“பழந்தமிழன் யார்? அவன் கொள்கை என்ன? அதற்கு ஆதாரம் என்ன? அதற்கு இன்று அவசியம் என்ன? - என்பது போன்ற கேள்விக்குப் பதில் சொல்ல இன்று ஆளைக் காணோம். வீணாக, அந்தப் பேரில் பிழைக்கவோ, பெருமைப்படவோ, மக்களைச் சுரண்டவோ தங்கள் எண்ணத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவோ பயன்படுத்தப்படுகிறது” என்றார் பெரியார். அப்படி பழந்தமிழர் பெருமை என்ற ஒன்றைச் சொல்லி மக்களைச் சுரண்டும் முயற்சியே 7 ஆம் அறிவு திரைப்படம்.

5 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இருந்து சீனா சென்ற போதி தர்மன் பற்றிய ஒரு கதை. தமிழர்களின் பெருமையை பறைசாற்றினான், குங்பூ கலையை உலகிற்கு அறிமுகப்படுத்தினான். தமிழ் மருத்து வத்திற்குப் பெருமை சேர்த்தான் என்றெல்லாம் பெருமைகளை ஏற்றுகிறது இத் திரைப்படம். மிக முக்கியமான உண்மை என்னவென்றால் போதி தர்மன் தமிழனே இல்லை என்பதுதான்.

திரைப்படக் குழுவினர் சொல்லும் கதைப்படியான போதிதர்மன், சீனா சென்ற காலம் கி.பி. 520 அல்லது 525. அந்தக் காலக்கட்டத்தில் பல்லவ நாடு தனிநாடாக இயக்கி வந்தது. அதற்கு அருகாமை நாடுகளான சேர, சோழ, பாண்டிய நாடுகளை களப்பிரர்களும், பல்லவ நாட்டுக்கு வடக்கே இரேணாட்டு தெலுங்குச் சோழர்களும் அரசாண்டனர். போதி தர்மனின் இயற்பெயர் புத்தவர்மன். இவன் ஸ்கந்தவர்மன் என்ற பல்லவ அரசனுக்கு மூன்றாம் மகன் என்று சொல்லப்படுகிறது. அப்போதைய தமிழ் மன்னர்களின் பெயர்கள் நெடுஞ்செழியன், கரிகாலன், செங் குட்டுவன், இளந்திரையன் என்பது போல சுத்தத் தமிழ்ப் பெயர்களில் தான் இருந்தன. போதி என்ற வடமொழிச் சொல்லுக்கு அரச மரம் என்று பொருள். ஸ்கந்தவர்மன் என்றோ, போதிவர்மன் என்றோ, குமாரவிஷ்ணு, சிம்ம விஷ்ணு என்றோ வடமொழிப் பெயரை தமிழ் மன்னன் சூடிக் கொள்ள அப்போது வாய்ப்பில்லை. பல்லவர்கள் தமிழர் களே அல்ல. வடக்கிலிருந்து வந்த வர்கள் என்பதுதான் பல வரலாற்று அறிஞர்களின் ஆய்வு முடிவு. பல்லவர்களின் மொழி ப்ராகிருதமும், சமஸ்கிருதமுமே அவர்களின் செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் ப்ராகிருதத்திலேயே உள்ளன. அவர்களின் ஆட்சி மொழிகள் வடமொழிகளே.

