தேர்தல் என்னும் பெயரில் மீண்டும் ஒரு ஆரிய திராவிடப் போர் தமிழ்நாட்டில் மூள்கிறது. தன்மானமும் தமிழ்மானமும் உள்ளவர்கள் ஒரு பக்கமும், மான மில்லாதவர்களும் காட்டிக் கொடுக்கும் கருங்காலிகள் மறுபக்கமாகவும் திரண்டு நிற்கும் போர்க்களம் இந்தத் தேர்தல்.
ஊடகங்கள் எல்லாம் எச்சிக்கஞ்சிக்கும், எலும்புத்துண்டுக்கும் விலைபோய் கிடக்கும் இந்த வேளையில் நடக்கும் ஒரு வரலாற்றுப்போர். பார்ப்பனியம் தன் ஆகச்சிறந்த வித்தையை எல்லாம் அவிழ்த்து விடும் காலம். இரண்டாயிரம் ஆண்டு காலம் தொடர்ந்து நடை பெறும் போர்.
காளம் மாறியிருக்கலாம் தலைமை மாறியிருக்கலாம் ஆனால் கருத்து மாறாதப்போர். விபிசணனை தறித்தெடுத்து இராவணனை வீழ்த்திய கூட்டம். சூழ்ச்சியை முன்னிருத்தி மண்ணைப் பிடுங்கிக் கொண்டு மாவலியை நாட்டை விட்டுத் துரத்தியக் கூட்டம்.
கடவுளை சொல்லி நம் கல்வியை, கலையை, பொருளாதாரத்தை திருடிய கூட்டம். பொய்யையும் புரட்டையும் வைத்து காலம் முழுக்க புறவாசல் அரசியல் செய்யும் கூட்டம்.
நஞ்சுக் குப்பியில் அமிழ்தம் என்று பெயர் ஒட்டியதைபோல ‘நாம் தமிழர்’ என்று ஒரு விபிசண கூட்டம், அ.தி.மு.க என ஒரு அனுமான் கூட்டம், இப்படி அடிமைக் கூட்டத்தோடு நம் அம்புக் கூட்டிலிருந்து அம்பை எடுத்தே நம்மை எதிர்க்கும் நயவஞ்சகக் கூட்டம். வரலாறு நெடுக நாம் துரோகிகளாலேயே வீழ்த்தப்பட்டிருக்கிறோம்.
இந்தத் தேர்தல் களத்தில் நம் மக்கள் இவர்களை சரியாக இனம் காண வேண்டும். இனம் காண தவறினால் திருவள்ளுவர், பெரியாரால், காமராஜர் போன்ற நமது தலைவர்களால் பெற்ற பேறெல்லாவற்றையும் நாம் இழக்க நேரிடும். பின்பு அதை மீட்க பலநூறு ஆண்டுகள் ஆகலாம். அதற்குள் நாம் இந்தியாவில் சிந்திச் சிதறிப் போய்விடுவோம்.
தமிழ்நாட்டில் வடவர்கள் கோலோச்சுவார்கள். நம் சூல் தளத்திலேயே நாம் ஏதிலியாய் ஆக்கப்படுவோம். இதை மிகை என்று எண்ணிவிடாதீர்கள். இந்திய பரப்பளவு முழுக்க பரவி வாழ்ந்த நாம் இன்று தமிழ்நாடு அளவு குறுகி விட்டோம்.
இந்தத் தேர்தல் போரில் தவறிழைத்தால் இருக்கும் இந்த நிலமும் பறிபோகும். பின்பு நம் வாழ்க்கை நாடோடி வாழ்க்கைதான். இதில் எந்த மாற்றமும் இல்லை எழுதி வைத்துக் கொள்ளலாம். நூற்றாண்டு கால பார்ப்பனிய திட்டத்தை இந்த தேர்தலில் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
ஊழல், ஊழல் என்று ஒப்பாரி வைக்கும் இந்தச் சனாதனக் கூட்டம் மக்கள் பணத்தை எல்லாம் பிடுங்கி அதானிக்கும், அம்பானிக்கும் வடநாட்டு வகையறா களுக்கும் கொடுப்பதால் உலக நாடுகளில் நடப்பதைப்போல் இதை முதலாளித்துவ அரசு என்று எண்ணி விடாதீர்கள். உலக முதலளித்துவம் என்பது வேறு. இந்திய முதளித்துவம் என்பது வேறு. இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.
