தகவலைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்தப்படும் காகிதத்துக்குத்தான் எவ்வளவு அழகானப் பெயர், கடிதம் என்று! உட்கார்ந்து, யோசித்து யோசித்து எழுதும் கடிதங்களைவிட, நின்றுகொண்டே எழுதும் கடிதங்கள், 'நறுக்'கென்று செய்தியைச் சொல்லிவிடுவதாக பல ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். என்றபோதும், கடிதங்கள் பலரை பெருங்கவிஞர்கள் ஆக்கியிருக்கின்றன. எழுதப் படிக்கத் தெரியாதவன் கூட, கடிதம் எழுத வார்த்தைகளைச் சொல்லும்போது, கவிஞனாகி விடுகிறான்.

முன்னணியில் இருக்கும் சில சிற்றிதழ்கள், மூத்த எழுத்தாளர்கள் தங்களுக்குள் எழுதிக்கொண்ட கடிதங்களை, அவர்கள் மற்றவர்களுக்கு எழுதிய கடிதங்களைத் தேடிப் பிடித்தும், கேட்டு வாங்கியும் 'கடித இலக்கியம்' என்ற பெயரில் வெளியிட்டு, கடிதங்களுக்கான மரியாதையைச் சிம்மாசனம் ஏற்றுகின்றன. அந்த வகையில் கி.ராஜநாராயணன், தி.க.சி., வல்லிக்கண்ணன் ஆகியோரின் கடிதங்கள் சிலாகிக்கப்படுகின்றன. மற்ற எழுத்தாளர்களின் கடிதங்களை, அவர்கள் சார்ந்துள்ள சிற்றிதழ்கள் அவ்வப்போது இடம் கிடைக்கும் பட்சத்தில் வெளியிட்டு, மகிழ்ந்து கொள்கின்றன. காரல் மார்க்ஸ், தன் காதல் மனைவி ஜென்னிக்கு எழுதிய கடிதங்கள், இன்றளவும் சிறந்தக் கடிதங்களாக ஒரு சிலரால் வர்ணிக்கப்படுகின்றன.

குழந்தைப் பிறந்தச் செய்தியைச் சொல்வதிலிருந்து, குழப்பங்களை ஏற்படுத்தும் மொட்டைக் கடிதாசி அத்தனைக்குமே கடிதம் என்றுதான் பெயர். நலன் மட்டுமே விசா¡¢க்கும் கடிதங்கள், கடன் கேட்கும் கடிதங்கள், கொடுத்தக் கடனை வசூலிக்கத் தவணை கேட்கும் கடிதங்கள், மரணச் செய்தி சொல்லும் கடிதங்கள், போட்டுக் கொடுக்கும் கடிதங்கள் என்று, பரஸ்பரம் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் கடிதங்கள் பல இருந்தாலும், மயக்கத்தைத் தரும் காதல் கடிதங்களுக்கு எப்போதுமே தனி மரியாதை தான்!

புறாக் காலில் கட்டிவிடுவது, அன்னத்திடம் சொல்லி அனுப்புவது, தோழியின் காதில் சொல்லி, அவள் வாய் மூலமாக காதலனிடம் தெரிவிப்பது, புத்தகத்துக்குள், தைரியமாகக் கையெழுத்திட்டக் கடிதம் வைத்துத் தருவது, பயந்தாங் கொள்ளிகள், கையெழுத்தில்லாமல் காதல் கடிதம் தருவது என்று பல்வேறு முறைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், தபால் மூலம் அனுப்பப்படும் கடிதங்கள், அரசாங்க முத்திரைப் பெற்றவையாகி விடுகின்றன.