வேறு சில வரலாற்றுக் குறிப்புகள் போதி தர்மன் ஒரு பார்ப்பன குறுநில மன்னனுக்குப் பிறந்தவன் என்று குறிப்பிடுகின்றன. ‘கருஞ்சட்டைத் தமிழன்’ 23.04.10 இதழில் தோழர் எழில் இளங்கோவன், புத்தமதத்தில் ஊடுருவிய பார்ப்பனர்களான சங்க மித்திரா, ஆச்சாரிய புத்ததத்தா, கண தாசர், வேணுதாசர், போதி தருமர், தருமபாலா, ஆச்சாரிய தருமபாலா, தம்மபாலா போன்றவர்கள் பவுத்தத் துறவிகளாக மாறி, புத்தரின் நேரடி பவுத்தத்தை மாற்றி அமைத்ததையும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் நாகார் ஜுனா என்பவர், புத்தருக்கு நேர் எதிரான ஆரிய வாதத்தைச் சூனியவாதமாகச் சொல்லி மகாயான பவுத்தத்தை நிறுவி, புத்தர் உருவாக்கிய பவுத்தத்தை வீழ்த்தியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு தோழர் எழில் இளங்கோவன் சொல்வது மட்டுமல்ல, கேரளாவில் களரிப்பட்டு அல்லது களரிப் பாயாட்டு என்ற கலையை பயிற்றுவிக்கும் பல பயிற்சி மையங்கள் உள்ளன. அவற்றின் விளம்பரங்களில் களரிப்பாயாட்டுக் கலையை உருவாக்கிய போதி தர்மன் ஒரு மலையாளி என்றும் (அப்போது சேர நாடு) ஒரு பார்ப்பன மன்ன னுக்கு மூன்றாவதாகப் பிறந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். (ஆதாரம்:; http://maruthikalari.org/english/kalari.htm)

இது மட்டுமல்ல திரைப்படக் குழுவினர் கூறும் ஆதாரங்களைத் தேடினாலே போதி தர்மன் ஒரு தமிழன் அல்ல, ஒரு சேர நாட்டுப் பார்ப்பான் அல்லது வடநாட்டுப் பார்ப்பான் என்பதற்கே ஆதாரங்கள் உள்ளன.

பெளத்த மார்க்கத்திலிருந்து வேறுபட்ட தியான மார்க்கத்தைத் தான் போதி தர்மன் சீனாவில் போதித்துள்ளான். சீனாவில் சான் மதமாகவும், ஜப்பானில் ஜென் மதமாகவும் மக்களால் கடைபிடிக்கப்படுகிறது. இவை இந்து மதத்தைக் கட்டி எழுப்பிய சங்கரரின் அத்வைதக் கோட்பாடுகளுக்கு நெருக்கமாக உள்ளன. ஜப்பானிலும் இந்தியாவில் உள்ளது போன்ற ஒரு ஏற்றத்தாழ்வு நிலை, சாதி போன்ற ஒரு ஒடுக்குமுறை வடிவம் சில பகுதிகளில் இன்றும் உள்ளன.

ஆக, புத்தமதத்தை ஒழிக்க சில பார்ப்பனர்கள் அந்த மதத்துக்குள்ளேயே புகுந்து அது பரவிய இடங்கள் எல்லாவற்றிற்கும் தாங்களும் பரவி அழித்துள்ளார்கள். ‘பகையாளி குடியை உறவாடிக் கெடு’ என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி ஒரு வேலையைப் பார்த்த நயவஞ்சகனை கதாநாயகனாக உலவ விட்டுள்ளார் முருகதாஸ்.

வீட்டுக்கு முன்பு மாட்டுச் சாணியால் வாசல் தெளித்து, கோலம் போட்டு, தலைவாசலின் நிலைக் கதவின் கீழே மஞ்சளும் குங்குமமும் வைத்து, வீட்டுக்குப் பின்னே துளசிச் செடியும் இருப்பது யாருடைய வீட்டில்? பார்ப்பனர்களுடைய வீட்டில் தான் இவை தவறாமல் நடக்கும். அந்த பார்ப்பன வாழ்வியலைத் தான் தமிழர்களுக்கு முன் மாதிரியாக கடைபிடிக்க வேண்டிய கடமையாக முழங்குகிறார் முருகதாஸ். இதைத்தான் இந்து முன்னணி பேசுகிறது, சங்கராச்சாரி பேசுகிறார். இந்த சாணி, மஞ்சள், துளசி கதைகளை பக்தியாகச் சொல்லக் கூடாதாம்! அறிவியலாகச் சொல்ல வேண்டுமாம்! அந்தப் பித்தலாட்ட அறிவியலைத்தானே ஜக்கி வாசுதேவும், வேதாத்திரி மகரிஷியும், ரவிசங்கரும், நித்தியானந்தாவும் அவரவர் முறைகளில் நவீன தொழில்நுட்பங் களுடன் சொல்லி பல தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துள்ளார்கள்?

