'இசுரேலிய இனவெறி அரசு பாலசுதீனியர்களை இன அழிப்பு செய்கிறது. உலகத் தலைவர்கள் உடனடியாக தலையிட்டுப் போரை நிறுத்தவேண்டும். பாலசுதீனத்தில் இருந்து இசுரேலியப் படைகளால் வெளியேற்றப்பட்டு இன்றுவரை அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் பாலசுதீனியர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்ற முயற்சியின் ஒரு வடிவமாகவே அக்டோபர்-7 அன்று ஏவுகணைத் தாக்குதலை ஹமாசு அமைப்பு நடத்தியது. தொடர்ந்து இசுரேலியர் சிலரைப் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது. அதைத் தொடர்ந்து, இசுரேல் பாலசுதீனியர்கள் மீது முழுமையான போரை அறிவித்து நடத்தி வருகிறது.
ஏராளமான பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டு விட்டனர். இசுரேல் போராளிகளை அழிப்பதை இலக்காகக் கொள்ளவில்லை. பொதுமக்களை அழிப்பதை இலக்காகக் கொண்டிருக்கிறது. பல நகரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன. வான்வழித் தாக்குதலும், தரைவழித் தாக்குதலும் நடத்தப்படுகிறது. வரைமுறை இல்லாத அளவிற்கு அஞ்சத்தகுந்த (அபாயகர) ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளை பாசுபரசு கொட்டி, குடியிருப்புகள் எரிக்கப்படுகின்றன. கொத்துக் கொத்தாக குழந்தைகளும் பெண்களும் சாகும் நிலையில் காயம்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்யும் வாய்ப்பு குறைந்து போய்விட்டது. மக்கள் அடர்த்தியாக வாழும் காசா பகுதிக்கான உணவு, தண்ணீர், மின்சாரம் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன.
காசா என்பது இசுரேல், எகிப்து, மத்திய தரைக் கடல் இவற்றால் சூழப்பட்டு இடையே 41 அயிர மாத்திரி (கிலோ மீட்டர்) நீளமும் 10 அயிர மாத்திரி (கிலோ மீட்டர்) அகலமும் கொண்ட 23 இலட்சம் பேருக்குத் தாயகமாக விளங்குகிற பகுதி. உலகில் உள்ள குறைந்த நிலப்பரப்பில் அதிக மக்கள் வாழும் பகுதிகளில் இதுவும் ஒன்று. 23, லட்சம் பேரில் 10 லட்சம் பேருக்கு உணவு இல்லை. அக்டோபர் 19 ஆம் நாள் காசாவில் உள்ள அகில் மருத்துவமனையில் நடத்தப்பட்ட குண்டு வீச்சில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டு விட்டனர். பாலசுதீனம் என்ற பகுதி உலக வரைபடத்திலேயே இல்லாமல் அழிக்கப்படவும், பாலசுதீனியர் என்ற தேசிய இனமக்களே இல்லாமல் முற்றிலுமாகக் கொன்றொழிக்கப்படவுமான சூழ்நிலை எழுந்துள்ளது.
வரைமுறைக்கு அப்பாற்பட்ட போரை இசுரேல் நடத்திக் கொண்டிருக்கிறது. வழக்கம் போலவே அமெரிக்கா இசுரேலுக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளது. தொடக்கம் முதல் பாலசுதீனிய விடுதலையை ஆதரித்து வந்திருக்கும் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு நேர்மாறாக, ஆர்எஸ்எஸ் இன் இந்துத்துவ பாசிச ஆட்சியாளராக விளங்கும் மோடி இசுரேலுக்கு இந்தியாவின் ஆதரவைத் தெரிவித்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதுவரை இருந்த எந்த தலைமை அமைச்சரும் (பிரதமரும்) இசுரேலுக்குச் சென்றதில்லை. இசுரேலுக்குச் சென்ற முதல் தலைமை அமைச்சர் (பிரதமர்) நரேந்திர மோடிதான்.
