகிறது!
அய்தராபாத்தில் - அன்றைய பிரதமர் நரசிம்மராவ் பங்கேற்ற விழாவில் - புட்ட பர்த்தி சாய்பாபா கையசைப்பில், தங்கச் செயினை வரவழைத்தார். நிகழ்ச்சியைப் பதிவு செய்த அரசுத் தொலைக்காட்சியின் காமிராவுக்குள் - இந்த செயின் எப்படி வந்தது என்ற ரகசியம் சிக்கிக் கொண்டு விட்டது.
சாய்பாபாவின் உதவியாளர் அவரிடம் ஒரு தட்டை நீட்டியபோது - தட்டுக்குக் கீழே செயினையும் சேர்த்துத் தர, ரகசியமாக அதைப் பிடித்த சாய்பாபா, கையைச் சுழற்றி, தந்திரமான மேஜிக் கலைஞர் போல் செயினை வரவழைத்தக் காட்சியை காமிரா பதிவு செய்துவிட்டது.
அய்தராபாத் தொலைக்காட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து, அதை ஒளிபரப்பாமல் முடக்கினர். பிறகு தொலைக்காட்சி நிலையத்திலிருந்த சில சிந்தனையாளர்கள் அதை வெளியே கொண்டு வந்தனர். கருநாடக பகுத்தறிவாளர்கள் அதை மக்களிடம் அம்பலப்படுத்தினர். பி.பி.சி. தொலைக்காட்சியும் இதனை ஒளிபரப்பியது.
அதேபோல் - ஒரு வெளிநாட்டு ‘இளைஞன் புட்டபர்த்தி சாய்பாபா - தன்னிடம் உடலுறவுக்கு முயன்றதை பி.பி.சி. பேட்டியில் கூறியிருந்தார். இந்தக் குறுந் தகட்டை - பெரியார் திராவிடர் கழகம் இப்போது வெளிக்கொண்டு வந்துள்ளது.
பெரியார் முழக்கம் அடுத்த இதழில் - குறுந்தகட்டின் விலை - கிடைக்குமிடம் பற்றிய முழு விவரங்கள் வெளிப்படும்!
பகுத்தறிவாளர்களே!
நாடு முழுதும் இந்த குறுந்தகடுகளை மக்களிடையே ஒளிபரப்பி புட்டபர்த்திகளின் முகத்திரையைக் கிழித்து காட்டுங்கள்!