இண்டர்வியூ அழைப்புக்கானக் கடிதத்தை மகிழ்ச்சியுடன் கொடுக்கும் தபால்காரருக்கு, காதல் கடிதத்தை யூகித்து, நமட்டுச் சிரிப்புடன் தரும் யுக்தியும் இயல்பாகவே தெரிந்திருக்கிறது. பெண்கள் வாசலிலும், ஆண்கள் தெரு முனையிலும் காத்திருத்தல், அதற்கான அடையாளங்களாக மாறி விடுகின்றன. வாசலையோ... தெருவையோ கடந்து செல்லும் தபால்காரரிடம், 'எனக்கு எதுவும் வரலியா?' என்று ஏக்கத்துடன் கேட்கும் கேள்விக்கு, மனசுக்குள்ளேயே அவர் முணுமுணுப்பதாக இருக்கலாம், 'அதான் உனக்கு காதல் வந்துருச்சுல்ல?' என்று.

என் வகுப்புத் தோழனின் அப்பா, எங்கள் பகுதிக்கே தபால்காரராக இருந்தவர். குட்டையான அவர், காக்கி உடுப்பணிந்து, தலையில் காக்கிக் குல்லா வைத்து, நெஞ்சில் சிகப்பு நிற வட்ட பேட்ச் அணிந்து, டயர் செருப்புத் தேய தபால்களை விநியோகிப்பார். 'தபால்' என்று அவர் எழுப்பும் குரலுடன், கடிதம் வீட்டுக்குள் சறுக்கிக்கொண்டு வந்துவிழும். தண்ணீ¡¢ல் சில்லாக்கு தவளை விடுவதுபோல, அது காற்றைக் கிழித்துக்கொண்டு, சுதர்சன சக்கரச் சுழற்சியுடன் வந்து விழும் அழகே தனி. எல்லாக் கடிதங்களையும் அவர் அப்படித்தான் சுழற்சியில் விடுவார். ஆனால் ஒருசில கடிதங்களை, சம்பந்தப்பட்டவர்கள் வாசலுக்கு வரும்வரை, நின்று காத்திருந்து அவர்கள் கையில் கொடுத்துவிட்டுப் போவார். அப்போது அவர் முகத்தில், நமட்டுச் சிரிப்பு இருக்கும்.

தபால் அலுவலகத்தில் தபால்களைப் பி¡¢க்கும்போது, காதல் கடிதங்கள் பற்றியப் பேச்சுக்கள், மற்ற தபால்காரர்களின் வேலைப்பளுவின் வலியைக் குறைப்பதாக... அவர்களின் சிரிப்பிலிருந்து தெரியும். காதல் கடிதங்களை விநியோகிக்காத தபால்காரர் உலகத்திலேயே இருக்க முடியாது. ஜனவரியிலும் அக்டோபர் நவம்பரிலும் வரும் வாழ்த்துக் கடிதங்களின் பின்னணியில், பெரும்பாலும் இருப்பவை காதலாகத்தான் இருக்க முடியும். அந்த காலத்திற்கு மட்டும் தபால்களை விநியோகிக்க கூடுதல் தபால் ஊழியர்களை நிர்வாகம் நியமிப்பது உண்டு.

இப்போதெல்லாம் தபால்காரர்களின் கைகளில் விநியோகிக்கக் கடிதங்கள் பெரிய அளவில் இருப்பதில்லை. ஒரு சில மணியார்டர்களும், சில ரிஜிஸ்டர் பார்சல்களும்தான் அவர்கள் எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். கடிதங்கள் அருகிவிட்டன. மக்களுக்கு கடிதம் எழுத நேரம் கிடைப்பதில்லை. காதல் கடிதங்களுக்கும் இது பொருந்தும். அதனால் கடிதங்களை உற்பத்திச் செய்வதையும் அரசு பெருமளவில் குறைத்துவிட்டதாம். அந்தத் தகவலே எனக்கு தபால் வில்லைகளை மதுரை தல்லாகுளம் தலைமைத் தபால் நிலையத்தில் விற்கும் பெண் சொல்லித்தான் தெரியும்.

