அக்டோபர் 30. தேவர் ஜெயந்தி என்றாலே மதுரை மக்களுக்கு அடி வயிற்றில் கிலியும் வியாபாரிகளுக்கு வலியும் உண்டாகிவிடும். கடைகள் அடைக்கப்பட்டுவிடும். பள்ளிக்கூடங்கள் அரைநாளில் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பிவிடும். பொது ஜனம் அன்றைய வேலைகளை அடுத்த நாளுக்குத் தள்ளிவிடும். சந்துக்குச் சந்து லவுட் ஸ்பீக்கர் அலறும். ஊர் வெறிச்சோடிப் போகும். ஆளில்லாதத் தெருக்களில் ஆட்டோக்களிலும் லாரிகளிலும் தலையில் மஞ்சள் ரிப்பன் கட்டியவர்கள் ஊர்வலமாக வந்து எழுப்பும் கோஷங்கள், புழுவையும் நெளிய வைக்கும். அந்த நாள் அறிவிக்கப்படாத விடுமுறை நாள். அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டிருக்கிறது, இந்த ஆண்டின் ஜனவரி 30.

சில வருடங்களுக்கு முன்பு, தமிழில் வெளியாகும் நாளிதழ்களின் உட்பக்கங்களில், மாநிலம் என்று தலைப்பிட்ட பகுதியில், 'உ.பி. மாநில முதல்வர் மாயாவதி பிறந்த நாள் கொண்டாடினார். ஆடம்பரமான அந்த விழாவில், மாநிலத்தின் உயரதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் குவிந்தன' என்று செய்தி வரும். அதுபோலவே லாலு பிரசாத் யாதவ் பற்றிய செய்திகளும். அதில் வர்ணிக்கப்படும் செய்திகளைப் படித்து நான் பிரமித்துப் போயிருக்கிறேன். 'இப்படியெல்லாம் ஆடம்பரமாக இருக்க முடியுமா?' என்று யதார்த்தமானக் கேள்விகளுக்குள் சிக்கித் தவித்திருக்கிறேன். அடுத்தடுத்த நாட்களில், ஒரு சில தமிழ் மற்றும் ஆங்கில வார இதழ்களில், இந்தச் செய்திகளின் மேல்விவரங்கள் உள்குத்துக் கட்டுரைகளாக வடிக்கப்பட்டிருக்கும். அவை எனக்குக் கூடுதலான ஆச்சா¢யத்தைத் தந்ததுண்டு.

அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பிறந்த நாளென்றால் கருணாநிதிக்கும் இறந்துபோன எம்ஜியாருக்கும்தான் கொண்டாடப்படும். காந்தி, நேரு, பெரியார், அண்ணா, காமராஜ் போன்ற தலைவர்களின் பெயா¢ல் கொண்டாடப்படும் பிறந்த நாள் விழாக்கள் ராட்டையில் நூல் சுற்றுவதிலும், ரோஜாப் பூக்களைக் கொடுப்பதிலும் முடிந்துவிடும். பெரியாரின் பிறந்த நாள் விழாவின்போது ஏதாவது கொடுப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் காமராஜ் பிறந்த நாள் விழாவில், முனிச்சாலைப் பகுதியில் நான் மிட்டாய் வாங்கித் தின்றிருக்கிறேன். அண்ணாவைப் பற்றி எழுதப்பட்ட கவிதைப் பாடல்கள் சற்றே மிழற்றலாகப் பட்டதுண்டு.

கருணாநிதி பிறந்த நாளின்போது தெருவுக்குத் தெரு ரேடியோ போட்டு, காதுகளைக் கிழித்துவிடுவார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரேமாதிரியான பாட்டுகள். 'கருணையும் நிதியும் ஒன்றாய்ச் சேர்ந்தால்... கருணாநிதியாகும்' என்று ஒருவிதச் சோர்வுக்குள் இட்டுச் சென்றுவிடும்.

ஆனால் எம்ஜியார் பிறந்த நாளின்போது அவரது படப் பாடல்கள், அதிலும் குறிப்பாக 'கூந்தல் கருப்பு... குங்குமம் சிவப்பு' போன்றத் தத்துவப் பாடல்களுடன் 'ராணி உந்தன் மேனியென்ன... ராஜவீதித் தோட்டம்தானோ...?' என்ற காதல்(!) பாடல்களும் ஒலிபரப்பபடும். கேட்கத் தேவலையாக இருக்கும். சிவாஜி கணேசனின் பிறந்த நாளுக்கு போட்டு ஒலிபரப்ப பாடல்கள் இருந்தும், பெரிய அளவில் காதுகளுக்கு வேலை இருக்கவில்லை. அப்படியே போட்டாலும் 'எங்கே நிம்மதி?... எங்கே நிம்மதி?' என்று நம் நிம்மதியைத் தேட விட்டுவிடுவார்கள்.