வெளிநாடுகளில் உள்ள முதலாளித்துவம் பரவலான முதலாளிகளை உருவாக்கும். ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல. இங்கு ஜி.எஸ்.டி. வரியாக கொள்ளை அடிக்கும் பணம், விலையேற்றத்தால் கம்பனிகள் மூலமாக கொள்ளையடிக்கும் பணம் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்.சின் பினாமியான இரண்டு மூன்று முதலாளிகளிடம் மட்டுமே முடங்கிக் கிடக்கும்.
அம்பானியும் அதானியும் உலகு அறியாத ஆர்.எஸ்.எஸ். கருவூலம். இது சனாதன கொள்கைப்படி பார்ப்பனர்கள் கைவசமே இருக்கும். இதை எந்தக் காலத்திலும் மக்கள் போராடி பொதுவுடமை ஆக்கிவிட முடியாது. இந்தியாவில் தமிழ்நாடாயிருந்தாலும் சரி கேரளாவாக இருந்தாலும் சரி இவர்களை விடவும் குஜராத்தி, மார்வாடி போன்ற வடநாட்டு சேட்டுகளுக்கே முன்னுரிமையும் முழுவுரிமையும் கொடுக்கப்படும்.
இந்த நகர்வு ஆதிகால பார்ப்பனர் ஆலோசனைபடி நடந்த மன்னராட்சிக்கே நம்மை கொண்டு செல்லும். இந்தியாவில் உள்ள 26 பொதுத்துறை வங்கிகள் 2014-15 முதல் 2018-19 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் மொத்தம் 3 ஆயிரத்து 427 வங்கிக் கிளைகளை மூடியுள்ளன.
இதில் எவ்வளவு பேர் தங்கள் பணத்தை இழந்திருப்பார்கள்? ஆனால் நாட்டில் எந்த போராட்டமோ வேறுவகையான எதிர்வினையோ எழுந்ததாக செய்தி இல்லை. அந்த அளவுக்கு மக்களை மதத்தின் பெயரால் மழுங்கடிக்கிறார்கள்.
ஒருநாள் இந்த வங்கிகளை இணைத்து ஒற்றை வங்கியின் கீழ் நாட்டைக் கொண்டுவரகூட வாய்ப்பு உள்ளது. அதன் பெயர் ‘ஆர்.எஸ்.எஸ். வங்கி” என்று கூட இருக்கலாம்.
உலக முதலாளிகளின் நடுவே போராட்டத்திற்கான வழியும் இருக்கும் திசையும் இருக்கும், இங்கே சனாதனம் ஓங்க, ஓங்க மக்கள் செம்மறி ஆட்டு மந்தைகள் ஆக்கப்படுவார்கள். கல்லையும் நாயையும் கடவுளாய் கும்பிடுகிறவனிடம் புரட்சிக்கான சூடு சுரணை வரவே வராது.
நம் இனம் மறுபடியும் அடிமையாய், கூலியாய் மானமிழந்து நாயினும் கீழாய் வாழும் நிலை வரும். பார்ப்பனியம் கட்டமைத்த குலத்தொழிலை நோக்கி நாம் நெருக்கித் தள்ளப்படுவோம்.
பார்ப்பனர்களின் சூழ்ச்சியினை பெரியாரின் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் தெரியும். குறைந்தது நூறு ஆண்டு திட்டம் வைத்தே அவர்கள் தங்கள சூழ்ச்சியினை வடிவமைக்கிறார்கள்.
வெள்ளையர்கள் நம்நாட்டை ஆண்டபோது இந்தியாவாக இருந்த நம்நாடு ஏன் ‘பாரதம்’ என்று பெயர் சூட்டப்பட்டது? பாரதம் என்பது அவர்களின் அரசியல் பெயர். சுதந்திரம் வாங்கும் முன்பே இந்துத்துவ வன்போக்காளர்கள் இந்தியாவை பாரதம் என்றே அறிவித்துக் கொண்டார்கள்.
