தமிழில் தத்துவம் சார்ந்த உரையாடல்களில் ஒரு முகாமையான சிக்கல் உள்ளது. அது மேலைத்தேய ”தத்துவம்” சார்ந்த கருத்தாக்கத்துடன் இந்திய மெய்யியல் சார்ந்த சிந்தனைகளை குழப்பிக் கொள்ளுவதால் வருவது. மேலைத்தேயச் சிந்தனைமுறையில் தத்துவம், இறையியல் இரண்டும் தனித்தனியான துறைகளாக வளர்ந்து வந்தவை. ஆனால், கீழைத்தேயச் சமூகங்களில் தத்துவம் இறையியலாகவே வெளிப்பட்டது. குறிப்பாக, இந்திய ஒன்றியத் தத்துவ மரபை எடுத்துக் கொண்டால், அது இறையியலுடன் இணைந்தே வெளிப்பட்டது. இறையியலிலிருந்து தத்துவத்தைப் பிரித்தறியும் ஒரு பார்வை அடிப்படையானது. அந்த அடிப்படையில் தனது மெய்காண் முறையை அமைத்துக் கொண்டவர் பொதியவெற்பன்.

தத்துவம் என்ற சொல் வடமொழியில் `பற்றிப் பிடித்தல்' என்ற பொருளைக் கொண்டது. இது அடிப்படையில் மேற்கத்திய சிந்தனையில் உள்ள தத்துவம் குறித்த பொருளைச் சரியாகக் குறிப்பதில்லை. கிரேக்க வேர்ச்சொல்லான Philo என்பதிலிருந்தே Philosophy என்ற சொல் வந்தது. அதாவது 'love of wisdom’ என்பதே அதன் பொருள். ஆனால், இந்தியாவில் பெரும்பாலான தத்துவ மரபு என்பது ஆன்மா குறித்த வாத விவாதங்களைக் கொண்டது. ஆன்மா உண்டா இல்லையா? ஆன்மாவிற்கும் உடலுக்கும், உயிருக்கும், உணர்வுக்கும், எண்ணத்திற்குமான உறவு குறித்தே அதிகம் கவலை கொண்டவை. “உண்மையை அறிதல்” என்பதைவிட “உன்னை அறிதல்” என்பதிலேயே அதிகம் கவனம் செலுத்தியவை. அத்துடன் அது கீழைத்தேயச் சிந்தனைப் படிமமாக உருவான ‘இறை’ மற்றும் அதற்கான ஒரு நிறுவனமான மதம் சார்ந்து அமைந்தது. ஆனால், சங்கத் தமிழில் இறை என்பது இறைச்சி, வேட்டைக்கான உணவு என்பதானப் பொருளைக் கொண்டது. அதனால், இந்திய ஒன்றியத் தத்துவமரபில் உள்ள இறையியல் சார்ந்த சிந்தனைகளைக் களைந்து, மேற்கத்திய அறிவுவாத மரபில் தத்துவத்தைப் புத்தாக்கம் செய்வதற்கான, புரிந்துகொள்வதற்கான முயற்சி முக்கியமானது. அம்முயற்சிக்கான தேவையை இன்று வலியுறுத்த வேண்டியது அவசியம். அவ்வலியுறுத்தலுக்கான ஒரு முயற்சியைப் பொதியின் உரையாடல்களில் வாசிக்க முடியும்.

தவிரவும், பொதி இந்த அடிப்படை வேறுபாடுகள் குறித்து ஆழ்ந்த புரிதலும், ஓர்மையும் கொண்டவராக இருப்பதை, இக்கலைச்சொற்களை அவர் பாவிக்கும் முறையிலும், அவற்றை அவர் வரையறுக்க முயலுவதிலும் அறியமுடியும். சான்றாக, சித்தாந்தம், வேதாந்தம் குறித்து அவரது உரையாடலில் பாவிக்கும் நுட்பம் முக்கியமானது. இவற்றின் வேறுபாடுகளை அறுதியிட்டுப் பேசும் ஒரு நீண்ட உரையாடலைக்கூட அவர் நிகழ்த்தியுள்ளார். பொதுவாகத் தத்துவம் என்ற சொல்லிற்குச் சித்தாந்தம் என்ற சொல்லையே பாவிப்பது இங்கு வழக்கமாக உள்ளது. அதன்பின் தமிழும் சைவமும் ஒன்றுதான் என்ற மனப்பிம்பமும், சித்தாந்தம் என்பதே தத்துவம் அல்லது புரியாமல் பேசுவது அல்லது இறை­யியல் குறித்துப் பேசுவது அல்லது பொதுப்புத்தி சாராத பேச்சுகள் என அனைத்தும் ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கப்பட்டுவிடும் மொழி அரசியலும் காரணம். சைவமே தமிழ், தமிழே சைவம் என்பதும், சிவனின் உடுக்கை ஒலியில் பிறந்த மொழி தமிழ் என்பதெல்லாம் பக்தி இயக்கம் உருவாக்கிய ஒரு கருத்துநிலை என்பது மிகைக் கூற்றாகாது.

