சிதம்பரம் இராமலிங்கம் என்று தன்னை அழைத்துக் கொண்ட வள்ளலார், தனித்த ஆளுமைமிக்க மனிதர். சமயப் பாடல் மரபில் எந்தவொருவரின் பாடல்களும் புலவன் வாழ்ந்த சமகாலத்தில் தொகுக்கப்படாத நிலையில் இராமலிங்கம் (வள்ளலார்) பாடல்களை அவரின் சமகாலத்தில் (1867) அவரது மாணவரான தொழுவூர் வேலாயுத முதலியார் தொகுத்து வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வள்ளலாரின் பாடல்களைத் 'திருஅருட்பா' என்று பெயரிட்டு முறையான பதிப்பு ஒன்று வெளியாவதற்கு ஏறக்குறைய பதினாறு ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் பங்களிப்பின் காரணமாகத் திருவருட்பாப் பதிப்பு தொடங்கிவிட்டது. இதனை "அடிகளார் பிள்ளைப் பருவத்தில் சென்னை நகரில் 'ஏழுகிணறு' என்னும் பெயருள்ள பேட்டையில் வாழ்ந்த காலை நாள்தோறும் இந்தக் கோட்டத்திற்கு யாத்திரை சென்று சொந்தமாகக் கவிதை புனைந்து கந்தப்பெருமானை வழிபட்டு வந்தார். அப்படி அவர் புனைந்த கவிதைகளைக் கந்தப் பெருமான் கோயிலைச் சார்ந்த ஒருவர் குறித்து வைத்துக்கொண்டு, பின்னர் அதனை நூலாக வெளியிட்டார். அதுவே, அடிகளாரின் பாடல்களடங்கிய முதல் நூலாகும். "சென்னை - கந்தர் தெய்வ மணிமாலை ­சரணப்பத்து" என்பது நூலின் பெயர். "பாளையம் முத்து செட்டியார் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, கயத்தாறு ஞானசுந்தரம் ஐயர் அவர்களால் இந்நூல் வெளியிடப்பட்டது" என, அட்டைப் பக்கத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு 'அருட்பா ' எனப் பெயர் தரப்படவில்லை என்பது கவனத்திற்குரியதாகும். இந்நூல் வெளியான காலம் 1851 ஆம் ஆண்டாக இருக்கக் கூடுமென்று அனுமானிக்கப்படுகின்றது". ( ம. பொ. சிவஞானம்,2011: 181 ) என்னும் ம.பொ.சி. கூற்றின் மூலம் அறிய முடிகிறது.

வள்ளலாரின் நாற்பத்து நான்காவது வயதில், அதாவது 1867 ஆம் ஆண்டு அவரது மாணவர்களில் ஒருவரான தொழுவூர் வேலாயுத முதலியாரால், வள்ளலாரின் பாடல்களின் ஒரு பகுதி தொகுக்கப்பட்டு (முதல் நான்கு திருமுறைகள்) நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலின் இறுதியில் தொழுவூர் வேலாயுத முதலியார் பாடிய "திருவருட்பா வரலாறு"(66 பாடல்கள்) அச்சிடப்பட்டிருக்கிறது. இதில் ஒரு காப்புச் செய்யுளும் அடுத்த இரண்டு பாடல்கள் குரு தோத்திரமாகவும் அமைந்துள்ளன. மீதம் 63 பாடல்கள் திருவருட்பா அச்சான வரலாற்றைக் குறிப்பிடுகிறது. அவற்றுள், 48 முதல் 52 ஆம் பாடல் வரை உள்ள ஐந்துபாடல்கள் மூலம் 1860-களில் இறுக்கம் இரத்தின முதலியார் வள்ளலாரிடமிருந்த பாடல் ஏடுகளைத் தொகுத்துப் பதிப்பிக்கும் முயற்சியைத் தொடங்கினார். இச்சுழலில் சென்னையிலிருந்த சிலர் வள்ளலாரது பாடல்களைச் சிறு சிறு நூல்களாக அச்சிடும் பணியில் ஈடுபட்டனர். இரத்தின முதலியாரும் செல்வராய முதலியாரும் அவர்களிடம் சென்று, வள்ளலாரின் பாடல்களை முறையாகத் தாங்கள் அச்சிடவிருக்கையில் சிறுசிறு நூலாக அவர்கள் அச்சிடுவது தகாதெனத் தடுத்தனர். அவர்கள் அச்சிடத் தொடங்கிவிட்டதால் அதனை நிறுத்துமாறு கூறி அதற்கான இழப்பீடாகச் சிறிது பொருளும் கொடுத்துள்ளனர். அதன் பின்னரும் அவர்கள் அச்சிடுவதை நிறுத்தவில்லை. இந்நிலையில் இறுக்கம் இரத்தினம் முதலியார் பாடல் ஏடுகளைத் தொகுப்பதிலும் அவற்றை அச்சிடுவதற்கு வள்ளலாரின் இசைவைப் பெறுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டனர் என்பதை அறிய முடிகிறது.

"வள்ளலார் சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், கூடலூர், கருங்குழி ஆகிய இவ்விடங்களில் விளங்கிய காலத்தில் பாடிய பிரபந்தங்களையும் பதிகங்களையும் சிலர் தனித்தனிச் சிறு புத்தகங்களாய் அச்சுப் பிழைகளோடு வழங்குவதைக் கண்டு, சமரச வேத சன்மார்க்க சங்கத்தையபிமானித்த புதுவை வேலு முதலியார், சிவாநந்தபுரம் செல்வராய முதலியார், இறுக்கம் இரத்தின முதலியார் முதலிய அன்பர்கள் வள்ளலார்பாலடைந்து "தேவர் திருவாக்கினின்று பொழிந்த அமுதவருஷமான பாக்களை அச்சிட உத்தரவாக வேண்டும்" என்று மிகுதியும் வேண்ட, சுவாமிகள் முதலில் இசையாது பின்னும் இவர்கள் குரையிரக்க ஒருவாறு இசைந்தனர்" (ச.மு. கந்தசாமி பிள்ளை, 2009: 48 - 49) என்று தொழுவூர் வேலாயுத முதலியாரின் பாடல்கள் மூலம் அறிந்த அதே செய்தியை ச.மு. கந்தசாமி பிள்ளையும் கூறுகிறார். வள்ளலார் பாடல்கள் 'திருஅருட்பா 'என்ற பெயரில் தொகுப்பாக வெளிவருவதற்கு முன்பே அதாவது தொழுவூர் வேலாயுத முதலியாரின் திருவருட்பா பதிப்புக்கு முன்னரே சில சிறு பதிப்புகள் வள்ளலாரின் பாடல்களுக்கு வந்திருப்பதை அறிய முடிகிறது. ஆனால் அப்பதிப்பு நூல்கள் தற்போது பார்வைக்கு கிடைக்காமையால் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

தமிழ் அச்சுப் பண்பாட்டுச் சூழலில் (1867 - 2017) திருவருட்பா பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ள பதிப்புகளில் கிடைத்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு 'திருவருட்பா'பதிப்புகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

மூலப் பதிப்புகள் (ஆறு திருமுறைகளும் அடங்கிய முழுப் பதிப்பு, பகுதிப் பதிப்பு, திரட்டுகள், தொகுப்புகள்).

உரைப் பதிப்புகள் (ஆறு திருமுறைகளும் அடங்கிய முழுப் பதிப்பு, பகுதிப் பதிப்பு, திரட்டுகள், தொகுப்புகள்).

மூலப் பதிப்புகள்:

தொழுவூர் வேலாயுத முதலியார் பதிப்பு (1867)

'திரு அருட்பா' என்ற பெயரில் வள்ளலாரின் பாடல்கள் அடங்கிய முதல் நான்கு திருமுறைகளின் முதற்பதிப்பு 1867 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புதுவை வேலு முதலியார், சிவானந்தபுரம் செல்வராய முதலியார், இறுக்கம் இரத்தின முதலியார் ஆகியோரின் வேண்டுகோளின் படி வள்ளலாரின் தலைமை மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இந்நூல் வெளியீட்டுக்குப் பொருளுதவி செய்தவர் மயிலை சிக்கிட்டி சோமசுந்தரம் செட்டியார்.

