இந்தியா முழுக்க ஆரியப் பார்ப்பனிய பாசிச அதிகாரம் வெறி பிடித்து ஆடுகிறது.. வடக்கில் உள்ள மாநிலங்களின் தேசிய இனங்கள் பாசிச பார்ப்பனியத்தின் கொடுநெறியை முழுமையாக விளங்கிக் கொண்டு பாஜகவை எதிர்த்திடுவதாக உணர முடியவில்லை..

அவர்களின் எதிர்ப்பு தேர்தலுக்காக பாஜகவின் எதிர்ப்பு என்கிற அளவோடு நிற்கிறது.. பாஜகவின் அரசியல் கோட்பாடான பாசிச பார்ப்பனியத்தை வீழ்த்தும் திட்டத்தோடேயே பாஜகவை வீழ்த்த முடியும் என அவர்கள் விளங்கிக் கொண்டாக வேண்டும்..

மம்தா பேனர்ஜியும், அரவிந்த் கெஜ்ரிவாலும்கூட அந்த வகையில் ஆரியப் பார்ப்பனியத்தை எதிர்த்திடும் கோட்பாட்டைக் கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

காங்கிரசுக்கும் ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பு இனிமேலாவது கட்டாயத் தேவை.

பாசிச பார்ப்பனியத்தின் எதிர்ப்பு என்பது பாஜகவைத் தேர்தலில் தோற்கடிப்பது என்றளவில் மட்டுமே இருந்தால் போதாது..

பாசிச பார்ப்பனியத்தை எதிர்ப்பதும் வீழ்த்துவதும்.. பாஜகவைத் தேர்தலில் தோற்கடிக்க வைப்பதையும் தாண்டித் தேவைப்படுகிறது.

தேசிய இனங்களாக உருக்கொண்டு உரிமைகளுக்குப் போராடி வருகிறமாநிலங்களின் தன்னாட்சி அதிகாரப் போராட்டங்களை முன்னெடுப்பதிலும்.. போராடி அவற்றைப் பெறுவதின் மூலமாகவும் அது இயலக் கூடியது..

ஆர் எசு எசு -பாஜகவை எதிர்க்கும் அளவிற்கு, பாசிச பார்ப்பனியத்தை எதிர்ப்பதோடு மாநில(தேசிய இன)ங்களின் தன்னாட்சி அதிகாரங்களுக்கு பொதுவுடைமைக் கட்சிகளும் முதன்மை கொடுத்தாக வேண்டும்.. அதை முன்னெடுத்துப் போராடவும் வேண்டும்..

திமுக தாங்கள், கடந்த காலங்களில் இறுதியாக முன்னெடுத்த 'மாநிலத் தன்னா(சுயா)ட்சி'க் கோரிக்கையையாவது மிக வலுவாக முன்னெடுத்தாக வேண்டும்..

அதை மற்ற மாநிலங்களின் கட்சிகளுக்கும் புரிய வைக்கவும் வேண்டும்..

அந்த வகையில் பாசிச பார்ப்பனிய எதிர்ப்பையும் மாநிலத் தன்னாட்சி அதிகாரங்களை வலுப்படுத்துகிற கருத்து கொண்டதாகவும் 'இந்தியா கூட்டணி' இருப்பதே அதன் வளர்ச்சிக்குக்கூட நல்லது.

பாஜக-வை எதிர்ப்பதும், பாசிச பார்ப்பனியத்தை எதிர்ப்பதுமே இந்தியாகூட்டணியின் கொள்கை கோட்பாடாக இருந்தாக வேண்டும்.

'சனநாயகம் வேண்டும்' -என்று 'இந்தியா கூட்டணி'யின் கட்சிகள் முன்னெடுப்பதில் அது மக்களின் சனநாயகமாகவும் இருக்க வேண்டும். மாநிலங்களின் சனநாயகமாகவும் இருக்க வேண்டும் என்கிற புரிதல் வேண்டும்..

இன்றைக்கு இருக்கிற சனநாயகம் என்பது முதலாளிகளுக்கான சனநாயகமாக சாதி மத அதிகார உணர்வினர்களுக்கே உரிய சனநாயகமாகவே உள்ளது. மாறாக அது மக்கள் சனநாயகமாக மாற வேண்டுமானால் அதற்கு வழி வகுக்கிற மொழித் தேச மாநிலங்களின் சனநாயகமாகவும் இருக்க வேண்டும்..

மாநிலங்களின் சனநாயகம் என்பது மாநிலங்கள் முழு அதிகாரங்களைக் கொண்டதாக இருந்தால் மட்டுமே முடியும்..

