'பசு புனிதம்' என்ற போலி கருத்தாக்கத்தை உரிய ஆதாரங்களுடன் உடைத்து நொறுக்குகிறது வரலாற்றாளர் டி.என்.ஜா'வின் இந்த ஆய்வு நூல்.
பண்டைய வேத சாஸ்திர நூல்களில் பசுவைப் புனிதமாகக் கருதியதற்கான எந்த குறிப்பும் தென்படவில்லை. வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள 250 விலங்குகளின் பட்டியலில் 50க்கும் குறையாத விலங்குகள் வேள்விகளுக்காக பலியிடப்பட்டவை. இதில் பசுவும் அடங்கும். உண்ணத்தகாதவை என்ற பட்டியலிலும் பசு இடம்பெறவில்லை.
வேதகால பார்ப்பனர்களின் சடங்குகள் முழுவதிலும் இறைச்சி தவறாமல் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக 'மதுபர்கம்' எனும் விருந்தோம்பல் சடங்கில் பசு அல்லது காளையின் இறைச்சி தயிருடன் கலந்து பரிமாறப்பட்டது.
'அஷ்டகம்' எனும் பிதுர்களுக்கான சிரார்த்த சடங்கில் பசுவை வெட்டி அதன் குடல் பிதுர்களுக்கு படையலாக்கப்பட்டது. திருமண விழாக்களின் போது கூட பசுக்கள் பலியிடப்பட்டதை ரிக் வேத பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.
பவுத்த சமண எழுச்சிக்கு பிறகான அழுத்தத்தின் காரணமாக அகிம்சை கோட்பாட்டை நோக்கி வைதீக மதம் நகர்வதை உபநிடதங்களில் இருந்து அறிய முடிகிறது.
ஆக, இன்று இந்துத்துவ சக்திகள் கட்டமைத்திருக்கும் 'பசு புனிதம்' என்ற கருத்தாக்கத்திற்கான கருத்தியல் பின்புலத்தை அவர்கள் மீட்டுருவாக்கம் செய்யத் துடிக்கும் 'வேத கால இந்தியா'வே வழங்க மறுக்கிறது.
டி.என்.ஜா தனது தொகுப்புரையை இவ்வாறு முடிக்கிறார் "பசுவின் புனிதத் தன்மை என்பது ஒரு ஏமாற்று வித்தையே. காரணம், பசு தெய்வமோ, அதன் பெயரில் ஒரு கோயிலோ இருந்ததில்லை.
உண்மையில் இந்து மதத்திற்கு ஒற்றை அடையாளம் என்று ஒன்று இல்லை. எனினும் நவீன காலங்களில் இத்தகைய ஒற்றை அடையாளத்தை இந்துத்துவ சக்திகள் முன்வைக்கின்றன. பசுவிற்கு புனிதம் கற்பிக்கும் அணுகுமுறையை இத்தகைய போக்கின் ஒரு அம்சமாகவே நாம் மதிப்பிட வேண்டும்."
நிறுவனமயப்படுத்தப்பட்ட பசுப் பாதுகாப்புக் கொலைகள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் ஜனநாயக சக்திகள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.
பி.கு: வைதீகத்தின் அடிமடியிலேயே கைவைத்துள்ள இந்நூலுக்கு இந்துத்துவ சக்திகள் தடைவாங்கின. டி.என்.ஜா பல அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த நூலின் முதல் பதிப்பு அமெரிக்காவின் வெர்ஸோ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
- சரவணன் பெருமாள்