meenakshmiமுன்னுரை

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
பெருங்கடல் இவற்றோடு பிறந்த தமிழ் 1

என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். தமிழ் மொழி இல்லாத காலம் இத்தரணியில் இல்லை எனச் சான்றோர்கள் கூறுகின்றனர். அத்தகைய மொழி, மொழிகளுக் கெள்ளாம் செம்மொழியாய் விளங்குகிறது. 19 நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பல அறிஞர்கள் தமிழுக்கு தொண்டாற்றினர்.

இவர்களின் வருகையால் பிறமொழி ஆதிகத்திலிருந்த தமிழ்மொழி மீட்டெடுத்து தமிழர்களைப் பெருமையுரச் செய்தனர். நூற்களைத் தொகுத்தும் இலக்கியத்தையும், இலக்கணத்தைக் கற்றுணர்ந்து அவற்றை ஆய்வுச் செய்வதேயே கடமையாகக் கொண்டனர் எனலாம். இத்தகைய தமிழறிஞர்கள் ‘மீனாட்சி சுந்தரம் பிள்ளைப் பற்றி விரிவாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆய்வு கருதுகோள்

தமிழறிஞரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் தமிழ் பணியை சமகாலத் தமிழருக்கு அறிமுகம் செய்வதே இவ்வாய்வின் கருதுகோளாகும்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளை

தனிமனிதன் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ முடியும் என்பதை 19 நூற்றாண்டில் நிறுவிக்காட்டினார் அறிஞர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. இவரை ‘பிற்காலக் கம்பர்’ என திறனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

படித்தல், பாடம் சொல்லுதல், நூல்களை யாத்தல் என்பதையே வாழ்க்கையாகக் கொண்டு பல தலப் புராணங்களைப் பாடியுள்ளார். சைவ அன்பர்கள் இவரை தம் ஊருக்கு கூட்டிச் சென்று பெருஞ்சிறப்பு செய்து தம் ஊருக்குத் தலப்புராணம் ஆக்கித்தருமாறு வேண்டிப் பெற்றனர். தமிழில் இவரே அதிக தலப்புராணங்களையும், சிற்றிலக்கியங்களையும் பாடியுள்ளார்.

பெருமித வாழ்வு

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாண்டிய நாட்டில் வாழ்ந்த மரபுவழிப் புலவர் சிதம்பரம்பிள்ளை என்பவருக்கு மகனாக சோழநாட்டு காவிரித் தென்கரையில் சிற்றூர் எண்ணுயூரில் பிறந்தார். கி.பி.1815-ல் பிறந்த இவர் தம் தந்தையிடமே தமிழ் மொழிக்கற்றுச் சிறந்தார்.

இளவயதில் காவேரி என்ற பெண்ணை மணந்து திருச்சிராப்பள்ளியில் குடியேறினார். சென்னை சென்று காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடம் பாடம் கேட்டு புலமைப் பெற்றார். தன்னை நாடிவந்த தமிழ் ஆர்வலருக்கு தமிழ் கற்பித்தார். திருவாடுவதுறை சென்று 15ஆவது குருமகா சந்நிதனமாக விளங்கிய அம்பலவான தேசிகரிடம் ஞான நூல்களை கற்றறிந்தார். இவருக்கு ’மகாவித்துவான்’ எனப் பட்டம் சூட்டினர்.

கல்விப் பணி

மயிலாடுதுறையில் பலகாலம் தங்கியிருந்து இவரது புலமையை அறிந்து நாடி வந்த மாணவர்களுக்கு தமிழை கற்பித்தார். ஏழை மாணவர்களுக்கு உன்ன உணவும், இடமும் அளித்து குருகுலமுறையில் கல்வி புகட்டினார். ”தாயை விட தன் மீது அன்பு கொண்டிருந்தவர் எம் ஆசான்”2 என்று உ.வே.சா கூறுகிறார்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளை நூல்களைத் தொடுத்து ‘ஸ்ரீ மகாவித்துவான் மீனாட்சி திரட்டு, இரு தொகுதியாக திரிபுரமகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம் என்ற இரு வாரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.

இலக்கிய பணி

தமிழ் இலக்கிய வரலாற்றில் சிற்றிலக்கிய காலத்தில் வாழ்ந்த இவர் திருத்தலங்களை விவரித்து அதிகமான தலபுராணம் பாடியுள்ளார். அதிக நூல்கள் இயற்றிய தமிழறிஞர் என்ற் பெருமையுண்டு.

புராணம் பாடும் புலவர்

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் படைப்புகளை பலவகையில் வகைப்படுத்தலாம். அதில் மிகுதியானவை தலப்புராணங்களே அம்பரம் புராணம் தொடங்கி வீரவனப்புராணம் முடிய 22 புராணங்களைப் படைத்து ‘புராணம் பாடும் புலவர்’ எனப் பெயர் பெற்றார்.

