கரவொலியில் அதிர்ந்தது அரங்கம்

பெரியார் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 11வது மாநில மாநாடு சென்னையில்டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி நிறைவடைந்தது.

தமிழகம் முழுதுமிருந்தும் சுமார் 2000 பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாடு கலை இலக்கிய பண்பாடுகள் குறித்த விவாதங்கள் கருத்தரங்குகளை நடத்தியது. சமூகம், கலை, இலக்கியம், தீண்டாமை, பெண்ணியம் தொடர்பான ஆழமான கருத்துகள் முன் வைக்கப்பட்டன.

சென்னை கோடம்பாக்கத்திலுள்ள 'பத்மராம் ஹால் ராம் தியேட்டரில்' நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாளான 21 ஆம் தேதி காலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான கலைப் பேரணியும், அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் லிபர்ட்டிஅரங்கில் விடிய விடிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் முதல் தீர்மானமாக பெரியார் நூல்களை தமிழக அரசு நாட்டுடைமையாக்குவதோடு, அவற்றை தமிழக அரசே கால முறைப்படி தொகுத்து வெளியிட வேண்டும் என்ற தீர்மானம் முன் மொழியப்பட்டபோது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

தமிழ்நாட்டில் பலத்த விவாதங்களுக்கு உள்ளாகியுள்ள இப்பிரச்சினை குறித்து அமைப்புகள், கட்சிகள் பலவும் மவுனமாகிவிட்ட நிலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அழுத்தமான குரலை தீர்மானத்தின் வழியாக எழுப்பியுள்ளதை பெரியார் திராவிடர் கழகம் பாராட்டி வரவேற்கிறது.தமிழகத்தின் வரலாற்றுப் போக்கைத் திருப்பிய ஒரு தலைவரின் நூல்களை பெரியார், அண்ணா வழி வந்த தி.மு.க. ஆட்சி, தி.க. தலைவர் வீரமணியை மகிழ்விக்கும் நோக்கத்தோடு நாட்டுடைமையாக்கத் தயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Pin It