கடந்த அக்டோபர்-7 அன்று, கமாசு அமைப்பு ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால்தான் இசுரேல் போர் தொடுத்தது என்று எவரும் கருத முடியாது. ஏனெனில், 2000-ஆம் ஆண்டிலிருந்தே, இப்பிரச்சினை தீவிரமாக நடந்து வந்தது. 2000 -2005 ஆண்டுக் காலத்தில் 4,973 இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஏராளமான குடியிருப்புகள் அழிக்கப்பட்டன. 2002-இல் மேற்குக் கரையில் இராணுவத் தேடல் என்ற பெயரில் இசுரேலிய இராணுவம் புகுந்து அழித்தொழிப்பை மேற்கொண்டது. தொடர்ந்து வான்வழித் தாக்குதலை நடத்தியது. சவூதி அரேபியா ஏற்பாட்டில் அமைதி குறித்து பேசத் தயார் என்று யாசர் அராபத் அறிவித்தாலும் பேசுவதற்கு இசுரேல் மறுத்து விட்டது. இதன்பிறகு தான் கமாசு களத்தில் இறங்கியது.
எபிரேய பைபிள் பேசுகிறபடி, யூதர்களும் பாலசுதீனியர்களும் ஆபிரகாமின் வழித்தோன்றல்கள். இன்றைய இசுரேலிய பகுதியாகிய அன்றைய கானானில் வாழ்ந்தார்கள். கி.மு 1000-இல் யூதர் டேவிட் ஆட்சி நடந்தது என்றும், கி.மு 957-இல் அரசர் சாலமன் காலத்தில் யூதர்களுக்கான கோயில் கட்டப்பட்டது, அது கி.மு 722-இல் இசுரேல் அசிரியர்களால் அழிக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்படுகிறது . கி.பி.70இல் ரோமானியர்கள் யூதர்களின் இரண்டாவது கட்டப்பட்ட கோயிலை அழித்தனர். பாரசீகர்கள், ரோமானியர்கள், கிரேக்கர்கள், அராபியர்கள், பாத்திமியர், செல்ஜுக் துருக்கியர், எகிப்தியர், ஆட்டோ மான் துருக்கியர் எனப் பலர் இப்பகுதியை ஆண்டிருக்கிறார்கள்.
யூதர்கள் தங்கள் நிலப்பரப்பிலிருந்து வெளியேறி பிற நாடுகளிலேயே பெரும்பாலும் வாழ்ந்து வந்திருக்கின்றனர். கி.பி 12ஆம் நூற்றாண்டுகளில் ரோமானியப் படையெடுப்பு நிகழ்ந்தது. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் யூதர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறி வெளிநாடுகளிலேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். கி.பி 312-ல் ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்ட்டைன் கிறித்தவ மதத்தை தழுவியதால் ஐரோப்பாவில் யூதர்கள் நெருக்கடிக்கு உள்ளாயினர்.
புனித நகரமான செருசலேத்தை துருக்கியர்களிடமிருந்து கைப்பற்றுவதற்காக நடைபெற்ற சிலுவைப் போர்கள் கி.பி.1096 முதல் 1291 வரை நடைபெற்றன. இப்பகுதியைக் காப்பதில் இசுலாமியர் முழுமையாக ஈடுபட்டனர். போர்க்காலங்களில் பாலசுதீனிய இசுலாமியர்கள் அப்பகுதியிலேயே வாழ்ந்து வந்தனர். கிறித்தவ சிலுவைப்போர் படைப்பிரிவுகளை அவர்களே எதிர்கொண்டனர். 1512-ல் துருக்கி சுல்தான் அனுமதித்ததன் பிறகு யூதர்கள் பாலசுதீனியப் பகுதிக்கு வந்தனர்.
