நவம்பர் 20 ‘தமிழன் எக்ஸ்பிரசில்’, “தேவாரம் திருப்புகழ் எனக் கூறி தமிழன் சீரழிந்து கொண்டிருக்கிறான்” என்று கூறிய கவிஞர் கனிமொழி, மிகச் சரியாகவே கூறியுள்ளார். அவரைக் கண்டித்து ‘தினமணி’ தலையங்கம் தீட்டியிருக்கிறது. தலையங்கத்தில், “பார்வதியின் ஞானப்பாலை குடித்ததாகக் கூறப்படும் திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், அருணகிரிநாதர், நக்கீரர், கபிலர், பரணர், திருமூலர் மற்றும் சைவ சமய குரவர்கள், புலவர்கள் ஆகியோர் தமிழ் மொழியின் சிறப்பையும், இசைத் தமிழையும், இறைத் தமிழையும் வளர்த்தார்கள் என்று கூறுகிறது” அந்த தலையங்கம்.

தமிழை வளர்த்தார்களோ, இல்லையோ! அவர்கள் இறைத்தமிழ், இசைத் தமிழ் என்று கூறி வயிறை வளர்த்தார்கள் என்பதுதான் உண்மை. இது ஒருபுற மிருக்க, இறைத்தமிழையும், இசைத் தமிழையும் வளர்த்ததால், தமிழ் வளர்ந்தது என்று கூறும் ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’க்கு ஒன்றை கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

‘ஐ.நா.வின் யுனஸ்கோ’ நிறுவனம் 2003 இல் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, “எந்த ஒரு மொழி காலத்திற்கேற்ற வகையில் அறிவியல் சார்ந்து வளர்க்கப்படவில்லையோ, அந்த மொழி இன்னும் 50 ஆண்டுகளில் அழிந்தே தீரும். அந்த மொழிகளில் முதல் மொழி தமிழ் மொழி தான்” என்று எச்சரித்திருக்கிறது.

ஐ.நா.வின் இந்த எச்சரிக்கைக்கு காரணம் தமிழை இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்று கூறினோமே தவிர அறிவியல் தமிழ் என்ற ஒன்றை ஆய்வு செய்யவோ, அதை எழுதவோ தமிழ்ப் புலவர்கள் தயாராக இல்லை. ஆனால், கம்ப ராமாயணத்திற்கும், சிலப்பதிகாரத்திற்கும், மகாபாரதத் திற்கும் பதவுரை, தெளிவுரை என்று உரைக்கு மேல் உரை எழுதிக் கொண்டே இருக்கிறார்களே ஒழிய, புதிய அறிவியல் சிந்தனையை வளர்த்தெடுப்பதிலும், காலத்திற்கேற்ற வகையில் அறிவு சார்ந்த செய்திகளை கூறுவதிலும் அன்றும் இன்றும் ஒருவர் கூட இல்லையே என்பதுதான் (திருக்குறளைத் தவிர) வேதனையான ஒன்று.

ஆகவே தான் தந்தை பெரியார், புலவர்களை ‘பழமை குட்டையில் ஊறிய பாசிகள்’ என்று கூறினார். எல்லாவற்றிற்கும் ஒருபடி மேலே போய், இப்படி தமிழை காலத்திற்கேற்ப வளர்க்காத தாலும், கடவுளின் பேராலும், மதத்தின் பேராலும், புராண இதிகாசங்களின் பேராலும் தமிழ் மொழி சீரழிவதை கண்ட தந்தை பெரியார், தமிழ்மொழி காட்டுமிராண்டி மொழியாகத்தான் ஆக போகிறது என்று வேதனையுடன் கூறியது எவ்வளவு அறிவு நுட்பமானது என்பதனை ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டிற்கு தெரிவிக்க விரும்புகிறோம்.

இல்லை! இல்லை! சைவ சமய குறவர்களாலும், புலவர்களாலும் மற்றும் தேவாரம், திருப்புகழ் போன்ற நூல்களாலும் தான் தமிழ்மொழி வளர்ந்தது என்றால், இன்னும் 50 ஆண்டுகளில் அழியக் கூடிய மொழிகளில் தமிழ்மொழி ஏன் தள்ளப்பட்டிருக்கிறது என்ற கேள்வியை தமிழன் எக்ஸ்பிரஸ் ஏட்டிற்கு முன் வைக்கிறோம்.

Pin It