பத்தொன்பதாம் நூற்றாண்டின் வளர்ச்சி என்பது தமிழ்ச் சமூகத்தின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியாகும். இதனை ‘மறுமலர்ச்சி’ (அல்லது) ‘புத்தொளி காலமாக’ குறிப்பிடுகிறோம். இந்த நூற்றாண்டினைப் பொருண்மை ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் தொழில்நுட்ப வளர்ச்சியோடும் தனிப்பட்ட ஆளுமைகள் சார்ந்தும் என எந்த வகைகொண்டும் விரிவாக விவாதிப்பதற்கான ஆவணங்கள் உள்ளன. இதில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் செயல்பட்ட ஆளுமைகளுள் மிக முக்கியமானவராகக் கருதப்படக் கூடியவர் சிதம்பரம் இராமலிங்கம் எனும் வள்ளலார். தற்போதைய தமிழ்ச் சூழலில் பல்வேறு சிந்தனை மரபை கொண்ட ஒவ்வொருவரும் தங்களது கண்ணோட்டத்தில் வள்ளலாரைப் பற்றிப் பதிவு செய்கின்றனர். ஆனால் வெகுசன மக்கள் மத்தியில் சைவ சமயத்தைச் சார்ந்த சைவ அடியாராகவே, இராமலிங்கசுவாமியாகவே வழிபாடு செய்யப்பட்டு வருகிறார். இராமலிங்க அடிகள் மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், தாயுமானசுவாமிகளைப் பின்பற்றித் தனது பாடல்களைப் பாடினாலும் அவரது ஆறாவது திருமுறையைப் பலர் ஏற்றுக் கொள்வதில்லை.

இன்றைய பொதுவெளியில் இராமலிங்க அடிகளாரைச் சைவ அடையாளத்தோடு மட்டுமே பொருத்திப் பார்க்கின்ற தன்மை தமிழ்ச் சூழலில் எப்படி உருவாகி வளர்ந்தது என்பதைத் தர்க்கப்பூர்வமாகப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தைக் கவனப்படுத்துகிறது இக்கட்டுரை. இதனை வள்ளலாரின் கொள்கைகள், அவரது படைப்புகள், வள்ளலார் குறித்து ஆய்வு செய்த ஆளுமைகள் ஆகியவற்றோடு அச்சு ஊடக மரபில் வள்ளலாரின் ஆக்கங்கள் உருவாகி வளர்ந்த தன்மைகள்ஆகியவற்றையும் இணைத்து நோக்கும்போது இராமலிங்க அடிகளாரும் சைவமும், சைவமும் இராமலிங்க அடிகளாரும் இணைந்து இயங்குகின்ற முறைமையை அறிய இயலும்.

அருட்பெருஞ்சோதியும் அன்பும்

‘அன்பே சிவம்’ என்பது சைவக் கொள்கை. ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ என்பது இராமலிங்கரின் கொள்கை. சைவத்திலிருந்து விலகி வாழ்ந்தவரில்லை இராமலிங்கர். ஆனால் அன்பு என்பதைக் கருணை, இரக்கம் என்று பரந்த பொருளில் புரிய வைக்கக்கூடிய ’ஆன்மநேய ஒருமைப்பாட்டு நெறியை’ புதிய சொல்லால் வெளிப்படுத்தியவர். அதுதான் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்பதாகும். அன்பு என்ற சொல்லினைச் சொல்லும்போது இராமலிங்கரின் பொருளை நாம் நேரடியாகப் பெற இயலாது. மேலும் இராமலிங்கர் தன்னுடைய சிறுவிண்ணப்பத்தில், சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம் என்ற தலைப்பில் “எல்லாமுடைய அருட்பெருஞ்சோதி அற்புதக் கடவுளே | இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் வருணம் ஆசிரம முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்” (உரைநடை நூல்கள், 1999, ப. 68) என்று குறிப்பிடுகின்றார். இதில் சைவத்தின் அன்பையும் அருட்பெருஞ்சோதியின் தன்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் கருணை என்பதில் தம்மிடம் உள்ளதை பிறர்க்கு கொடுத்து மகிழ்வதும் பிறர்க்கு வரும் துன்பத்தைக் கண்டு இரங்கி உதவி புரிதலுமே ஆன்ம நேயமாகப் புரிந்து கொள்ள முடியும்.