ஜன சந்தடியுடன் இருந்த தபால் நிலையத்துக்குச் சென்று, 'இன்லேண்ட் லெட்டர் ஒண்ணு குடுங்க' என்றபோது, அந்தப் பெண் என்னை அந்நியனாகத் தான் பார்த்தாள். அவள் பார்வையே அதைக் காட்டிக் கொடுத்தது. 'இன்லேண்ட் லெட்டரெல்லாம் இப்ப வர்றதில்ல. எப்பவாச்சும்தான் அனுப்புவாங்க!' என்று ஆச்சரியப்படுத்தினாள். 'இப்ப யாரும் அதை வாங்கி எழுதிக்கிட்டு இருக்கிறதில்லை!' என்று கூடுதல் தகவலையும் சொல்லி புளகாங்கிதப்படுத்தினாள்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லோரும் தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்தும் வரிசையில்தான் நின்றிருந்தார்கள். மற்றொரு வரிசையில் நிற்பவர்கள் பிஎஸ்என்எல்., சிம் கார்டுகளை ரீ - சார்ஜ் செய்வதற்காகக் காத்துக்கொண்டு இருந்தார்கள். வரிசையில் நின்றிருந்த பெண்ணொருத்தி ரகசியக் குரலில் செல்லிடைப் பேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

அருகிலிருப்பவருக்கே கேட்காத அந்தக்குரல், தூரத்திலிருக்கும் எதிர் முனை நபர் எப்படி கிரகித்துக் கொள்வான் எனும் ஆச்சரியம் எனக்குள் எழுந்த போது, மற்றொரு பெண் செல்லிடைப் பேசியின் எண்ணும் எழுத்தும் நிறைந்த பகுதியில் கண்ணும் கருத்துமாக தன்விரல்களை நளின நர்த்தனம் ஆடவிட்டுக் கொண்டிருந்தாள்.

அவ்வளவு பெரிய தபால் நிலையத்தில் 'இன்லேண்ட் லெட்டர்' இல்லையென்று சொன்னதை, என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

நிஜம்தான். கடிதங்களின் இடத்தைத் தொலைபேசிகளும், செல்லிடைப் பேசிகளும், குறுஞ் செய்திகளும் பிடித்துக் கொண்டுவிட்டன.

இன்டர்வியூ அழைப்புகளைக் கூட, அரசு உட்பட எந்த நிறுவனமும், இப்போது கடிதம் மூலம் அனுப்புவதில்லை. எல்லாவற்றுக்கும் வலைத்தளம், மின்னஞ்சல் என்றாகி விட்டது. 'இ - மெயில் பண்ணிரு' என்பது, கடிதம் எழுது என்பதன் மாற்றுச் சொல் வழக்காகியிருக்கிறது.

நண்பனோ... காதலியோ... முன்னெப்போதோ எழுதியக் கடிதத்தை மக்கிய வாசனையுடன், வெள்ளி மீன்கள் நெளியப் படிக்கும் சுகத்தை எந்தக் குறுஞ் செய்தியும், மின்னஞ்சல் கடிதமும் கொடுத்துவிட முடியாது.

வீட்டுக்குள் நுழைய முற்பட்டபோது, தபால்காரரின் குரல் என்னை வசியப்படுத்தி நிறுத்தியது. பரிசு கொடுத்து ஆச்சரியப்படுத்தும் சாந்தாகிளாஸ் தாத்தா போல என்னிடம் கடிதம் ஒன்றை நீட்டனார், அவர்.

வெள்ளை நிற அட்டையின் ஒரு புறத்தில், படத்துடன் கூடிய கருமாதி அழைப்பு அதில் அச்சிடப்பட்டிருந்தது. மூலையில் கருப்பு பூசப்பட்டிருந்தது.

அட... இதுக்காவது கடிதத்தைப் பயன்படுத்துறாங்களே எனும் சந்தோஷம், எனக்குள்.

அதைக் கிழிக்க மனம் வரவில்லை.

 - எஸ். அர்ஷியா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 

Pin It