a raja jayaranjan and subaveeகருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், பெரியார் ஒருவர் மட்டுமே நமக்கு வழி காட்டுகிறார். அவரது தத்துவங்களால் மட்டுமே காவி மயமாக்கும் முயற்சியை முறியடிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

நாட்டையே காவி மயமாக்கிட வேண்டும் என்று தீவிரமாக அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வரும் ஒன்றிய ஆட்சியை வீழ்த்த நம்மிடம் உள்ள ஒரே மாமருந்து பெரியார் மட்டும் தான். அம்பேத்கரை கூறலாம் என்றால் அவரையும் ‘இந்துத்துவா’ தனக்குள் இழுத்துக் கொண்டு ‘இந்துத்துவா அம்பேத்கர்’ என்று பேசி வருகிறது. பெரியார் என்ற நெருப்பை மட்டும் தான் அவர்களால் பொட்டலம் கட்ட முடியவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ. ராசா குறிப்பிட்டார்.

கருஞ்சட்டைப் பதிப்பகம் வெளியிட்டுள்ள மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு சென்னை இராஜரத்தினம் முத்தமிழ்ப் பேரவை அரங்கில் டிச.4, 2021 மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய ‘மார்க்சியமும் பெரியாரும்’, பேராசிரியர் சுப. வீரபாண்டியன் எழுதிய ‘இடதுசாரித் தமிழ்த் தேசியம்’, ப. திருமாவேலன் எழுதிய ‘திரும்பத் திரும்ப திராவிடம் பேசுவோம்’ என்ற மூன்று நூல்களையும் ஆ. ராசா வெளியிட, மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பெற்றுக் கொண்டார்.

நூல்களை வெளியிட்டு ஆ. ராசா பேசும்போது, “தமிழ் மொழியை கடவுளிடமிருந்தும் மதத்திடமிருந்தும் பிரித்து, அறிவியல் மொழியாக்கி சமுதாய வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு பெரியார் தமிழைக் ‘காட்டுமிராண்டி’ மொழி என்றார். தமிழைக் கடவுளோடும், மதத்தோடும் இணைக்கும் காவிக் கூட்டம் பெரியாரை தமிழுக்கு எதிரி என்கிறது. 1984இல் ஒன்றிய அரசு நடத்திய சமஸ்கிருத மாநாட்டில் பங்கேற்ற ம.பொ.சி., தன்னை இந்து, இந்தியன் என்று கூறிக் கொண்டு ‘சமஸ்கிருதமே நமது பண்பாட்டு மொழி; இந்திய மொழிகள் அனைத்துக்கும் அதுவே தாய்’ என்று பேசியிருப்பதை அவரே தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். அந்த ம.பொ.சி.யை சில தமிழ் தேசியர்கள் தூக்கிப் பிடிக்கிறார்கள். இப்போது ‘தமிழ் இந்து’ பேசும் நிலைக்கு சில தமிழ் தேசியர்கள் வந்து விட்டார்கள். கலைஞர்கூட ம.பொ.சி.க்கு பெருந்தன்மையாக சிலை வைத்தார். இனி எங்கள் ஆட்சியில் அவை எல்லாம் நடக்காது. இது போன்றவர்களுக்கு இனி சிலை கிடையாது; இன்றைய முதல்வர் பெருந்தன்மையாக அப்படி நடக்க முயற்சித்தாலும் நாங்கள் விட மாட்டோம்” என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

தமிழ் மொழியைச் சூழ்ந்திருந்த புராணம், இதிகாசப் புரட்டுகளிலிருந்து தமிழை மீட்டெடுத்து உள்ளே இருந்த மாணிக்கத்தை வெளிக்கொண்டு வந்தவர் பெரியார். அவரது மொழிக் கொள்கை தான் திராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கை. திராவிட இயக்கம், இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் அதே கண்ணோட்டத்தில் தான் எதிர்த்தது என்று விளக்கினார் ஆ. ராசா.

1937இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க மறைமலை அடிகளுக்கு அழைப்பு விடுத்து பெரியார் எழுதிய அந்தக் கடிதம் மிகச் சிறப்பானது. அதை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். அதே போல நாகம்மையார் மறைவையொட்டி பெரியார் மிக உருக்கமாக எழுதினார். “நாகம்மையார் மறைவு எனக்கு விடுதலை தந்து விட்டது” என்று பெரியார் எழுதிய கடிதத்தை எனது மனைவி இறந்தபோது நான் மீண்டும் மீண்டும் படித்தேன் என்று நினைவு கூர்ந்தார்.