இசுரேலியர்கள் முன்பு ஒரு காலத்தில் இங்கே வாழ்ந்ததாகக் கூறிக் கொண்டாலும், வெளியிலிருந்து வந்த படையெடுப்புகளையும் தாக்குதல்களையும் தடுத்து நிறுத்தி நிலப்பரப்பைப் பாதுகாக்க பங்களிக்கவில்லை. படையெடுப்பாளர்களால் விரட்டப்பட்டு பல்வேறு நாடுகளில் அகதிகளாகக் குடியேறி, செல்வமீட்டுவதில் மட்டுமே அக்கறை கொண்டவர்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் பாலசுதீனியர்கள் தொடக்கம் முதல் இன்று வரை, வாழ்வோ சாவோ அதுவே தங்கள் தாயகம் என்ற நினைவோடு, பல்வேறு படையெடுப்புகளுக்கும் முகம் கொடுத்து, இன்னல்களை அனுபவித்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
இசுரேலியர்கள் இப்போது தங்களுக்கான ஒரு தாயகத்தையும், அரசையும் நிறுவிக் கொண்டாலும் அவர்கள் குடியேறிகளே ஆவர். பாலசுதீனியர்கள் தங்களுக்கான ஏற்பளிக்கப்பட்ட ஓர் அரசு இல்லாமல் இருந்தாலும் அவர்களே மண்ணின் மைந்தர்கள் ஆவர். இசுரேலியர்களுக்கும், பாலசுதீனியர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு குடியேறிகளுக்கும், மண்ணின் மைந்தர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஆகும். பாலசுதீனர்களுக்கு இல்லாத செல்வாக்கும், உலக அளவில் அரசதிகார பலமும், யூதர்களுக்கு இருக்கிறது. அதைப் பயன்படுத்தியே அவர்கள் தங்களுக்கான ஒரு தாயகத்தை நிறுவிக் கொண்டார்கள்.
1517 முதல் 1917 வரை துருக்கியப் பேரரசு நிலவியது. பாலசுதீனம் அதன் ஒரு பகுதியாக விளங்கியது. 19-ஆம் நூற்றாண்டில், இன்றைய பாலசுதீனப் பகுதியில் 87% இசுலாமியர்களும், 10% கிறித்தவர்களும், 3% யூதர்களும் வாழ்ந்து வந்தார்கள். அதன் பிறகு வந்தவர்கள் அத்தனை பேரும் குடியேறிகளே.
யூதர்களினுடைய தாயகம் பற்றிய சிந்தனையைத் தொடங்கி வைத்தவர் தியோடார் ஹெர்செல் என்ற 19-ஆம் நூற்றாண்டு ஆஸ்ட்ரோ ஹங்கேரிய யூத பத்திரிக்கையாளர். இதன் அடிப்படையில் யூத தாயகம் பற்றிய கோரிக்கை பேசப்பட்டது. முதல் உலகப் போரில் பெருமளவு பணம் தேவைப்பட்ட நிலையில், உலக செல்வந்தர்களான யூதர்களின் உதவியை பிரிட்டன் நாடியது. அதற்கு கைம்மாறாக யூதர்களுக்கான தேசியத் தாயகம் ஒன்றை நிறுவ உதவுவதாகவும் பிரிட்டன் வாக்களித்தது. போர் முடிந்த பிறகு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பாலசுதீனத்தில் யூத தாயகத்தை நிறுவுவதற்குப் பிரிட்டிசு வெளியுறவு அமைச்சராகிய பால்ஃப்போர் ஓர் பிரகடனத்தை வெளியிட்டார். ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பாலசுதீனத்தில் யூத தாயகத்தை இப்ப பிரகடனமே உருவாக்கியது. இப்பிரகடனத்திற்குப் பாலசுதீனியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
1881-1924க்கு இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் 20 லட்சம் யூதர்கள் குடியேறினார்கள். அனைத்துத் துறையிலும் சிறந்தவர்களாகவும் பெரும் செல்வந்தர்களாகவும் மாறினார்கள். 1933-இல் ஹிட்லரின் இனவெறியின் காரணமாக நெருக்கடிக்கு உள்ளான யூதர்கள் பல நாடுகளுக்குத் தப்பிச் சென்று வாழ்ந்தார்கள்; பாலசுதீனத்திற்கும் வந்து சேர்ந்தார்கள்.
