இந்தியத் துணைக்கண்டத்தில் 1956 நவம்பர் 1 -ஆம் நாள், மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மொழிவாரி மாநிலங்களைப் பெற இந்திய அரசு ஒவ்வொரு முறையும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்துள்ளது. ஆயினும் மொழிவழி உரிமைக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழுந்த மக்களின் மாபெரும் எழுச்சியைக் கண்டு பின்வாங்கிய இந்திய அரசு, வேறு வழியில்லாமல் மொழிவழி மாநிலங்களை அமைக்க ஒப்புக் கொண்டது.

இந்தியாவில் 1936 ஏப்ரல் ஒன்றாம் நாள் முதன்முதலாக ஒரிசா (இப்பொழுது ஒடிசா) மாநிலம் உருவாக்கப் பட்டது. இந்நாளை "உட்கல டிபாசா" (Utkala Dibasa) எனும் பெயரில் ஒடிசா ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.அதன் பிறகு மாநிலங்களை மொழி வழியாகப் பிரிக்கக் காங்கிரசு அரசு பிடிவாதமாக ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனால், இதை ஏற்க மறுத்து, தெலுங்கு மொழி பேசும் ஆந்திராவைத் தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் எனப் பொட்டி சிறீ இராமலு என்பவர் 9.7.1952 முதல் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்தார். ஆனால் இந்திய அரசு அதைக் கண்டு கொள்ளவில்லை. எனவே அவர் தனது உண்ணாநிலைப் போராட்டத்தில் உறுதியாக இருந்து, 15.9.52 அன்று உயிர் நீத்தார். இதைக் கண்டு தெலுங்கின மக்கள் பெருங் கோபத்துடன் கிளர்ந்தெழுந்தனர். மக்கள் போராட்டத்தால் ஆந்திரப் பகுதியே நிலை குலைந்தது. எனவே மக்களின் எழுச்சியைக் கண்டு நடுநடுங்கிய இந்திய அரசு, 1953 அக்டோபர் 1ஆம் நாள் ஆந்திராவைத் தனி மாநிலமாக்க இசைவளித்தது.

அதன் பிறகு, மொழி வழியாக மாநிலங்களைப் பிரித்தாக வேண்டிய நெருக்கடி இந்திய அரசுக்கு ஏற்பட்டது. எனவே வேறு வழியின்றிப் பல்வேறு மாநிலங்கள் மொழிவழியாகப் பிரிக்கப்பட்டன. மதராஸ், மைசூர், கேரளா, அசாம், பஞ்சாப், ஜம்மு -காஷ்மீர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், பீகார், மேற்கு வங்காளம், பம்பாய் ஆகியன 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் தனி மாநிலங்களாக உருவாயின.

இவை தவிர, இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள் பல்வேறு ஆண்டுகளில் தனித்தனி மாநிலமாக உருவாயின. அரியானா (1966) சட்டீஸ்கர் (2000) ஷார்கண்டு (2000) தெலங்கானா (2014) போன்றவை வெவ்வேறு ஆண்டுகளில் தனி மாநிலமாயின. பல்வேறு பகுதிகளை இழந்து 1956 நவம்பர் ஒன்றாம் நாள் மெட்ராஸ் மாநிலம் உருவானது.

தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, கேரளா, பஞ்சாப், அரியானா, சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், புதுச்சேரி ஆகியன நவம்பர் ஒன்றாம் நாளை மிகச்சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன.

karnataka flagஇருப்பினும், இந்தியாவிலுள்ள மாநிலங்களில் கர்நாடகாவின் கொண்டாட்டம் தனித்துவமானது. கர்நாடக மாநிலம் தனியே அமைவதற்கு முன்பே அதற்கென ஒரு கொடியை உருவாக்கும் முயற்சி தொடங்கிவிட்டது. அறுபதிற்கும் மேற்பட்ட ஆங்கிலக் கவிதைகளைக் கன்னடத்தில் மொழியாக்கம் செய்த கன்னட எழுத்தாளர் பி.எம். சிறீ காந்தையா அவர்களின் கன்னடத பாவூடா (கன்னடக் கொடி) என்ற 1938 ஆம் ஆண்டுக் கவிதையே கன்னடக்கொடி ஒன்று தேவை என்ற எண்ணம் உருவாகக் காரணம் எனக் கருதப்படுகிறது. (1938 ஆம் ஆண்டில்தான் "தமிழ்நாடு, தமிழருக்கே" என்ற முழக்கத்தைத் தந்தை பெரியார் அறிவித்தார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.) பிறகு 1966ல் தொடங்கப்பட்ட கர்நாடக சம்யுக்த ரங்கா (கர்நாடக ஐக்கிய முன்னணி) எனும் அமைப்பின் செயலாளரான இராமமூர்த்தி என்பார் கன்னடம் பேசும் மக்களை ஒன்று திரட்டத் தனிக் கொடி தேவை எனக் கருதினார். பல்வேறு கன்னட அமைப்புகளைக் கலந்து பேசிய பின், வெளிர் மஞ்சள் நிறம் மேற்புறமும், சிவப்பு நிறம் கீழ்ப்புறமும் சமமாகப் பிரிக்கப்பட்ட ஒரு கொடியை அவர் உருவாக்கினார். மஞ்சள் வண்ணம் அமைதி மற்றும் தோழமையையும், சிவப்பு, வீரத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது. பின்னர் 1966ஆம் ஆண்டு அவரால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியின் கொடியாக அதை அவர் மாற்றிக் கொண்டார். அதன் பிறகு மிகக் குறுகிய காலத்திலேயே அவர் காலமாகி விட்டார்.

