கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்தியா முழுவதையும் செயல்படுகள மாகக் கொண்டால்தான் பெரியார் கொள்கை வெற்றி பெறும். இந்தியாவை ஒரு கூட்டாட்சி யாக அமைக்க முடியும். அப்போதுதான், சாதியைப் பாதுகாக்கிற-பழைய பழக்கவழக் கத்தைப் பாதுகாக்கிற அரசமைப்பை மாற்ற முடியும்; மதச்சார்பற்ற அரசை நிறுவி, மதச் சார்பற்ற கல்வியைத் தரமுடியும்; சமதர்ம ஆட்சியை அமைக்க முடியும். அப்போது தான், பின்கண்ட ஈனநிலையை மாற்ற முடியும்.

1. பிறவி வருண சாதிகள் வடஇந்தியாவில் நான்கு. பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்; தென்னாட்டில் கலியுகத்தில் இரண்டு மட்டுமே - பிராமணன், சூத்திரன்.

இவர்கள் கூடி உண்ணுவது இல்லை; வருணம் மாறித் திருமணம் செய்துகொள்வது நடைபெறுவதில்லை.

2. புராணங்களின்படி, வருணம் மாறித் திருட்டுத்தனமாகக் கலந்து பிறந்ததால் உண்டான உள்சாதிகள் 6,700. இவர்கள் ஒருவர் வீட்டில் ஒருவர் உண்ணுவது இல்லை. உள்சாதி மாறித் திருமணம் செய்து கொள்ளுவது இல்லை.

அதன் விளைவாகவே, இந்து மதத்தில் மனித சமத்துவம் வர-வர வில்லை; தமிழன் (அ) திராவிடன் என்ற இன உணர்வு வளரவில்லை.

தமிழ்த் தேசிய இன விடுதலைக்கு இவை பெருந்தடைகளாக உள்ளன.

திராவிடர் இயக்க - தமிழ்த் தேசிய இயக்கத்தவர்கள் இவற்றை நன்கு உணர வேண்டும்.

1. தந்தை பெரியார் 21.12.1922இல் திருப்பூரில், காங்கிரசு மாநாட்டை ஒட்டிய பொதுக் கூட்டத்தில், முதன்முதலாக பிறவியில் தீண்டாமை-பிறவியால் சாதி இருப்பதற்கு மனுநீதி, இராமாயணம் காரணம் என முழங்கினார். தமிழகப் பரப்பு முழுவதிலும் இந்த ஒரு செய்தி யை முதன்மைப்படுத்தி 19.12.1973 முடிய 51 ஆண்டுகள் அவரே நேரில் மக்களிடம் பேசினார்; இவற்றை விளக்கி இடைவிடாமல் எழுதினார்.

2. 17.12.1920இல் சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சியை ஏற்ற நீதிக்கட்சி ஆட்சி 1923 தேர்தலிலும் வென்றது. நல்ல சாதனை களாகத் தீண்டப்படாதோர் பொதுப் பள்ளிகளில் படிக்க வாய்ப்பை உண்டாக்கியது; பார்ப்பனர் ஆதிக்கத்தை அரசு அதிகாரத் துறை களில் ஒழிக்கும் தன்மையில் மொத்தம் உள்ள 100 இடங்களையும் பங்கீடு செய்து, 5 வகுப்புகளுக்கும் அளித்து ஆணைகள் பிறப்பித்தது. ஆனாலும் 1926 தேர்தலில் தோல்வி அடைந்தது.

3. நீதிக்கட்சித் தலைவர்கள் நிலைகுலைந்து நின்ற னர். நீதிக்கட்சித் தோற்றதற்கு மூல காரணம், பார்ப்பனியத்தைக் கைவிடாத நீதிக்கட்சித் தலை வர்களே ஆவர் எனப் பெரியார் கண்டார்.

அவர்களுள், வெற்றி பெற்ற பனகல் அரசரையும், ஆர்க்காடு இராமசாமி முதலியாரையும் அழைத்துக் கொண்டு, “பார்ப்பனர் அல்லாதாருக்குத் தன் மான உணர்ச்சியை உண்டாக்க வேண்டும். அதற்கெனப் ‘பார்ப்பனர் அல்லாதார் சுயமரியாதை இயக்கம்’ ஒன்றைத் தொடங்க வேண்டும்” என, 1926 நவம்பர், திசம்பர் மாதங்களில் தென் மாவட்டங்களில் சூராவளிப் பயணம் மேற் கொண்டார்.

மதுரையில், 26.12.1926இல், ஏ. பரசுராம் பாத்ரோ (A.P. Patro) தலைமையில், “பார்ப்பனர் அல்லாதார் சுயமரியாதை இயக்கம்” தோற்று விக்கப்பட்டது.

1926 முதல் 47 ஆண்டுகள் தந்தை பெரியாரே தமிழகம் முழுவதிலும் பரப்புரை செய்தார்.

பெரியார் மறைந்து 43 ஆண்டுகள் ஆன பிறகும் பல அமைப்புகளின் பெயரால் பெரியார் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இக்கொள் கைகளைப் பரப்புரை செய்கிறோம். நிற்க.

4. திராவிடக் கட்சிகள் 6.3.1967 முதல் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆளுகின்றன.

சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் (1968), அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் (1971) இவற்றை தி.மு.க. ஆட்சி நிறை வேற்றியது.

இவை தமிழ்நாட்டில் மட்டுமே செல்லுபடியாகும். இந்தியா முழுவதிலும் இவை செல்லுபடியாக மாட்டா.

19.8.1979இல் அ.தி.மு.க. அரசிடம் மா.பெ.பொ.க. வைத்த இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று, 1.2.1980இல் அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடு ஒதுக்கீடு இருந்ததை 50 விழுக்காடாக உயர்த்தியது.

இச்சட்டமும் தமிழகத்தில் மட்டுமே செல்லும். இந்தியா ஒன்று என்றாலும் - மற்ற மாநிலங்களில் இது செல்லாது.

ஏன் இப்படி?

இந்தியா ஒற்றை ஆட்சியாக இருக்கிறது; இந்தியா உண்மையான கூட்டாட்சியாக இல்லை. மாநில அரசுகளின் பல அதிகாரங்கள் 3.1.1977 முதல் பறிக்கப்பட்டுவிட்டன.

எனவே மாநிலங்களுக்குத் தன்னாட்சி அதி காரங்கள் (Autonomous Powers) - அதாவது, பாதுகாப்பு, பணத்தாள் அச்சடிப்பு, செய்திப் போக்கு வரத்து ஆகிய மூன்று துறைகளில் இந்திய அரசியல் அமைப்புக்குக் கட்டுப்பட்ட-மற்ற எல்லா அதிகாரங் களும் உள்ள தனி அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் இருக்க வேண்டும்.

இந்தியாவுக்குத் தேசியக் கொடி இருப்பது போல, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி தேசியக்கொடி இருக்க வேண்டும்.

மதச்சார்பற்ற - தீண்டாமை ஒழிந்த - பிறவி சாதி ஒழிந்த - பழைய பழக்கவழக்கம் ஒழிந்த - சமதர்ம இந்தியக் கூட்டாட்சியை அமைக்க அப் போதுதான் முடியும்.

இந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்!