1920 மற்றும் 1930-களில் யூத மக்கள் தொகை பாலஸ்தீனப் பகுதியில் அதிகரித்தது.
1936-இல் பாலசுதீனியர் பிரிட்டிசாருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். இதைப் பிரிட்டன் யூதப் போராளிகள் உதவியோடு ஒடுக்கியது.ஆங்கிலேயர்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கைபடி, யூத-அரபு கூட்ட அரசு 10 ஆண்டுகளுக்குள் யூத-அரபுக் கூட்டு அரசை 10 ஆண்டுகளுக்குள் நிறுவப் போவதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து சட்ட விரோதமாக யூதர்கள் பெருமளவில் குடியேற்றப்பட்டனர். இங்கிலாந்து இப் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையிடம் ஒப்படைத்தது. 1947-இல் பாலசுதீனத்தைப் பிரித்து பாலசுதீனம் என்றும், யூத நாடு என்றும் பிரிப்பதற்கான ஐ.நா.வின் முன்முடிவை அராபியர்கள் நிராகரித்தார்கள். இங்கிலாந்து பாலசுதீனத்திலிருந்து வெளியேறுவதற்கு முதல் நாள் 1948 மே 14-அன்று, டேவிட் பென் குரியன் இசுரேலிய பிரதமராக அறிவிக்கப்பட்டார். இசுரேலிய சுதந்திர நாடு அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 5 அரபு நாடுகளுக்கும் இசுரேலுக்கும் போர் மூண்டது.
ஈராக், சிரியா, லெபனான், ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகள் இசுரேலை எதிர்த்து பாலசுதீனியப் பகுதிகளில் படை நடத்தினர். 1949-இல் போர் நிறுத்தம் ஏற்பட்டது. சுதந்திர பாலசுதீனம் உருவாக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, அவரவர்கள் கைப்பற்றிய பகுதிகளை அவரவர்களே வைத்துக் கொண்டனர். மேற்கு கரைப் பகுதியை ஜோர்டானும், காசா பகுதியை எகிப்தும், பாலசுதீனத்தில் அதிகப் பகுதிகளை இசுரேலும், கிழக்கு ஜெருசலேம் பகுதியை ஜோர்டானும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. கிழக்கு ஜெருசலேம் ஜோர்டானின் கட்டுப்பாட்டிலும், மேற்கு ஜெருசலேம் இசுரேலின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. இதைத் தொடர்ந்து 7 இலட்சம் பாலசுதீனியர்கள் அகதிகளாக வெளியேறினார்கள். இந்தப் போருக்கு "நக்பா" (பேரழிவு) என்று பெயர். இவ்வாறு 1948-இல் அகதிகளாக, நாடற்றவர்களாக பாலசுதீனியர் மாறினர்.
1948-இல் ஐ.நா அவை ஒரு பிரிவினைத் திட்டத்தை அறிவித்தது. அதன்படி இசுரேலியர்களுக்கும் பாலசுதீனியர்களுக்கும் பாலசுதீனப் பகுதியைப் பிளந்து இரு நாடுகளை அமைத்து விடுவது என்றும், ஜெருசலேம் ஒரு சர்வதேச நகரமாக அறிவிக்கப்படுவது என்றும் ஐ.நா திட்டம் வகுத்தது.
அகதிகளாக வெளியேறியுள்ள பாலசுதீனியர்கள் பல்வேறு நாடுகளில் குடியமர்ந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்தின் நயவஞ்சகமும்,இசுரேலியர்களின் செல்வவளமும் இசுரேல் என்ற நாட்டைப் படைத்தது. 1967 இல் "ஆறு நாள் போர்" என்பது நடைபெற்றது. இப்போரில் இசுரேல், காசா, மேற்கு கரை, கோலன் ஹைட்ஸ், சினாப் பகுதிகளை இஸ்ரேல் பிடித்தது. இவ்வாறு பாலசுதீனத்தின் பெரும்பகுதி இசுரேலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
1973-இல் சிரியாவும் எகிப்தும் இணைந்து இசுரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தின. ஆனால் ஐக்கிய நாடுகள் அந்தப் போரைத் தடுத்து நிறுத்தியது.
