modi with cow

இப்படி ஒரு துயரச் சம்பவம் நடக்கும் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். மனிதர்களுக்காக அன்றி மாடுகளுக்காகவே நடத்தப்படும் ஒரு புனித ஆட்சியில் அதுவும் இந்து மதத்தை மீட்டுருவாக்கம் செய்து அதனுள் இந்தி , சமஸ்கிருதம், யோகா என அத்தனை பார்ப்பன விழுமியங்களையும் உள்ளீடு செய்து ஒரு முழு நிறைவான இந்து சமூக அமைப்பை உருவாக்க ஒரு நாளைக்கு 20 மணி நேரம் பாடுபடும் ஒரு ‘கடவுளின் குழந்தை’ ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் இப்படி நடந்திருக்கக்கூடாது. துக்கம் நமக்கே தொண்டை அடைக்கின்றது. நமக்கே இப்படி என்றால் பாவம் தயிர் சோறும், புளியோதரையும் மட்டுமே சாப்பிட்டு சுத்த வெஜிடேரியனாக இருக்கும் அவர்களுக்கு எப்படி இருக்கும். அய்யோ பாவம்!.

  இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்படி பீடிகை போடுகின்றீர்கள் என்று ஆரோகணத்தில் நீங்கள் கேட்பது நமக்குக் கேட்கின்றது. அது ஒன்னும் இல்லீங்க சாமி, நம்ம அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சி செய்யும் டெல்லியில் உள்ள 5 கோசாலையில் தினம் தினம் மாடுகள் பட்டினியால் மண்டையைப் போடுவதைப் பற்றித்தான் சொல்கின்றேன். தெற்கு டெல்லியில் உள்ள  மாநகராட்சி கோசாலையில் கடந்த 2015- 2016 வருசம் மட்டும் 3685 மாடுகள் மண்டையை போட்டுருச்சாம். அந்த வருஷம் கோசாலையில் அனுப்பப்பட்ட மாடுகளின் எண்ணிக்கை மொத்தம் 3398ஆம். அதே போல 2014- 2015 ஆம் வருசம் 2143 மாடுகள் மண்டையைப் போட்டுருச்சாம். அதே மாதிரி அந்த வருஷம் பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட மாடுகளின் எண்ணிக்கை 2974 ஆம். அதே மாதிரி கிழக்கு டெல்லி மாநகராட்சி கோசாலைக்கு 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை அனுப்பப்பட்ட 190 மாடுகளில் 120 மாடுகள் மண்டையைப் போட்டுருச்சாம். மொத்தமா பார்த்த 2011 இல் இருந்து டெல்லியின் மூன்று மாநகராட்சி கோசாலைக்கும் அனுப்பப்பட்ட 49000 மாடுகளில் 46000 மாடுகள் இறந்துள்ளதாம். சராசரியா நாளொன்றிக்கு 20 மாடுகள் தனது ஜீவாத்மாவை துறந்து பரமாத்வாவிடம் சென்றுள்ளன.

   நாட்டில் இப்படி  ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது; ஆனால் மோடி வழக்கம் போல இதற்கும் எதிர்வினை ஆற்றாமல் இருக்கின்றார். ஒரு நல்ல இந்துவுக்கு அழகா இது? இந்நேரம் இதை தேசிய துக்கமாக அறிவித்து தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டிருக்க வேண்டாமா? அதற்குச் சட்டத்தில் இடமில்லை என்றால் குறைந்தபட்சம் மாடுகளுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட  ஆர்.எஸ்.எஸ் காரர்கள் காவிக் கொடியையாவது அரைக்கம்பத்தில் பறக்க விட்டிருக்க வேண்டாமா? செத்தது மனிதர்கள் அல்ல அது மாடுகள்!. மாடுகள் என்றால் சாதாரண மாடுகளா? முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட  வசுக்களும், நவக்கிரகங்களும் அதில் குடி இருக்கின்றன. அதாவது இந்தியாவில் இருக்கும் பார்ப்பனர்களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகம். அது மட்டும் அல்லாமல் அந்த மாடுகள் மூன்று உலகங்களுக்கும் தாயாக வேறு இருக்கின்றது.

 அப்படிப்பட்ட தாய்கள் இன்று போதிய உணவு இல்லாமல், நோய்க்கு மருந்தில்லாமல் , தான் பேண்ட பீயை மன்னிக்கவும் சாணத்தை அள்ளுவதற்கு ஆளில்லாமல் கொத்துக்கொத்தாக இறந்திருப்பது நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றது. மாடுகளுக்காக மனிதர்கள் சாகலாம்; அது இந்தியாவில் ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால் மனிதர்களுக்காக மாடுகள் சாகலாமா? அதுவும் இந்து மன்னன் கொலு வீற்றிருக்கும் டெல்லியிலேயே. இந்தப் பாவத்தை எந்த கங்கையில் போய் கழுவுவது? இப்பத்தான் கொஞ்ச நாளைக்கு முன்னால் ராஜஸ்தானில் அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வந்த ஹிஸ்கோனியா பசுக்கள் காப்பகத்தில் 1000 பசுக்கள் பட்டினியால் இறந்தன. இத்தனைக்கும் ராஜஸ்தானை ஆள்வது பசு பாதுகாப்பில் உலகில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இருக்கும் பி.ஜே.பி அரசுதான். சமீபத்தில் கூட பசுவின் மூத்திரத்தில் அதாவது கோமியத்தில் கிருமிநாசனி உள்ளது என்ற அரிய உண்மையை ராஜஸ்தான் அரசு கண்டுபிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்த துர்மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ராஜஸ்தானில் மட்டும் அல்லாமல்  பி.ஜே.பி ஆளும் சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 4 மாதத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பசுக்கள் கோசாலைகளில் உயிரிழந்துள்ளன.