ஆயினும், இராமமூர்த்தி பரிந்துரைத்த கொடியையே கன்னடர்கள் தங்களது கர்நாடக தேசத்தின் கொடியாக மாற்றிக் கொண்டனர். இக்கொடிக்கு அரசு அங்கீகாரம் இல்லாவிட்டாலும், இக்கொடியே மக்களின் கொடியாக மாறிவிட்டது. கர்நாடகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இக்கொடியே பயன்படுத்தப் படுகிறது. இதை எதிர்ப்பார் யாரும் இல்லை. கர்நாடக ராஜ்ய உத்சவத்தின் பொழுது, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் நாளன்று அம்மாநில முதலமைச்சரும், ஆளுநரும் இக்கொடியை ஏற்றிய பின் உரையாற்றுகின்றனர்.

கர்நாடகத்தில் நடைபெறும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தவறாமல் இக்கொடி பயன்படுத்தப் படுகிறது. கன்னட மொழி பேசும் மக்கள், வடநாடு சென்றால் இந்தி கற்றுக்கொள்கின்றனர். அது போலவே வட இந்தியர்கள் கர்நாடகத்திற்கு வரும் பொழுது உறுதியாகக் கன்னட மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் எனக் கன்னட மக்கள் வலியுறுத்துகின்றனர். இந்த உணர்வு கர்நாடகத்தில் இப்பொழுது பரவலாக மேலோங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில் பல்வேறு போராட்டங்களில் இந்த இருவண்ணக் கொடி, கட்சி வேறுபாடின்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகம் உருவான நவம்பர் ஒன்றாம் நாள் அரசு விடுமுறை எனப் பல ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அது அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. கர்நாடகத்தின் வளர்ச்சிக்கும், கன்னட மொழியின் மேம்பாட்டிற்கும் பணியாற்றிய ஆளுமைகளுக்கு "ராஷோத்சவ் விருது" வழங்கப்படுகிறது. இவ்வாண்டு அரசு சார்பாக 90 பேருக்கு அப்படிப்பட்ட விருது வழங்கப்பட்டுள்ளது. "கர்நாடக ரத்ன" விருதுதான் அங்குள்ள மிகப் பெரிய விருதாகும். அதற்கு அடுத்தபடியாகக் கருதப் படுவது நவம்பர் ஒன்றாம் நாள் வழங்கப்படும் ராஷோத்சவ விருதாகும்.

நவம்பர் ஒன்றாம் நாள் கர்நாடகத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் எங்கும் விழாக் கோலம் பூண்டிருக்கும். சொற்பொழிவுகள், பேரணிகள், அலங்கார ஊர்திகள், நூல் வெளியீடு என எங்கும் கொண்டாட்டமே மேலோங்கி இருக்கும். இந்த நாளில்பெண்கள் மஞ்சள் சேலை மற்றும் சிவப்பு ரவிக்கை அணிவர். ஆண்கள் மஞ்சள் ஆடை மற்றும் சிவப்பு உருமாலை அணிந்து பெருமிதத்தோடு கர்நாடகத்தையும், கன்னடத்தையும் புகழ்ந்து பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்துவர்.

நவம்பர் ஒன்றாம் நாள் என்பது கன்னடர்களைப் பொறுத்தமட்டில், ஒரு மாநிலம் உருவான நாள் என்பதாக மட்டும் அதைக் கருதுவதில்லை. கர்நாடகத்தின் செழுமை மிக்க பாரம்பரியத்தையும், கன்னட மொழியின் மேன்மையையும் கொண்டாடும் ஒரு தருணமாகவே நவம்பர் ஒன்றாம் நாளைக் கன்னடர்கள் கருதுகின்றனர். இதன் அடையாளமாக மஞ்சள் சிவப்புக் கொடி கருதப்படுகிறது.

