தமிழகம் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையால் அல்லோலகல்லோப்பட்டுக் கொண்டிருக்கின்றது. காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல் செய்வதும், அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவதும் அன்றாடும் கேட்டுக் கேட்டு பழக்கப்பட்ட செய்திகளாக மாறியிருக்கின்றது. சென்னை போன்ற பெருநகரங்களில் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு நிலைமை மோசமாகி இருக்கின்றது. ஐடி நிறுவனங்கள் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றச் சொல்கின்றன. பல உணவகங்களும், விடுதிகளும், பள்ளி, கல்லூரிகளும் விடுமுறை விடும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

chennai water crisisஊடகங்களின் கள ஆய்வுகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த அரசுக்கு சாபம் விடுகின்றார்கள். குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை, துணி துவைப்பதற்குத் தண்ணீர் இல்லை, குளித்தே பல நாட்கள் ஆகின்றன என ஆத்திரத்துடன் கொந்தளிக்கின்றார்கள். போராட்டம் நடத்தினால் அரசு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்துவதும், அப்போதைக்குப் பிரச்சினை தீர்ந்தால் போதும் என எங்கேயாவது குளம், குட்டைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரைக் கொண்டுவந்து விநியோகிப்பதும், பிறகு மீண்டும் பழையபடி மக்கள் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து தர்ணா செய்வதும் வழமையாக மாறியிருக்கின்றது.

கோடைகாலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுவது பல ஆண்டுகளாகவே நாம் சந்தித்து வரும் பிரச்சினைதான் என்றாலும், அதற்கான தீர்வை நோக்கி இந்த அரசுகள் ஒருபடி கூட முன்னேறியதாகத் தெரியவில்லை. தற்போது ஏற்பட்டிருக்கும் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறைக்குக் காரணம் தாங்கள்தான் என்பதை மறைக்க ஊடகங்கள் வாயிலாக தண்ணீரை எப்படி சிக்கனமாகப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி கூச்சமே இல்லாமல் வகுப்பெடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். உண்மையில் சாமானிய மக்கள்தான் தண்ணீரை வீணடிக்கின்றார்கள் என்ற தோற்றத்தை இதன் மூலம் ஏற்படுத்தப் பார்க்கின்றார்கள்.

மக்களிடம் தண்ணீர் சிக்கனம் பற்றி வகுப்பெடுக்கும் இவர்கள் யாரும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை ஆறுகளில் இருந்தும், ஆழ்துளைக் குழாய்கள் மூலமும் உறிஞ்சி எடுக்கும் பன்னாட்டு தொழிற்சாலைகள் பற்றியோ, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் நடக்கும் தண்ணீர்க் கொள்ளை பற்றியோ வாயே திறப்பதில்லை. இந்திய அளவில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் வரை மினரல் வாட்டர் நிறுவனங்கள் வர்த்தகம் செய்து வருகின்றன என்பதும், தமிழகத்தில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட நீர் மூலம் ஆண்டுக்கு 72 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதும் இதில் நடக்கும் பெரும் கொள்ளையை நாம் புரிந்து கொள்ள உதவும்.

மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்க வேண்டிய பொறுப்பை இந்த அரசுகள் தட்டிக் கழித்ததன் விளைவுதான் இன்று மக்கள் தங்கள் வருமானத்தில் கணிசமான பகுதியை தண்ணீருக்காக செலவழிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. பணம் இருப்பவர்கள் காசை விட்டெறிந்து தங்களது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும்போது, உழைத்தே சாக நிர்பந்திக்கப்பட்ட எளிய மக்கள் குளம், குட்டைகளில் தேங்கி நிற்கும் கழிவு நீரைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இப்படி சுகாதாரமற்ற தண்ணீரைப் பயன்படுத்துவதால் கடுமையான உடல் உபாதைகளும், ஏன் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் மட்டும் அசுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துவதால் ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள 2.1 மில்லியன் குழந்தைகள் இறக்கின்றார்கள். கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தை ஒட்டி தவிர்க்க முடியாத விளைவாக இது போன்ற மரணங்கள் ஏற்படும் அபாயத்தையும் தமிழகம் தற்போது எதிர்நோக்கியுள்ளது.

