திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கிருஷ்ணன் குறித்துப் பேசியதாக வன்முறையில் இறங்கியிருப்பது ஆர்.எஸ்.எஸ். சதி என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி:

கேள்வி: திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கி.வீரமணி அவர்கள் கிருஷ்ணனைப்பற்றி தவறாகப் பேசியதாக சொல்கிறார்களே, அதை தி.மு.க. ஏற்றுக்கொள்ளுமா?

மு.க.ஸ்டாலின்: அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சல்ல அது. ஏற்கெனவே அவர் திராவிடர் கழகத் தலைமை அலுவலகமாக இருக்கக்கூடிய பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சாகும். யாரையும் கொச்சைப்படுத்தியோ, கேவலப்படுத்தியோ பேச வேண்டும் என்கிற நோக்கத்தோடு பேசவில்லை. அவர் சில உதாரணங்களைச் சொல்லி பேசியிருக்கிறார்.

அதை இன்றைக்கு சில ஊடகங்கள், ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகள் தேர்தல் நேரத்தில், அதனை தவறாகத் திரித்து, மக்களிடத்தில் தவறான பிரச்சாரத்தினைக் கொண்டு போக வேண்டும் என்கிற நோக்கில் திட்டமிட்டு செய்திருக்கின்ற சதி இது.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், பேரறிஞர் அண்ணாவின் கொள்கை என்பது, “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்பதுதான். அதேபோல, தலைவர் கலைஞர் அவர்கள்கூட பராசக்தி திரைப்படத்தில் மிகத் தெளிவாக ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார்கள்.

“கோவில்கள் கூடாது என்பது தி.மு.க.வின் கொள்கையல்ல; கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது” என்பதுதான் கொள்கை என்பதைத் தெளிவாகச் சொல்லியிருப்பார். அந்த அடிப்படையில்தான் இன்றைக்கும் தி.மு.க. இருக்கிறது.

இந்துக்களைப் பொறுத்தவரைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 90 சதவிகிதம் இந்துக்கள் இருக்கிறார்கள். இன்னும் வெளிப் படையாக சொல்லவேண்டுமானால், என்னுடைய துணைவியார்கூட காலையிலும், மாலையிலும் இடைவிடாமல் ஒவ்வொரு நாளும் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாளும் அவரை நான் ஆலயத்திற்குச் செல்லக்கூடாது என்றோ, அது தவறு என்றோ சொல்லியது இல்லை.

ஆகவே, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் அதனைத் தேர்தலுக்காக நடத்தும் பிரச்சாரம், வேண்டு மென்றே திட்டமிட்டு நடத்துகின்ற பிரச்சாரமாகும். இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.

Pin It