1857 ஆம் ஆண்டில் வள்ளலார் சென்னை விட்டு வடலூர் சென்றபின் இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வள்ளலாரின் பாடல்களைத் தொகுத்து நூலாக அச்சிட்டு வெளியிட வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. இப்பணி 1860 களில் மிகத் தீவிரமானது. திருவருட்பா ஏடுகளைத் தொகுத்தல், அச்சிடுதல் தொடர்பாக இரத்தின முதலியாருக்கும் வள்ளலாருக்கும் 1860 முதலே கடிதத் தொடர்பு தொடங்கி விட்டது.(விரிவான தகவல்களுக்குக் காண்க, ஆ.பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு, திரு அருட்பா திருமுகப்பகுதி, ஐந்தாம் புத்தகம், தி பார்க்கர், சென்னை, மறுபதிப்பு 2007) கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவில் திருவருட்பாவை வெளியிடுவதில் ஏழாண்டுகள் இரத்தின முதலியார் முயன்றார். அச்சிட அனுமதி வேண்டி வள்ளலாரிடம் தவங்கிடந்தார். நாளும் ஒருவேளையே உண்பதென்று நோன்பு பூண்டார்.இவ்வாறு வருந்தி வருந்தி அரிதின் முயன்று திருவருட்பாவை அச்சிட்டு வெளிக்கொணர்ந்த பெருமை இறுக்கம் இரத்தின முதலியாரையே சேரும்.

பாடல்களை அச்சிட்டு வெளியிட வள்ளலாரின் இசைவைப் பெற்ற இறுக்கம் இரத்தின முதலியார், புதுவை வேலு முதலியார், சிவாநந்தபுரம் செல்வராய முதலியார், தொழுவூர் வேலாயுதம் முதலியார் ஆகியோருடன் இணைந்து வள்ளலாரின் பாடல்களை வெளிக்கொணர்வதில் அதித்தீவிரமுடன் செயல்பட்டார். அத்துடன் தான் தொகுத்துக் கொண்டு வரவிருக்கும் நூலின் தலைப்பேட்டில் வெறுமனே 'இராமலிங்கப் பிள்ளை' என்று பொறிப்பதைக் காட்டிலும் 'இராமலிங்க சாமி' என்று பொறிக்கக் கருதி அதற்கான அனுமதி வேண்டி வள்ளலாருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். மேலும் சிதம்பரம் பொருளாக அண்மைக்காலங்களில் பாடிய பாடல்களையும் பாயிரத்தையும் அச்சுக்கு அனுப்புமாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேற்குறிப்பிட்ட வகையிலான கடிதத்தைக் கண்டு வள்ளலார் 28.03.1866 அன்று இறுக்கம் இரத்தின முதலியாருக்குப் பின்வருமாறு பதில் கடிதம் எழுதியுள்ளார் அவை, "இராமலிங்கசாமியென்று வழங்குவிப்பது என் சம்மதமன்று. என்னை? ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில். இனி அங்கனம் வழங்காமை வேண்டும் (ஆ. பாலகிருஷ்ணபிள்ளை, தொகுதி­5, 2007: 62) என்று குறிப்பிட்டுப் பதில் கடிதம் எழுதியிருந்தார்.

வள்ளலாரின் இசைவு, பாடல்களின் தொகுப்பு என அனைத்துப் பணிகளும் நிறைவுற்ற பிறகு நூலுக்குப் பெயரிட வேண்டிய தருணம் வந்தது. அப்போது 'திரு அருட்பா' என்று பெயரிடப்பட்டது. பெயரை வைத்தவர் தொழுவூர் வேலாயுதம் முதலியார். 1867 இல் திருவருட்பாவினை முதன் முதலில் முதலியார் பதிப்பித்த காலத்தில் நூலுக்குப் பெயரிடுவதில் வள்ளலார் எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாடல்களைப் பதிப்பித்த தொழுவூர் வேலாயுதம் முதலியாரே இப்பெயரைத் தெரிவு செய்தார். அதேபோலப் பாடல்களை வகைதொகைப்படுத்தி ஆறு திருமுறைகளாக வகுத்தவரும் அவரே. இதனை, தொழுவூர் வேலாயுத முதலியாரின் 'திருவருட்பா வரலாறு '34, 35, 38 ஆகிய பாடல் பகுதியின் மூலம் அறிய முடிகிறது.

திருமுறைகளும் அவற்றின் பதிகங்களும் அவை பாடப்பெற்ற காலத்தில் வகுக்கப்படவும் அடைவு செய்யப்பெறவும் இல்லை. பொருளமைதி கருதியும் வகுத்திருப்பதாகக் கூறுவதற்கில்லை. திருவெழுத்து ஆறு, சமயம் ஆறு, அத்துவா கதியடைவிக்கும் வழி) ஆறு என்பவற்றை உட்கொண்டு திருமுறைகளைத் தொழுவூர் வேலாயுதம் முதலியார் வகுத்துள்ளார்.

தமது பாடல்களைத் தொகுத்து வெளியிட முதலில் அனுமதியளிக்க மறுத்துவந்த வள்ளலார், பின்பு திருவொற்றியூர், சிதம்பரப் பாடல்களைத் தொகுத்து வெளியிட அனுமதியளித்தார். அப்போது, அண்மைக்காலங்களில் பாடிய புரட்சிகரமானக் கருத்துக்கள் கொண்ட பாடல்களைப் பின்புத் தொகுத்து வெளியிட்டுக் கொள்ளலாம். எனவும் தற்போது வெளியிட வேண்டாம் எனவும் வள்ளலார் கட்டளையிட்டதால் அதனையும் இனி வருங்காலத்தில் வள்ளலார் பாடக்கூடியவற்றையும் தொழுவூர் வேலாயுத முதலியார் ஆறாம் திருமுறையாக வகுத்தார் (126 பதிகங்களும் 172 தனிப்பாடல்களும் அவர் வகுத்து வைத்திருந்த ஆறாம் திருமுறையில் அப்போது இருந்தன). ஆறாம் திருமுறையாக நிறுத்திக் கொண்டவை போக, மீதமுள்ளப் பாடல்களை ஐந்து திருமுறைகளாக வகுத்தார். இளமைக் காலத்தில் சென்னையில் வாழ்ந்த போது (1823-1855) பாடப்பெற்ற திருத்தணிகைப் பதிகங்கள் கைக்குக் கிடைக்கப் பெறாது அச்சுக்குத் தயாராகமையின் அவற்றையும் பின்னர் வெளியிடக் கருதி ஐந்தாம் திருமுறையாகக் கொண்டார். இவ்வாறு நிறுத்தி வைத்த ஆறாம் திருமுறையும் அச்சுக்குத் தயாராகாத ஐந்தாம் திருமுறையும் நிற்க, மீதமுள்ளவை முதல் நான்கு திருமுறைகளாக வகுக்கப்பட்டன. என்று ஊரன் அடிகள் 'இராமலிங்க அடிகள் வரலாறு'என்னும் தம்நூலில் குறிப்பிட்டுள்ளார் (ஊரன் அடிகள், 2006).

தனித்தனி நூல்களாக விளங்கத்தக்க திருவடிப் புகழ்ச்சி (128 அடி விருத்தப்பா), விண்ணப்பக் கலிவெண்பா (417 கண்ணிகள்), நெஞ்சறிவுறுத்தல் (703 கண்ணிகள்), சிவநேச வெண்பா (104 கண்ணிகள்), மகாதேவ மாலை (100 எண்சீர் விருத்தம்), திருவருள் முறையீடு (232 கட்டளைக் கலித்துறை), வடிவுடை மாணிக்கமாலை (101 கட்டளைக் கலித்துறை), இங்கிதமாலை (167 அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) ஆகிய எட்டும் முதல் திருமுறையாக வகுக்கப் பெற்றன.

சென்னையில் வாழ்ந்த காலத்தில் ஒற்றியூர் வழிபாட்டுக் காலத்தில் திருவொற்றியூரைக் குறித்தும் தில்லையைக் குறித்தும் பாடிய பதிகங்களும், திருமுல்லைவாயில், திருவலிதாயம், புள்ளிருக்கு வேளூர், திரு ஆரூர், திரு அண்ணாமலைப் பதிகங்களும், பொதுப்பதிகங்களும், கீர்த்தனைகளும் ஆகியவை இரண்டாவது திருமுறையாக வகுக்கப் பெற்றன. திருவொற்றியூரைக் குறித்துப் பாடப் பெற்ற அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலான அகத்துரைப் பதிகங்கள் பத்தொன்பது மட்டும் மூன்றாம் திருமுறையாக வகுக்கப்பட்டன. சென்னையிலிருந்து கருங்குழிக்கு வந்தபின் சிதம்பர வழிபாட்டுக் காலத்தில் சிதம்பரத்தைக் குறித்துப் பாடப்பெற்ற எட்டு மாலைகள், ஆளுடைய நால்வர் அருள் மாலைகள் நான்கு ஆகப் பன்னிரண்டு நூற்பகுதிகளைக் கொண்ட 238 பாடல்கள் அடங்கியன நான்காம் திருமுறையாக வகுக்கப் பெற்றன. திருத்தணிகைப் பாடல்கள் ஐந்தாம் திருமுறையாக வகுக்கப் பெற்றன. 'முருகன் பாசுரங்கள்'என்னும் வேறு பெயரும் இத்திருமுறைக்கு உண்டு. 604 பாடல்களைக் கொண்ட 56 பதிகங்கள் இத்திருமுறையில் உள்ளன.

