தமிழ்நாடு நம் நாடு! தாயக நாளைக் கொண்டாடு!

=•=•=•=•=•=•=•=•=•=•=•=•=•=•=•=

நவம்பர் 1 ஆம் நாளைத் தமிழ்நாடு விழாவாகக் கொண்டாடுவோம்!

=•=•=•=•=•=•=•=•=•=•=•=•=•=•=•=

நவம்பர் ஒன்றாம் நாளைத் தாயக நாளாக அறிவித்து 25.10.2019 அன்று அரசாணை வெளியிட்டு, 01.11.2019-இல் தமிழ்நாடு அரசே விழா எடுத்துக் கொண்டாடியது. அதைப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பும் தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அமைப்பினர் அனைவரும் வரவேற்றுப் பாராட்டினர்.

01.11.2020-இல் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு அளாவிய பெருவிழாவாக எடுக்க முடிவெடுத்து, அத் தகவலை அரசுக்கும் முறையாகத் தெரிவித்து, நவம்பர் முதல் நாளைப் பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கவும், தமிழ்நாட்டுக்கென ஒரு கொடியை அறிவிக்கவும் கோரிக்கை வைத்திருந்தது.

மாநிலங்களுக்குத் தனி இலச்சினைகள் இருப்பதுபோல், தனிக்கொடி வைத்துக் கொள்வதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் மறுக்கவில்லை. எனவே, தமிழ்நாடு அரசே ஒரு கொடியை அறிவிக்கிறவரை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தமிழ்நாட்டின் வரைபடத்தைக் கொண்டஒரு கொடியினை முன்மொழிந்ததொடு, தமிழ்நாடு அரசு இதே கொடியையோ, எல்லோரும் ஏற்கத் தகுந்த வேறொரு கொடியையோ அதிகார அளவில் அறிவிப்பின் அதையே வரவேற்றுப் பின்பற்றுவோம் என்றும் உறுதியளித்தது.

அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி அவர்களும் 31.10.2020 அன்று தமிழ்நாடு நாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டு, நவம்பர் முதல் நாளை எல்லோரும் கொண்டாடச் சொல்லி அறிவித்திருந்தார். தமிழ்நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்த நிலையில், கொடி ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதாகத் திடுமெனக் கூறி, 31.10.2020 மாலையிலிருந்தே நாடெங்கும் உள்ள பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் உறுப்பியக்கப் பொறுப்பாளர்களையெல்லாம் தேடித் தேடிக் காவல் துறையினர் கொடியேற்றக் கூடாது எனும் அறிவிப்பை இரவோடு இரவாகக் கொடுத்துச் சென்றனர். அந்த இரண்டடித் துணி இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானதாம். தமிழ்நாடு படம் உள்ள அந்தக் கொடி இந்தியாவைத் துண்டாடிச் சிதைத்து விடுமாம். கொடி ஏற்றினால் 124-ஏ தடைச்சட்டம் பாயும் எனத் தமிழ்நாடு முழுதும் விழா ஒருங்கிணைப்பாளர்களுக்குக் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்துக் காவல்துறையின் மூலம் அடக்குமுறைகளை ஏவியது, பாசக-வின் ஏவலாளியாக இருந்த அதிமுக அரசு.

காவல்துறை அறிவிப்புக்குக் கட்டுப்பட்டுப் பொதுவெளியில் கொடியை ஏற்றாத நிலையிலும் சென்னை, மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க்களத்தில் அத்துமீறிப் புகுந்து பதாகைகளையும் கொடிகளையும் பறித்துச் சென்றதுடன், விழா ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் அவர்களையும், தோழர் தம்பி மண்டேலா-வையும் அதேபோல் கொடியேந்தியபடி இனிப்பு மட்டுமே வழங்கிய வடசென்னைத் தோழர்கள் 13 பேர் மற்றும் பட்டாபிராம் பகுதித் தோழர்கள் 6 பேர் என 21 பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்புத் தோழர்களையும், மற்ற பல்வேறு அமைப்புகளின் தோழர்களையும் தாயகநாள் விழா கொண்டாடியதற்காகத் தளைப்படுத்தி கொடுஞ் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து சிறையிலடைத்தது..