தத்துவம் என்ற வடமொழி சொல்லைத் தவிர்த்து தமிழில் “மெய்யியல்” என்ற சொல்லைப் பயன்படுத்துவதே சரியானது. இது வெறும் மொழி அரசியல் சார்ந்த ஒன்றல்ல. காரணம், வடமொழியில் தத்துவம் நம்பிக்கை சார்ந்த ஒன்றாக இருப்பதும், தமிழில் மெய்யியல் என்ற சொல் நேரடியாக உண்மையை அறிதல், மெய்பொருள் காணுதல் என்பதுடன், மெய் என்கிற உடல், புறம் என்ற பொருளையும் கொண்டிருப்பது முக்கியம். ஆக, மெய்யியல் என்ற சொல் தமிழியம் சார்ந்த சிந்தனையை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. அவ்வகையில் தமிழருக்கான மெய்யியல் அடிப்படையில் அறிவார்ந்த தளத்தில் அமைந்த மெய்காண்முறையைக் கொண்டிருப்பது முக்கியம். அதோடுகூட அது பொருள்முதல்வாதச் சிந்தனைக்கு நெருக்கமானதாக, அணுக்கமானதாக உள்ளது. இதன் ஒரு நீட்சியாக அண்மைக்காலத்தில் உரையாடலுக்கு முன்வந்துள்ள “ஆசீவகம்” குறித்த சிந்தனை முக்கியமானது. அது தமிழரின் தத்துவம் என்ற வாதம் ஒருபுறம் இருந்தாலும், அது குறித்து ஏ. எல். பாஷம் தொடங்கி தமிழில் ர. விஜயலெட்சுமி மற்றும் க. நெடுஞ்செழியன் ஆகியோர் எழுதியதை ஒட்டிப் பொதியும் அது குறித்த உரையாடலை நிகழ்த்துபவராகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார்.

தமிழியம் என்று தமிழின் மெய்யான சிந்தனைகளை, கோட்பாடுகளை, கருத்தியலை, மெய்யியலை, இலக்கியத்தை, பண்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தினால், பொதியை ஒரு தமிழியம் சார்ந்த மெய்யியலை முன்வைப்பராகக் கொள்ளலாம். அதன் ஒரு தொடர்ச்சியே அவரது வள்ளுவர், வள்ளலார், சித்தர், மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் மற்றும் பின்நவீனம் குறித்த உரையாடல்களின் தொகுப்பாக அறியமுடியும். இவற்றை அவர் ஒரு கதம்பக் கூட்டாகவோ, மேற்கோள் தொகுப்பாகவோ பயன்படுத்தாமல் ஓர் அளவையியல் முறையில் (தர்க்க முறையில்) முன்வைக்கிறார். அதற்குள் ஒரு மெய்யியல் உரையாடலை வளர்த்தெடுக்கிறார் என்பதே கவனப்படுத்த வேண்டிய ஒன்று.

இவற்றைத் தொகுப்பாக்கி இற்றைப்படுத்தி முன்வைக்கும் ஓர் உரையாடல் வெளியே பொதியுனுடைய மெய்யியல் சார்ந்த உரையாடலாக அமைந்துள்ளது. இதனை அவர் சித்தரியம் என்பதாகக் குறிப்பிட முயல்கிறார். நாம் இதனை “நவீன சித்தரியல்” என்பதாக வகைப்படுத்திக் கொள்ளலாம். என்றாலும், சித்தர்களின் ஆன்மீக, இறையியல் சார்ந்த நிலையைக் குறித்து அவர் ஒரு கட்டுரையில் விரிவாக விமர்சித்து மறுத்துவிட்டு, சித்தர்களின் கலகத்தன்மை, எதிர்க்குரல்கள், அதிகாரத்தை எதிர்த்தல் உள்ளிட்ட ஒரு பரவெளி என்கிற வெட்டவெளி சார்ந்த சிந்தனையாக தனது மெய்யியல் சார்பை முன்வைக்கிறார். இப்பார்வை குறித்து முரண்கள், வாத விவாதங்கள் இருக்கலாம், என்றாலும், பொதியின் மெய்யியலை வடிவமைப்பதில் இச்சித்தரியம் முக்கியப் பங்கை வகிக்கிறது.