வள்ளலாரின் ஆணைப்படி தற்சமயம் வெளியிட வேண்டாமென வைக்கப்பட்ட பாடல்கள் ஆறாம் திருமுறையின் பாற்பட்டன. இது மூன்று பகுதிகளையுடையது. முதல் பகுதி 'கருங்குழிப் பாசுரங்கள்' என்றும் 'பூர்வஞான சிதம்பரப் பகுதி' என்றும் அழைக்கப்படும். இது 476 பாடல்களைக் கொண்ட 24 நூல் பகுதிகளைக் கொண்டது. இரண்டாம் பகுதி 'வடலூர் பகுதி' என்றும் 'உத்திர ஞான சிதம்பரப் பகுதி' என்றும் அழைக்கப்பெறும் இதில் 635 பாடல்களைக் கொண்ட 40 நூல்கள் உள்ளன. மூன்றாம் பகுதி 'சித்தி வளாகப் பகுதி' என்று அழைக்கப்படும். இதில் 44 நூற்பகுதிகள் உள்ளன.

திருவொற்றியூர் பற்றிய பாடல்கள் அனைத்தும 1, 3 ஆகிய திருமுறைகளிலும் சிதம்பரம் பற்றிய பாடல்கள் முறையே 4,6 திருமுறைகளிலும் சிதம்பரம் மற்றும் திருவொற்றியூர் பற்றிக் கலந்து பாடிய பாடல்கள் 2ஆம் திருமுறையிலும் முருகன் பற்றிய பாடல்கள் 5ஆம் திருமுறையிலும் அடங்குமாறு பகுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன.

வள்ளலார் பாடல்களின் முதல் வெளியீட்டுப் பணி 1860 இல் தொடங்கி 1867இல் முடிவடைகிறது. இக்காலகட்டத்தில் முதல் நான்கு திருமுறைகள் மட்டுமே அச்சுக்குத் தயார் நிலையில் இருந்தன. அதோடு, அது வள்ளலாரின் நேரடி மேற்பார்வையில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனை, "ஒற்றியூர் பாடல்களையும் மற்றவைகளையும் அச்சிடத் தொடங்குகிறதாய்க் கேள்விப்படுகிறேன். அவைகளை தற்காலம் நிறுத்தி வைத்தால் நான் அவ்விடம் வந்தவுடன் இவ்விடத்திலிருக்கின்ற இன்னுமஞ் சில பாடல்களையுஞ் சேர்த்து அச்சிட்டுக் கொள்ளலாம். பின்பு தங்களிஷ்டம். நமது சினேகிதர் மகா ள-ள-ஸ்ரீ வேலு முதலியாரவர்களுக்கு இதைத் தெரியப்படுத்துவீர்களாக". (ஆ. பாலகிருஷ்ண பிள்ளை, தொகுதி - 5, 2007: 60-61) என்று இறுக்கம் இரத்தின முதலியாருக்கும்,"ஸ்ரீ அப்பாசாமி செட்டியா ரவர்கட்குத் தாங்கள் வரைந்த கடிதத்திற் குறித்த வண்ணம் சிதம்பர விஜயமான பாடல்களை தங்கள் கருத்தின்படி அச்சிட்டுக் கொள்ளுங்கள். அன்றியும் 'கண்டாயென்தோழி' என்கிற பாடல்களை வைத்திருக்கின்றவர் தற்காலம் சமீபத்தில்லை. அவர் வந்தவுடன் வாங்கி யனுப்புகிறேன்". (ஆ. பாலகிருஷ்ண பிள்ளை, தொகுதி - 5, 2007: 68 - 69) என்று கடலூர் அப்பாசாமி செட்டியாருக்கு வள்ளலார் எழுதிய இரு கடிதங்கள் உறுதிப்படுத்துகின்றன. சில நேரங்களில் பாடல் தொகுப்புப் பணிகள் வள்ளலாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படாமலும் நடைபெற்றுள்ளன என்பதை மேற்குறிப்பிட்டுள்ள முதல் கடிதத்தின் மூலம் உணர முடிகிறது.

ஒருவழியாகப் பாடல்களைத் தொகுத்து முடிவுற்றவுடன் தொகுப்பிற்குப் பெயரிடுவதிலும் வள்ளலாருக்கு உடன்பாடில்லாத சம்பவங்கள் நடந்துள்ளன. நூலின் தலைப்பில் 'இராமலிங்கசாமி அருளிச் செய்த' என்று பெயரிட்டதற்கும் அவர் உடன்படவில்லை. அதனை விளக்கும் திருமுகத்தின் ஒரு பகுதி வருமாறு; "இராமலிங்கசாமி யென்று வழங்குவிப்பது என் சம்மதமன்று என்னை? ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில். இனி அங்கனம் வழங்காமை வேண்டும்" (ஆ. பாலகிருஷ்ண பிள்ளை, தொகுதி -5, 2007: 62).

"ஆனால் நூலுக்கு 'திரு அருட்பா' என்று பெயரிட்டதற்கு வள்ளலாரிடமிருந்து எந்த மறுப்பு செய்தியும் வெளிவந்ததாக ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. பின்னாளைய அருட்பா X மருட்பா போராட்டத்திற்கு இப்பெயர் ஒரு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

'இராமலிங்க சுவாமிகள்' என்று வழங்கப்படாமை வேண்டும் என்று வள்ளலார் தடுத்து விட்டபடியால் அங்ஙனம் வழங்க விரும்பியும் அஃதியலாது போயிற்று. அஃதியலாது போன நிலையில் வேறு செயலறியாது எங்ஙனம் வள்ளலாரைச் சிறப்பித்து வழங்குவோம் என்று சிந்தித்து இறுதியாக நூலின் முகப்பில் 'திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க பிள்ளை' என்று வழங்கத் தொடங்கினர். சிதம்பரம் இராமலிங்கருக்கு இப்பெயரைச் சூட்டியவர் தொழுவூர் வேலாயுத முதலியாரே ஆவார்.

"நூலை கண்ட அடிகள் அதில் தமது பெயருக்கு முன் 'திருவருட்பிரகாச வள்ளலார்' என்று பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அதில் உபய கலாநிதிப் பெரும்புலவரை நோக்கி 'பிச்! ஏங்காணும்! திருவருட்பிரகாச வள்ளலார் என்று உம்மை யார் போடச் சொன்னது?' என்று அதட்டிக் கேட்க, முதலியார் நடுநடுங்கியவராய் வாய்புதைத்து, வள்ளலாரது திருவடிகளை சிந்தித்து வண்ணமாய் நின்று இருந்தார் சிறிது நேரம் மௌனத்திற்கு பின்னர் நமது அடிகளாரே உண்மை விளக்கம் தந்து அமைதி பெறச் செய்தார் அதாவது திருவருட்பிரகாச வள்ளலார் என்ற பெயரை திருவருள் பிரகாச வள்ளல் ­ஆர்? எனப் பிரித்து வினாவாகக் கொண்டு, அதற்கு விடையாக கடவுள் அல்லது பதியேதான் திருவருட்பிரகாச வள்ளல் என்று உண்மையைச் சுட்டுவதற்காகக் கூறிவிட்டுத் தன்னை அப்பதியின் திருவடியிற் கிடக்கும் சிற்றணுவாகக் குறிப்பிட்டார். யாதெனில் திருவருட்பிரகாச வள்ளல் ஆர் என்ற சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை எனக் குறித்திட்டார்". (சரவணானந்தா,1974: 38). தமது மாணவரான வேலாயுத முதலியார் தமக்குச் சூட்டிய பட்டப் பெயரைத் தம் புலமைத் திறம் கொண்டு தெய்வத்துக்குச் சூட்டினார் வள்ளலார். அத்துடன் வள்ளலார் தனது பாடல்களில் பலவிடங்களில் இறைவனை 'வள்ளல்' என்று குறித்திருப்பதும் கவனிக்கத் தக்கதாகும்.

வள்ளலாரின் அனுமதியும் ஒத்துழைப்பும் முறையாகக் கிடைத்த பின்பு, திருவருட்பாவின் முதல் திருமுறையில் 712 பாடல்களும், இரண்டாம் திருமுறையில் 1206 பாடல்களும், மூன்றாம் திருமுறையில் 235 பாடல்களும், நான்காம் திருமுறையில் 238 பாடல்களும் சேர்த்து 2391 பாடல்கள் இடம்பெற்ற முதல் நான்கு திருமுறைகள் அடங்கிய ஒரே நூலாக 1867 இல் தொழுவூர் வேலாயுத முதலியாரால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது.