வள்ளலாரும் தமிழ் ஆளுமைகளும்

தமிழ் ஆராய்ச்சியிலும் வள்ளலார் பற்றிய புரிதலிலும் தனித்து விளங்கக் கூடிய தமிழ் ஆளுமைகள் வள்ளலாரை எப்படிப் புரிந்து வைத்திருக்கின்றனர் என்பது மிக முக்கியமானதாகும். ஏனென்றால் தமிழ் ஆய்வு வரலாற்றில் தவிர்க்க முடியாததாக இருக்கும் ஆளுமைகளின் கருத்துகள் வள்ளலாரைப் பற்றிய ஆய்விலும் புரிதலிலும் முக்கியத்துவம் பெறும். இதனை, திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ., மு. அருணாசலம், கா. அப்பாதுரையார் ஆகியோர் இராலிங்க அடிகளைப் பற்றிக் கூறும் கூற்றுகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

திரு.வி.க. இராமலிங்கரை அவர் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகளோடு ஒப்பிட்டுக் கூறுகிறார். ஆனால் அந்த ஒப்பிடுதலைக் கொல்லாமைக் கோட்பாட்டோடு ஒப்பிட்டு அத்தன்மை கொண்டவராக இராமலிங்கரைக் குறிப்பிடுகிறார். இதுபற்றிய திரு.வி.க.வின் கருத்தானது “இராமலிங்க வள்ளலார் அருளிச் செய்த திருவருட்பாவில் அவர் காலத்தில் வாழ்ந்த பெரியோர்களின் கருத்துகள் மலிந்துக் கிடக்கின்றன. வள்ளலார் அருட்பா அவ்வளவில் கட்டுப்பட்டு நிற்கவில்லை. பண்டைக்காலச் சான்றோர்களின் உள்ளக் கிடக்கைகளும் அருட்பாவில் உண்டு.

“ வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட

மரபினில் யானொருவ னன்றோ?

என்பது வள்ளலாரின் திருவாக்கு.” (வள்ளலார் பன்முக வாசிப்பு (வ.ப.மு.வா), 2018, ப. 25) இதில் வாழையடி வாழை என்பதற்கு திரு.வி.க. கொல்லாமையை வலியுறுத்துகின்ற அன்புநெறி சார்ந்தவராக வள்ளலாரைக் குறிப்பிடுகின்றார். அதில் “அம்மரபு அஹிம்சா தர்ம மரபு. இதற்குக் கால்கொண்டவர் விருஜப தேவர். அவரதுகாலம் தெரியவில்லை. அது சாத்திரக் காலம் கடந்தது. பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர் தோன்றியவர் என்பது நன்கு தெரிகிறது. அவரே உலகிற்கு முதன்முதலில் அஹிம்சையை அறிவுறுத்தியவர். இவ்வஹிம்சையை காலதேச வர்த்தமானத்துக்கு ஏற்றவாறு பல பெரியோர்களால் வளர்க்கப்பட்ட இந்நாளில், மக்கள் கூட்டத்தின் வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் அவ்விழுமிய அறத்தை ஓம்பினர். அருட்பா என்னும் கனியினின்று வடியும் சாறு கொல்லாமை என்னும் பேரறமாகும்” (மேலது) என்கிறார் திரு.வி.க..

வள்ளலார் குறித்து தெ.பொ.மீ. எழுதிய மரணமில்லா ஒளிமயமான வாழ்க்கை என்ற கட்டுரையில் இராமலிங்கர் கொள்கை அன்பினை வலியுறுத்தும் தன்மை உடையவை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அதில் “இராமலிங்கரைப் பொருத்தவரை கடவுள் அன்பாகவே இருக்கிறார். இது அவருடைய முன்னோடி திருமூலர் சொல்வது போன்று அன்பே கடவுள் என்று இருந்தாலும்: அது கண்மூடித்தனமான அன்பு கிடையாது. பிரபஞ்சமளாவிய உன்னதமான இறைவனில் இருள் என்பதே கிடையாது. இராமலிங்கருக்கு அக்கடவுளே அருட்பெருஞ்ஷோதியும் ஒளிமயமான ஒப்பற்ற அன்புமாவர்” (மேலது, ப.32) என்று குறிப்பிடுகின்றார்.

பேரா. வையாபுரிப்பிள்ளை இராமலிங்க அடிகளைத் தமது ஆய்வு அணுகுமுறைமையின் மூலம் நன்கு புரிந்து வைத்திருக்கிறார். வள்ளலார் எப்படி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபராக இருந்தார். அதற்குக் காரணமாக இருந்த செயல்பாடு எது? தமிழ் பக்தி மார்க்கத்தில் வள்ளலார் கரைந்து போனதும் வள்ளலார் பக்தி மார்க்கத்தில் தமிழ் மக்கள் உருகிப் போனதை வையாபுரிப்பிள்ளை எப்படிப் பார்க்கிறார்? வள்ளலாரின் பக்தித்திறம் சிறக்கக் காரணமாக இருந்தது எது? என்ற மூன்று வினாக்களுக்கான விடையை வையாபுரிப்பிள்ளையிடம் தேடினால் சுடர்மணியாக வள்ளலார் தெரிகிறார். வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ச்சுடர்மணிகள் கட்டுரைத் தொகுப்பில் ‘இராமலிங்க சுவாமிகள்’ தலைப்பில் எழுதியுள்ளார். அதில் மேற்கண்ட வினாக்களுக்கான விடையைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.