1990களுக்குப் பின் இந்தப் பட்டியலில் ஜெயலலிதாவின் பிறந்தநாளும் சேர்ந்து கொண்டது. இதில் எம்ஜியாருடன் அவர் நடித்தப் படப் பாடல்கள் மறுபடியும் ஒலிபரப்பப்படுவதால் 'ஆத்தாடி தாங்கலையே' என்று அலுத்துக்கொள்ளும் வகையில்தான் நடமாடியிருக்கிறேன்.

இதே கால கட்டத்தில் மதுரையின் ஒரு ஓரத்தில் 'அண்ணனின் பிறந்தநாள்' என்று, ஆட்சியிலோ... அதிகாரத்திலோ... இல்லாத ஒரு தனிநபரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வந்தது. அண்ணன் என்றால் மதுரையில் மு.க. அழகிரி என்று மட்டுமே பொருள். இது அனைத்து மட்டங்களிலும் பரவலாகியிருக்கிறது. அதற்காக கோனார் நோட்ஸையும், மினர்வா கைடையும் தேடி, பக்கங்களைப் புரட்டி நேரத்தை வீணாக்க வேண்டாம். எனக்குத் தெரிந்த மதுரையின் முக்கிய உயரதிகாரியும் மு.க. அழகிரியை அண்ணன் என்றே விளிக்கிறார்.

பிறந்த நாளின்போது, மதுரையின் தெற்கு ஓரத்தில் சத்தியசாய் நகா¢லுள்ள ஒரு 'டொச்சு' கல்யாண மண்டபத்தில், ஆடுவெட்டி சோறு போடுவதாகச் சொல்லிக் கொள்வார்கள். பின்னர் ஆடுகள் வெட்டி, பிரியாணி போடப்பட்ட தகவல்களும் வந்தன. அந்த அண்ணனின் அப்பாக்காரர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலகட்டத்திலும் அது நடந்தது. தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் காலகட்டத்திலும் அப்படித்தான் நடக்கிறது.

'உலகத் தமிழர்களின் தலைவராக இருப்பது எப்படி?' என்று எந்நேரமும் யோசித்துக் கொண்டே இருப்பதில், காலத்தைத் தொலைத்துவிட்ட அப்பாக்காரர், தமிழ்நாட்டை இரண்டு மகன்களுக்கும் பிரித்துக் கொடுக்கச் செய்த யத்தனங்களில், பெரிய மகன் தென் மண்டல அமைப்புச் செயலாளராக அறிவிக்கப்பட காரணமாக இருந்தது, இடைத் தேர்தல் வெற்றிகளாம். இடைத்தேர்தல்களில் அந்த மகன் எப்படி நடந்து கொண்டார் என்பது தேர்தல் கமிஷனின் கவலை. ஆனால் அதுவே ப. சிதம்பரம் வெற்றி பெற வேண்டும் என்று ஊடுவழியில் அக்கறைக் காட்டியதால், மேலேயும் கீழேயும் பொத்திக் கொண்டு திரிகிறது!

அப்புறம் தென் மண்டல மகனை மத்திய அமைச்சராக்கி தலைவலியைப் போக்கிக் கொள்ளலாம் என்று நினைத்த அப்பாக்காரருக்கு, 'தலைவலி போனதா... என்ன?' என்று தெரியவில்லை. ஆனால், மதுரை மக்களுக்குத் தலைவலி வந்து சேர்ந்திருக்கிறது. இது விக்ஸ், அமிர்தாஞ்ஜன், ஜண்டுபாம்களால் போக்கிவிடக் கூடிய தலைவலி இல்லை. சென்ற ஆண்டிலும் அண்ணனுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடினார்கள். பழைய இடத்திலேயே வைத்து. அது அந்தப் பகுதி மக்களுக்கு மட்டுமே தலைவலியாக இருந்திருக்கும். இந்த ஆண்டு தலைவலி மதுரை முழுவதுக்கும் விஸ்தா¢க்கப்பட்டிருக்கிறது, அனைத்து வகைகளிலும்.