தொழுவூர் வேலாயுத முதலியார் பதிப்பில் பாடல்கள் அச்சாகியுள்ள அமைப்பு முறையை பார்க்கும்போது பத்திபோல் அமைத்தல், இலக்கண முறையில் அமைத்தல், தடித்த தொடர்களில் அமைத்தல், எனச் சில நுணுக்கங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையைப் பார்க்க முடிகிறது. மேலும், சில பாடல்கள் சீர் பிரித்து அச்சிடப்பட்டுள்ளன. சில பதிகங்கள் ஓலைச்சுவடியில் "இருப்பதைப்போன்றே பத்திப் பத்தியாகக் காணப்படுகின்றன. சீர்களுக்கிடையே இடைவெளியும் அதிகம் இல்லாமல் அச்சிடப்பட்டிருக்கிறது. மேலும் உடுக்குறி, பிறைக்குறி, வாட்குறி, வட்டக்குறி போன்ற குறியீடுகளைப் பயன்படுத்திச் சிறப்பான விளக்கங்கள் அடிக்குறிப்பாகத் முதலியாரால் தரப்பட்டுள்ளன (இந்தவகையில் ஆ. பாலகிருஷ்ண பிள்ளைக்கு இவர் முன்னோடியாகத் திகழ்வதை அறியமுடிகிறது). முதலியார் தமது பதிப்பின் முதல் திருமுறையில் 91 அடிக்குறிப்புகளையும் இரண்டாம் திருமுறையில் 4 அடிக்குறிப்புகளையும் ஐந்தாம் திருமுறையில் 15 அடிக்குறிப்புகளையும் தந்துள்ளார். மூன்றாம், நான்காம் திருமுறைகளில் எவ்வித அடிக்குறிப்புகளையும் காண முடியவில்லை.

இப்பதிப்பில் உரைநடைப் பகுதிகள் இல்லை; வசனப் பாகங்கள் சேர்க்கப்படவில்லை. வள்ளலாரின் பிறப்பு, வளர்ப்பு, சிறப்பு திருவருட்பா அருளிச் செய்தது, பதிப்பு வரலாறு ஆகியவற்றை அறுபத்தாறு (66) பாக்களில் தொழுவூர் வேலாயுத முதலியார் பாடித் 'திருவருட்பா வரலாறு' என்னும் தலைப்புடன் நூலின் இறுதியிற் சேர்த்து அச்சிட்டார்.

நூலின் இறுதியில் பிழைத்திருத்தம் கொடுக்கப்பட்டுள்ளதோடு பாட்டு முதற்குறிப்பகராதி ஒவ்வொரு திருமுறைகளுக்கும் தனித்தனியாகப் பிரித்துத் தரப்பட்டுள்ளது. முதல் இரண்டு திருமுறைகளுக்குத் தொடர்ச்சியாகவும் மூன்றாவது நான்காவது திருமுறைகளுக்குத் தனித்தனியாகவும் பக்க எண்கள் தரப்பட்டுள்ளன. இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1887 ஆம் ஆண்டு மீண்டும் தொழுவூர் வேலாயுத முதலியாராலேயே வெளியிடப்பட்டது எனப் பரவலாக ஆய்வுலகில் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது 'திருவருட்பா முதல் நான்கு திருமுறை'க்கு 1883 ஆம் ஆண்டு வெளிவந்த பதிப்பு ஒன்று ஆய்வாளருக்கு பார்வைக்கு கிடைத்துள்ளது. 1887 ஆம் ஆண்டு வெளிவந்த பதிப்பின் முகப்பு பக்கத்தில் 'இரண்டாம் பதிப்பு'என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 1883இல் வெளிவந்த பதிப்பில் அவ்வாறு முதல் பதிப்பா, இரண்டாம் பதிப்பா என்று எதுவும் குறிப்பிடப் படவில்லை. எனவே 'திருவருட்பா'முதல் நான்கு திருமுறைக்கு இரண்டாம் பதிப்பு எப்போது வந்திருக்கும் என்பதில் ஐயம் உருவாகியுள்ளது. ஐயத்தை தெளிவுபடுத்திக் கொள்ள முன்னாய்வுகளை எடுத்துப் பார்க்கும் போது இராம. பாண்டுரங்கன் என்பவர் மட்டுமே இப்பதிப்பைப் பற்றி 'திருவருட்பா பதிப்புச்சோலை'என்னும் தம் நூலில் கீழ்வருமாறு பதிவு செய்கிறார்.

"1880ஆம் ஆண்டு ஐந்தாம் திருமுறையை வெளியிட்ட தொழுவூர் வேலாயுதனார், அதன் இரண்டாம் பதிப்பை 1882இல் வெளியிட்டார்.

பிப்ரவரி,1883இல் முதல் நான்கு திருமுறையின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார் இருப்பினும்,இவ்வாறாம் திருமுறையை அச்சிடும் முயற்சியில் அவர் ஈடுபடவில்லை. ஆறாம் திருமுறைக்கான பதிகத் தலைப்புகள் தொழுவூராரால் வகுக்கப் பெற்றிருந்தன. வேலூர் பத்மநாப முதலியார் 1885ஆம் ஆண்டு ஆறாம் திருமுறையைப் பதிப்பிக்குபோது,தொழுவூர் வேலாயுதமுதலியார் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆறாம் திருமுறை வெளிவந்த ஈராண்டுகளுக்குப் பின்னர் நான்காம் திருமுறையின் இரண்டாம் பதிப்பை 1887இல் அச்சிட்டார்.இருப்பினும், ஆறாம் திருமுறையை அச்சிட அவர் இசையவில்லை" (இராம. பாண்டுரங்கன், 2017: 67 - 68).

இப்பதிவின்மூலம் 'திருவருட்பா' முதல் நான்கு திருமுறைக்கு 1883 லும் 1887லும் இரண்டாம் பதிப்பு வெளிவந்ததாக அறியமுடிகிறது. அது எப்படி வெவ்வேறு ஆண்டுகளில் ஒரே நூலுக்கு இரண்டாம் பதிப்பு வந்திருக்க முடியும்? எனவே இவ்விரு பதிப்புகள் குறித்து பதிவு செய்துள்ள இவரது கருத்தும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. இக்குழப்பத்தை தெளிவுபடுத்த சரியான தரவுகள் கிடைக்காமையால் இந்நிலையிலேயே இவை பதிவு செய்யப்படுகின்றன.

தொழுவூர் வேலாயுத முதலியார் பதிப்பு (1880)

முதல் நான்கு திருமுறைகள் (1867) வெளிவந்த ஏழாண்டுகளுக்குப் பின் 1874 இல் வள்ளலார் இவ்வுலகைவிட்டு மறைந்தார். வள்ளலார் மறைவுற்று ஆறு ஆண்டுகளுக்குப்பின் அதாவது முதல் நான்கு திருமுறைகள் வெளியான பதின்மூன்றாண்டுகள் கழிந்து 1880இல் ஐந்தாம் திருமுறையின் முதற்பதிப்பு வெளிவந்தது. 1867இல் முதல் பகுதி (முதல் நான்கு திருமுறைகள்) வெளியான ஆண்டிற்கும் 1880 இல் இரண்டாம் பகுதி (ஐந்தாம் திருமுறை) வெளியானதற்குமான பதின்மூன்றாண்டு கால இடைவெளியில் பல வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வுகள் நடந்தேறின. இந்தக் காலப்பகுதியில் சத்திய தர்மசாலை (1867) சன்மார்க்க போதினி என்ற கல்வி நிலையம் (1867) (இதில் வள்ளலாரின் தலைமை மாணாக்கர் தொழுவூர் வேலாயுதம் முதலியார் ஆசிரியராக இருந்தார்). சித்திவளாகம் (1870) சத்திய ஞான சபை (1872), 1596 அடிகளை கொண்ட அருட்பெருஞ்ஷோதி அகவல் (1872) முதலானவற்றை வள்ளலார் பாடி அளித்திருந்தார். இவை மட்டுமின்றி வள்ளலார் மறைவு (1874), அருட்பா தொகுப்பிற்கு எதிரான மருட்பா போராட்டம், இப்போராட்டம் முன்னெழுந்ததற்குக் காரணமாகச் சொல்லப்பட்ட ஆறுமுக நாவலரின் மறைவு (1879) போன்ற பல நிகழ்வுகள் அந்த இடைவெளியில் நடந்து முடிந்திருந்தன.