மாநிலங்கள் தங்களுக்கான அதிகாரங்கள் இல்லாத நிலையில், பாசிச பார்ப்பனிய இந்திய அரசின் பிடியின் கீழ் அடங்கிக் கிடக்கவே வேண்டியிருக்கும்..

எனவே, பாசிச பார்ப்பனியத்தை வீழ்த்துகிற இலக்கோடு பாஜகவைஎதிர்க்கிற முயற்சியே பாசிச பார்ப்பனியத்தை மட்டுமன்றி பாஜகவையும் வீழ்த்தும்..

பாஜக கொண்டிருக்கிற பாசிச பார்ப்பனியம் என்பதற்குச் சனாதனம், இந்துத்துவம் என்கிற சொல்லாடல்கள் தரும் பொருள்கள் மட்டுமே போதுமானவையாகப் புரிந்து கொள்ள முடியாது..

வேதங்கள், மனு தர்மம் உள்ளிட்ட சாஸ்திரங்கள், வைதீகப் புராணங்களை, சமசுக்கிருத மேலாதிக்கத்தை, அவற்றின் வழியான சடங்குகளைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவதைத் தூக்கியெறிந்து விட்டுப் பார்ப்பனியத்தை முற்றும் முழுமையாகக் கருத்தளவிலும் நடைமுறை அளவிலும் எதிர்க்கிற அடிப்படையோடு, சாதி, வருண வேறுபாடுகளை முற்றிலுமாக எதிர்ப்பதே பார்ப்பனிய எதிர்ப்பு எனப் புரிந்து கொள்ள வேண்டும்..

அதேபோல்..

அம்பானி, அதானி உள்ளிட்ட பன்னாட்டு முதலைகளோடு அவற்றின் கொள்ளையடிப்புகளுக்காகப் பார்ப்பனிய அதிகாரம் அவற்றுடன் பிணைந்து கொண்டு அமைத்திருக்கிற இந்திய அரசு அதிகார வெறியே பாசிச பார்ப்பனியமாக உருக்கொண்டிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்..

எனவே, இங்கு அடிப்படையில் இரண்டு பெரும் கடமைகள் உண்டு..

பார்ப்பனிய அதிகாரத்தை மேற்சொல்லப்பட்ட முறைகளில் எதிர்ப்பதும், அம்பானி அதானி உள்ளிட்ட பன்னாட்டு முதலைகளின் சூறையாடல்களை விரட்டுவதுமான வகையில் பாசிச பார்ப்பனிய எதிர்ப்பு இரண்டு நிலைகளில் கடமையாற்ற வேண்டி இருக்கிறது..

அம்பானி அதானி உள்ளிட்ட பன்னாட்டு முதலைகளை அடியோடு எதிர்க்கிற உணர்வோடும் அந்தந்தத் தேசிய நலன் சார்ந்த தற்சார்புப் பொருளியலைப் பேணுகிற உணர்வோடும் மாநிலங்களின் தன்னாட்சி அதிகாரத்தை அந்தந்த மாநில உழைக்கும் மக்களின் உரிமை வாழ்வோடு சேர்த்து முன்னெடுக்க வேண்டியுள்ளது..

இந்நிலையில்..

திமுக உள்ளிட்ட கட்சிகள் முன்னெடுத்திருக்கிற இந்தியா கூட்டணி ­என்பது குறைந்த அளவு பாஜகவைத் தோற்கடிப்பதற்குரிய அளவிலாவது தெளிவான கொள்கையை, திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

திமுக அதன் தொடக்கக் காலங்களில் கொண்டிருந்த பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கைகள் சிலவற்றை இப்போது பேசுவதன் வழி பாஜக எதிர்ப்பை வலுப்படுத்துகிறது.. ஆனால் அந்த அளவில் கூட இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் பேசிடவில்லை.. அப்படியான கொள்கைகள் அவற்றுக்கு இல்லை..

தமிழ்நாட்டில் ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழிய அறக்கருத்துகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேரூன்றி இருக்கிற நிலையில் அந்த வாய்ப்பைத் திமுக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது..

பிற மாநிலங்களில் அத்தகைய ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிரான கருத்துகள் கோட்பாடுகள் அளவில் சமயங்களாகவோ கட்சிகளாகவோ இல்லாததால் அந்தந்த மாநிலக் கட்சிகளால் பார்ப்பனிய எதிர்ப்பை வலுவாக முன்னெடுத்து இயக்கப்படுத்த முடியவில்லை..

பார்ப்பனியத்திற்கு மாற்றான கோட்பாடு என்கிற வகையில் அவர்களுக்கு இசுலாம் மட்டுமே நிற்கிறது. எனவே மிக எளிதாக ஆர்.எசு.எசு-ம் பாஜகவும் பார்ப்பனிய அதிகாரத்தை இந்துத்துவம் என்கிற போர்வை போர்த்தி அதற்கு எதிரானது இசுலாம் என்று இசுலாமிய எதிர்ப்பை வலுப்படுத்திப் பார்ப்பனியத்தை இந்து என்கிற போர்வையில் நிலைப்படுத்தி இருக்கிறது..