- இராமலிங்கரின் “தர்க்க வெற்றிகளும், பிரசங்கச் சிறப்பும் எண்ணுந்தோறும் இனித்து உள்ளத்தை யுருக்கும் செஞ்சொற் கவிதையின் பெருக்கமும் தூய ஒழுக்கத்தின் மேம்பாடும் தமிழ் மக்களைப் பெரிதும் வசிகரீத்தன.” ( 2012, ப. 183)

- “இராமலிங்க சுவாமிகள் வெகுகாலமாகத் தமிழ் நாட்டிற் கரைபுரண்டு, பெருகிவந்த பக்திப் பெருவெள்ளத்தை அணைகோலி, தமது கவிதா மார்க்கத்திற்குச் செல்லவிட்டு, தம் கவியின் இசையினிமையால், தமிழ் மக்கள் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டு, இல்லறந்துறந்து வாழ்ந்தவர்; ஒரு பக்த பரம்பரைக்குத் தலைவராய்த் திகழ்ந்தவர்” (மேலது, ப.188)

- தொழுவூர் வேலாயுத முதலியார் “இவர் மிகுந்த பக்தி சிரத்தையுடன் இராமலிங்க சுவாமிகள் செல்லுமிடங்களுக்கெல்லாம் சென்று இலக்கண, இலக்கிய விஜயங்களிலெல்லாம் சுவாமிகளுக்கு ஊன்றுகோலாயிருந்து, அவர்களுடைய சரித்திரம் பரக்க வழங்குவதற்கும் காரணமாயிருந்தனர். இவர் போன்ற சிஷ்யர்கள் சுவாமிகளது புகழமுதைத் தமிழ்நாடு முழுவதும் பருகி இன்புறும்படி செய்து வந்தனர்” (மேலது, ப. 183)

வள்ளலார் குறித்த வையாபுரிப்பிள்ளையின் கட்டுரையில் இராமலிங்க அடிகளின் ஆறாவது திருமுறை குறித்த நிலைப்பாடு என்ன என்பது பற்றி எந்தக் கருத்தும் இடம்பெறவில்லை. ஆனால், வள்ளலாரின் செயல்பாடு தமிழகத்தில் நிலைபெற்ற முறைமையை ஆய்வுப் பூர்வமாக விளக்கியுள்ளார்.

கா. அப்பாதுரையார் சன்மார்க்க நூற்றாண்டு மலரில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் “ஒரு குறிப்பிட்ட களத்தில் சீர்திருத்தவாதிகள் நடத்தும் சீர்திருத்தம் சமயசார்பற்ற செயல்பாடாகும். அவர்களுடைய இயக்கம் மதத்தோடு தொடர்புடையது கிடையாது. ஆனால் இராமலிங்க அடிகளாருக்குச் சமூக சீர்திருத்தம் என்பது சமய நெறியின் அங்கமாகும். சொல்லப்போனால் அதுவே மெய்ஞான அனுபவத்தின் உச்சகட்டம். அவருடைய களப்பணி தன்னுடைய முன்னோடிகளைவிட ஒருபடி முன்னேறிச்சென்று உலகப் பொதுமறையான திருக்குறளில் சொல்லப்பட்ட மானுடம் என்னும் மெய்ஞானத்திற்குள் தன் இலக்கை நிர்ணயித்தது.” (ப.மு.வா., ப. 56) என்று குறிப்பிட்டுள்ளார். இதில் அப்பாதுரையார் சீர்திருத்தவாதிகள் என்றாலே சமயச் சார்பற்று இருக்கும் நிலையில் வள்ளலார் சமயச் சார்புடைய சீர்திருத்தவாதி என்று அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருப்பது கவனத்திற்குரியது. சீர்திருத்தவாதிகளுக்கு வள்ளலார் விலக்கானவர் என்று கூறுவது போலத் தோன்றுகிறது.

மு. அருணாசலம் இராமலிங்க அடிகளை மேற்கண்ட நால்வரும் அணுகிய முறைமையினின்றும் முற்றிலும் மாறுபட்டுள்ளார். அவர் வள்ளலாரின் சமகாலத்தில் வாழ்ந்த மிக முக்கிய ஆளுமைகளான மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர் ஆகியோருடன் ஒப்பிட்டும் தமிழகக் களநிலவரத்தை உணர்த்தும் விதத்தில் Saint Ramalinga - His Times and Messages என்ற கட்டுரையினை எழுதியுள்ளார். அதில் “தமிழ் இலக்கிய வரலாற்றில் வேறு எந்த அடியார் அல்லது இலக்கியத் துறையைச் சேர்ந்தவர்களின் கருத்துகளும் இந்த அளவிற்குத் திரித்து நடைமுறைக்கு அப்பாற்பட்டு மூடநம்பிக்கைகளாக மாற்றம் அடைந்ததில்லை. இவரது காலத்தைச் சேர்ந்த மற்ற இருவரின் வாழ்வு குறித்து இப்படிப்பட்ட புனைவுகள் ஏற்படவில்லை. இராமலிங்கம் என்பவர் வெறும் இராமலிங்கம் பிள்ளை மாத்திரமே. ஆனால் அவரது பாடல்களில் இருந்த எளிமை மக்களை என்றும் இல்லாதது போல் ஈர்த்தது. எனவே அவரை சுவாமி என்றும் துறவி என்றும் அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அவர் குறித்துப் பல கட்டுக்கதைகள் தோற்றுவிக்கப்பட்டு அவரை ஒரு தெய்வீக சக்தியுடையவர் எனவும் பல அற்புதங்களை நிகழ்த்தக் கூடியவர் எனவும் மக்கள் நம்பத் தொடங்கினர். அவர் மக்களின் நோய்களையும் வேதனைகளையும் துடைத்தெறியும் வல்லமை படைத்தவர் என நம்பத் தொடங்கினர். அவரது பாடல்களைப் படித்து கருத்துகளை நடைமுறை வாழ்வில் கடைபிடிப்பதைவிட இந்தக் கட்டுக்கதைகளை நம்புவது எளிதான காரியமாக இருந்தது” (ப.மு.வா.,ப.47) என்று பதிவு செய்துள்ளார். மேலும் இக்கட்டுரையில் சைவ சமயத்தை முறையாகப் பின்பற்றி வாழ்ந்தவராகவே மு. அருணாசலம் குறிப்பிடுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