அண்ணன் இப்போது மத்திய அமைச்சர் வேறில்லையா? அவரைப் போற்றிப் பாட மதுரையிலுள்ள தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸின் முன்னாள் தலைவர் ரத்தினவேலு எழுதிய 'அப்பாவுக்குத் தப்பாத பிள்ளை' நூல் வெளியீட்டு விழா. அந்த விழாவை மதுரையின் வடக்குப் பக்கத்தில் நடத்தினார்கள். ஆல்பர்ட் விக்டர் பாலத்திலிருந்து... மாவட்ட நீதிமன்றம் வரையிலான பகுதி, விழா நடக்கும் பகுதியாக 2 கிலோ மீட்டர் நீள அகலத்துக்கு சுற்றி வேலி அமைக்காமல் ஆக்கிரமிப்பாகியிருந்தது.

ஜனவரி 30 ஆம் தேதிக்கான பிறந்த நாள் விழாவுக்கு, 20 தேதியே ரோடுகளில் குழிகளைத் தோண்டத் துவங்கிவிட்டார்கள். ஒரு வாகனம், டிராக்டா¢ன் இஞ்ஜினில் சுழலி முறையில் ரிக் போல தரையில் ஓட்டைகளைப் போட்டுக் கொண்டே போனது. தூசி சூழ, மதுரை மக்கள் அதை ஆச்சரியமாக வேடிக்கைப் பார்த்தார்கள்.

சும்மாவே வாகன நெரிசல் மிக்கது, அழகர்கோவில் சாலை. அதன் இரண்டு புறத்திலும் மட்டுமன்றி, நடுவிலிருக்கும் மீடியன் சுவர்களின் மீதும் பிளக்ஸ்களை கம்புகளும் கம்பிகளும் ஊன்றிக் கட்டிவிட்டார்கள். இதனால் ஒரே சாலையில் நான்கு வரிசையாக பிளக்ஸ். அத்தனை பிளக்ஸ்களிலும் அண்ணன் அரைபாடியாகச் சிரித்துக் கொண்டிருந்தார். முழுபாடியுடன் நடந்து கொண்டிருந்தார். கூடவே பிளக்ஸ் வைத்த அண்ணனின் தம்பிகளும். ஒருசில பிளக்ஸ்களில் அண்ணியும், அண்ணன் மகனும், மகளும் கூட சிரித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி பிளக்ஸ் வைத்துப் புண்ணியம் தேடிக் கொண்டவர்களில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியும் ஒருவர். அவரும் சிரிப்பாய் சிரித்துக் கொண்டுதான் இருந்தார்.

துணை மேயர் பி.எம்.மன்னன் வைத்த பிளக்ஸ் ஒன்றில் 'நன்றி மறக்காதவரே' என்று புகழப்பட்டிருந்தது. அண்ணன் நன்றி மறக்காத அளவுக்கு இந்த மன்னன் அவருக்கு என்ன செய்து தந்தார் என்ற ரகசியம் தங்கமலை ரகசியம்போல வெளியே தெரியவே இல்லை. அவர்களுக்குள் ஏதோ இல்லாவிட்டால் இப்படி பகிரங்கமாக நன்றியை பிளக்ஸ் வைத்து உடைக்க முடியுமா என்ன?

2 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட அந்தப் பகுதியில், மதுரை நகா¢ன் ‘அல்லு சில்லு’களெல்லாம் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பிளக்ஸ்களை வைத்து அண்ணனைப் போற்றியிருந்தன. அவற்றில் இடம் பெற்றிருந்த வாசகங்கள் முன்னெப்போதும் கேள்விப்படாதவை. உதாரணமாக ஆல்பர்ட் விக்டர் பாலத்தின் ஏற்றத்தில் நிறுவப்பட்டிருந்த(?) பிளக்ஸில் 'பிறந்தவன் அல்ல... தோன்றியவன்' என்று ஊராருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. அப்படியென்றால்... அப்பாக்காரருக்கு இந்த மகன் காரர் பிறக்கவில்லையோ என்று கேள்வி எழுகிறது. கூடவே 'அப்பாவுக்குத் தப்பாத பிள்ளை' என்ற தலைப்பும் இடறுகிறது. நமக்கு வேலை, அது என்னவென்று தோண்டித் துறுவுவது அல்ல. அதுவேறில்லாமல் சினிமாப் படத்தின் இரண்டாவது தலைப்பைப் போல அதன் கீழே 'தோன்றல் தொடரும்...' என்றும் இருந்தது. ஒரு தோன்றலுக்கே மதுரை 'ததிங்கிணத்தோம்' போடுகிறது. தொடரும் தோன்றல்களென்றால்... எத்தனை சுயம்புகளைத்தான் மதுரை தாங்கும்?