அடுத்து, சைவம் குறித்தும் அவர் அதன் நேர்மறையான அம்சங்களை ஏற்பதும், அதன் இறையியல் சார்ந்த நெறி குறித்து மறுப்பதும் என்ற ஓர் இயங்கியல் சார்ந்த பார்வையை முன்வைக்கிறார். இவை அனைத்திற்கும் அடிப்படையாக அமைவது அவரது உரையாடல்கள். இந்த உரையாடல் என்ற முறைமை மேற்கத்திய சிந்தனையில் ஹெகலின் இயங்கியலில் இருந்து பெறப்பட்டது. அதன் கருத்துமுதல்வாத அடிப்படைகளை நீக்கி, சமூக ஆய்விற்குப் பொருத்தி மார்க்ஸ் பொருள்முதுல்வாதச் சிந்தனையில் ‘இயங்கியல் பொருள்முதல்வாதம்’ என்பதாகப் புத்தாக்கம் செய்தார். பொதி மார்க்சியத்தின் இவ்வியங்கியல் முறைமையைப் பயன்படுத்தி கருத்து- எதிர்க்கருத்து- இணைவுக் கருத்து (thesis - antithesis - synthesis) என்ற பாணியில் தனது உரையாடல் முழுமையையும் அமைத்துக் கொண்டுள்ளார். அது அவரது இயல்பாகவே மாறிவிட்டது என்று சொல்வது மிகையாகாது. ஒருவரது கூற்றில் முரணை வாசித்தல், அவரது மற்றையக் கூற்றில் உள்ள இணைவையும், முரணையும் முன்வைத்தல் என அவரது உரையாடல் முறை அமைந்துள்ளது.

இம்மார்க்சிய இயங்கியல் பொருள்முதல்வாதச் சிந்தனை அடிப்படையில் அவரது பெரும்பாலான உரையாடல்கள் அமைந்துள்ளன. அதிலிருந்து அவர் அதன் தமிழியம் சார்ந்த சிந்தனை முறைக்கு செல்வதன் வழியாக வந்தடைந்த புள்ளிகளே வடலூர் வள்ளலார் மற்றும் ஈரோட்டுப் பெரியார். இதன் உள்ளார்ந்த மெய்யியல் பார்வை சித்தரியத்திலிருந்து பெறப்பட்டதால் தன்னைப் பொதிகைச் சித்தர் என்று முன்வைத்துக் கொள்பவராக உள்ளார்.

தொகுப்புரையாக, அவரது மெய்யியல் சார்ந்த உரையாடல்களைக் கூறினால்...

(1.)         அதிகாரத்தை எதிர்த்தல். இது மாற்றுச் சிந்தனை மரபான லோகாயுதம், பௌத்தம், சமணம், ஆசீவகம் தொடங்கி தமிழில் சித்தர் மரபுவரை உருவான ஒன்று.

(2.)         அதிகார மையங்களை உடைத்தல். இது இலக்கிய, தத்துவ, அரசியல் பீடங்களாக உருவாகும் மையங்களை கட்டுடைத்தல் என்பதாக முன் பின்னாக அம்மையங்கள் பேசியவற்றை உரையாடலாக முன்வைத்துத் தகர்த்தல். இதனை தகர்ப்பமைப்பு முறையியலாக அவர் முன்வைக்கிறார்.

(3.)         கலகக்குரலாக ஒலித்தல். இதுவும் சித்தர்கள் மற்றும் மாற்று மரபுகள் வழி பெற்ற மெய்யியல் சார்ந்த ஓர் உரையாடலாக வெளிப்படுவது. அத்துடன் எந்தவோர் இடத்திலும் தன்னை ஒரு கலகக்காரராக முன்வைப்பவராக இருக்கிறார்.

(4.)         நிறுவனமய எதிர்ப்பு. அவரது மெய்யியல் பார்வையின் அரசியல் வெளிப்பாடாக, மையம் சார்ந்த நிறுவனங்களை எதிர்ப்பது. அவற்றின் மையத்தைக் கட்டவிழ்த்து. அவற்றைத் தகர்ப்பதற்கான உரையாடல் வெளிகளை, கருத்துக்களை ஒழுங்கமைப்பது.