எனவே, பிற மாநிலங்களில் உள்ள பாஜக எதிர்ப்பாளர்களால் பார்ப்பனிய எதிர்ப்பை வலுவாகக் கோட்பாட்டோடு அடையாளப்படுத்தி நிறுத்தி இயக்கப்படுத்தவோ கட்சிகளை உருவாக்கிக் கொள்ளவோ இயலவில்லை..

இந்தச் சூழலைத் திமுக சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்..

பார்ப்பனியத்திற்கு எதிராகத் தமிழிய அறக்கருத்துகளைப் பிற மாநிலங்களிலும் பரப்புகிற முயற்சியின் வழியாகப் பார்ப்பனிய எதிர்ப்பை அங்கெல்லாம் வலுப்படுத்தியாக வேண்டும்..

பொதுவுடைமைக் கட்சிகள் பார்ப்பனியத்திற்கு எதிராக மார்க்சியக் கோட்பாட்டை வலுவாக பரப்புகிற முயற்சியை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தோற்றக் காலத்திலிருந்தே முன்னெடுத்திடவில்லை.. அவை முதலாளியத்திற்கு எதிராகக் கருத்து பரப்பிய அளவிற்குப் பார்ப்பனியத்திற்கு எதிராகக் கருத்துகளைப் பரப்பிடவில்லை..

வேத, சாத்திர, புராணங்களை அவை எதிர்த்துக் களம் காணவில்லை.. சமசுகிருதத் திணிப்புக்கு எதிராகப் பண்பாட்டுப் புரட்சியை வலுப்படுத்த வில்லை..

வட நாடுகளில் உள்ள மாநிலங்களில் அவ்வாறு முன்னின்று செய்ய முயன்ற புத்த சமயக் கோட்பாடுகளையும் ஆரியப் பார்ப்பனியம் உட்புகுந்து கெடுத்துச் சிதைத்து விட்டதை வரலாறு நெடுக பார்க்கலாம்..

எனவே, வடமாநிலங்களைப் பொறுத்த அளவில் அவர்களுக்குப் பார்ப்பனிய எதிர்ப்பு என்பது கோட்பாட்டளவில் வலுவாக இல்லை..

இந்த இடத்தில்தான் வட மாநிலங்களுக்குத் திருவள்ளுவரும், வள்ளலாரும், பெரியாரும், அம்பேத்கரும் தேவைப்படுகின்றனர்.. மார்க்சியம் மட்டுமே அந்த மாநிலங்களுக்குள் பரப்பலுக்குரிய போதுமான கோட்பாடாக இல்லாததற்கு பொதுவுடைமைக் கட்சிகளின் கடந்தகால விடுபாடுகளே காரணம் என்பதை ஆழ்ந்து ஆய்வு செய்தால் உணர முடியும்..

ஆக, பாஜகவை பாசிச பாஜக என்று மட்டுமே பொதுப்பட உணர முடிகிற வடமாநிலக் கட்சிகளிடம்.. இந்திய ஆட்சி அதிகாரமே இன்றைக்குப் பாஜகவின் வழியாகப் பாசிச பார்ப்பனிய முகத்தோடு இயங்குகிறது என்பதை அரசியல், மெய்யியல் அளவில் விளங்க வைத்தாக வேண்டியிருக்கிறது..

தமிழ்நாட்டளவில்தான் நாம் செய்ய முடியும் என்றாலும், ஒத்தக் கருத்துடைய பிறமொழி மாநிலச் செயற்பாட்டு இயக்கங்களுக்கு இத்தகைய அரசியல் மெய்யியல் தெளிவு கொடுத்து அணியப்படுத்தவும் வேண்டியிருக்கிறது. பரந்துபட்ட இந்தியப் பார்ப்பனிய வல்லாட்சி அரசை வீழ்த்துவதற்குப் பிற மொழி மாநில எழுச்சிகளோடு கூட்டமைப்பாய் அணி சேர்வதும் தேவையானதாகிறது.

அத்தகைய முயற்சி மிகப்பெரிய வலுவான முயற்சி.. ஆனால் அதைச் செய்யாமல் பாசிச பார்ப்பனியத்தை எளிதாக வீழ்த்தி விட முடியாது..

பாஜகவை வீழ்த்துவது ஏதோ தேர்தல் அளவிலான தேர்தல் வெற்றிக்கான கட்சிக் கூட்டணிகளை அமைத்துக் கொள்வதோடு செய்ய வேண்டிய செயல் மட்டுமே அல்ல...