வள்ளலார் சென்னையிலிருந்தபோது இளம்போதில் ஏழு, எட்டாண்டுப் பருவத்தில் பாடிய கந்தகோட்டம் பதிகங்கள் 2, ஒற்றியூர் வழிப்பாட்டுக் காலத்தில் பாடிய திருத்தணிகைப் பதிகங்கள் 47, சென்னையிலிருந்து வடலூருக்குச் சென்றபின் கருங்குழியிலிருந்த காலத்திற் பாடிய மூத்தபிள்ளையார் திருப்பதிகங்கள் 4 ஆகியவற்றை ஐந்தாம் திருமுறையாகத் தொகுத்துத் தொழுவூர் வேலாயுத முதலியார், '`திருவருட்பா - திருத்தணிகைப் பதிகம்’’ எனப் பெயரிட்டு வெளியிட்டார். முதற் புத்தகமாகிய முதல் நான்கு திருமுறை நூலை வெளியிடுவதற்குப் பொருளுதவி செய்த மயிலை சிக்கிட்டிச் செட்டியார் குமாரர் சோமசுந்தர செட்டியாரே இவ்விரண்டாம் புத்தகமாகிய திருத்தணிகைப் பதிகம் வெளிவரவும் உதவினார். இதனை வெளியிடும்போது தொழுவூர் வேலாயுத முதலியார் வள்ளலார் நிறுவிய கல்விச் சாலையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகி வெளிவந்து சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாடிய "புண்ணியமுடைத்து"என்னும் வாயுறைவாழ்த்தும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பிலும் வள்ளலாரின் உரைநடைப் பகுதிகள் சேர்க்கப்படவில்லை. இது சென்னைத் தம்புச்செட்டித்தெரு மெமோரியல் அச்சகத்தில் அச்சிடப்பெற்றுள்ளது. வள்ளலாரின் பாடல்கள் அருட்பா இல்லை மருட்பா என்ற போராட்ட முன்னெடுப்பு அவரது ஏனைய பாடல்களைத் தொகுத்து வெளியிடுவதில் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவேதான் வள்ளலார் மறைந்து (1874) ஆறாண்டுகள் கழிந்தும் ஆறுமுகநாவலர் மறைந்து (1879) ஓராண்டு கழிந்தும் ஐந்தாம் திருமுறையை (1800) வெளியிட்டுள்ளனரோ என எண்ணத் தோன்றுகிறது.

வேலூர் பத்மநாப முதலியார் பதிப்பு (1885)

ஆறாம் திருமுறை என்பது 1867 ஆம் ஆண்டில் முதல் நான்கு திருமுறைகளை அச்சிட்டபோது வள்ளலாரின் கட்டளைக்கிணங்க நிறுத்தி வைக்கப்பட்டுள்ளவையும் அதன் பின் வள்ளலார் சித்தி பெற்ற 1874 ஆம் ஆண்டு வரை பாடப் பெற்றவையுமாகும். வள்ளலாரின் பாடல்களை முதல் நான்கு திருமுறைகளாகவும் அடுத்து ஐந்தாம் திருமுறையாகவும் பதிப்பித்து வெளியிட்ட தொழுவூர் வேலாயுத முதலியார் ஆறாம் திருமுறையைப் பகுத்து வைத்திருந்தாரேயன்றி, வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் வள்ளலாரின் ஆறாம் திருமுறைப் பாடல்கள் சமயம் கடந்த புரட்சிகரமான சமூகச் சீர்த்திருத்தப் பாடல்கள். தொழுவூராரோ சைவத்தில் ஆழ்ந்த புலமையும் பற்றும் உடையவர். முதல் நான்கு திருமுறைகளை வெளியிட மிகுந்த ஆர்வம் காட்டிய இறுக்கம் இரத்தின முதலியார், புதுவை வேலு முதலியார், சிவானந்தபுரம் செல்வராய முதலியார் ஆகியோரும் பொருளுதவி செய்த மயிலை சிக்கிட்டி சோமசுந்தரச் செட்டியாரும் ஆறாம் திருமுறையை அச்சிட்டு வெளிப்படுத்தத் தலைப்படவில்லை. இவர்கள் அனைவரும் சைவத்தில் மிக்க ஈடுபாடுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்கள் கொண்டுள்ள சைவப் பற்றின் காரணமாக ஆறாம் திருமுறையை வெளியிடும் பணியில் ஈடுபடாமல் இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் "அடிகளாரின் ஆணைக்கஞ்சி தம் வாழ்நாளில் ஆறாம் திருமுறையை தொழுவூர் வேலாயுத முதலியார் அச்சிடவில்லை என்பதும், அவரது காலத்திற்குப் பிறகே அச்சிடப்பட்ட தென்பதும் புலனாகும்" (ம.பொ. சிவ ஞானம், 2011: 186). என ம. பொ.சி. குறிப்பிடுகின்றார். இக்கருத்து உண்மையன்று. தொழுவூராரின் காலகட்டம் 1832 - 1889. திருஅருட்பா ஆறாம் திருமுறை வெளியானதோ 1885இல். எனவே தொழுவூராரின் மறைவுக்கு முன்பே ஆறாம் திருமுறை வெளியானது என்பதும், சைவப் பற்றே இவரை ஆறாம் திருமுறையை வெளியிடாது தடுத்தது என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆக முதல் நான்கு திருமுறைகளை முதல் தொகுப்பாகவும் ஐந்தாம் திருமுறையை இரண்டாம் தொகுப்பாகவும் வெளியிட்டுக் கொண்டாடிய இவர்கள் மூன்றாம் தொகுப்பான ஆறாம் திருமுறையை வெளியிடாமல் பின்வாங்கியுள்ளனர். இது மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.

சைவத்துக்குள் தனக்கான இடத்தைத் தேடிய இடைநிலைச் சாதியினர் சைவ சமயத்துக்குள் ஆளுமை செலுத்திய மேல் சாதியினரை எதிர்க்கத் தொடங்கியதும், இதற்கு ஆதரவாக இடைநிலைச் சாதியினர் வள்ளலார் பாடி அளித்த பாடல்களை பயன்படுத்திக் கொள்ள முயன்றதும் தொகுப்பு நிலையில் பல்வேறு தடைகள் ஏற்படக் காரணமாக அமைந்தன. வள்ளலாரது பாடல்கள் யாவும் காலமுறைப்படியே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. முன்னைய இரண்டு தொகுப்புகளில் வெளிவராத எஞ்சிய பாடல்கள் வள்ளலார் கருங்குயில் வாழ்ந்த காலத்தில் பாடியதாகும்.

கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக் 
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும் 
கள்ளம்உறும் அக்கலைகள் காட்டியபல் கதியும் 
காட்சிகளும் காட்சிதரு கடவுளையும் எல்லாம் 
பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே 
பிள்ளைஎனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே 
தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில் 
தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும் அணிந் தருமே 
 
(ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, தொகுதி - 9, 2013: 469, பா.4173).

நான்கு வருணங்களும், நால்வகை ஆசிரமங்களும் (பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம்) ஆசாரங்களும் (சாதி, மத, குல, ஒழுக்கங்கள்) சொன்ன சாத்திர சரிதங்கள் எல்லாமே பிள்ளை விளையாட்டு என்றும், மேல் வருணம், தோல் வருணம் கண்டு அறிவார் இல்லை என்று 1870 களின் தொடக்கத்தில் துணிந்து எழுதியவர் வள்ளலார். இதோடு அவர் விடவில்லை. இதுவரை வந்த நூல்களில் 'இந்திரசாலம்' என்ற நூலை மட்டும் ஷாலம் என்று கூறுவார்கள்; ஆனால், வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலான அனைத்து நூல்களுமே ஷாலம்தான் என்று மறுத்தார்.

இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பர்
மயல்ஒரு நுல் மாத்திரந்தான் சாலம் என அறிந்தார்
மகனேநீ நூல் அனைத்தும் சாலம் என அறிக
செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்கஎன எனக்கே
திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந்தருளே.

(ஔவை சு. துரைசாமி பிள்ளை, தொகுதி - 9, 2013: 473 பா.4176).

தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக் கண்டறியேல்
ஊன்றியதே தாக்கத்தின் உண்மை நினக் காக்கும்
உலகிறிவே தாகமத்தைப் பொய்எனக் கண்டுணர்வாய்
ஆன்றதிரு அருட்செங்கோல் நினக்களித்தோம்நீயே
ஆள்க அருள் ஒளியால் என் றளித்ததனிச் சிவமே
ஏன்றதிரு அமுதெனக்கும் ஈந்த பெரும் பொருளே
இலக்குடன் தரசேஎன் இசையும் அணிந் தருமே. 

(ஔவை சு. துரைசாமி பிள்ளை, தொகுதி - 9, 2013: 474, பா. 4177)

இவை எல்லாம் பொய் என்றார். மேற்கண்ட கொள்கையுடைய பாடல்கள் அனைத்தும் முன் இரண்டு தொகுப்புகளில் வெளிவராதவையாகும். வள்ளலாரின் சாதி மதம் கடந்த பாடல்களே ஆறாம் திருமுறையில் அடங்குவனவாகும்.