1964-இல் பாலசுதீன விடுதலை இயக்கம் உருவானது. பாலசுதீனியர்களுக்கான அந்நிலப் பரப்பை விடுவிப்பதை இலக்காகக் கொண்ட பாலசுதீன விடுதலை இயக்கத்தால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. 1987-இல் பாலசுதீனியர் மத்தியில் "முதல் எழுச்சி" ஏற்பட்டது. இதற்கு முதல் பாலசுதீனிய இன்டிஃபாடா (நடுக்கம்) என்று பெயர். தொடர்ந்து மோதல்கள் நிகழ்ந்தன. 1993-இல் சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டது. 1995-இல் இசுலாமிய பிரதமர் இட்சாக் ராபின் மற்றும் பாலசுதீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் ஓர் ஒப்பந்தத்திற்கு வந்தனர். அதன்படி, பாலசுதீனிய ஆணையம் உருவாக்கப்பட்டு சில பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது ஏற்கப்பட்டது. ஆனால் யாசர் அராபத் இந்த ஒப்பந்தத்திற்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
2000-இல் இரண்டாவது பாலசுதீனிய இன்டிஃபாடா ஏற்பட்டது. இந்த எழுச்சிக்குக் காரணம் இசுரேலிய அரசியல்வாதியாகிய ஏரியல் ஷரோன் ஜெருசலேமில் அல் அக்சா மசூதிக்குப் போனதால் உருவான பிரச்சனையால் ஏற்பட்டது.
இரண்டாவது இன்டிஃபாடா என்ற எழுச்சி ஐந்தாண்டுகளுக்குத் தொடர்ந்தது. 2000 -2005 இக்காலகட்டத்தில் பாலசுதீனியர்களின் குடியிருப்புகள் இசுரேலால் அழிக்கப்பட்டன. இசுரேலின் தலைநகர் குறித்து,1980-இல் இஸ்ரேலிய நெசட் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி ஒன்றுபட்ட ஜெருசலேம் இசுரேலின் தலைநகரம் என அறிவிக்கப்பட்டது. 2017-இல் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் ஜெருசலேம் முழுவதும் இசுரேலின் தலைநகரம் என்று ஏற்றுக் கொண்டார்.
1987-இல் அமாசு அமைப்பு உருவானது.
2006-இல் அமாசு தேர்தலில் வெற்றி பெற்று காசாவை நிர்வகிக்கத் தொடங்கியது. 2005-இல் காசாவில் இருந்து இசுரேல் வெளியேறியது.
2006-இல் நிகழ்ந்த சண்டையில் பி.எல்.ஓ அமைப்பின் அரசியல் குழுவைத் தோற்கடித்தது. 2008, 2012, 2014 ஆண்டுகளில் இசுரேலுடன் அமாசு போர் புரிந்தது. 2021ல் கிழக்கு ஜெருசலேமில் இருந்து பாலசுதீனர்களை இசுரேல் வெளியேற்றியதால் வன்முறை வெடித்தது.அல் அக்கா என்ற மசூதி வளாகத்தில் இசுரேலிய போலீஸ் தாக்கி படுகொலைகளை நிகழ்த்தியது. 2022-ல் கிழக்கு ஜெருசலேத்தில் இசுரேல் தாக்குதல் நடத்தியபோது வல்லரசுகள் மௌனம் சாதித்தன. ஆகவே தொடர்ந்து இசுரேல் தாக்குதல்களை நடத்திக் கொண்டே இருக்கிறது. அவர்களுடைய நோக்கம் ஒட்டுமொத்தமாகப் பாலசுதீனியர்களை அகதிகளாக்கித் துரத்தி அடித்துவிட்டு, முழு பாலசுதீனப் பகுதிகளையும் கைப்பற்றிக் கொள்வது, முழுமையான ஜெருசலத்தை இசுரேலின் தலைநகராக ஆக்கிக் கொள்வது என்பதுதான். நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு அமாசு தீவிரவாதம்தான் காரணம் என்று பேசுவது பிரச்சினையைப் புரிந்து கொள்ளாதவர்களின் பார்வை.
