இன்று நடக்கும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஹமாஸ் என்னும் பாலஸ்தீன தீவிரவாத அமைப்பை ஒழித்துக் கட்டும் போர் என உலக நாடுகளை நம்ப வைக்க இஸ்ரேல் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது. அதை இந்திய ஊடகங்களும் வழிமொழிகின்றன. உண்மையில் அங்கு என்னதான் நடக்கிறது என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால்தான் நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

பாலஸ்தீனம் -இஸ்ரேல் மோதல் என்பது பைபிள் காலம் தொட்டு நடந்து வருகிறது. ஜெருசலேம் நகரை மையப்படுத்தி நடக்கும் மதம் மற்றும் இனம் சார்ந்த ஒரு நீண்ட நெடிய தாய்மண்ணுக்கான போராட்டம். யூதர், கிறிஸ்தவம், இஸ்லாம் மூன்றும் ஆப்ரஹாம் மதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் மூன்று மதங்களுக்கும் தந்தையாக ஆப்ரஹாம் என்ற மூதாதையர் அறியப்படுகிறார். தோரா என்னும் புனித நூலைக் கொண்ட யூதர்களும், பைபிள் என்னும் புனித நூலைக் கொண்ட கிறிஸ்தவர்களும், குரான் என்னும் புனித நூலைக் கொண்ட இஸ்லாமியர்களும் சொந்தம் கொண்டாடும் ஒரு பகுதியாக காசா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் உள்ளன.

எகிப்து மற்றும் ரோமாபுரி அரசுகளுக்கு அடிமைகளாக இருந்த யூதர்கள் தங்களை மீட்க ஒரு மெஸ்யா வருவார் என நம்பினார்கள். இயேசுவைத் தங்களுக்கான நாடு உருவாக்கித்தரும் அரசனாக நம்பினார்கள். ஆனால் அது நடக்கவில்லை. பைபிளில் கூறப்பட்டுள்ள கானான் என்று அழைக்கப்பட்ட பாலஸ்தீன தேசம் தான் கர்த்தரால் தங்களுக்கு வழங்கப்பட்டது என நம்பினார்கள் பாலஸ்தீன தேசத்தில் அரேபியர்கள் இருந்தார்கள், அதற்குள் யூதர்கள் குடியேறி அதை தங்களுடையதாக ஆக்க முயற்சித்தார்கள் அது முதல் பிரச்சனை தொடங்கியது.

யூதர்கள் கடவுள் ஆகிய யெகோவா தங்களுக்கு ஒரு இஸ்ரேல் தேசத்தைக் கட்டாயம் அமைத்துக் கொடுப்பார் என உறுதியாக நம்புகின்ற யூதர்கள் உலகில் பல பகுதிகளிலும் சிதறி வாழ்ந்தார்கள். இந்தியாவிலும் யூதர்கள் வந்து குடியேறினார்கள். கேராளவில் யூதர்கள் வழிப்பாட்டுதலங்கள் இன்றும் உள்ளன. யூத வழிப்பாட்டுத்தலத்திற்கு ‘சினகாக்’ என்று பெயர். ஐரோப்பிய நாடுகளிலும் வட அமெரிக்காவிலும் யூதர்கள் குடியேறி வாழத் தொடங்கினார்கள்.அவர்கள் குடியேறிய அந்தந்த நாடுகளில் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சத்தியாக உருவெடுத்தனர்.

தங்களுக்காக ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற வேட்கை மட்டும் யூதர்களுக்குத் தணியவில்லை. அப்போது பாலஸ்தீன தேசத்தில் வாழ்ந்த அரேபியர்கள் வறுமையில் வாடினார். இரண்டு உலகப் போர்களும் யூதர்களின் தேசத்திற்கான நெருக்கடியை அதிகப்படுத்தின. எனவே பாலஸ்தீன மக்களின் வறுமையைப் பயன்படுத்தி யூதர்கள் நிலங்களை வாங்கிப்போட்டு அதில் யூதக் குடியிருப்புகளை ஏற்படுத்தத் தொடங்கினர். இதனால் தங்களின் தேசமே பரிபோகும் என்பதை அறியாத பாலஸ்தீன மக்கள் யூதர்களுக்கு நிலங்களை விற்றுக் கொண்டிருந்தனர்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் பாலஸ்தீனம் தேய்ந்து இஸ்ரேலாக மடைமாற்றம் பெற்றது. பல நாடுகள் இஸ்ரேல் என்ற புதிய தேசத்தை அங்கீகரிக்காத நிலையில் வடஅமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அங்கீகரித்தன. 1949 மே -1ல் ஐ.நா.சபையால்  இஸ்ரேல் நாடு அங்கீகரிக்கப்பட்டது. இஸ்ரேல் என்ற முதலையிடம் தங்கள் நிலப்பரப்பை இழந்த பாலஸ்தீனியர்கள் விழிப்புற்று தங்கள் நாட்டைக் காக்க வேண்டி போராட்டங்களைத் தொடங்கினர். பாலஸ்தீன விடுதலை இயக்கதின் நியாயத்தை அதன் தலைவர் யாசர் அராபத் (PLO) உலகிற்குப் புரிய வைத்தார். பாலஸ்தீன ­இஸ்ரேல் மோதல் அவ்வப்போது நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஜெருசலேம் மற்றும் காசா உள்ளிட்ட மேற்குக்கரைப் பகுதிகள் அமைதிக் குலைந்து தவிக்கின்றன.