சாணியில்கூட பசுமாட்டுச் சாணி, எருமை மாட்டுச் சாணி என்று பிரிவினையை வைத்திருக்கும் சமுதாயத்தில், எந்தப் பார்ப்பானும் மறந்தும்கூட ஒரு எருமை மாட்டை வளர்க்காத நாட்டில், எந்தப் பார்ப்பன அக்ரகாரத்திலும் வாசலில் தவறிப்போய்கூட எருமைச்சாணியை பயன்படுத்தாத சூழலில் இத்தகைய ‘உபதேசங்கள்’ தமிழர்களுக்கு வழங்கப்படுகின்றன. எங்களுக்குச் சாணி என்றால் சாணிப் பாலும் சவுக்கடியும் தான் நினைவுக்கு வருமே ஒழிய, அதை மருந்தாகப் பார்க்க முடியாது. இப்பத்தான் இந்தத் தலைமுறைதான் ஒடுக்கப்பட்ட எமது இனம் சாணியையும் மாட்டையும் ஒதுக்கிவிட்டு கம்ப்யூட்டரையும், கல்லூரிகளையும் பார்க்கிறது. இன்றும் எங்கள் அப்பன், பாட்டன் வீடுகளில், வீட்டுக்கு முன்புறம் மட்டுமல்ல, வீடு முழுவதற்குமே சாணித் தரைதான். அதுவும் வாரம் ஒரு முறை ஃப்ரெஷ் சாணி. எந்த நோயையும் அந்த சாணித் தரை தடுக்கவில்லை. இப்பத்தாண்டா எங்கள் பரம்பரை மொசைக் தரையவே பார்க்கிறோம். அது உங்களுக்குப் பிடிக்கலயா? நீங்க மட்டும் ஐ.ஐ.டி.யில் ப்ராஜெக்ட் எழுதி அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் அனுப்புவீங்க, நாங்க சாணியிலயும், சகதியிலயும் சாகனுமா?

“வாசல் தெளித்து, கோலம்கூட போட மாட்டேங்கறா” என்று சராசரி ஆண்களால் குற்றம்சாட்டப்பட்டு, பல பெண்களின் வாழ்க்கை விவாகரத்துவரை போய்க் கொண்டு இருக்கிறது. கோலம்கூட போடத் தெரியாதா? என்ற கேள்வி இன்றும் பல பெண்களுக்கு சங்கடத்தை உருவாக்கியே வருகிறது. இது ஒரு இந்து உளவியல். இந்து வாழ்வியல். தட்டுத் தடுமாறி ஒடுக்கப்பட்ட சமுதாயம் மேலே வந்து கம்ப்யூட்டர் நிறுவனங்களில் கால் வைக்கத் தொடங்கியிருக்கிறது. வெளிநாடுகளுக்குப் போய்வரத் தொடங்கியிருக்கிறது. அதைப் பொறுக்க முடியாத பார்ப்பனக் கூட்டம், மீண்டும் பழமையைத் திணிக்கத் துடிக்கிறது. தமிழன் பெருமையை வீழ்த்தியது இடஒதுக்கீடு, சிபாரிசு, ஊழல் (Reservaton, Recommendation, corruption)தான் என்று இத் திரைப்படத்தில் வசனம் வருகிறது. இடஒதுக்கீடு தமிழனை உயர்த்தியதா? தாழ்த்தியதா? தமிழன் என்ற போர்வைக்குள் பார்ப்பனீயத்தைக் குழைத்துத் தரும் சூழ்ச்சி தானே இது?
(தோழர் பெரியார் இணையதளத்திலிருந்து)