மீண்டும் அடுத்த ஆண்டு 2021 நவம்பர் ஒன்றாம் நாளுக்கு முன்பாக மிகப் பெரும் அளவில் திட்டமிட்டுத் தமிழ்நாட்டு அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைத்துப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் தமிழ்நாடு நாள் விழாவை மிகப் பெரும் அளவில் கொண்டாடிட வலியுறுத்தினர்..

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் மட்டுமின்றி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய சமூக சனநாயக கட்சி (எஸ் டி பி ஐ), பச்சைத் தமிழகம் கட்சி உள்ளிட்ட கட்சியினரும் எண்ணற்ற இயக்கங்களைச் சார்ந்தவர்களும் வலியுறுத்தினர்..

ஆனாலும், பொறுப்பேற்றிருந்த திமுக அரசு, சூலை 18-ஆம் நாளைத் தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்ட நாளாக ஏற்று அதையே தமிழ்நாடு நாள் விழாவாக அறிவித்தது..

அதேபோது அதை அரசு விழா என்ற அளவில் ஓரிடத்தில் மட்டும் நிகழ்ச்சியை நடத்திவிட்டு முடித்துக் கொண்டது..

கர்நாடகாவில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து.. கர்நாடக அரசு விழா -என்கிற பெயரில் கர்நாடகத்திற்கெனத் தனிக் கொடியேற்றி, இலச்சினை அமைத்து முழு அரசு மரியாதையோடு கருநாடக முதலமைச்சரே கர்நாடக தேசியக் கொடியேற்றிட கர்நாடகம் முழுமையும் கொண்டாடுகின்றனர்..

அன்றைய நாள் கர்நாடக எங்கும் கர்நாடகத் தேசியக் கொடியாக அந்தக் கொடியே பறக்கிறது.. கருநாடக பா.ச.க ஆனாலும்.. கருநாடகக் காங்கிரசு கட்சியானாலும் கருநாடக விழாவை மிகப் பெரும் அளவில் முன்னெடுத்து கொண்டாடுகின்றன..

ஆனால் தமிழ்நாட்டு அரசு அந்த அளவில் ஒரு கொடியை உருவாக்கி அறிவிக்கக்கூடவில்லை என்பதும், தமிழ்நாடு நாள் விழாவைத் தமிழ்நாட்டுத் தேசிய விழாவாகக் கொண்டாடவில்லை என்பதும் மிகப்பெரிய அவலம் என்பதோடு திமுக அரசு அதில் அக்கறையற்று இருப்பதைச் சுட்டிக் காட்டவும் கண்டிக்கவும் வேண்டியிருக்கிறது..

சூலை 18-ஆம் நாள் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட நாளாகக் கொண்டாடுவதிலோ அரசு விழாவாக அறிவிப்பதிலோ நமக்கும் உடன்பாடே..

அதேபோது குமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்ட நாளாகவும், மொழி வழி மாநிலங்கள் உறுதி செய்யப்பட்டு இறுதியாக தமிழ்நாடு என்று அரசு அதிகாரம் பெற்ற ஒரு நாளாகவும் நவம்பர் ஒன்றாம் நாள் ஏற்கப்பட்டுத் தொடர்ந்து பல பத்தாண்டுகளாகத் தமிழ் இயக்கங்களால் விழா கொண்டாடப்பட்டு வருகிற நிலையில் நவம்பர் ஒன்றையே தமிழ்நாடு நாள் விழாவாகத் தமிழ்நாடு அரசு அறிவித்தாக வேண்டும்.. எனத் தொடர்ந்து வலியுறுத்துவோம்..

அதுவரை இயக்கங்கள் அனைத்தும் உணர்வாளர்கள் அனைவரும் ஆங்காங்கே தமிழ்நாடு நாள் விழாவை மக்களுக்கு இனிப்பு கொடுத்து மக்கள் விழாவாகக் கொண்டாடுவோம்..

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு 100க்கும் மேலான அமைப்புகளுடன் கலந்து பேசி இறுதிப்படுத்தியிருக்கிற தமிழ்நாடு கொடியையே, (தமிழ்நாடு அரசு தனி கொடியாக அறிவிக்கும் வரை) தமிழ்நாட்டின் கொடியாக ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு எங்கும் அறிமுகப்படுத்துவோம்! கொண்டாடுவோம்!

தமிழ்நாடு நம் நாடு!

தாயக நாளைக் கொண்டாடு!

- பொழிலன்

Pin It