‘நீராடுங் கடல் உடுத்த’ என்று கலைஞர் அரசு விழக்களுக்காக அறிமுகப்படுத்திய தமிழ்த் தாய் வணக்கத்தைக் கூட பெரியார் ஏற்கவில்லை. “கடவுள் வாழ்த்துக்கு பதிலாக தமிழ்த் தாய் வாழ்த்தா? இது இரட்டை மூடத்தனம்” என்றார் பெரியார். இதை கலைஞரிடம் கூறியபோது அப்படி சொல்வதால் தான் அவர் பெரியார் என்றார்.

ஒரு முறை திருச்சியிலிருந்து சென்னை வரும் வரை நானும் அண்ணன் துரைமுருகனும் கலைஞருடன் காரில் வந்தபோது, புலவர் கீரன், இராமாயண உரையின் 8 கேசட்டுகளையும் கலைஞர் கேட்டார். கடைசியில் சென்னையில் காரை விட்டு இறங்கியபோது ஒரு சினிமாப் படம் பார்த்ததுபோல் இருந்தது. ஒரு கருத்தும் இல்லை என்று ஒரே வரியில் கூறினார் என்ற தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

கொளத்தூர் மணி அவர்கள் எழுதிய ‘மார்க்சியமும் பெரியாரும்’ என்ற இந்த நூல் பெரியார் குறித்த நுணுக்கமான செய்திகளைப் பதிவு செய்கிறது. மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலில், “பார்ப்பனரையும் பசுவையும் காப்பாற்றுவதற்காக, ‘சூத்திரன்’ தியாகம் செய்ய வேண்டும். அதுவே மோட்சம் போவதற்கான வழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்” என்று எழுதியிருப்பதை எடுத்துக் காட்டுகிறார். 150 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கோ இருக்கிற காரல் மார்க்சுக்கு தெரிந்த இந்த உண்மை இங்குள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு தெரியாமல் போய் விட்டது. நான் இதுவரை அறிந்திடாத மற்றொரு தகவலை கொளத்தூர் மணி பதிவு செய்துள்ளார். வைசிராய் கவுன்சில் உறுப்பினர், திருவாங்கூர் திவான் போன்ற பதவிகளை வகித்த சி.பி. இராமசாமி அய்யர், ‘இந்து மதம் இங்கே இருக்கிறவரை, அரையடி சாமி சிலை இருக்கிறவரை இங்கு கம்யூனிசம் வந்து விடாது’ என்று கூறியிருக்கிறார். ஆனால், நமது நாட்டுக் கம்யூனிஸ்டுகள், இந்து மத எதிர்ப்பைப் பேசவில்லை; இப்போது தான் ஜாதிப் பிரச்சினை, இந்து மதப் பிரச்சினை பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

‘2ஜி’ குற்றச்சாட்டு என் மீது வந்த போது, ஊழல் நடந்து விட்டது என்று நாடாளுமன்றத்தில் மற்ற எதிர் கட்சிகளுடன் சேர்ந்து கலாட்டா செய்தார்கள், கம்யூனிஸ்ட்டுகள். ‘நான் செய்தது புரட்சியா, ஊழலா’ என்பது வழக்கின் தீர்ப்பு வரும்போது உங்களுக்குப் புரியும் என்று சீத்தாராம் எச்சூரியிடம் கூறினேன். இப்போது தீர்ப்புக்குப் பிறகு எச்சூரியைப் பார்த்தபோது இப்போதாவது புரிந்ததா என்று கேட்டேன். ஆமாம், நீங்கள் சொன்னது உண்மை தான் என்றார். இங்கேயுள்ள ஜாதி, மதப் பிரச்சினைகளை இரண்டு கம்யூனிஸ்டுகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாத காரணத்தால் இன்று நாடாளுமன்றத்தில் 7 உறுப்பினர்களோடு அவர்கள் முடங்கியிருக்கிறார்கள் என்றார் ஆ. ராசா.

இதே சர். சி.பி. இராமசாமி அய்யர், திருவாங்கூர் சமஸ்தானத்தை, பாகிஸ்தானுடன் இணைக்க முடிவு செய்து, ஜின்னாவை சந்தித்தவர். அவரை இந்திய ஒருமைப்பாட்டுக் குழுவில் உறுப்பினராக நேரு நியமித்தபோது, அண்ணா, திருவாங்கூரை பாகிஸ்தானோடு இணைக்கத் துடித்தவர்தான் உங்களுக்கு இந்தக் குழுவில் போடுவதற்கு கிடைத்தாரா என்று நேருவிடம் கேட்டார்.

