மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜி ஜீ மாட்டிறைச்சிக்கு தடை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “நான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன்; ஆனால், புத்த மார்க்கத்தைத் தழுவியவன்” என்று. டெல்லியில் ஒரு ஆங்கிலப் பத்திரிகை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசுகையில் குறிப்பிட் டார். “குளிர் பிரதேசத்தில் வாழும் மக்கள் குளிரை சமாளிக்க புரதச் சத்துள்ள மாட்டிறைச்சியைத் தான் சாப்பிட முடியும். இதனால்தான் இந்தப் பகுதிகளில் இராணுவ வீரர்களுக்கு கண்டிப்பாக மாட்டிறைச்சி வழங்கப் படுகிறது. அதுவும் மாட்டிறைச்சி வேண்டாம் என்று சொல்லும் பா.ஜ.க.வின் ஆட்சியிலேயே வழங்கப்படுகிறது. எனது மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் பெரும்பாலான மக்களின் உணவு மாட்டிறைச்சிதான். எனவே மாட்டிறைச்சிக்கு தடைபோட முடியாது” என்று கூறியுள்ளார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை: தமிழக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மதுரை மீனாட்சி கோயில் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணை மே மாதம் முடிந்துவிட்டது. தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எல்.ராஜா என்பவர் ‘இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார்.
(நவம்.4, 2015) அதில், “அர்ச்சகராவதற்கு மதம் குறித்த சடங்குகள் - ஒழுக்கமுமே முக்கியம். ஜாதி முக்கியமல்ல. ஆகம அடிப்படையிலான கோயில்களிலும் பார்ப்பனரல்லாத அர்ச்சகர் பயிற்சிப் பெற்றவர்கள் அர்ச்சகர்கள் ஆவதை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்க வில்லை” என்று கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்தக் கருத்தை வரவேற்கிறோம். பார்ப்பனர்கள் - பார்ப்பன அமைப்புகள் - இராம கோபாலன்கள் - சங்கராச்சாரியர்கள் இந்தக் கருத்தை ஆதரிக்கிறார்களா?