வள்ளலார் தம் வாழ்நாளின் இறுதிக்காலங்களில் சாதி மதம் கடந்து சென்று பாடல்கள் பாடியுள்ளார். இவை சாதி சமயச் சார்பான சமூக அமைப்பினைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்ட தீவிர சைவப் பற்றுடைய மேல் சாதியினருக்கும் சைவத்துக்குள் தனக்கான இடத்தைத் தேடிய இடைநிலைச் சாதியினருக்கும் நெருடலாகத் தெரிந்தது. இதன் விளைவாக வள்ளலாரின் ஆறாம் திருமுறைப் பாடல்கள் அவரது ஆதரவாளர்களாலேயே மௌனப்படுத்தப்பட்டுள்ளன. சைவத்துக்குள் தனக்கான இடத்தைப் பெறுவதே இடைநிலைச் சாதியினரின் நோக்கமேயன்றி சைவத்தைப் புறக்கணிப்பதல்ல. முதலில் இரண்டு தொகுப்புகளைப் பதிப்பித்த தொழுவூர் வேலாயுத முதலியாரும் அதற்குப் அதற்குப் பொருளுதவி செய்து ஆதரவு தந்தவர்களும் ஆறாம் திருமுறையைத் தொகுத்து வெளியிடாமல் அமைதிகாத்ததை இவ்வாறாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது. இதே காலகட்டத்தில் முதல் நான்கு திருமுறைகள் அடங்கிய தொகுப்பையும் ஐந்தாம் திருமுறை தொகுப்பையும், இரண்டாம் பதிப்பாகத் தொழுவூர் வேலாயுதம் முதலியார் அச்சிட்டு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்படியான புறக்கணிப்பிற்குப் பின்பு, வள்ளலார் சித்தி பெற்றுப் பதினோராண்டுகள் ஆகியும், முதல் நான்கு திருமுறைகள் வெளியாகி ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கழிந்தும் திருவருட்பாவின் தொடக்க காலப் பதிப்பாளர்கள் அமைதியாக இருந்தமையால், இனியும் காலந்தாழ்த்தாது ஆறாம் திருமுறையை அச்சிட வேண்டும் என்ற எண்ணமுடையவராய் வேலூர் பத்மநாப முதலியார், பெங்களுர் இராகவலு நாயகரின் துணையோடு அதனை அச்சிட முன்வந்தார். இவ்விருவரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மாணாக்கரும் சென்னை கவர்ன்மெண்டு நார்மல் பாடசாலை தமிழ்ப் புலவர் சோடசாவதானம் தி.க. சுப்பராய செட்டியாரால் பார்வையிடப் பெற்றுத் திரிசிரபுரம் ம. லோகநாத செட்டியாரின் பொருளுதவியால் 1885 ஆம் ஆண்டு சென்னை ஆதி கலாநிதி அச்சகத்தில் ஆறாம் திருமுறை முதன் முதலாக அச்சிட்டு வெளியிடப்பெற்றது.

'அருட்பெருஞ்ஷோதி அகவல்' தொடங்கி 'அம்பலவர்' ஈறாக 126 பதிகங்களும் 'கள்ளத்தை' என்னும் பாடல் தொடங்கி 'ஒன்றுமுன்' என்னும் பாடல் ஈராக அமைந்த 172 தனிப்பாடல்களையும் தொழுவூர் வேலாயுத முதலியார் ஆறாம் திருமுறையாக வகுத்து வைத்திருந்தார். இவற்றோடு இவ்வாறம் திருமுறையின் முற்பகுதியில் ஜீவகாருணிய ஒழுக்கத்தின் முதற்பகுதியும், பிற்பகுதியில் சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சிறுவிண்ணப்பம், சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய விண்ணப்பம், அற்புதப் பத்திரிகை, திருவருட்பா உட்கிடை ஆகிய உரைநடைகளையும் சேர்த்து இந்த ஆறாம் திருமுறை அச்சிடப்பட்டுள்ளது. முதன் முதலில் திருவருட்பாவில் உரைநடை பதிப்பிக்கப்பெற்ற பதிப்பு இந்த ஆறாம் திருமுறைப் பதிப்பேயாகும்.

ச.மு. கந்தசாமிப்பிள்ளை பதிப்பு (1924)

புதுக்கோட்டை தி.நா. முத்தையா செட்டியார் என்பவர் 1924 ஆம் ஆண்டு வள்ளலாரின் மாணவர்களில் ஒருவரான சமரச பஷனை ச.மு. கந்தசாமிப் பிள்ளையைக் கொண்டு ஆறு திருமுறைகளும் அடங்கிய ஓர் இலவசப் பதிப்பை வெளியிட்டார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் மோசூர் கந்தசாமி முதலியார், பதிப்புப் பணிகளில் உதவி செய்ததோடு முன்னுரையும் எழுதியுள்ளார். வள்ளலாரோடு பழகிய அன்பர்கள் பலரை ச.மு. கந்தசாமிப்பிள்ளை நேரில் சந்தித்துத் தரவுகளைத் திரட்டி வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி இப்பதிப்பில் சேர்த்துள்ளார். (இதுவே இன்றளவும் உண்மையான வரலாறாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது). ஆறாம் திருமுறை முதல் பதிப்பில் (1885) நூலின் முன்பகுதியில் 'ஜீவகாருணிய ஒழுக்கம்' சேர்க்கப்பட்டு, பின்வந்த எல்லாப் பதிப்புகளிலும் இன்நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்த இலவசப் பதிப்பில் ஜீவகாருணிய ஒழுக்கத்துடன் மநுமுறைக்கண்ட வாசகம், ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி, தொண்ட மண்டல சதகத்தின் நூற்பெயர் இலக்கணம், வழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை, தமிழ் என்பதன் உரை, அடிகள் உபதேசித்தருளிய உண்மை நெறி ஆகியனவும் நூலின் முன்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இத்துடன் முன்பதிப்புகளில் சேராது விடுபட்ட பாடல்கள் சிலவும் குடும்ப கோரம், சில கடிதங்கள் முதலியனவும் இப்பதிப்பில் புதியனவாகச் சேர்க்கப்பெற்றன.

இதுவரை வெளிவந்த பதிப்புகள் எல்லாவற்றிலும் வள்ளலாரின் பெயர் 'சிதம்பரம் இராமலிங்க பிள்ளை' அவர்கள் என்றே குறித்திருக்க இப்பதிப்பில் தான் 'சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள்' என்று முதன் முதலாகக் குறிப்பிடப் பெறுகிறது. வடலூர் சத்திய ஞான சபையின் படமும் முதன் முதலில் இப்பதிப்பில்தான் சேர்க்கப் பெற்றுள்ளது.

ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு (1931 -1958)

திருவருட்பாவிற்கு இதுவரை வெளிவந்த பதிப்புகளில் குறிப்பிடத்தக்கவை, அனைத்திலும் சிறந்தவை ஆ. பாலகிருஷ்ண பிள்ளை (1890 - 1960) பதிப்பேயாகும். இவர் பி.ஏ., எம்.எல்., பட்டம் பெற்றவர்; வழக்கறிஞர்; சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தத்துவ நூல் ஆசிரியராகவும்,சென்னை சட்டக் கல்லூரியில் சட்டநூல் ஆசிரியராகவும் இருந்தவர்; சென்னை இந்து சமய அறநிலையப் பாதுகாப்புக் கழகத்தில் செயலாளராகவும் ஆணையாளராகவும் பணிசெய்தவர். அறநிலைப் பாதுகாப்புக் கழகத்தில் பணியாற்றிய காலத்தில் வடலூர் நிலையங்களைப் பார்வையிட ஒரு முறை வடலூர் வந்தபோது வள்ளலாரின் திருக்கரத்தால் எழுதப்பெற்ற திருவருட்பா மூல ஏடுகள், அன்பர்களால் எழுதி வைக்கப் பெற்ற படி ஏடுகள் முதலியவை வடலூர் சத்தியஞான சபையின் பூசகர் உ.ப. பாலசுப்பிரமணிய சிவாசாரியரிடம் இருப்பதை அறிந்தார். அவரிடம் நட்புக் கொண்டும் உத்தியோகச் செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவற்றைச் சிவாசாரியரிடமிருந்து இரவலாகப் பெற்று ஆராய்ந்து பகுதி பகுதியாகப் பதிப்பிக்கத் தொடங்கினார். பாலகிருஷ்ண பிள்ளைக்கு கிடைத்த மூலங்கள் அனைத்தும் சத்தியஞான சபையின் பூசகர் உ.ப. பாலசுப்பிரமணிய சிவாசாரியரிடமிருந்து இரவல் பெற்றவையே. என்பதை, "இவ்வகையில் பாலகிருஷ்ண பிள்ளையும் பாலசுப்பிரமணிய சிவாசாரியரும் செய்து கொண்ட ஒப்பந்தம் (Agreement in 12 Annas Stamp Paper) ஒன்று உண்டு. ஆயினும் பாலகிருஷ்ண பிள்ளை தமது பதிப்பில் 12 புத்தகங்கள், 27 பதிப்புகளில் ஓரிடத்திலாதல் சிவாசாரியரிடமிருந்து தாம் மூலங்களைப் பெற்றதைக் குறிப்பிடவில்லை. மேற்கூறியவாறு தமக்கு ஒரே இடத்திலிருந்து மிக எளிதில் கிடைத்த மூலங்களைப் பல்லாண்டு காலம் துருவித்துருவி எழுத்தெண்ணி அரிதின் ஆராய்ந்து தமது பதிப்பை வெளியிட்டார்" என்னும் ஊரன் அடிகள் பதிவின் முலம் அறியமுடிகிறது (ஊரன் அடிகள்,1989: 54).