பழந்தமிழர் பெருமை குறித்து பெரியார் கூறுகிறார்

“பழந்தமிழன் யார்? அவன் கொள்கை என்ன? அதற்கு ஆதாரம் என்ன? அதற்கு இன்று அவசியம் என்ன? - என்பது போன்ற கேள்விக்குப் பதில் சொல்ல இன்று ஆளைக் காணோம். வீணாக, அந்தப் பேரில் பிழைக்கவோ, பெருமைப்படவோ, மக்களைச் சுரண்டவோ தங்கள் எண்ணத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவோ பயன்படுத்தப்படுகிறது.

பழந்தமிழன் யாராயிருந்தால் எனக்கென்ன? உங்களுக்குத் தான் என்ன காரியமாகும்? அவன் கொள்கையோ, மதமோ, கடவுளோ, நடப்போ, சக்தியோ எதுவாயிருந்தால்தான் இங்கு இன்று நமக்கு என்ன லாபம்? என்பதுதான் எனது கேள்வி.

பழந்தமிழர் நிலையைப் பற்றிப் பேசுபவர்கள் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுக்கும் அறிவாளிகளானால், நடுநிலைக்காரர்களானால், அவர்களை ஒன்று கேட்கிறேன். அதாவது காட்டுமிராண்டி வாழ்க்கைக்கால மனிதனைவிட கல்லாயுத கால வாழ்க்கை மனிதன் சிறந்தவன் அல்லவா என்பதும், அதுபோலவே 4000, 5000 வருடத்திற்கு முன் இருந்த மனிதனைவிட இன்று இருபதாவது நூற்றாண்டில் வாழும் மனிதன் சிறிதாவது மேலான அனுபவம் பெற சவுகரியமும், ஆராய்ந்து பார்க்கும் வசதியும் உடையவனா? அல்லவா? என்பதோடு அந்தக் காலத்தில் வாழ்ந்த வாழ்வைவிட, எண்ணிய எண்ணத்தைவிட வேறான வாழ்வும், வேறான எண்ணங்களும் கொள்ள வேண்டியவனாய் இருக்கின்றானா இல்லையா என்பதேயாகும்.

இன்று வாழும் மனிதனுடைய எந்தக் காரியத்திற்கு பழந்தமிழனுடைய வாழ்க்கைக் குறிப்பும் நினைவுக் குறிப்பும் நமக்கு வேண்டியிருக்கிறது என்று உங்களை வணக்கமாய்க் கேட்கிறேன்.

வீணாக பழந்தமிழர் கொள்கை என்பதும் பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பதும் அந்நியன் ஏய்க்கவோ, அறியாமையில் மூழ்கவோ தான் பயன்படுத்தக் கூடியதாக ஆகிவிட்டது.

இனி, நம்முடைய எந்த சீர்திருத்தத்திற்கும் அந்தப் பேச்சு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பகுத்தறிவாதியின் கடமையாக ஆகிவிட்டது. பழந்தமிழன் வந்து போதிக்கத் தகுந்த நிலையில் இன்று நமது மனித சமூகம் இல்லை.

பழந்தமிழன் கொள்கை எதுவும் இன்று எந்த மனித சமூகத்திற்கும் அவசியமும் இல்லை. மனிதன் காலத்தோடு, மாறுதலோடு, செல்ல வேண்டியவனேயொழிய வேறில்லை. வேண்டுமானால் மடையர்களைத் தட்டி எழுப்ப ஆயுதமாக அதைக் கொள்ளலாம். ஆனால் சாது மக்களை ஏமாற்ற அதைப் பயன்படுத்தவிடக் கூடாது.

- பெரியார், ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற நூலில்

Pin It