மேற்கண்ட ஐந்து தமிழ் ஆளுமைகளும் வள்ளலாரைத் தங்களது ஆய்வியல் நெறியில் நின்று இராமலிங்க அடிகளின் பன்முகத்திறத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். அதனுள் மு. அருணாசலம் சமகால நிலவரத்தோடு வள்ளலாரையும் அவரது சைவக்கொள்கைகளை விளக்கிச் செல்ல மற்ற நால்வரின் கருத்திலும் நேரடியாகவோ, மறைபொருளாகவோ சைவ சமயத்தின் தாக்கம் இழையோடிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இது வள்ளலார் குறித்த ஆய்வு மேற்கொள்ளும் எதிர்கால ஆய்வாளரிடையே தாக்கத்தை ஏற்படுத்தும்.

இராமலிங்கரின் ஆக்கமும் சைவ அச்சுப் பண்பாடும்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் சைவ நூல்களின் அச்சுப் பண்பாடு என்ற ஆய்வில் மேற்கொள்ளப்பட்ட அத்தனைப் பொருத்தப்பாடுகளும் இராமலிங்க அடிகளின் ஆக்கங்களுக்கும் பொருந்தி வருகின்றன. ஒரே ஒரு வேறுபாடுதான் எஞ்சி நிற்கிறது. அது சைவ வழிபாடாகப் பண்பாடாக உருவானது. இது தனிமனித வழிபாடாகப் போற்றப்படுகிறது. இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. இந்த கட்டுரையின் தொடக்கத்தே குறிப்பிட்டதைப் போல இது சரியா? தவறா? என்று விவாதிப்பதைவிட அது உருவாகி வளர்ந்த தன்மையினைப் புரிந்து கொள்வது அவசியம். இந்தப் பின்னணியில் அச்சு சார்ந்த மரபில் வள்ளலாரின் ஆக்கங்ளைக் காண்போம்.

வள்ளலார் ஆக்கங்கள் எப்படி அச்சுக்குள் வந்தது, அதில் வள்ளலார் இருக்கும் போது அச்சுக்கு வந்தது எவை? அவரது இறப்பிற்குப்பின் வந்தது எவை? ஆறாவது திருமுறை எப்போது யாரால் அச்சிடப்பட்டது? ஆறு திருமுறைகளும் சேர்ந்து அச்சிட்டு எத்தனைப் பேர் வெளியிட்டுள்ளனர்? வள்ளலார் ஆக்கங்களோடு அவரது வரலாறு மற்றும் பிற செய்திகளை இணைத்தும் சைவ நாயன்மார்களின் பாடல்களோடு இராமலிங்கரின் பாடல்களைச் சேர்த்தும் நூல்களை வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற தன்மை எப்படி உருவாகி வளர்ந்துள்ளது? என்ற எண்ணற்ற கேள்விக்கான விடையை “சிதம்பரம் இராமலிங்கம் எனும் வள்ளலார் கைநூல்”(சி.ரா. வ.கை.) என்னும் நூலினை அச்சு ஊடகப் பின்புலத்தில் நோக்கினால் மேற்கண்ட கேள்விக்கான பதிலை நோக்கிப் பயணிக்க முடியும்.

முதன்முறை அச்சாக்கப் பின்னணி

வள்ளலார் பாடல்களை நூலாக அச்சிட இறுக்கம் இரத்தின முதலியார் ஏழு ஆண்டுகள் தவமிருந்து வள்ளலாரிடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளதை 1867ஆம் ஆண்டுதிருவருட்பா முதற்புத்தகத்தின் வாயிலாக அறிய முடிகின்றது. இதில் வள்ளலார் மற்ற உயிர்களிடத்தில் காட்டிய கருணையை பாடல்கள் வெளியீட்டிலும் காட்டச் செய்துள்ளார் இரத்தின முதலியார். இதனை, “திருவருட்பாவை வெளியிடுவதில் ஏழாண்டுகள் இரத்தின முதலியார் வள்ளலாரிடம் அனுமதி வேண்டி தவங்கிடந்தார். இறுதியில் நாளும் ஒருவேளையே உண்பதென்று நோன்பு பூண்டு வருந்தி அரிதின் முயன்று திருவருட்பாவை முதன்முதலில் அச்சிட்டு வெளிக்கொணர்ந்தார்.”(சி.ரா.வ.கை, ப. 31). இதில் நான்கு திருமுறைகள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் ‘திருவருட்பா வரலாறு’ என்னும் தலைப்பில் அறுபத்தாறு பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சைவ நாயன்மார்களின் பாடல்களை அவர்களது வரலாற்றோடு அச்சிடும் மரபு சைவ நூல்களில் பின்பற்றும் முறைமை வள்ளலாரின் திருவருட்பாவின் முதல் பதிப்பில் பின்பற்றப்பட்டிருப்பது நோக்கத்தக்கது.