இத்தகைய புராணத்தில் திருநாகைச் காரோணப்புராணம், மாயூரப்புராணமும் பெருங்காப்பியமாக எண்ணத்தக்கவை. மயிலாடுதுறையில் அமைந்த சோழநாட்டு பெருமையை ‘பூவினூள் பதுமம் போலும் புருடன்…..நாட்டினுள் சோழநாடு’3 என விளக்கியுள்ளார்.

அந்தாதி

மகாவித்துவான் பாடிய படைப்புகளில் இரண்டாம் இடத்தில் இருப்பது அந்தாதியாகும். இதில் நான்கு வகையாந்ததி பாடியுள்ளார். பதிற்றுபத்துயந்தாதி (4) திரிபந்தாதி (4) யமகவந்தாதி (4) வெண்பா அந்தாதி (1) என 15 அந்தாதி (1) என 15 அந்தாதியைப் பாடியுள்ளார்.

தனது 26 வயதில் திருவானைக்காத்திரியந்தாதி பாடினார். திரிசிராமலை குறித்த அந்தாதியை விநாயக்கடவுள் தொடங்கி சேக்கிழார் வரை பதினொருவரை வாழ்த்தி அவையடக்கம் ஒருவருக்கு என பன்னிரு செய்யுட்களை புதுவமையான முறையில் படைத்திருக்கிறார்.

பிள்ளைத்தமிழ்

புராணத்திற்கும் அந்தாதிக்கும் அடுத்தாக பிள்ளைத்தமிழ் பாடிய மகாவித்துவான் அகிலாண்ட நாயகி தொடங்கி 10 பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். இதனால் ‘பிள்ளைத்தமிழ் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ எனப் பெருமைப் பெற்றார். திரியந்தாதிகளில் தளிர்த்து, திரிசிரபுரயமகவந்தாதியில் அரும்பி அகிலாண்ட பிள்ளைத்தமிழில் மலர்ந்து எனக் கூறிப்பிடுகிறனர

கோவை

'பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’4 என்னும் தொடர் மாணிக்கவாசகர் வாழ்வில் நடந்தது. மகாவித்துவான் படைப்பில் சிறப்பு பெருவது கோவையாகும். அவை சீர்காழ்க் கோவை சபாபதி முதலியார் மீது பாடப்பெற்றது வியாவைக் கோவையும் மாயூரம் வேதநாயகம் மீது இயற்றப்பட்டது குளத்தூர் கோவையாகும்.

வேதநாயகத்தின் வேண்டுக்கோளுக்கு இனங்க சீர்காழியில் உள்ள பிரமபுரீகவரல் மீது சீர்காழி கோவையை பாடினார். இதில் கிடைத்த தொகையை தன் மாணவன் ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்து வீடு கட்டி கொடுத்துள்ள செய்திகள் வியக்கதக்க செய்தியாகும்.

பிற சிற்றிலக்கியங்கள்

மகாவித்துவான் கலம்பகம், உலா, குறவஞ்சி, சிலேடை,வெண்பா உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களையும் படைத்துள்ளார்.

கலம்பகம் - வாட்போக்கிக்கலம்பகம்
                       அம்பலவாண தேசிகர் கலம்பகம்

உலா - திருவிடைமருதூர் உலா

தூது - சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடுதூது
            தானப்பா ஆசாரியார் தசவிடுதூது

குறவஞ்சி - திருவிடைக்கழிகுறவஞ்சி

சிலேடை வெண்பா - திருவாடுதுறை சிலேடை வெண்பா

இதை தவிர பதிகம், அகவல், சரித்திரம், தனிப்பாடல்கள், விருத்தம், கதை, ஆனந்த களிப்பு போன்ற பலவற்றைப் படைத்துள்ளார். இதுவரை 73 படைப்புகள் இடம்பெற்றுகின்றன. இவற்றுள் பதிப்பித்து கிடைப்பவை, கிடைக்காதவை என மகாவித்துவான் படைப்புகள் உள்ளன.

விரைந்து செய்யுளியற்றும் வள்ளார்

மகாவித்துவானின் மாணவன் கோபாலப்பிள்ளை விரைந்து எழுதுவதில் வள்ளவர். ஒருநாள் தன் ஆசான் காதில் விழும்படி என் கை வலிக்குமாறு எழுத சொல்வது இல்லையே என செருக்குற்றிருந்தார். ஒருநாள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை காரோணப் புராணத்தில் சுந்தரலிங்கப்படலத்தில் கற்பனை நிறைந்த பாடல்களை காலைத் ஏழு மணி தொடங்கி நண்பகல் பன்னிரெண்டு மணிவரை எழுதிக் கொண்டே இருந்தார்.