இன்று, காசாவின் எல்லைகள் இசுரேலின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மேற்கு கரை இசுரேலின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. கிழக்கு ஜெருசலேமில் இசுலாமியர் மீது இசுரேல் தாக்குதல் நடத்தி வெளியேற்றிவிட்டது.
பாலசுதீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப விரும்புகிறார்கள். அவர்களை அழிப்பதா, அனுமதிப்பதா? என்ற கேள்வியும், அனுமதித்தால் யூத நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற சிந்தனையும், ஜெருசலேம் முழுவதையும் தனது தலைநகராகக் கொள்ள வேண்டும் என்ற இசுரேலின் ஆசையும் தாம் இன்று நடக்கும் போருக்குக் காரணங்கள்.
ஐ.நா. அவையில் 135 உறுப்பினர்கள் பாலசுதீனத்தை ஆதரிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் அவையில் பார்வையாளர் தகுதி வழங்கப்பட்டுள்ள ஒரே நாடு பாலசுதீனம். 1988-இல் பாலசுதீன் அரசை அங்கீகரித்த முதல் நாடுகளில் ஒன்று இந்தியா. ஆனால் இன்று இனவாத பாசிசத்தில் நம்பிக்கை கொண்ட மோடி அரசு இசுரேலை இந்தியா ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறார். இசுரேலை ஆதரிப்பது இந்தியாவின் பார்வை அல்ல; அது ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள்கை.
ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் முன், உலகத் தலைவர்கள் இச் சிக்கலைத் தீர்க்க முன் வர வேண்டும். பாலசுதீனியர்கள் யூதர்களைக் கடந்த காலத்தில் அரவணைத்தார்கள், குடியேற அனுமதித்தார்கள்; வேலைகளைத் தந்தார்கள்; அவர்கள் விரும்பிய போது விலைக்கு நிலங்களையும் கொடுத்தார்கள். இசுரேலிய யூதர்களினுடைய சூழ்ச்சியை அறியாதவர்களாக வாழ்ந்தார்கள்.
பாலசுதீனியர்கள் பாலசுதீனப் பகுதியில், வரலாறு முழுவதும் எத்தகைய அழிவு வந்தாலும் முகங்கொடுத்து, அதை எதிர்கொண்டு, வாழ்வோ சாவோ அதுவே தங்கள் மண் என்ற நினைவோடு இன்றுவரை வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களை நாடற்றவர்களாக்கிச் சொந்த மண்ணை விட்டுத் துரத்தி அடித்திருக்கக்கூடிய இசுரேலின் ஆக்கிரமிப்புச் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியவை. பாலசுதீனிய மக்கள் அனுபவிக்கும் துயரங்களைச் சொற்களால் விவரிக்க முடியாது.
சிக்கலுக்கு ஒரு தீர்வு வேண்டும். ஐக்கிய நாடுகள் அவை உடனடியாகத் தலையிட்டுப் பாலசுதீனத்தில் நடத்தப்படும் இசுரேலிய ஆக்கிரமிப்புப் போரைத் தடுத்து நிறுத்த வேண்டும். அவசியமானால், ஐக்கிய நாடுகள் அமைப்பு தன் அமைதிப்படையை பாலசுதீனத்தில் நிறுத்தி அமைதியைப் பராமரிக்க வேண்டும். உடனடித் தேவை அமைதி.
பாலசுதீன மக்களின் இறையாண்மையை ஐக்கிய நாடுகள்அமைப்பும், உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும். பாலசுதீனத் தேசிய இனத்தின் இறையாண்மையுள்ள தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதில் குளறுபடி செய்ய நினைக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உலகத் தலைவர்கள் முறையாக அறிவுறுத்த வேண்டும். சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு இதுவே ஆகும்.
- பேராசிரியர் த.செயராமன், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்