அருட்பாவின் ஆறாந்திருமுறை அச்சாக்கப் பின்னணி

முதல் ஐந்து திருமுறைகளை அச்சிட்டு வெளியிட உதவிய தொழுவூர் வேலாயுத முதலியார், இறுக்கம் இரத்தின முதலியார், புதுவை வேலு முதலியார், சிவானந்தபுரம் செல்வராய முதலியார், மயிலை சிக்கட்டி சோமசுந்தர செட்டியார் முதலிய யாவரும் ஆறாம் திருமுறையை அச்சிட்டு வெளியிட விரும்பவில்லை. இதனை, “சமரச வேதசன்மார்க்க சங்காபிமானிகளாகிய வேலூர் பத்மநாப முதலியார், பெங்களுர் இராகவலு நாயகர் வேண்டுகோள்படி, சென்னைக் கவர்மெண்டு நார்மல் பாடசாலைத் தமிழ்ப்புலவர் சோடசாவதானம் தி.க. சுப்பராயரெட்டியார் பார்வையிட்டு, மேற்படி சமரச வேதசன்மார்க்க சங்காபிமானி, திரிசிரபுரம் ம.லோகநாத செட்டியாரால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது” (மேலது, ப. 33). 1885ஆம் ஆண்டு முதன்முதலாக ஆறாம் திருமுறை அச்சிடப்பெற்றது.

வள்ளலார் வரலாறு கட்டமைப்பும் அச்சு ஊடகமும்

வள்ளலாரின் வரலாற்றைக் கட்டமைப்பதில் பதிப்புகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதனைப் பிருங்கி மாநகர இராமசாமி முதலியார் தாம் கொண்டு வந்த பதிப்புகளின் வழியாகச் செய்துள்ளார். இவரது செயல்பாடுகள் சைவ அச்சு நூல்களை வெளியிட்ட முறைமைகளோடு ஒத்த தன்மையுடையதாயிருக்கின்றது. அதில் சைவ நூல்களில் சைவ நூல்களோடு தொடர்புடைய பிற தகவல்களையும் இணைத்து நூலாக்குவர். அதே தன்மையை இவரும் பின்பற்றியுள்ளார். அப்பதிப்பில் “ஆறு திருமுறைகளும் சேர்ந்த இம்முதற்பதிப்பில்தான் வள்ளலாரின் திருவுருப்படமும் இராமசாமி முதலியாரால் இருபத்தாறு பக்கங்களில் எழுதப்பட்ட வள்ளலாரின் வரலாறும் (இராமலிங்க பிள்ளையவர்களின் சரித்திரச் சுருக்கம்) முதன்முதலில் அச்சிடப்பெற்றன. இவ்வரலாறு இராமசாமி முதலியாரால் பின்பு பதிப்பிக்கப் பெற்ற 1896ஆம் ஆண்டு திருவருட்பா பதிப்பிலும், பின்னர் வெளிவந்த பி.வே. நமசிவாய முதலியார், ஓ. ஆதிமூல முதலியார் ஆகியோர் பதிப்பித்த பதிப்புகளில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. இவற்றுடன்தொழுவூரார் பாடிய திருவருட்பா வரலாறும், பொன்னேரியார் பாடிய திருவருட்பிரகாச வள்ளல் ஞானசிங்காதன் செங்கோலாட்சி, தண்டபாணி சுவாமிகள் பாடிய அனுபவப் பதிகம், பிருங்கியார் எழுதிய திருவருட் பிரகாச வள்ளல் திருவுருத்தன்மை விண்ணப்பம் ஆகியவை நூலினிறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. 1891இல் ஆடூர் சபாபதி சிவாசாரியாரால் பதிப்பிக்கப்பட்ட வள்ளலாரின் குடும்பகோரம் என்னும் சிறுபிரசுரமும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது”(மேலது, ப. 35). இது தனிப்பட்ட இராமலிங்க அடிகளார் வரலாறாக மட்டுமில்லாமல், அவரைப் பின்பற்றுபவர்கள், வழிபடுபவர்கள், அவரது திருவுருவக்கட்டமைப்பு ஆகிய அனைத்தும் திருவருட்பா மூலத்துடன் கூடிய பதிப்பாக மாறிவிடுகிறது. வெறும் திருவருட்பா மூலப்பிரதியை படிப்பதும் புரிந்துகொள்வதும் என்பதிலிருந்து இப்பிரதி முற்றிலும் மாறி விடுகிறது. இத்தன்மை அச்சு ஊடகத்தாலே சாத்தியப்படுகிறது.