யாசர் அராபத் மறைவுக்குப் பின் பாலஸ்தீன விடுதலை இயக்கம் நீர்த்துப் போனது. அந்த இடத்தை ஹமாஸ் அமைப்பு இட்டு நிரப்பியது. தமிழ் ஈழத்துக்கு ஒரு விடுதலைப் புலிகள் போல பாலஸ்தீனத்திற்கு ஒரு ஹமாஸ் செயல்படுகிறது. தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று பரப்பும் சிங்களப் பேரினவாத அரசுகளைப்போல ஹமாஸ் அமைப்பை தீவிரவாதிகள் என இஸ்ரேல் அரசு பரப்பிவருகிறது. 2009 மே -17,18 ஆகிய நாட்களில் முள்ளிவாய்கால் இருந்த நிலையில் இன்று காசா உள்ளது. இஸ்ரேல் நடத்துவது அப்பட்டமான இன அழிப்புப் போரே ஆகும். ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும், ஹமாஸ் என்னும் தீவிரவாத அமைப்பை அழிக்கதான் போர் என்று உலக நாடுகளை ஏமாற்றுகிறார்.

இந்திரகாந்தி பிரதமராக இருந்த போது பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்து யாசர் அராபத்தை ஆதரித்தது. 1991க்கு பிறகு இந்தியா வட அமெரிக்கா சார்பு நாடாக மாறியது. அதற்குப் பின் கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் RSS தத்துவார்த்தப் பின்னணியைக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி இந்தியாவை இஸ்ரேலை ஆதரிக்கும் கேவல நிலைக்குத் தள்ளியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் நேரடியாகப் பேசி இஸ்ரேலை ஆதரிக்கிறார். இதற்குக் காரணம் பார்ப்பனர்களை உயர்த்திப் பிடிக்கும் வர்ணாசிரமக் கொள்கையும் , யூதர்களை உயர்த்திப் பிடிக்கும் சியோனிசம் கொள்கையும், ஒரே குட்டையில் ஊறிய வலதுசாரி பாசிச மட்டைகள் தாம்.

சிங்களப் பேரினவாதத்துக்கு நம் தமிழ் இனத்தைத் பலி கொடுத்தவர்கள் என்கிற வகையிலும் மனித மாண்புகள் என்கிற வகையிலும் நாம் பாலஸ்தீன மக்களைத்தான் ஆதரிக்க வேண்டும். பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் போரை நிறுத்த ஐ.நா. சபையை வலியுறுத்தும் அதே வேளையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போருக்குத் துணை போகும் இந்திய ஒன்றிய அரசின் வலதுசாரி பாசிச போக்கை வன்மையாகக் கண்டித்து மக்கள் மன்றத்தில் அம்பலபடுத்துவது நமது கடமையாகும்.

கார்ப்பரேட் அரசுகளும், ஆயுத வியாபாரிகளும் இந்தப் போர் நீடித்தால் தங்கள் சுரண்டலை மென்மேலும் வளர்த்துக் கொள்ளலாம் என நினைத்து போருக்குத் தூபம் போடுகின்றனர். ஆனால் வடஅமெரிக்கா, பிரிட்டானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள மனிதநேயம் மிக்க மக்கள் கூட்டம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் தங்கள் அரசுகளின் நிலைப்பாட்டுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டங்கள் நமக்கான புதிய எழுச்சியைத் தருகின்றன.

இஸ்ரேலிய பாலஸ்தீனிய கம்யூனிஸ்ட் கட்சிகள் இஸ்ரேல் தொடுப்பது இன அழிப்புப் போர் என்றும் பாலஸ்தீனியர்களின் நிலைப்பாடு சரியானது என்றும் கூறியுள்ள நிலையில் தமிழ்நாடு அளவிலும் இந்தியத் துணைக்கண்ட அளவிலும் இயங்கி வருகின்ற புரட்சிகர, இடதுசாரி, கம்யூனிச அமைப்புகளை ஒருங்கிணைத்து பாலஸ்தீன விடுதலையின் தேவையை உணர்த்தும் ஒரு பேரறிக்கையை உருவாக்கி உலகில் பல்வேறு நாடுகளில் இயங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறியுமாறு அனுப்பி இஸ்ரேல், பாலஸ்தீனம் போன்று உலகில் நடக்கும் இன அழிப்புப் போர்களைத் தடுத்து நிறுத்த உலகாளவிய கம்யூனிச அகிலத்தைக் கட்டி எழுப்ப தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் அனைத்து புரட்சிகர இயக்கங்களையும் அறைகூவி அழைக்கிறது.

பாசிச அரசுகளைக் களையெடுப்போம்!

பாலஸ்தீன விடுதலையை முன்னெடுப்போம்!

- தங்க குமரவேல்

Pin It