அதைக் கடந்து கொள்கை அளவில் மிகப் பெரும் அடித்தள முயற்சியோடு பாசிச பார்ப்பனிய எதிர்ப்பை மிக வலுவாகப் பரப்புகிற, மக்களுக்கு எடுத்து விளங்க வைக்கிற, திட்டமிட்டு அமைப்பாக்குகிற பெரு முயற்சியோடு செயல்பட்டாக வேண்டும்..

அதற்கு.. இந்தியா கூட்டணி என்பது மிகவும் தேவையானதானாலும் அது மட்டுமே போதுமானதாகாது..

இந்திய சனநாயகத்தை வெல்ல வைக்கப் போவதான கருத்து அறிவிப்புகளும் போதுமானவையாகாது..

இந்திய அரசியல் சட்டத்தைக் காப்பாற்றுவதன் மூலம் பாஜகவை எதிர்க்கலாம் என்கிற கருத்தும் போதுமான புரிதலை ஏற்படுத்தி விடாது..

பார்ப்பனியத்தை.. அதுவும் இன்றைக்குப் பாசிச வெறியோடு வளர்ந்து விட்டிருக்கிற பாசிச பார்ப்பனியத்தை வீழ்த்துகிற ஒரு மிகப்பெரும் திட்ட முயற்சி தேவை என்பதை அனைத்து இயக்கங்களும் அனைத்துக் கட்சிகளும் உணரத் தகுந்த வகையில் கருத்து வலுவாகப் பரப்பப்படுவதும் செயல்பாடுகள் மிக வலுவாக வளர்க்கப்படுவதும் தேவையாகிறது..

அதாவது பாசிச பார்ப்பனியத்தின் கொடூர அடையாளத்தை வெளிப்படுத்திப் பரப்புவதும், அதை எதிர்மையாக நிறுத்தி அனைத்து அணிகளையும் ஓரணியில் நிறுத்துவதும், அவற்றை அரசியல் படுத்திப் போராட வைப்பதுமான பெரு முயற்சி அது.

அத்தகைய முயற்சிகள் என்பன எல்லா தளங்களிலும் நடத்தப்பட்டாக வேண்டும். தேர்தல் அரசியல் களத்தில் இந்தியா கூட்டணி பாசிச பார்ப்பனியத்தை எதிர்க்கும் தன்மையினதாக, மாநில உரிமைகளை முன்வைத்துப் பரப்பல் செய்வதாக, போராடுவதாக இருக்க வேண்டும். அதேபோல் தேர்தல் அரசியல் களத்திற்கு வெளியே குமுக இயக்கங்களும், குமுக அளவில் புரட்சிவழி மாற்றம் தேடும் இயக்கங்களும் திட்டமிட்ட இலக்கோடு மாநிலங்கள் அளவில் கூட்டணி அமைத்துச் செயல்படுவதோடு, மாநிலங்களுக்கு இடையேயும் கூட்டணி உறவுகள் அமைத்து விரிவாகச் செயல்பட்டாக வேண்டும்.

அத்தகைய முயற்சியாகவே.. தமிழக மக்கள் முன்னணி அத்தகைய நோக்கத்திலேயே பாசிச பார்ப்பனிய எதிர்ப்பை முன்னெடுத்து மாநாடாக அறிவிக்கிறது..

அதன் அழுத்தத்தைத் தமிழக கட்சிகள் இடையே இயக்கங்கள் இடையே பரப்புகிற பெரு முயற்சியாகவே பாசிச பார்ப்பனிய எதிர்ப்பு மாநாடு அறிவிக்கப்பட்டிருக்கிறது..

எனவே, இந்துத்துவ எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு, சனநாயகமின்மை எதிர்ப்பு, அரசியல் சட்டச் சீரழிப்பு எதிர்ப்பு என்றெல்லாம் எதிரிகளின் கோரமான வெறிமுகத்தை அடையாளப்படுத்திக் காட்டிப் பரப்பல் செய்வதோடு, பளிச்சென்று.. பாசிச பார்ப்பனியத்தை எதிர்ப்போம் என ஓங்கி முழங்கியாக வேண்டும்..

அதற்கு எதிராய்த் தமிழ்நாட்டை அணியப்படுத்த வேண்டும்!

மொழிவழி மாநிலங்களை விழிப்படைய வைத்து எழுச்சி கொள்ள வைக்கவும் வேண்டும்.

அவற்றையெல்லாம் இணைத்து ஒரு பெரும் கூட்டணியையும் அமைத்தாக வேண்டும்.

அதுவே இன்றைய சூழலுக்கு முதன்மையானது என உணர்வோம்!.. பறைசாற்றி உரைப்போம்!

- பொழிலன்

Pin It