திருவருட்பா சுத்தப்பிரதி உருவாக்கப் பின்னணி

பிருங்கி இராமசாமி முதலியார் 1896இல் திருவருட்பா முழுவதையும் பதிப்பித்துள்ளார். அதில் பதிப்பிப்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். அதில் பொருளாசைக்காக அச்சிடவில்லையென்றும் சுத்தப்பிரதியாக அனைவருக்கும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு பதிப்பிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமகாலத்தில் வெளிவந்த திருவருட்பா பிரதிகளே அவரை இப்பணியைச் செய்ய வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதில் “இச்சென்னையின்கண் எழுத்துவாசனை யின்னதென்றறியாத சில பாலியச் சிறுவர்கள், பொருளாசையென்னும் பேய்பிடித்தாட்டுவதன் மயமாய் நின்று, முன்னச்சிட்டு வெளிப்படுத்தியாக, மேல்கண்ட (இவரது) பிரதியுள்ளதை மட்டும், பெரும்பிழையாகவும் தாறுமாறாகவும் அச்சடுக்கி, ஒன்றுக்குமுதவாத (புரூப்ஷீட்) என்னும் மட்டக்கடிதத்திற் பதிப்பித்திருக்கின்றனர். அப்பதிப்பின் பிழைகளையும் குறைவு நிறைவுகளையும் யான் வெளிப்படுத்தியிருக்கும், ‘சூளையார் பதித்த, தெரிபிழை விளக்கமென்னும்’ சிறு புத்தகத்தாலறியலாம். அதைக் கண்ணுறு மொவ்வொருவரும், அப்புத்தகம் இனாமாகக் கிடைப்பதாயிருந்தாலும், அதைக் கைநீட்டிவாங்கவே கருதார்களென்பது எனது கொள்கை. ஏனெனில் பெரியோர் வாக்கானெழுந்த திருப்பாசுரங்களைப் பிழைபடப் படிப்பவர்களுடைய கழுத்தில் எமதூதர்கள் தமது பாசக்கயிற்றைக் கட்டித் தாறுமாறாக விழுத்து வருத்துவரென்னும் பிரமாணத்தைக் கருதியேயாம். இவையனைத்து முணர்ந்த நண்பர்களனைவரும், சிவாநுபூதிச் செல்வராய் விளங்கும் அருட்பெருஞ்சித்தரோதிய வித்திருட்பாச் சுத்தப்பிரதியை அன்புடன் கைக்கொண்டு பிரதிதினமும் பாராயணஞ் செய்து திருச்சிற்றம்பலமுடையார் திருவருள் பெறுவார்களாக.” (மேலது, பக் 36 - 37) என்று குறிப்பிட்டுள்ளார். அதில் தவறான பிரதிகளைப் படிக்க மாட்டார்கள் என்பதற்கு இப்பதிப்பாசிரியரின் விளக்கம் பயமுறுத்தும் வகையில் உள்ளது.

இராமலிங்கபிள்ளையும் இராமலிங்க சுவாமியும்

சிதம்பரம் இராமலிங்கம்பிள்ளை என்ற பெயரானது ‘சிதம்பரம் இராமலிங்க சுவாமி’ என்று குறிப்பிடப்பட்டது பற்றிய தகவல் 1924ஆம் ஆண்டு ச.மு. கந்தசாமிப்பிள்ளையால் கொண்டு வரப்பட்ட பதிப்பினில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பதிப்பில் வள்ளலாரோடு வாழ்ந்தவர்கள் பலரை நேரில் சந்தித்து வள்ளலாரின் வாழ்ககை வரலாற்றை எழுதியுள்ளார். இதுவே வள்ளலாரின் உண்மையான வரலாறாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மேலும் இப்பதிப்பில் சீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம், தமிழ் என்பதன் உரை, வள்ளலார் உபதேசித்த உண்மைநெறி ஆகியவற்றை நூலின் முற்பகுதியில் சேர்த்துள்ளார். இந்தப் பகுதி வள்ளலாரை வாசிப்பவருக்கு முக்கியமானபகுதி. இதுவே ஒரு வாசகனுக்கு வள்ளலார் எப்படிப்பட்டவர் என்பதை உணர்த்துவதாகும். இந்த நூலில்தான் முதன்முதலாக வள்ளலாரின் பெயர் மாற்றி அழைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் “வடலூர் சத்தியஞான சபையின் படம் முதன்முதலாக இப்பதிப்பில் அச்சிடப் பெற்றதோடு, எல்லாவற்றிற்கும் மேலாக வள்ளலாரின் பெயரை ‘சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை’ என்று அச்சிடும் முறையை நீக்கி ‘சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள்’ என்று முதன்முதலில் இப்பதிப்பில்தான் அச்சிடப்படுகிறது” (மேலது, பக். 40 ­41) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திரட்டுகள் மற்றும் வடிவம்சார் இராமலிங்க அச்சு நூற்கள்

