கீற்றில் தேட...

தமிழ்நாட்டில் “பெரியார்” ஆட்சியே நடப்பதாகக் கூறுகிறார்கள். பெரியார் பெயரும், அண்ணாவின் பெயரும் ஒவ்வொரு நாளும் மேடைகளில் பேசப்படுகின்றன. ஆனால் இதே ஆட்சியில் தான், பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் 7 பேர் - தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் செயல் வீரர்கள் கோபி இராம. இளங்கோவன், குமரகுருபரன், முருகானந்தம், அர்ச்சுணன், திருச்சி மாவட்டக் கழகத் தோழர்கள் பெரம்பலூர் இலக்குமணன், தாமோதரன், சென்னை மாவட்டக் கழகத் தோழர் சா.குமரன் ஆகியோர் கோவை, திருச்சி, சென்னை சிறைகளில் கடந்த 100 நாட்களாக அடைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்கட்சியாக இருந்தபோது ‘மிசா’, ‘பொடா’ போன்ற விசாரணை இல்லாமல் சிறையில் வைக்கும் தடுப்புக் காவல் சட்டங்களை எதிர்த்த - தி.மு.க., ஆட்சிக்கு வந்து அதிகாரத்தில் அமர்ந்ததும், ‘பொடா’ சட்டம் இல்லையே என்ற கவலையில் வாடுகிறது. உடனே தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற சட்டத்தை, ஜெயலலிதா பொடாவைப் பயன்படுத்தியதுபோல் கண் மூடித்தனமாக ஏவத் துவங்கிவிட்டது.

தேசத்துக்கு எதிராக செயல்படும் ‘தேச விரோத’ செயல்பாடுகள் பட்டியலில் பெரியார் லட்சியத்தைப் பரப்புவதையும், இணைத்துக் கொண்டுவிட்டது, கலைஞர் ஆட்சி.

நடந்தது என்ன ?

தமிழ்நாட்டில் - நாகை, காஞ்சி, திண்டுக்கல் என்று பல்வேறு ஊர்களில் பெரியார் சிலைகளை சேதப்படுத்தி, அவமதித்தவர்கள்-பல ஊர்களில் பெரியாரிய பிரச்சாரக் கூட்டங்களில் தொடர்ந்து கலவரம் செய்தவர்கள் - இந்தத் தொடர் வன்முறைகளின் அடுத்த கட்டமாக, சிறீரங்கத்தில் விடியற்காலைப் பொழுதில் பெரியார் தொண்டர்களைப் போல் கருப்புச் சட்டை அணிந்து வந்து, பெரியார் சிலையை உடைத்தார்கள். பெரியார் சிலையை உடைத்ததோடு மட்டுமின்றி, அதற்காக இனிப்பு வழங்கி, பார்ப்பனர்களும், மதவெறி சக்திகளும் கொண்டாடிய ஊர்களில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கொதித்தெழுந்து, எதிர்வினையாற்றினார்கள்.

பார்ப்பனர் பூணூலை அறுத்ததாகவும், பார்ப்பன மடங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், காவல்துறை கழகத் தோழர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்தது. முறையான தண்டனைச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்திட தி.மு.க. அரசு தயாராக இல்லை. ஓராண்டு காலம் விசாரணையே இல்லாது, பெரியார் தொண்டர்களை சிறையில் அடைத்து வைக்கும் வாய்ப்புகளைத் தேடியது, தமிழக அரசு! தேசப் பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது!

ஈரோட்டில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தோழர்கள் மீது கலைஞர் அரசு “தேச விரோத” நடவடிக்கைகளாக பட்டியலிட்டுள்ள குற்றங்களைப் பாருங்கள்!

2006 மார்ச் 13-ல் - விசுவ இந்து பரிஷத் நடத்திய மாநாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது ‘தேச விரோதம்’.

2006 மே 26 ஆம் தேதி - உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் செய்தது ‘தேச விரோதம்’!

2005 நவம்பர் 21-ல் - பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கு துரோக மிழைத்த வீரப்பமொய்லி அறிக்கையை எரித்தது - ‘தேசவிரோதம்’.