இந்தியத் துணைக் கண்டத்தில் கர்நாடகம் தவிர, ஜம்மு காஷ்மீருக்குத் தனிக் கொடி உள்ளது. 1931 சூலை 13ஆம் நாள் காஷ்மீர் மன்னரின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்துக் காஷ்மீர்ப் போராளிகள் போராடியபொழுது, 22 போராளிகள் இராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அப்படிச் சுட்டுக் கொல்லப்பட்ட போராளி ஒருவரின் இரத்தம் தோய்ந்த சட்டையை எடுத்து, அதைக் கொடியாக ஏற்றினர் மக்கள். பிறகு 1939ஆம் ஆண்டு சூலை 11ஆம் நாள் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு முறையான கொடி உருவானது.

kashmir flag 1சிவப்பு வண்ணத்தில் ஜம்மு, காஷ்மீர் மற்றும் இலடாக் ஆகிய மூன்று பகுதிகளைக் குறிக்கும் மூன்று வெண்ணிறக் கோடுகளும், உழவைச் சிறப்பிக்க ஏர்க்கலப்பையும் கொண்டதாக அக்கொடி உருவானது. தேசிய மாநாட்டுச் கட்சித் தலைவர் ஷேக் அப்துல்லா அவர்கள் 1952 -ஆம் ஆண்டு இந்திய அரசுடன் செய்துகொண்ட புதுதில்லி ஒப்பந்தத்தின்படி, ஜம்மு -காஷ்மீர் கொடிக்கும், மாநிலத்திற்கான தனி அரசமைப்புச் சட்டத்திற்கும் ஒன்றிய அரசின் இசைவைப் பெற்றார்.

அரசமைப்புச் சட்டம் வழங்கிய 370ஆவது சிறப்புப் பிரிவின்படி தனிக்கொடியை ஜம்மு -காஷ்மீர் அரசு பல ஆண்டுகளாக அதிகார ஏற்புடன் பயன்படுத்தி வந்தது. ஆனால் தற்பொழுது அச்சிறப்புப் பிரிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், தனிக்கொடிப் பயன்பாடு அரசியலில் சிக்கலுக்குள்ளாகி உள்ளது. ஆனால், கன்னட மக்கள் உள்ளத்திலிருந்து மஞ்சள் -சிவப்பு கொண்ட இரு வண்ணக் கொடியை எந்த அதிகாரத்தாலும் நீக்கிவிட முடியாது என்பதுதான் உண்மை நிலை. அதேபோல் நாகாலாந்து, தனக்கெனத் தனிக் கொடி தேவை என வலியுறுத்தி வருகிறது.

நாகாலாந்தின் தேசிய சோசலிசக் கவுன்சில் (National Socialist Council of Nagalim) நாகாலாந்திற்கெனத் தனி அரசமைப்புச் சட்டம், தனிக்கொடி, தனி நாடாளுமன்றம், தனி நீதிமன்றம் வேண்டும் என 2016 -ஆம் ஆண்டிலேயே பாரதீய சனதாக் கட்சியின் மோடி அரசசோடு பேச்சு நடத்தியது. ஆனால், அதன் முடிவுகள் வெளியில் வரவில்லை.

இந்தியாவுடன் இணைக்கப் படுவதற்கு முன், சிக்கிம் நாடு, தனக்கெனத் தனிக் கொடியை வைத்திருந்தது. புத்தரின் பிரார்த்தனைச் சக்கரம் மையத்தில் இருப்பதாக அந்நாட்டின் கொடி அமைந்திருந்தது. ஆனால், பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு மாநிலமாக 1975 -ஆம் ஆண்டு அது இணைக்கப் பட்டுவிட்டது. அதன்பிறகு, அதிகார வழியில் அல்லாமல், மக்கள் அக்கொடியை இன்றும் அம்மாநிலத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டிற்கென தனிக்கொடி ஒன்று தேவை எனக்கருதி, கலைஞர் கருணாநிதி அவர்கள் 1970 -ஆம் ஆண்டு ஒரு கொடியைப் பரிந்துரைத்து அப்பொழுது தலைமை அமைச்சராக இருந்த இந்திராகாந்திக்கு அனுப்பி வைத்தார். ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை.

தமிழ்நாட்டிற்கு ஒரு கொடி தேவை எனக் கூறினாலே, "தேசவிரோதி" "பிரிவினைவாதி" எனும் புளித்துப்போன குற்றச்சாட்டைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுகின்றனர், விவரம் தெரியாத சிலர். இந்தியாவிலுள்ள மாநிலங்கள், தனித்தனியே கொடிகள் வைத்துக் கொள்வதை அரசமைப்புச் சட்டம் தடை செய்யவில்லை என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 1994 எஸ்.ஆர். பொம்மை (எதிர்) இந்திய ஒன்றியம் வழக்கில் இதைக் குறிப்பிட்டதோடு, கூட்டாட்சி என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறு எனவும், மாநிலங்கள் உயர்ந்தவை / அதிகாரம் மிக்கவை எனவும் அது சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் இந்திய தேசியக் கொடியின் மாண்பினைக் குலைக்கும் வகையில் மாநிலக் கொடிகளை ஏற்றக் கூடாது என்று அது வழிகாட்டியுள்ளது.