திரட்டுகள் மற்றும் வடிவம் சார்ந்த நூல்கள் என்பவை பயன்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படுபவை. இவ்வகையான வாசிப்புமரபு என்பது அச்சு ஊடகத்தின் அறிவுக்கொடையாகும். அச்சு ஊடகம் இல்லையென்றால் இதுபோன்ற வாசிப்பு அனுபவம் சாத்தியமில்லை. சைவ அச்சு நூல்களில் இவ்வகையான வாசிப்பு மரபு வளமாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.(பார்க்க - தமிழ் அச்சுப்பண்பாட்டு வரலாறு சைவ சமயம் (1800-1950)) அதனுடைய உடனிகழ்வாகவே வள்ளலாரின் வடிவம்சார் நூல்களையும் நோக்க வேண்டும்.

இராமலிங்க அடிகளாரின் வடிவம்சார் நூல்கள் திரட்டுகள், கையடக்கப்பதிப்பு, பையடக்கப் பதிப்பு மற்றும் சிறுவெளியீடுகளாக வெளிவந்துள்ளன. அதில் இராமலிங்க சுவாமிகளின் சிவநாமாவளித்திரட்டு என்னும் நூல் உருவாக்கப்பட்ட நோக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் “வள்ளலார் பாடிய திருவருட்பா ஆறு திருமுறைகளினின்றும் திரட்டப்பட்ட சிவபக்திப் பாடல்களைத் தொகுத்து முப்பத்தாறு பக்கங்களில் சிவநேயச் செல்வர் யாவரும் சதாபடனஞ்செய்து சிவனருள் பெரும் நோக்கத்தோடு சிறுவெளியீடாக அதிக சொற்ப விலைக்கு இந்நூல் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நூலின் முகப்பு அட்டையில் “சிவநாமாவளித்திரட்டு என்று வழங்கிவந்த பெயரை மாற்றி வெவ்வேறு பெயர்களமைத்துச் சிலர் அச்சிட்டிருப்பதால் இச்சுத்தமான பதிப்பைக் கவனித்து வாங்கும்படிக் கோருகின்றனன்” (மேலது, ப. 87) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூல்களில் ‘சிவநாமவளித்திரட்டு’ என்று கூறாமல் ’நாமவளித்திரட்டு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது.

திருவருட்பாத் திரட்டு திரட்டப்பெற்றதின் நோக்கம், திரட்டப்பெற்ற முறைமை, திரட்டப் பெற்றதகான காரணம் ஆகியவற்றை அந்நூலின் முன்னுரையிலிருந்து அறிய முடிகின்றது. அதில் “தொழுவூர் வேலாயுத முதலியார் நமது இராமலிங்க சுவாமிகள் மீது வைத்துள்ள அன்பின் மிகுதியை நாம் தெரிந்து கொள்ளுமாறு மிகச் சிரமத்தோடு பிழையின்றி அச்சிட்டிருக்க, நாம் அவற்றிற் சிலவற்றையெடுத்துத் திருவருட்பாத்திரட்டு, என்று பெயர்புனைந் தச்சியற்றிய தெற்றுக்கெனின் அன்னோர் ஒரே கட்டமாகப் பதிப்பித்த ஆறு திருமுறைகளையும் வாங்குதல் தணிகர்கே இயலுமன்றி ஏனையோர்க்கு கஷ்ட சாத்தியமாதல் பற்றியும், இது சொற்சுவை பொருட்சுவைகளும் சுவாநுபூதியும் அமைந்த தோத்திரமாக விருத்தலால், ஒவ்வொருவரும் இதனைப்பெற்று பாராயணஞ் செய்ய வேண்டுமென்னும் கருத்தானும், பல்லோர் இவ்வாறு பதிப்பித்துத்தரக் கேட்டுக்கொண்டமையானும் இந்நூலைப் பிழையின்றி அச்சிட்டுப் பூச்சிக்கத்தக்க அழகிய நான்கு திருவுருவப்படங்களும் மமைத்து முடித்தோம்” (மேலது, பக் 87-88) என்று குறிப்பிட்டுள்ளார்.

தேவாரத் திரட்டுகளோடு இராமலிங்க அடிகளின் பாடல்களையும் இணைத்து சைவத்திரட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ம. மாதவகிருஷ்ண முதலியார் உருவாக்கிய தேவாரத் தோத்திர திரட்டில், “இஃது சைவசமயாசாரிகளாகிய நால்வரது சரித்திரமும் நால்வர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத் திருவாசகத் திருமுறைகளினின்றும் தாயுமானவர் திருப்பாடல்களினின்றும், இராமலிங்க சுவாமி திருவருட்பாவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனவற்றை ஒருங்குசேரத் திரட்டி” (மேலது, ப. 91) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சைவ நூல்கள் அச்சிட்டு பரவலான காலத்தில் இராமலிங்க அடிகளின் நூல்களும் பரவலாக அச்சாக்கம் பெற்றுள்ளன. சைவத்திரட்டு நூல்களில் இராமலிங்க அடிகளின் பாடலும், இராமலிங்கர் பாடலுக்கு ‘சிவநாமாவளித்திரட்டு’ என்று பெயர் சூட்டுதலும் நிகழ்ந்துள்ளதை மேலே உள்ள திரட்டுகளின் மூலம் அறிய முடிகின்றது.

