தமிழக அரசின் விபரீத ஆணை

தமிழக அரசு 18.12.2009 அன்று பிறப்பித்துள்ள ஒரு ஆணையின்படி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை, அரசின் நிர்வாக பதவிகளிலும், தொழில்நுட்பப் பதவிகளிலும் மீண்டும் நியமிக்கலாம் என்று கூறுகிறது. இது கண்டனத்துக்குரிய ஆணை என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.

2004 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, தமிழக அரசின் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு, நேர்முகத் தேர்வுக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை 49 லட்சத்து 85ஆயிரத்து 289 பேர். வேலை வாய்ப்புக்காக வாழ்க்கைக் கதவைத் திறந்து வைத்துக் காத்திருக்கும், இந்த இளைஞர்களுக்கு வழி விடாமல், பணி ஓய்வு பெற்றவர்களையே மீண்டும் நியமிப்பது - சமூக நீதிக்கு எதிரானது ஆகும்.

தமிழ்நாட்டில் இப்போது 2 லட்சத்து 80 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. தமிழ்நாடு அரசு தேர்வாணையத்திலேயே, பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், ஓய்வு பெற்ற 170 பேருக்கு தொகுப்பூதியம் வழங்கி, மீண்டும் அவர்களை பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஒரு மாதத்தில் ஓய்வு பெற இருப்போருக்கும், அரசு பணி நீட்டிப்பு உத்தரவை வழங்கியுள்ளது. தமிழ் நாட்டில் அரசுத் துறைகளில் பணி நிரந்தரமின்றி தொகுப்பு ஊதியம் பெற்றுப் பணியாற்றுவோர் 4000பேர் உள்ளனர். இவர்களிலிருந்துகூட அரசு, பணி நியமனம் செய்திருக்கலாமே! ஓய்வு பெற்றவர்களை மீண்டும் ஏன் நியமிக்க வேண்டும்?

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, ஓய்வு பெற்றவர்களுக்கு பணி அமர்த்தம் செய்யக்கூடிய நான்கு அரசாணைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 2007 ஆம் ஆண்டு அக். 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணை (எண்.177) 12618 கிராம பஞ்சாயத்துகளிலும் நூலகம் அமைக்க இருப்பதாகவும், நூலகர்களாக ஓய்வு பெற்றவர்கள் மாதச் சம்பளம் ரூ.750-க்கு நியமிக்கப்படுவார்கள் என்றும் அந்த ஆணை கூறியது.

ஜூன் 2008 இல் கல்வித்துறை ஒரு ஆணையை வெளியிட்டது. (ஆணை எண்.274) அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பதவிக்கு, ஓய்வு பெற்ற அரசு கல்லூரி ஆசிரியர்களைக் கொண்டு தற்காலிகப் பணியமர்த்தம் செய்யப்படுவார்கள் என்று அந்த ஆணை கூறியது. 2009 மே 18 ஆம் தேதி தமிழ்நாடு தேர்வாணையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு ஓய்வு பெற்ற ஊழியர்களை பணியமர்த்தலாம் என்று கூறியது. இறுதியாக கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆணை - அனைத்துத் துறைகளுக்கும் ஓய்வு பெற்றோர் நியமனத்தை விரிவுபடுத்தி விட்டது.

தமிழ்நாட்டில் வேலையின்மையின் பாதிப்பை உணர்த்துவதற்கு ஒரு உதாரணம்; குரூப் 2 பிரிவு பணியிடங்களுக்கு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பித்துள்ளோர் 10லட்சம் இளைஞர்கள். 11000 ஸ்டேட் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் 36 லட்சம் பேர். 2500 கிராம அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளோர் 9 லட்சம் பேர். தமிழ்நாட்டில் இளைஞர்களின் வேலை இல்லாத அவலத்தை விளக்குவதற்கு, இந்த புள்ளி விவரமே சான்றாகும்.

மண்டல்குழு பரிந்துரையை வி.பி. சிங் ஏற்று, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான ஆணை பிறப்பித்தார். தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தி, பிற்படுத்தப்பட்டோரின் புதிய நியமனங்களுக்கான வாய்ப்புக் கதவுகளை இழுத்து மூடியது. 69சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் புதிய தலைமுறைக்கு வழிவிடாமல், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் நிரம்பி வழியும் காத்திருப்போர் பட்டியலையே முடக்கிப் போடுவது, என்ன நியாயம்? இதை நாம் சுட்டிக் காட்டும்போது, அரசு ஊழியர்களுக்கு எதிரான கருத்தாக கருதுவதில் எந்த நியாயமும் இல்லை. அரசு ஊழியர்களுக்கு, அரசு தாராளமாக சலுகைகளை வழங்கட்டும். அது பற்றி நமக்கு கவலை இல்லை. அரசு ஊழியர்களின் வீட்டுப் பிள்ளைகள்கூட அரசின் இந்த ஆணையால் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசு ஊழியர்கள் மனம் திறந்து சிந்திக்க வேண்டும்.

கி.வீரமணியின் துரோகம்

அரசின் இந்த விபரீத ஆணையை இடித்துக் காட்டாமல், இந்த ஆணையை வரவேற்று, எதிர்ப்போரைக் கண்டித்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டிருப்பது தான் வேடிக்கை. அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தது பெரியார் இயக்கம் என்பதுதான் வரலாறு. அன்றைக்கு இதை எதிர்த்து தி.க. இளைஞரணி சைக்கிள் பேரணிகளை நடத்தியது. ஓய்வு வயதை உயர்த்துவதும், ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தம் செய்வதும் ஒன்று தானே? ஆனால், வீரமணியோ, பெரியார் பெயரில் ஒரு கழகத்தை நடத்திக் கொண்டு, பெரியார் கொள்கையின் ஒரே வாரிசாக தன்னை அறிவித்துக் கொண்டு, பெரியார் கொள்கைகளுக்கே குழி பறிக்கிறார்.

“ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பற்றி முறையாக கருத்து தெரிவிக்க வேண்டியவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களே வரவேற்றப் பின்னர், எதிர்க் கட்சிகள் இதைக்கூட அரசியலாக்குவதாக” கி.வீரமணி வாதிடுகிறார். இதில் முறைப்படி கருத்து கூற வேண்டியவர்கள் பாதிப்புக்குள்ளான - வேலை வாய்ப்புக்கு காத்திருக்கும் இளைஞர்களே தவிர, அரசு ஊழியர்கள் அல்ல. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அரசு ஊழியர்கள் மீது அடக்குமுறை சட்டங்களை ஏவியபோது - ஜெயலலிதாவுக்கு, அப்போது புகழாரம் சூட்டி, அடக்குமுறைகளை ஆதரித்தவர், இதே வீரமணிதான் என்பதை நாடு மறந்து விடவில்லை.

வீரமணியின் கொள்கை துரோகத்துக்கு இது மற்றொரு சான்று! தமிழக அரசின் இந்த ஆணை உடனே திரும்பப் பெற வேண்டும். அரசு ஊழியர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக - எதிர்காலத் தலைமுறையின் வாழ்க்கையை இருட்டடித்துவிடக் கூடாது.

- விடுதலை இராசேந்திரன் 

Pin It