மேலும் கொடி குறித்த சட்டத்தொகுப்பில் (Flag Code of India) இந்திய தேசியக் கொடியையும், மாநிலத்தின் கொடியையும் ஒரே கம்பத்தில் ஏற்றக் கூடாது எனவும், மாநிலக் கொடிகளை இந்திய தேசியக் கொடியை விட உயரமாகப் பறக்கவிடக் கூடாது எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இதுதான் கொடி பற்றிய அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதல்.

மேலும் இத்தகைய பிரச்சனை குறித்து உலக நாடுகளிலுள்ள நடைமுறை என்ன என்பதையும் ஒப்பிட்டுக் காண வேண்டும்.

அமெரிக்காவின் கொடியில் 50 நட்சத்திரங்கள் உள்ளன. இந்த ஐம்பது நட்சத்திரங்களும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள 50 மாநிலங்களைக் குறிக்கும். அது தவிர, அமெரிக்கக் கொடியில் 13 கிடைமட்டக் கோடுகளும் உள்ளன. பிரிட்டனிலிருந்து பிரிந்து, சுதந்திரமானவையாகத் தங்களைப் பிரகடனப் படுத்திக் கொண்ட 13 பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகளை அக்கிடைக் கோடுகள் குறியீடாக வெளிப்படுத்துகின்றன.

அமெரிக்காவில் ஒரு மாநிலத்தின் தனித்துவம், வரலாறு, இறையாண்மை மற்றும் அதன் அடையாளம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக அம்மாநிலத்தின் கொடி அமைந்துள்ளது. அது ஏதோ ஒரு துண்டுத் துணி என்பதாக அம்மாநில மக்கள் அதைக் கருதுவதில்லை. தங்களது மாநிலத்தின் கொடிக்கு அவர்கள் மிகுந்த மதிப்பளிக்கின்றனர். தனிக் கொடி மட்டுமல்ல, அமெரிக்க மாநிலங்களுக்குத் தனி அரசமைப்புச் சட்டம் உள்ளது. சில மாநிலங்களுக்கு இராணுவமும் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவிலுள்ள மாநிலங்கள் இறையாண்மை கொண்டவையாகவும் உள்ளன.

கனடா நாட்டின் 10 மாநிலங்களுக்கும், ஆஸ்திரேலியாவிலுள்ள 6 மாநிலங்களுக்கும், சுவிட்சர்லாந்து நாட்டின் 26 மாநிலங்களுக்கும், ஜெர்மனியிலுள்ள 16 மாநிலங்களுக்கும் தனித்தனி கொடிகள் உள்ளன.

இப்படி உலகெங்குமுள்ள பல்வேறு நாடுகளில் மாநிலங்களுக்கு உரிய முக்கியத்துவமும், மதிப்பும் வழங்கப் படுகிறது. ஆனால், அத்தகைய நாடுகளில் மாநிலங்களுக்கிடையே ஒப்பீட்டளவில் பெரிய அளவு பண்பாட்டு வேறுபாடுகள் இல்லை. ஆனால் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள மாநிலங்களில் பெரும் வேறுபாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாகத் தமிழ்நாடு, பஞ்சாப், காஷ்மீர், நாகாலாந்து போன்ற மாநிலங்களின் மொழி, பண்பாடு போன்றவை முற்றிலும் மாறுபாட்டு உள்ளன. இந்த மாநிலங்களின் தனித்தன்மையை இந்தியப் பண்பாடு எனும் சிமிழுக்குள் அடக்கி விட முடியாது. ஒரு கூட்டாட்சி அமைப்பில் இத்தகைய வேறுபாடுகள், மாறுபாடுகளாக மாறிவிடக் கூடாது. மாநிலங்களின் தனித்துவத்தின் அடையாளம்தான் அம்மாநிலத்தின் கொடி என்பதை அனைவரும் உணர வேண்டும்.

ஆகவே தமிழ்நாட்டிற்குத் தனிக்கொடி தேவை எனக் கூறுவது தேசவிரோதக் குற்றமல்ல. அது ஒரு சனநாயகக் கோரிக்கை. உண்மையான கூட்டாட்சியின் அடையாளமும் அது தான்.

- கண.குறிஞ்சி

Pin It