1931-ஆம் ஆண்டு தொடங்கி 1958 ஆம் ஆண்டு வரை திருவருட்பா பதிப்பிற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு மொத்தம் பன்னிரண்டு நூல்களை பகுதி பகுதியாக, ஆனால் முழுமையாக வெளியிட்டவர் ஆ. பாலகிருஷ்ண பிள்ளை. அவை; (1) கீர்த்தனைப் பகுதி (1931, 1933, 1961), (2) வசனப்பகுதி (1931, 1934, 1958,....1959), (3) உரைப்பகுதி(மூன்றாம் பதிப்பு ­வியாக்கியானப் பகுதி)(1931,1935, 1961), (4) உபதேசப் பகுதி (1932,1959), (5) திருமுகப்பகுதி (1932,1959), (6) தனிப்பாசுரப்பகுதி (1933, 1959), (7) முதல் திருமுறை அல்லது பெருநூல் பகுதி (1956), (8) இரண்டாம் திருமுறையும் மூன்றாம் திருமுறையும் அல்லது திருஒற்றியூர்ப் பகுதி(1956), (9) ஐந்தாம் திருமுறை அல்லது திருத்தணிகைப் பகுதி(1957), (10) நான்காம் திருமுறையும் ஆறாம் திருமுறை முன்பகுதியும் அல்லது பூர்வமான சிதம்பரப் பகுதி(1958), (11) ஆறாம் திருமுறை இடைப்பகுதி அல்லது உத்தரஞான சிதம்பரப் பகுதி (1958), (12) ஆறாம் திருமுறை முடிந்த பகுதி அல்லது சித்திவளாகப் பகுதி (1958) எனப் பன்னிரண்டுப் புத்தகங்களாகும்.

ஆ. பாலகிருஷ்ண பிள்ளையின் பன்னிரண்டு புத்தகங்கள் மட்டுமே அடுத்தடுத்து ஓரிரு பதிப்புகளைக் கண்டன என்பதை மேற்குறிப்பிட்ட தகவல்களின் மூலம் அறிய முடிகிறது. அதிலும் அதிகப்படியாக வசனப்பகுதியே ஐந்து பதிப்புகளைக் கண்டுள்ளது. அடுத்த ஆறு புத்தகங்கள் முதல் பதிப்போடு நின்றுவிட்டன. இவை அனைத்தும் அடக்க விலைப் பதிப்பாக வெளிவந்ததோடு முதல் ஆறு புத்தகங்கள் எளிதில் கையாளக்கூடிய கையடக்கப் பதிப்பாக அச்சிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. "முதல் ஆறு பகுதிகளை அடக்க விலைப் பதிப்பாக அச்சிட்டதில் நான் அடைந்த பொருள் நஷ்டத்தாலும், பிரதி நஷ்டத்தாலும் சிநேக நஷ்டத்தாலும் சோர்வடைந்து, நான் கொண்ட விரதம் எப்படி முடியப்போகிறது என்று திருவருளை இரவும் பகலும் நாடிக் கலங்கிக் கொண்டிருந்தபோது "மலங்கினேன் கண்ணீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை" என்றவாறு திருவருளின் துணைமை தோன்றி விளங்க, உலக விவகாரங்களில் தேர்ச்சி யடைந்ததோடு ஆன்மார்த்தங்களில் ஆழ்ந்த பற்றுடையவரும் எனது இளம்போதிய கலாசாலை நண்பருமான ஒர் அன்பர், நான் ஆராய்ந்து முடித்த இப்பகுதிகளைப் பொருள் நஷ்ட முண்டாகாத எல்லையில் அடக்கவிலைப் பதிப்பாகவே வெளியிடுவதற்கு வேண்டிய ஒர் ஏற்பாட்டினைச் செய்து கொடுத்தார். இங்கனம் அவர்கள் ஆடை இழந்தவன் கைபோல் எனக்கு உதவி செய்ய முன்வந்ததால், நான் இதுவரையில் செய்ய முடியாது வருந்தி விட்டிருந்தவற்றில் சிலவற்றோடுகூடி இப்பதிப்பு வெளிவருகிறது"(ஆ. பாலகிருஷ்ண பிள்ளை, தொகுதி - 1, 2007: 31). என்பதன் மூலம் ஆ. பாலகிருஷ்ண பிள்ளை அடக்கவிலை பதிப்பால் அடைந்த பொருள் நஷ்டத்தை அறிய முடிகிறது.

தொழுவூர் வேலாயுத முதலியாரின் பதிப்பை அடுத்துச் சில புதிய செய்திகளைச் சேர்த்துப் பதிப்பித்தவர் ச.மு. கந்தசாமி பிள்ளை. ஆனால் அதையும் தாண்டி வள்ளலாரின் கடிதங்கள், வள்ளலார் தமது அன்பர்களுக்கு இட்ட கட்டளைகள், அழைப்பிதழ்கள், உபதேசங்கள், உரைகள் மற்றும் சிறு குறிப்புகள் என்று அரிய பல செய்திகளை வெளிக்கொணர்ந்தவர் ஆ. பாலகிருஷ்ண பிள்ளை. அத்துடன் பதிப்பு விடையங்களிலும் பல நுணுக்கங்களைக் கையாண்டுள்ளார். 1867ஆம் ஆண்டு முதல் 1924 ஆம் ஆண்டு வரை வெளிவந்த திருவருட்பா பதிப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இப்பதிப்பு அமைந்துள்ளது. அதனைக் கீழ்வருமாறு பகுத்துக் கொள்ளலாம்.

திருவருட்பா ஆறு திருமுறைகளையும் பன்னிரண்டு நூல்களாகப் பிரித்து வெளியிட்டமை.

ஆறாம் திருமுறையை முன் பகுதி, இடைப்பகுதி, முடிந்த பகுதி என்று மூன்று நூல்களாக பகுத்துப் பதிப்பித்தமை.

நான்காம் திருமுறையை ஆறாம் திருமுறையுடன் சேர்த்து அச்சிட்டமை.

தலைப்புகள் இல்லாத பதிகங்கள் சிலவற்றிற்குத் தலைப்புகள் இட்டும் சில தலைப்புகளை மாற்றியும் அச்சிட்டமை.

தலைப்புகள் இல்லாத திருமுறைகளுக்குத் தலைப்புகள் கொடுத்தமை.

இத்தகைய சிறப்பிற்குரிய ஆ. பாலகிருஷ்ண பிள்ளையின் இந்த அரிய பதிப்புகள் அவர்தம் பேருழைப்பு, வள்ளலாரின் மெய்யன்பர்களுக்குக் கிடைக்க வேண்டும்; தொடர்ந்து கிடைத்திடுதல் வேண்டும் என்பதே அவரின் பேரவாவாகும். ஆனால், 1958க்கு பிறகு இவரின் நூல்கள் மறுபதிப்பு செய்யப்படாமல் கிடைப்பதற்கு அரிதாக இருந்தது. ஏறக்குறைய நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆ. பாலகிருஷ்ண பிள்ளையின் பேரவாவை நிறைவேற்றும் வகையில் சாரதா பதிப்பகம் டிசம்பர் 2006-இல் இவரின் பன்னிரண்டு நூல்களையும் மறுபதிப்புச் செய்து நான்குத் தொகுதிகளாகக் கொண்டு வந்துள்ளது.

இதேபோன்று 2007 இல் 'தி பார்க்கர்' பதிப்பகம் ஆ. பாலகிருஷ்ண பிள்ளையின் பன்னிரண்டு நூல்களையும் மறு பதிப்புச் செய்து அப்படியே பன்னிரண்டு நூல்களாகத் தந்திருக்கின்றனர். தற்போது ஆ. பாலகிருஷ்ண பிள்ளையின் கொள்ளுப் பேரன் கா. தமிழ்வேங்கை தனது ஐந்திணை வெளியீட்டகத்தின் வாயிலாக ஆ. பாலகிருஷ்ண பிள்ளையின் திருவருட்பா பதிப்பு நூல்களை மாற்றம் எதுவும் செய்யாமல் மறு பதிப்பு செய்து 2017 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஊரன் அடிகள் வரலாற்று முறைப் பதிப்பு (1972)

ஆ. பாலகிருஷ்ண பிள்ளையின் பதிப்பை அடியொற்றி 1972 இல் வரலாற்று முறைப் பதிப்பாக 'திருஅருட்பா' ஆறு திருமுறைகளையும் ஒரே நூலாகப் பதிப்பித்தவர் ஊரன் அடிகளார். ஆ. பாலகிருஷ்ண பிள்ளைக்கு கிடைக்காத மூல ஏடுகள் சில இவருக்கு கிடைத்ததால் மேலும் சில பாடல்களைச் சேர்த்துத் திருவருட்பாவை இவர் வெளியிட்டுள்ளார். இவ்வரலாற்று முறைப்பதிப்பில் நான்கு உரைநடை விண்ணப்பங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. பிற உரைநடைப்பகுதிகள் இப்பதிப்பில் பதிப்பிக்கப் பெறாமைக்குத் 'திருவருட்பா உரைநடை பகுதி' என்னும் நூல் தனியே வெளியிடப்பட்டதே காரணம் ஆகும்.