cow shelter

   நம்முடைய கோரிக்கை என்னவென்றால் மோடி அரசு உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்து இந்த மரணங்கள் பற்றி விசாரிக்க வேண்டும். ஏன் என்றால் இதில் ஏதாவது பாகிஸ்தான் சதி இருந்தாலும் இருக்கலாம். இந்து ஆட்சியை சீர்குலைக்க நடக்கும் எந்த ஒரு செயலையும் நாம் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.  அப்படி இல்லாமல் இந்த மாடுகள் இறப்பதற்கு இந்துக்களின் தவறுகள் தான் காரணம் என்றால் மோடி அவர்கள் தயவு கூர்ந்து அந்தத் துரோகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே கர்நாடகாவில் மாடுகளை சந்தைக்கு விற்கச் சென்ற பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்த பிரவீன் பூஜாரியை பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்தவர்களே அடித்துக் கொன்று தங்களது மனுநீதியை நிலைநாட்டி இருக்கின்றார்கள்.

மூன்று மாடுகளை விற்பதற்காக எடுத்துச் சென்றவர்களுக்கே இந்த தண்டனை என்றால் அவர்கள் ஆளும் ராஜஸ்தான், சட்டீஸ்கரில் நூற்றுக்கணக்கான பசுக்கள் உயிரிழந்துள்ளன. எனவே இதற்குக் காரணமான அந்த மாநிலத்தை ஆட்சிசெய்யும் அயோக்கியர்கள் மீது மோடி அரசு கடும் நடவடிக்கையை எடுக்கும் என உறுதியாக நம்பலாம். மோடிக்கு அவரது இரண்டு கால் அம்மாவை விட  நான்குகால் அம்மாவின் மீது பாசம் அதிகம் என்பது இந்த உலகத்திற்கே தெரியும். தனது தாயை நினைத்து பேஸ்புக் அலுவலகத்தில் கண்ணீர்விட்டு கதறியது போல டெல்லியில் இருக்கும் தனது அலுவலகத்தில் மோடி இறந்துபோன கோமாதாக்களை நினைத்து கண்ணீர்வடிப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

  எனவே மோடி அவர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சம் சிரத்தை எடுத்து நடக்க வேண்டும். முதலில் மாடுகள் அப்புறம்தான் மனிதர்கள். கல்விக்கோ, மருத்துவத்திற்கோ, பொது விநியோகத் திட்டத்திற்கோ தரப்படும் நிதியை அப்படியே திருப்பி பசு பாதுகாப்புக்குப் பயன்படுத்தலாம். கோசாலைகளை நவீன மயமாக்கலாம். முடிந்தால் கையோடு ஏர்கன்டிஸ்னர் வசதி செய்து தரலாம். (மூன்று உலகங்களுக்கும் தாயாச்சே) காஷ்மீரில் ஏறக்குறைய 660 தீவிரவாதிகளை பிடிக்க 6.67 லட்சம் இராணுவ வீரர்களை களம் இறக்க முடிந்த மோடியால் பசுக்களை பாதுகாக்க சில கோடி நபர்களை பணிக்கு அமர்த்துவது ஒன்றும் சிரமமில்லை என்றுதான் தோன்றுகின்றது. மேலும் இந்தியாவில் உள்ள பணக்கார ஆண்டைகள் கிராமங்களை தத்து எடுத்துத் தனது ஏழைகளின் மீதான கரிசனத்தைக் காட்டுவது போல பி.ஜே.பி-ல் உள்ள ‘பசு ஆர்வலர்கள்’ பசுக்களின் மீதான தங்களின் பாசத்தைக் காட்ட ஆளுக்கு ஐந்து பசுவையோ இல்லை பத்து பசுவையோ தத்து எடுத்து வளர்க்கலாம். இதை எல்லாம்  செய்தாலே இப்படிப்பட்ட மரணங்களை நம்மால் தடுத்துவிட முடியும் என்று தோன்றுகின்றது. இதை எல்லாம் மோடி அரசு நிச்சயமாக செய்யும் என நாம் நம்புவோம். ஏனெனில் செத்துபோனது கேவலம் மனிதர்கள் அல்ல பசுக்கள்…புனிதப் பசுக்கள்.

- செ.கார்கி

Pin It