அதிர்ச்சி தரும் நாள்களையே அண்மைக் காலத்தில் சந்தித்து வந்த நமக்கு முதிர்ச்சியோடு எழுச்சி தந்து ஊக்கமளிக்கும் நாள் ஒன்றும் வருகிறது. ஜூன் 3, தலைவர் கலைஞரின் பிறந்தநாள். அது ஒரு தனி மனிதனின் பிறந்தநாள் கொண்டாட்டம் அன்று. சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஒரு பேரியக்கத்தின் கொள்கைகளின் பேரிகை. கொள்கைகளின்றி இன்று கட்டமைக்கப்படும் தமிழ்ச் சமூகத்திற்குக் காலத்தின் தேவையாக இந்நாள் அமைகிறது.

கலைஞரின் சிறப்புகளைக் கட்டுரைக்குள் கட்டிவிட முடியாது. ஆனால் அவரின் சிறப்புகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது தமிழர்களின் வாழ்வும் சீர் அடைந்திருப்பதை உணர முடிகிறது. அரசியல், பத்திரிக்கை, இலக்கியம், திரைப்படம், கவிதை, நாடகம், மேடைப் பேச்சு எனப் பல் துறை அறிஞராக விளங்கிய கலைஞர் அத்துறைகளில் முத்திரை பதித்தது மட்டும் கலைஞரின் பெருமை இல்லை. அத்தனை துறைகளிலும் சமூக நீதியையும், பகுத்தறிவையும், புதுமையையும் பரப்பி அத்துறைகளின் போக்கில் மாற்றம் ஏற்படுவதற்குப் பெரும் பங்களிப்பைச் செய்ததே கலைஞரின் பெருமையாகும். அத்தனை துறைகளிலும் கலைஞருக்கு முன், கலைஞருக்குப் பின் என்று பகுத்துப் பார்க்கும் அளவிற்கு ஆளுமை செலுத்தியதன்று அவருடைய சிறப்பு. அது மக்கள் விழிப்புணர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பயன்பட்டதே, அதுதான் கலைஞரின் சிறப்பு.

“பகுத்தறிவாளராகவும், ஆட்சிக்கலையில் அரிய ராஜதந்திரியாகவும், முன்னோசனையுடனும் அவர் நடந்து வருவதன் மூலம் தமிழர்களுக்குப் புதுவாழ்வு தருபவர் ஆகிறார் நமது கலைஞர்” என்று தந்தை பெரியார் கலைஞரைப் பாராட்டினார். அதன்படியே மிகச் சிறந்த ஆட்சியாளராக பல முற்போக்கு முன்னோடித் திட்டங்களைத் தமிழ் நாட்டிற்குத் தந்து வர்ணாசிரம அமைப்பால் பின் தங்கியிருந்த சமூகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். இந்தியாவில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் வளர்ச்சியில் முன்னிலையில் இருப்பதே இதற்குச் சான்று.

இத்தனையும் பெரியார், அண்ணா வகுத்துத் தந்த பாதை என்று சொல்லி அவர்கள் கொள்கைகளையே மக்களிடம் பரப்புரை செய்தார். தொண்டருக்குத் தொண்டராகக் கழகப் பணி ஆற்றினார். கலைஞர் வேறு கழகம் வேறு என்று பிரித்துப் பார்க்க முயன்றால் அம்முயற்சி தோலவியைத் தழுவும். அதனால் தான் தி.மு.கழகமும் வேரூன்றி நிற்கிறது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியலில் சூறாவளியாக சுழன்று வந்தவர் இப்போது தென்றலாக வீசுகிறார். அரசியலும் கலைஞரைச் சுற்றியே நகர்கிறது. இன்று கட்சி தொடங்குவோர் முதல் ஆட்சிக் கட்டிலில் இருப்போர் வரை கலைஞரைச் சுற்றியே காய்களை நகர்த்துகிறார்கள். அகவை 94 ஆன போதிலும் அரசியலில் கலைஞரே கதாநாயகராக இருக்கிறார்.

தன்னை “மானமுள்ள சுயமரியாதைக்காரன்” என்று ஒற்றை வரியில் வெளிப்படுத்தினார். இந்த வார்த்தைகளை இன்றைய தமிழகச் சூழலில் கேட்கும் போது, தமிழ்நாடு எப்படிப்பட்ட ஆட்சியாளரைக் கொண்டிருக்கிறது என்பது விளங்குகிறது.

தமிழ்நாட்டை இருள் மட்டும் சூழவில்லை, வெம்மையும் வாட்டியெடுக்கிறது. நிழலின் அருமை வெயிலில் இப்போது மக்களுக்கும் தெரிகிறது சில மக்கள் தலைவர்களுக்கும் தெரிகிறது. உதயசூரியனாய் ஒளிக்கீற்றை வீசும் கலைஞர், பழுத்த மரமாய் குளிர்ச்சியூட்டும் நிழலையும் தருபவர். இந்த மரத்தினடியில் இன்று (ஜூன் 1, 2018) திருவாரூரில் மாபெரும் கூட்டம் கூடுகிறது. இது தமிழர்கள் கொண்டாட வேண்டிய திருநாள், தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கும் பெருநாள்!

Pin It