பெரியார் தனித் தமிழ்நாடு கொள்கையில் உறுதியாக இருந்தார். இந்து மதம் இருக்கும் வரைஜாதி ஒழியாது என்றார். இதைச் சொன்னால், நாடாளுமன்ற உறுப்பினர் தனித் தமிழ்நாடு பேசுகிறார் என்று துள்ளிக் குதிப்பார்கள். நாங்கள் பூகோள ரீதியாக தனித் தமிழ்நாடு கேட்கவில்லை. அப்படி கேட்டாலும் தவறு இல்லை. அது வேறு, ஆனால், புத்தி ரீதியாக தனித் தமிழ்நாட்டு கொள்கைக்கான தீயை அணையாது பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம்.

நீங்களே கூறுங்கள்; நாடாளுமன்றம் என்ற மக்கள் சபை, விவசாய சட்டங்களைக் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றிய பிறகு தமிழ்நாடு சட்டமன்றமான மக்கள் மன்றம், அதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. குடியுரிமை சட்டத்தை, ‘நீட்’ தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத் தீர்மானங்களை புறந்தள்ளி தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் போட்டது. இந்தியாவில் வேறு எந்த மாநில சட்டமன்றமாவது இப்படித் தீர்மானம் போட்டிருக்கிறதா? பூகோள ரீதியில் தமிழ்நாடு கேட்காமல், புத்தி ரீதியாக அந்த கொள்கை உணர்வை முன் வைக்கிறோம்; இது பெரியார் தந்த புத்தி.

நாடாளுமன்றத்திலே பிற மாநில உறுப்பினர்கள் என்னிடம் கேட்டார்கள், எப்படி உங்கள் மாநிலத்திலிருந்து 40 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டீர்கள்? இது எப்படி சாத்தியம் என்று கேட்டபோது, நான் ஒவ்வொரு உறுப்பினரின் பெயரையும் கேட்டேன். பெயருக்குப் பின்னால், பாண்டே, சாட்டர்ஜி, மிஸ்ரா, சர்மா எனறு ஜாதிப் பெயர்களோடு இணைத்துக் கூறினார்கள். எங்கள் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயருக்குப் பின்னால், ஜாதிப் பெயர் இருக்கிறதா, ஒருவர் பெயரிலும் கிடையாது. பெயர் அளவிலாவது நாங்கள் ஜாதியை ஒழித்துக் கட்டியிருக்கிறோம். இது திராவிட இயக்க சாதனை. அந்தக் கொள்கை தான் எங்களுக்கு இவ்வளவு பெரிய வெற்றியைத் தந்திருக்கிறது என்றேன். (பலத்த கைதட்டல்)

அம்பேத்கர், பார்ப்பனியத்தை எதிர்த்தார். சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரத்தை மறுப்பது அனைத்துமே பார்ப்பனியம் தான் என்றார்.

இப்போது நமக்கு பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் என்ற மூன்று சித்தாந்தங்களும் தேவைப்படுகிறது.

இன்றைக்கு இந்தியாவிலேயே இந்துத்துவாவை எதிர்க்கக் கூடிய ஒரே வலிமையான தலைவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான். அதற்கான கருத்தியல்களை கூர்மையுடன் இத்தகைய நூல்களும் பெரியாரிய கொள்கைகளும் அதை முன்னெடுக்கும் இயக்கங்களும் தலைவர்களும் வழங்கி வருகின்றனர்.

மு.க. ஸ்டாலின் பற்றி கலைஞர் குறிப்பிடும்போது, உழைப்பு, உழைப்பு! இது தான் ஸ்டாலின் என்று கூறினார். ஒரு இயக்கத்துக்கான சிறந்த தலைவர் என்பதை சுட்டிக் காட்டினார். இப்போது இந்தியாவின் வரலாறு தமிழ் நாட்டிலிருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என்று நமது முதல்வர் அறிவித்து, திராவிட இயக்கத்தின் தத்துவத் தலைவராக உயர்ந்து நிற்கிறார் தமிழக முதல்வர், என்றார் ஆ. ராசா.

விழாவில் கருஞ்சட்டைப் பதிப்பகப் பொறுப்பாளர் பெல் ராசன் வரவேற்புரையாற்றினார். ப. திருமாவேலன், பேராசிரியர் ஜெயரஞ்சன் உரையாற்றியதைத் தொடர்ந்து, பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஏற்புரை நிகழ்த்தினார். மூன்று நூல்களும் 300 பிரதிகள் மேடையிலே விற்றன. ஆ.ராசாவிடமிருந்து நீண்ட வரிசையில் நின்று நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

பார்வையாளர்களாக மாநிலங்களவை உறுப்பினர் எம். சண்முகம், மயிலை சட்டமன்ற உறுப்பினர் வேலு, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள், ஆதி திராவிடர் பழங்குடியினர் நல வாரிய துணைத் தலைவர் புனித பாண்டியன் ஆகியோரும் பங்கேற்றனர். அரங்கம் நிரம்பி வழிந்தது.

செய்தி : ‘இரா’

Pin It