tamilnadu water crisisபொறுக்கித் தின்பதற்காக அரசியலுக்கு வரும் அயோக்கியர்களைத் தேர்ந்தெடுத்ததன் விளைவைத்தான் இன்று நம் மக்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். தண்ணீர் இன்றி தமிழகமே தவித்துக் கிடக்கும்போதுகூட இந்த அயோக்கியர்கள் ஆற்றில் கிணறு தோண்டி, மணல் எடுத்து ஆற்றைத் துடிக்க துடிக்க கொலை செய்தார்கள். ஆற்றில் இருந்த மணல் எல்லாம் பணமாக மாற்றப்பட்டு அரசியல்வாதிகளின் சொத்துக்களாக மாற்றப்பட்டு விட்டன. தங்கள் குடும்பங்களை பணத்தால் கொழுக்க வைக்க பல தலைமுறைகளே இந்த மண்ணில் வாழ முடியாதபடி இந்த மண்ணைப் பாலைவனமாக மாற்றி இருக்கின்றார்கள்.

மக்கள் எல்லாம் தண்ணீர், தண்ணீர் என்று கதறிக் கொண்டு இருக்க, இங்கே இருக்கும் அதிகார‌க் கும்பல்கள் காடுகளையும், மலைகளையும் அழித்து எட்டுவழிச் சாலை அமைக்கலாமா, லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களைப் பிடுங்கி ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நிலத்தில் இருக்கும் நீரை எல்லாம் வெளியேற்றிவிட்டு மீத்தேன் கேஸ் எடுக்கலாமா என சதித்திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழகம் ஒரு பேரழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது. இனி வரும் தலைமுறை இந்த மண்ணில் பிழைக்க வழியற்றதாக இந்த மண் மாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இந்த மண் பணவெறி படித்த கொள்ளையர்களின் இலக்காகவும், புகலிடமாகவும் மாறி இருக்கின்றது. கழிவுகளைக் கொட்டி வைக்கும் குப்பைத் தொட்டியாகவும் தமிழகம் மாறிக் கொண்டு இருக்கின்றது.

தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் இந்த மண்ணையும் மக்களையும் அழித்த ரத்தக் காசில் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்து வைத்திருக்கின்றார்கள். தமிழ்நாட்டை விட்டே ஓட ஓட விரட்டி அடிக்கப்பட வேண்டிய கும்பல்கள் மிக சுதந்திரமாக அரசியல்வாதிகள் என்ற போர்வையில் தைரியமாக உலா வருகின்றார்கள். அரசியல் விழிப்புணர்வு அற்ற இந்த மக்கள் இது போன்ற கழிசடைகளை, ஊரை அடித்து உலையில் போடும் அயோக்கியர்களை இன்னும் உத்தமன் என்று நினைத்துக் கொண்டு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

யார் இந்த மக்களுக்காக குரல் கொடுக்கின்றார்களோ, யார் இந்த மண்ணையும் மக்களையும் பேரன்புடன் நேசிக்கின்றார்களோ, அவர்களை இந்த மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கின்றார்கள். பொறுக்கிகளையும், ரவுடிகளையும், மாஃபியாக்களையும், சாராய வியாபாரிகளையும், கல்விக் கொள்ளையர்களையும் எந்தவித தயக்கமும், குற்ற உணர்வும் இன்றி இந்த மக்களால் தேர்தெடுக்க முடிகின்றது. பிரச்சினையின் ஆணிவேரை எப்போதுமே நம் மக்கள் பார்ப்பதில்லை. அப்போதைக்குப் பிரச்சினை தீர்ந்தால் போதும் என்று நினைத்து இருந்து விடுகின்றார்கள்.

தண்ணீர்ப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு என்பது நீர் மேலாண்மையில் மட்டும் இல்லை. அதை உளப்பூர்வமாக செயல்படுத்துபவர்களைத் தேர்ந்தெடுப்பதிலும்தான் இருக்கின்றது. யார் தண்ணீர் வணிகத்தை எதிர்க்கின்றார்களோ, யார் கணக்கு வழக்கற்று நீரை உறிஞ்சி மண்ணை மலடாக்கும் பன்னாட்டுத் தொழிற்சாலைகளை எதிர்க்கின்றார்களோ, யார் ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளைக்கு எதிராகவும், ஆற்று நீரை மாசுபடுத்தும் சக்திகளுக்கு எதிராகவும் போராடுகின்றார்களோ, அவர்களை இந்த மக்கள் தனக்கானவர்களாக எப்போது ஏற்றுக் கொள்கின்றார்களோ அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்கெல்லாம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

- செ.கார்கி

Pin It