அண்ணனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அடைமொழிகளில் 'தமிழகத்தின் அரிஸ்டிராட்டில்' என்ற ஒன்றும் இருந்தது. அரிஸ்டாட்டிலைத் தெரிந்த சிலருக்கு, 'யார் இந்த அரிஸ்டிராட்டில்?' என்பது புதிய கேள்வியாக இருந்தது. இன்னும் சில 'lang live' என்றும் எழுதப்பட்டிருந்தது.

தொலையட்டும் பிளக்ஸ்களின் கண்காட்சி என்றுவிட்டுக் கடந்தால்... ஊரிலுள்ள அத்தனை இண்டு இடுக்கு கோவில்களிலும் மக்கள் தன்னெழுச்சியுடன்(?) பொங்கல் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அண்ணனின் புகழைப் பாடுவதாக புகழ் பெற்ற பாடல்களின் மெட்டிலேயே பாட்டுச் சத்தம் வேறு. இடையிடையே 'அண்ணனின் பிறந்த நாளுக்கு பொங்கல் வைக்கப்படுவதாக' கோவில்களே அறிவிப்பும் செய்தன. பொங்கல் வைத்துக் கொண்டாடுவது கடவுள்களுக்கு மட்டுமே என்பது எல்லோருக்கும் தெரியும். குலதெய்வம் சாமிக்கும் பொங்கல் வைப்பார்கள். இங்கே அண்ணன் எப்போது கடவுளானார் அல்லது குலதெய்வமானார் என்று தெரியவில்லை. அது எப்படி ஊருக்கே குலதெய்வமாக முடியும் என்பதும் புதுக் கேள்வியாக இருக்கிறது.

ஜனவரி 30க்கு முதல் நாளே வைகையாற்றுக்கு வடக்குப் பக்கம் வாடிப்போய்விட்டது. போக்குவரத்து முற்றிலுமாக மாற்றப்பட்டுவிட்டது. ‘நாளைக்குத்தானே பிறந்த நாள்’ என்றிருந்தவர்கள், பஸ்கள் வழிமாறிப் போனதால் நடந்து வீடு வந்து 'நல்லபடியாக'ச் சேர்ந்தார்கள். நகரின் நாலாபக்கத்திலிருந்தும் சைரன் கார்களின் பிரம்மாண்டமான ஊர்வலம். அதில் ஸ்டாலின் உள்ளிட்ட தம்பி அமைச்சரும் மற்றவர்களும் இருந்தனர். தங்கச்சி கனிமொழி எம்பியும் இருந்தார்.

பத்துநாட்களுக்கும் மேலான ‘நம்ம அண்ணன் பிறந்த நாள் விழா’ அதகளம் உ.பி., பீகாரையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது. இப்போது எனக்கு உ.பி.யும் பீகாரும் பிரமிப்பையோ... ஆச்சரியத்தையோ... தருவதாக இல்லை.

பிறந்த நாளில் அண்ணன் செய்த ஒரே நல்ல காரியம். நகரெங்கும் விசாலமான... புதிய கழிப்பறைகளைத் திறந்தது மட்டுந்தான். பின்னர் அவை அவரது ஆதரவாளர்களின் வசூலுக்கான சொர்க்கபுரி(!) ஆகிவிடும் என்பது வேறு விஷயம்.

கடந்த ஆண்டு அக்டோபர் 30 தேவர் ஜெயந்தியை எழுத்தாளர் ஜெயமோகன் ஜனநாயகத்திற்கான மக்கள் கூடுகை என்று குறிப்பிட்டிருந்தார். இதை அவர் எப்படிச் சொல்வார் என்று தெரியவில்லை.

அதேவேளையில் ஜனவரி 30. தேசப்பிதா மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் நினைவு நாள் என்பதும், மதுரையின் பண்பாட்டுக் கலாச்சாரத் திருவிழாவான மாரியம்மன் கோவிலில் தெப்பத் திருவிழா நாள் என்பதும் இந்தச் சத்தத்தில் அமிழ்த்தப்பட்டு விட்டது.

இனி அடுத்த வருஷம் என்வெல்லாம் நடக்குமோ என்று இப்போதே பயம் பிடிக்கிறது. எது எதற்கெல்லாம் பயப்படுவது?

என்னால் முடியவில்லை!

- எஸ்.அர்ஷியா

Pin It