இப்படி கடந்த காலங்களில் தொடர்ந்து ‘தேச விரோத’ செயல்களில் ஈடுபட்ட பெரியார் தி.க.வினர்தான், இப்போது - ஈரோட்டில் பார்ப்பன மடங்களுக்குள் பார்ப்பன சின்னங்களைத் தாக்கும் மற்றொரு ‘தேச விரோத’ செயலில் ஈடுபட்டுள்ளார்கள், என்கிறது. கலைஞர் ஆட்சியின் ஈரோடு மாவட்டத் தலைவர் அதிகார பூர்வமாக பிறப்பித்துள்ள உத்தரவு, மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்த உத்தரவு மிகவும் சரியானது தான் - என்று அதற்கு ஒப்புதல் வாங்கியது, சட்டத்துறை அமைச்சகம்.

பெரம்பலூர் தோழர்கள் செய்த ஒரே ‘தேச விரோதம்’ இரண்டு பார்ப்பனர்கள் பூணூலை அறுத்தது தான் என்கிறது, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவு. பெரம்பலூரில் இரண்டு பார்ப்பனர்கள் பூணூல் அறுக்கப்பட்டதால் தமிழ்நாடு முழுதும் அது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக, அந்த ஆணை கூறுகிறது. இதன் மூலம் பூணூல் என்பது தேசபக்தியின் சின்னம் என்றும், அதை அறுப்பது தேச விரோதம் என்றும், நாட்டுக்கு கூறுகிறது கலைஞர் ஆட்சி!

பெரியார் சிலையை உடைத்ததும் - அதை எதிர்த்து கொந்தளித்து எழுந்ததும் ஒன்றாகி விடுமா?

பெற்ற மகன் கண் முன்னாள், தந்தையை ஒருவன் வெட்ட வரும்போது வெட்ட வருகிறவன் மீது மகன் தாக்குதல் நடத்துவது இயற்கை தான்! வெட்ட வந்தவனும், எதிர்த் தாக்குதல் நடத்தியவனும் குற்றவாளிகள் என்று கூறிடலாமா? அதைத்தான் தமிழக அரசு இப்போது செய்து கொண்டிருக்கிறது.

பெரியார் லட்சியங்களுக்காகக் களப்பணி ஆற்றும் உண்மை பெரியார் தொண்டர்கள் 100 நாட்களாக சிறையில் வாடுகின்றனர்! பார்ப்பனரை திருப்திப்படுத்தவே விரும்புகிறது, தமிழக அரசு!

உரிய விசாரணையின்றி, ஆண்டுக் கணக்கில் சிறைப்படுத்தும் ஆள்தூக்கி சட்டங்கள் - மனித உரிமைக்கு எதிரானவை. பெரியாரின் கொள்கை எதிரிகள் மீது கூட - இத்தகைய சட்டங்கள் பாயக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

‘மிசா’, ‘பொடா’ சட்டங்களின் கோர முகங்கள் அம்பலமாகி, அவை குப்பைக் கூடையில் வீசப்பட்ட பிறகு, அடுத்த ஆள் தூக்கி சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது தி.மு.க. ஆட்சி. ஈழப் போராளிகள் மீதும் - தி.மு.க. ஆட்சியில் இந்த தேசப் பாதுகாப்புச் சட்டம் இப்போது பாயத் துவங்கியுள்ளது.

பதவி அரசியல் பக்கம் திரும்பாமல், பெரியார் லட்சியத்தைப் பரப்புவதையே தங்களது வாழ்க்கையாக்கிக் கொண்ட கருப்புச் சட்டைத் தோழர்கள் - எந்த அரசியல் கட்சிக்கும் ‘வால்’ ஆகாமல் - பெரியார் கொள்கைகளை உள்ளத்தில் ஏந்தி களத்தில் நிற்கும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் - தேச விரோதிகளா?

பார்ப்பன சக்திகளை மகிழ்விக்க - பெரியார் தொண்டர்களைப் பலியிடுவது தான் பெரியார் அண்ணா ஆட்சியா?

மனித உரிமையாளர்களே! முற்போக்கு சிந்தனையாளர்களே! தமிழின உணர்வாளர்களே! அடக்குமுறை சட்டங்கள் எனும் ஆள்தூக்கிச் சட்டங்களுக்கு எதிராக உரத்தக் குரல் எழுப்புங்கள்.

அடக்குமுறை சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தாருங்கள்.

(ஆர்ப்பாட்டம் நடத்தும் ஊர்களில் கழகத் தோழர்கள் - இதை துண்டறிக்கையாக அச்சிட்டுப் பரப்ப வேண்டுகிறோம்.)