பாரதி கூட பாரத தேசமென்றே எழுதி வந்தான். பாரதம் என்பது சனாதன ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்பதே பொருளாகும். இதை சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே பார்ப்பனர்களின் ஒவ்வொரு அசைவும் சனாதனத்தை நோக்கியே நகரும்.
நம் சங்கிக் கூட்டங்கள்தான் பாரத தேசம் உன்னதாமான தேசம் என்று மக்களாட்சி கொள்கையை குழிதோண்டிப் புதைக்கும் (ஆர்.எஸ்.எஸ்.) பாரதிய ஜனதா கட்சி பின்னால் எலும்புத் துண்டுக்கும் எச்சில் சோத்துக்கும் பட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள்.
ஓரளவு தன்னிறைவு அடைந்தவர்கள் நாட்டைப் பற்றியோ நாட்டை ஆள்வோர் பற்றியோ சிந்திப்பதில்லை. கஞ்சிக்கு வழியில்லாதவனுக்கு நாம் ஏன் துன்பப்படுகிறோம் என்று அவர்கள் அறிவுக்குத் தட்டுப்படுவதே இல்லை. படித்தவர்களும் பட்டம் பெற்றவர்களும் ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாகவே செயல்படுகிறார்கள்.
இங்கே ஞானபீட விருதுக்கும், சாகித்திய அகதாமி விருதுக்கும் ஏங்கிக் கிடக்கும் கம்பன் வீட்டுக் கட்டுத் தறிகள் தங்கள் எழுது கோல்களை கோவணத்தின் பின்புறத்துக்குள் ஒளித்து வைத்துக் கொண்டார்கள்.
சனாதனத்துக்கு நாடு கொள்ளைப் போகப் போகிறது; இருந்தும் தங்கள் எழுது கோலில் வானத்தை நிரப்பி நவீனத்தை வருடிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு பார்ப்பனியத்தை எதிர்ப்பதற்கும் சாடுவதற்கும் மை இல்லை.
நூற்றாண்டு கால திராவிடத்தின் உழைப்பில் விளைந்து கிடக்கும் சூரிய கருவூலங்களை ஆன்மீகச் சாக்கடை வந்து மூழ்கடித்து விடுமோ என்று மூச்சுத் திணருகிறது. ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அ.தி.மு.க.வை கைப்பற்றி விட்டார்கள்.
இப்பொழுது அது மறைமுக பா.ஜ.க. தான். இன்று அரசியல் களத்தில் பார்ப்பனியம் வெவ்வேறு முகத்தில் வெவ்வேறு வடிவில் களமிறங்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் முகம் பாரதிய ஜனதா கட்சி என்றால், அந்த பாரதிய ஜனதா ‘நாம் தமிழர் கட்சி” என்று வேறுமுகம் தாங்கி வருகிறது. சசிகலாவும் இப்பொழுது பா.ஜ.க. ஆளென்று அடையாளம் தெரிந்து விட்டது. மக்கள் நீதி மையமும் பா.ஜ.க,வின் உண்மையான கலைமுகம்தான், சரத்குமார் இன்னொரு சங்கி முகம்தான்.
தாய் வேடமிட்டு பூதகி தன் மார்பில் விசம் தாங்கி வருகிறாள். அதை அறியாமல் வாய் வைக்கும் குழந்தைகள் மரணத்தால் முத்தமிடப்படுவார்கள். 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றிப் பெற்றால் தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் இல்லை என்ற நிலையைக் கூட உருவாக்குவார்கள்.
அந்த அளவுக்கு வடவர் கை ஓங்கும். நாம் ஓரங்கட்டப் படுவோம். இதை நினைத்தால் இரவு பகல் தூக்கம் வரவில்லை. மாணவர்களே, சமூக அக்கறைக் கொண்ட நல்லுள்ளங்களே விரைந்து செயலாற்றுவோம். நமது கருத்தியலை தாங்கி நிற்கும் கட்சிகளுக்கே வாக்களிப்போம். உடைப்பெத்து வரும் ஆன்மீகச் சாக்கடை தடுத்து நிறுத்த அது ஒன்றே சிறந்த வழி.
- இறை.ச.இராசேந்திரன்