தொகுப்பாக,

- சைவக் கொள்கையான அன்புநெறி, வள்ளலாரிடம் கருணையாகவும் இரக்கமாகவும் வெளிப்பட்டுள்ளது. ஆனால் அன்பு என்பதனை நேரடியாகக் கருணை, இரக்கம் என்று உணர முடியவில்லை.

- வள்ளலாரைத் திரு.வி.க. கொல்லாமைக் கொள்கை முன்னோடியாகவும், தெ.பொ.மீ. அன்பு நெறிப் பரப்பாளராகவும் வையாபுரிப்பிள்ளை தமிழ்ப் பக்தி மரபை உள்வாங்கியவராகவும் கா. அப்பாதுரையார் சீர்திருத்தவாதிகளுள் சமய சீர்திருத்தவாதியாகவும் மு. அருணாசலம் துறவியாகவும் இருந்துள்ளார் என்பதைத் தங்களது கருத்துகளாகப் பதிவு செய்துள்ளனர். இதில் ஆறாம் திருமுறை குறித்து எந்த கருத்தையும் யாரும் பதிவிடவில்லை.

- பத்தொன்பதாம் நூற்றாண்டின் சைவ மரபின் அடையாளமாக வள்ளலார் கட்டமைக்கப்பட்ட தன்மையை, சைவ வழிபாடு சார்ந்தும் சைவ அச்சுப்பண்பாடு சார்ந்தும் பதிவு செய்யப்பட்டுள்ளதை வள்ளலாரின் அச்சு ஆக்கங்களோடும் வழிபாட்டு முறைமையோடும் தொகுத்து நோக்கும்போதும் வளமாகவே வெளிப்பட்டுள்ளதைத் தரவுகளின்வழி அறிய முடிகின்றது.

அன்புநெறி சைவக் கொள்கை மூலமும் அறிஞர்களின் கருத்துகளின் வழியும் அச்சு ஊடகத்தின் மூலம் வள்ளலார் பரவியிருக்கும் நிலையினையும் இணைத்து நோக்கினால் வள்ளலாரின் சைவ நேய ஒருமைப்பாடு தமிழகத்தில் வலுவாக நிலைப்பெற்றுள்ளதை தரவுகளின்வழி அறிய முடிகின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ்ச் சமூகத்தில் மிக முக்கியமானபுலமையாளர்களாகச் செயல்பட்ட சைவப் புலமையாளர்கள் பல்வேறு நெறிகளையுடைய பாட்டும் தொகையான பதினெண் மேற்கணக்கு நூல்களைச் சிவபெருமானுடன் தொடர்புடைய சங்க இலக்கியங்களாக்கினர். சொற்களைப் பல்வேறு வகையில் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் திருக்குறளையும் அதனை இயற்றிய திருவள்ளுவரையும் சைவராக்க முயற்சித்தனர். கபாலீசுவரர் கோவில் தேர்த் திருவிழாவில் 63 நாயன்மார்களோடு சேர்ந்து அறுபத்து நான்காம் நாயனாராக திருவள்ளுவ நாயனார் உலா வருதல் இங்குக் குறிப்பிடத்தக்கது.அதேபோல் இராமலிங்க அடிகளாரின் ஐந்து திருமுறைகளைப் பரப்புவதில் சைவப் புலமையாளர்கள் காட்டிய அக்கறையை ஆறாம் திருமுறையைப் பரப்புவதில் காட்டவில்லை என்பதையும் அவரைச் சைவராகவே தங்கள் பதிப்புகள்வழி நிலைநாட்டவும் முயன்றனர் என்பதையும் இக்கட்டுரைவழி அறிந்து கொள்ள முடிகிறது.

பயன்பட்ட நூல்கள்

(1) 1999, வள்ளலார் எழுதிய உரைநடை நூல்கள், திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள், மீனாகோபால் பதிப்பகம், சென்னை

(2) 2012, தமிழ்ச் சுடர் மணிகள், பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

(3) 2018, தமிழ் அச்சுப்பண்பாட்டு வரலாறு சைவசமயம் (1800 - 1950), முனைவர் கு. கலைவாணன், சந்தியா பதிப்பகம், சென்னை.

(4) 2018, சிதம்பரம் இராமலிங்கம் எனும் வள்ளலார் ; பன்முக வாசிப்பு, வி. தேவேந்திரன், நெய்தல் பதிப்பகம், சென்னை.

(5) 2018, சிதம்பரம் இராமலிங்கம் எனும் வள்ளலார் கைநூல், வி. தேவேந்திரன், நெய்தல் பதிப்பகம், சென்னை.

-  முனைவர் கு. கலைவாணன் & முனைவர் சிவகுமார்

Pin It