திடீரென எழுந்து எழுத்தாணியை உறையில் வைத்து அவர் காலடியில் விழுந்தார். தன்னால் தங்கள் வேகத்திற்கு எழுத முடியவில்லை தன் கை முன்விரல், கட்டைவிரல் குருதி கசிவதாக தன் தோல்வியை ஓப்புக்கொண்டார்.

பரந்துபட்ட அறிவு

பொருள் சொல்வதில் வல்லவரான மகாவித்துவானிடம் தன்னை விட பெரியவர்கள் யாரும் இருக்கக்கூடாது என தற்பெருமை கொண்ட ஒருவர் அவர் அறியாத ஒன்றைச் சொல்லி

"காணியுங் காணியுங்
காணியுங்காற்
காணியுங் காணியுங்
காணிமுங்காற்
…..காட்டுங்கழுகுன்றே4”

உடனே அதில் உள்ள காணிகளை கூட்டி காலைக்காட்டு என்பது பொருள் கழுகுன்றத்தை அடைந்தால் சிவன் திருவடியை அடையளாம் என்பது இதன் கருத்து. பெருந்துறை பித்தனை என் வினை ஒத்த பின் கணக்கில்லாத திருக்கோலம் நீ வந்து காட்டினாய் எனப் பாடப்பெற்று என விடையளித்தார். விடை தொடுத்தவர் நானே இதன் பொருளை அறியவில்லை. இதற்கு பொருள் கூறிய தாங்கள் தெய்வபிறவி என வாழ்த்தினார்.

நகையுணர்வு

மகாவித்துவான் இயல்பாக நகைச்சுவை உணர்வு மிக்கவர். மற்றவரின் செயலில் இருக்கும் தவறினை நயமாக சுட்டிக்காட்டும் பண்பாளர். பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க ஒருவர் வந்தராம் அவரிடம் என்ன படிக்க வேண்டும் என்றார். இலக்கியம் என்றார்.

இலக்கணம் படிக்க வேண்டாமா? என்றார் நன்றாக படித்து இருக்கிறேன், உடனே பிள்ளை ஒரு பாடலை கூறி இதில் உள்ள எழுவாய், பயனிலை கூறுக எனக் கேட்டார். வந்தவர் ஒன்றும் புரியாமல் வெகு நேரம் நிற்க பிள்ளை இனி எழுந்திருப்பாய் அமர்ந்துயிருப்பதில் பயனில்லை என அருகில் இருப்பவர் குறிப்பால் சொன்னதாக உ.வே.சா கூறுகிறார்.

முடிவுரை

இதுகாறும் கூறியவற்றில் இருந்து முடிவுகள் பின்வருமாறு

 இவ்வாய்வின் வழியாக மகாவித்துவான் புலமையும் தமிழ்தொண்டும் புலப்படுகின்றன.
 மகாவித்துவானின் நூல்கள் அனைத்தும் அச்சிட்டு மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் செய்ய வேண்டும்.
 இவரின் நூற்களை ஆய்வாளர்கள் ஆய்வு களமான கொண்டு ஆய்வுச் செய்ய வேண்டும்
 இவருக்கு இவர் வாழ்ந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கவேண்டும்
 நவீன அறிவியல் உலகில் இக்காலத்தில் இவரின் உண்மையான படத்தினை இணையத்தில் காண்பது அரிது. எனவே திருவுவை இந்திய மக்கள் அறியும் வண்ணம் இணையத்திலும் அஞ்சல் தலையாகவும் வெளியிட வேண்டியது அரசின் கடமையாகும்.

அடிக்குறிப்புகள்

1. டாக்டர்.பூவண்ணன், தமிழ் இலக்கிய வரலாறு திருநெல்வேலி தென்னிந்தய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 1996. ப.6
2. உ.வே.சாமிநாதையர், திரிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம் மதுரை, 1998 ப.68
3. மகாவித்துவன் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மாயூரப்புராணமும், மதுரை 1996, ப.8
4. முனைவர்.குணசேகர் மகாவித்துவான் இலக்கியப்பணிகள், 2015 ப.5

துணை நூற்பட்டியல்

நூல்கள்

1. டாக்டர். பூவண்ணன் - தமிழ் இலக்கிய வரலாறு திருநெல்வேலி தென்னிந்தய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 1996.

2. உ.வே.சாமிநாதையர் - திரிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம் மதுரை, 1998 ப.68

3. மகாவித்துவன் மீனாட்சி சுந்தரம்பிள்ளை - மாயூரப்புராணமும், மதுரை 1996,

ஆய்வு கட்டுரை

1. முனைவர்.குணசேகர் மகாவித்துவான் இலக்கியப்பணிகள், 2015

- முனைவர்.கோ.புஷ்பவள்ளி

Pin It