(5.)         கட்டுடைப்பு முறையியல். கறாரான தெரிதியக் கட்டுடைப்பு (முரணை தலைகீழாக்கல், ஒடுக்கப்பட்ட கருத்தை மேலே கொண்டுவருதல்) முறையாக இல்லாமல், மார்க்சிய இயங்கியல் (முரண்களின் மோதலில் புதிய கருத்தை அடைதல்) சார்ந்த முரண்களை முன்வைத்து அம்பலப்படுத்துதல். தொடர்ந்து ஜெயமோகன் போன்ற இலக்கிய பீடங்களை, அதன் சனாதன வர்ண அதிகாரத்தை எதிர்த்து பொதியின் உரையாடல்களை வாசிப்பவர்கள் அறியமுடியும்.

(6.)         வேதாந்த மறுப்பு. தொடர்ந்து வேதாந்த, பிராமணிய, சனாதன எதிர்ப்பு என்பது பொதியின் அடிப்படையான மெய்­யியல் சார்ந்த பார்வையாகும். ஆனால், வேதாந்த எதிர்ப்பு என்பதில் சித்தாந்தச் சார்புநிலை எடுப்பதில் மறுப்பும், ஏற்பும் கொண்டிருக்கிறது எனலாம். சித்தாந்தம் குறிப்பாகப் பக்தி இயக்க நெறி என்பது, வேதாந்தை வேதாந்திகளிடமிருந்து வென்றெடுத்து அதனைத் தமிழில் தன்வயப்படுத்தும் முயற்சி என்று பார்க்க முடியும். அவ்வகையில் வேத முதன்மை என்பது சித்தாந்திகளின் ஒரு நிலைப்பாடும்கூட. பொதியின் சித்தாந்தத்திலிருந்து ஓர் இயங்கியல் பார்வையை கைக்கொள்கிறார் என்பது அவரை அதில் வேறுபடுத்தி பார்க்கக் கூடியதாக உள்ளது.

(7.)         இறுதியாக, அவர் ஆசீவகச் சார்பிலிருந்து சில உரையாடல்களை முன்வைக்கிறார். இன்று இத்தகைய உரையாடல்கள் தமிழ் மெய்­யியல் சார்ந்த உரையாடலில் முக்கியமானது.

பொதியின் மெய்யியல் சார்ந்த உரையாடல்கள் பல ஆதாரங்களை, புலப்படாத பலக் கருத்துக்களை முன் கொண்டுவந்து ஒரு விரிவான தளத்தில் பன்முகப்பார்வையுடன் முன்வைப்பதாக உள்ளது. அவரது நினைவாற்றலின் அபார சக்தியால் மொத்தத் தமிழ் வரலாற்றின் பல காலங்களுக்குள் முன்பின்னாக பயணிப்பதும், பலரது கருத்துக்களை ஒன்றாகத் தொகுத்து ஓர் உரையாடல் வெளியை கட்டமைப்பதும் முக்கியமானது. இன்னும் குறிப்பாகப் பல தமிழ் மெய்யியல் சார்ந்த உரையாடல்களை அவரது நூல்களில், தொகுப்புகளில் வாசிப்பது எதிர்காலத்திற்கான ஒரு முக்கிய ஆவணப் பதிவாக அமைந்துள்ளது. தனது மேற்கண்ட சித்தரியக் கலகப் பண்பால், இந்த 75 ஆண்டுகளில் பொதுவாழ்வில் அவர் பல இன்னல்களைச் சந்தித்துள்ளார். பல கடினமான காலங்களை கடந்து வந்துள்ளார். பல பொருளாதாரச் சங்கடங்களை கடந்து, பல ஊர்களுக்கான பயணங்களை நிகழ்த்தி, ஓர் அலைகுடி வாழ்தலைப்போல அமைந்தது அவரது வாழ்வு. வாழ்தல் இனிது, பொருள் நிரம்பியதாக வாழ்தல் அதனிலும் இனிது, என்று தனது வாழ்வை அமைத்துக் கொண்ட தோழர் பொதியை வாழ்த்துவோம். இன்னும் பல நூல்களை, தமிழில் புலப்படாத பல பகுதிகளை, புலப்படாத பலரையும் முன்வைத்து அவரது உரையாடல்கள் பல்கிப் பெருகட்டும்.

(குறிப்பு: தோழர் பொதியவெற்பன் அவர்களின் 75வது ஆண்டு பவள விழாவை ஒட்டி அவரது கலை, இலக்கிய, எழுத்துப் பணிகள் குறித்துச் சென்னைப் பல்கலைக்கழகம் நிகழ்த்திய இணைய காணொலி நிகழ்வில் நிகழ்த்திய பேச்சின் விரிவாக்கப்பட்ட உரைவடிவம்.)

- ஜமாலன்

Pin It