வள்ளலாரின் பாடல்களைத் தொகுத்துத் திரட்டியவாறே உரைநடைகளையும் அன்பர்கள் திரட்டி வைத்திருந்தனர். ஆனால் பாடல்களை முழுமையாக வெளிக்கொணரக்கூடிய ஆர்வத்தைப் போன்று உரைநடை வடிவங்களையும் முழுமையாக வெளிக்கொணர அவர்கள் ஆர்வம் கொள்ளவில்லை.

ஆ. பாலகிருஷ்ண பிள்ளையே அனைத்து உரைநடை வடிவங்களையும் முழுமையாக ஒன்று திரட்டி வெளிக்கொணர்ந்தார். இருப்பினும், அவை நான்கு நூல்களில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டன. இவரே உரைநடை முழுமைப் பதிப்புக்கு வித்திட்டவர் ஆவார். ஆ. பாலகிருஷ்ண பிள்ளை வெளியிட்ட வசனபாகம், வியாக்கியானப் பகுதி, உபதேசப் பகுதி, திருமுகப்பகுதி ஆகிய நான்கு பகுதி நூல்களையும் ஒருசேரத் தொகுத்து உரைநடை வடிவங்கள் முழுமையையும், திருவருட்பா உரைநடைப் பகுதி என 1978 இல் ஊரன் அடிகள் வெளியிட்டார். இந்நூலுள் இராமலிங்க வள்ளலார் அருளிய உரைநடைப் பகுதிகளான வியாக்கியானங்கள் மருத்துவக் குறிப்புகள், உபதேசங்கள், திருமுகங்கள், அழைப்புகள், அறிவிப்புகள், கட்டளைகள், விண்ணப்பங்கள் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன.

திருவருட்பா வரலாற்று முறைப் பதிப்பில் ஊரன் அடிகள் செய்துள்ள மாற்றங்களைக் கீழ்வருமாறு சுட்டலாம்.

நூல் முழுமையும் பாவினம் குறித்து சந்தி பிரித்தும் பதிப்பித்துள்ளமை.

திருமுறைகளும் பதிகங்களும் அவை எழுதப்பட்ட கால அடிப்படையில் வரிசையாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளமை.

பாடல்களுக்குத் தொடர் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளமை.

முதற்பதிப்பை 1972இல் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையமும், இரண்டாம் பதிப்பை முதல் ஐந்து திருமுறைகள் ஒரு புத்தகமாகவும் ஆறாம் திருமுறை ஒரு புத்தகமாகவும், 1981இல் இராமலிங்கர் பணிமன்றமும், மூன்றாம் பதிப்பை 1989இல் மீண்டும் முதற்பதிப்பை வெளியிட்ட சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையமே இரண்டாம் பதிப்பைப் போன்று இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது.

இதுவரை சுட்டிக்காட்டப்பட்ட மூலப் பதிப்புகள் தவிரச் சில தனிநபர்களும், நிறுவனங்களும் திருவருட்பாவை முழுவதுமாக, பகுதியாக வெளியிட்டுள்ளனர். அவையெல்லாம் மறு அச்சுகளாகவே பெரும்பாலும் உள்ளன.

தொகுப்பாக:

அச்சு ஊடகத்தின் வருகையால் கடந்த 150 ஆண்டுகளில் சன்மார்க்க அன்பர்கள் பலர், திருவருட்பா ஆறு திருமுறைகளைப் பல்வேறு இன்னல்களுக்கு நடுவில் பல்வேறு காலகட்டங்களில் தம் தேவைக்கேற்ப முழுமையாகவும் குறிப்பிட்ட திருமுறைகளை மட்டும் பல்வேறு வடிவங்களில் அடக்க விலைக்கும், குறைந்த விலைக்கும், இலவசமாகவும் பதிப்பித்து வெளியிட்டு வந்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் வணிக நோக்கில் இப்பணியைச் செய்யவில்லை என்பதை அறியமுடிகிறது. எனில் இவர்கள் ஏன் இப்பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆராயும்போது சைவத்துக்குள் தனக்கான இடத்தைத் தேடத் தொடங்கிய இடைநிலைச் சாதியினர் இராமலிங்கரைத் துணைக்கு இட்டுக்கொண்டனர் என்பதை அறிய முடிகிறது. இந்த நோக்கத்திற்காகவே தொடக்க காலங்களில் அவரது பாடல்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். பாடல்களை மட்டுமே தொகுத்து வெளியிட்டுக்கொள்ள ஆர்வம் காட்டிய இவர்களுக்கு அவரது கொள்கைகளையோ, கோட்பாடுகளையோ அவர் நிறுவிய நிறுவனங்களையோ மக்களிடத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருப்பின் முதல் ஐந்து திருமுறைகளை வெளியிட்ட வள்ளலாரிடம் அனுமதிக் கேட்டு உண்ணா நோன்பிருந்த இறுக்கம் இரத்தின முதலியார், ஏன் ஆறாம் திருமுறையை வெளியிடவில்லை, என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள திருவருட்பா பதிப்புகளுக்கு பின்னால் பல சமூகப் பின்னணியிலான வரலாற்றுப் பதிவுகள் உள்ளன என்பதை ஊகிக்க முடிகிறது.

துணைநூற்பட்டியல்:

(1) இராமசாமி முதலியார், திருவருட்பாத் திருமுறை, இந்து யூனியன் அச்சியந்திர சாலை,1896.

(2) ஊரன் அடிகள் (ப.ஆ.), திருஅருட்பா முதல் ஐந்து திருமுறைகள், சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர், மூன்றாம் பதிப்பு: அக்டோபர் - 1989.

(3) ஊரன் அடிகள் (ப.ஆ.), திரு அருட்பா ஆறாம் திருமுறை, சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர், மூன்றாம் பதிப்பு: அக்டோபர் - 1989.

(4) ஊரன் அடிகள், இராமலிங்க அடிகள் வரலாறு, சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர், மூன்றாம் பதிப்பு: அக்டோபர் - 2006.

(5) கந்தசாமி பிள்ளை, ச.மு., இராமலிங்க சுவாமிகள், சரித்திரக் குறிப்புகள், சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர், செப்டம்பர் - 2009.

(6) குகத்திரு ரஸபதி அடிகள், திருவருட்பா விரிவுரை திருவடிப் புகழ்ச்சி, முதல் புத்தகம், வடார்க்காடு மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், வேலூர், முதற்பதிப்பு: ஜனவரி - 1967.

(7) சரவணன், ப., நவீன நோக்கில் வள்ளலார், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், முதற்பதிப்பு: டிசம்பர் - 2010.

(8) சரவணானந்தா, வள்ளலார் கண்ட ஒருமைவாழ்வு, இராமலிங்கர் பணிமன்றம், சென்னை, முதற்பதிப்பு: ஜனவரி - 1974.

(9) சிவஞானம், ம.பொ., வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, பூம்புகார் பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு: பிப்ரவரி - 2011.

(10) துரைசாமிப் பிள்ளை, ஔவை சு., (உ.ஆ.), திருவருட்பா மூலமும் உரையும், ஒன்பதாம் தொகுதி, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, மறுபதிப்பு: அக்டோபர் - 2013.

(11) பாண்டுரங்கன், இராம., திருவருட்பா பதிப்புச் சோலை, ஐந்திணை வெளியீட்டகம், விழுப்புரம், முதற்பதிப்பு: பிப்ரவரி 2017.

(12) பாலகிருஷ்ணபிள்ளை, ஆ., (ப.ஆ.), திருஅருட்பா கீர்த்தனைகள் பகுதி, முதலாம் புத்தகம், தி பார்க்கர், சென்னை, மறுபதிப்பு: 2007.

(13) பாலகிருஷ்ணபிள்ளை, ஆ., (ப.ஆ.), திருஅருட்பா உபதேசப் பகுதி, நான்காம் புத்தகம், தி பார்க்கர், சென்னை, மறுபதிப்பு: 2007.

(14) பாலகிருஷ்ணபிள்ளை, ஆ., (ப.ஆ.), திருஅருட்பா திருமுகப் பகுதி, ஐந்தாம் புத்தகம், தி பார்க்கர், சென்னை, மறுபதிப்பு: 2007.

-  முனைவர் வி.தேவேந்திரன்

Pin It