கீற்றில் தேட...

பயங்கரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று நடுவண் ஆட்சி கடும் ஒடுக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்து சமூக செயல்பாட்டாளர்களையும் சிறுபான்மை மக்களையும் குறி வைக்கிறது.

வடமாநிலங்களில் ‘பசு’ மாட்டின் பெயராலும் ‘தீண்டாமை’ ஜாதி வெறியினாலும் தலித் சிறுபான்மை மக்களை கும்பலாகத் திரண்டு அடித்தே சாகடிக்கிறார்கள். இதை ஒரு பயங்கரவாதமாகக் கருதுவதற்கு மோடி ஆட்சி தயாராக இல்லை. வெறுப்பின் வெளிப்பாடான இத்தகைய பயங்கரவாதம் ஒரு காலத்தில் 

கருப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்காவில் வெள்ளை நிற வெறியர்களால் நடத்தப்பட்டது. நிறவெறிக் கும்பல்களால் அடித்தே கொல்லப் படும் இந்த பயங்கரவாதத்தைக் குற்றமாக அங்கீகரிக்க அமெரிக்காவுக்கு 100 ஆண்டுகள் தேவைப்பட்டன. 1918ஆம் ஆண்டிலிருந்து இதைக் கிரிமினலாக்கும் மசோதாக்கள் வந்த போதெல்லாம் அமெரிக்க காங்கிரஸ் நீர்த்துப் போகச் செய்து அமுலாக்காமல் தடுத்து விட்டது. இறுதியாக 2018ஆம் ஆண்டு தான் அனைத்து அமெரிக்க மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய சட்டமானது. நிறவெறி வெளிப்பாட்டின் உச்சகட்ட வடிவமான இந்த கும்பல் வன்முறை ஒரு பயங்கரவாதச் செயல் என்கிறது அமெரிக்காவின் சட்டம். 

இங்கே என்ன நடக்கிறது? மதவெறி ஜாதி வெறி கும்பல் ஒருவரை அடித்து சித்திரவதை செய்யும் காட்சிகளை சமூக வலை தளங்கள் வழியாகப் பரப்பி அதை வீரச் செயலாகக் கொண்டாடும் மன நிலையில்தான் ‘புண்ணிய பாரதத்தின்’ - ‘ஆன்மிக சீலர்கள்’ இருக்கிறார்கள். இதைவிட ஒரு நாட்டுக்கு வேறு அவமானம் இருக்க முடியாது. இத்தகைய மனிதர்களை அடித்துக் கொல்லும் கும்பல் வன்முறைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் நடுவண் அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குன்வர் டேனிஷ் அலி என்பவர், நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பியபோது ஆளும் பா.ஜ.க.வினர் கூச்சல் போட்டு அவரது குரலை ஒடுக்கி விட்டனர். இது தான் பா.ஜ.க.வின் ‘பயங்கரவாத ஒழிப்பு’ போலும்.

உ.பி. மாநில சட்ட ஆணையம், கடந்த ஜூன் மாதம் இது குறித்து ஒரு மசோதாவை தயாரித்து உ.பி. மாநில அரசுக்கு சட்டமாக்கும்படி பரிந்துரைத்தது. இந்தியாவிலேயே மதவெறியர்கள் அடித்துக் கொல்லும் கும்பல் பயங்கரவாதத்துக்கு எதிராக முதன்முதலாக கடந்த 2018ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வந்த ஒரே மாநிலம் மணிப்பூர் தான். மணிப்பூர் சட்டத்தின் அடிப்படையிலேயே உ.பி. சட்ட வாரியமும் இந்த மசோதாவை தயாரித்திருந்தது. இத்தகையக் குற்றங்களைத் தடுக்காது பாதிக்கப்பட்டவருக்கு உரிய பாதுகாப்பு வழங்காத காவல்துறை அதிகாரிகளும் குற்றவாளிகளே என்று மணிப்பூர் சட்டமும் உ.பி. மாநில சட்ட வாரியத்தின் மசோதாவும் கூறுகிறது. உரிய நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சி அதிகாரிகளையும் குற்றவாளியாக்கப்பட வேண்டும் என்கிறது இந்த மசோதா. பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீட்டை 30 நாட்களில் வழங்கத் தவறிய அரசின் தலைமைச் செயலா ளரும் குற்றவாளி என்கிறது மணிப்பூர் சட்டம். 

ம.பி.-இராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சிகள் இதற்கான மசோதாக்ககளை அறிமுகம் செய்திருக்கின்றன. இதற்காக நாடாளுமன்றக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதன் தலைவராக உள்ளார். கும்பல் வன்முறைகளால் நடக்கும் கொலைகளுக்கு காவல் துறை அதிகாரிகளையும் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தையும் பொறுப்பாக்கி குற்றவாளிகளாக்கும் ஒரு மசோதாவைக் கொண்டு வர அமித்ஷா எப்படி முன் வருவார்? மாநில சட்ட ஆணையம் தயாரித்துள்ள இத்தகைய ஒரு மசோதாவை உ.பி. மாநில முதல்வர் ஆதித்யநாத் எப்படி ஏற்பார்? அதிகாரிகளையும் குற்றவாளிகளையும் தப்ப விட்டு மதஜாதி வெறிக் கும்பல் தண்டிக்கப்படாமல் இருப்பதற்கான ஓட்டைகள் நிறைந்த ஒரு சட்டத்தை வேண்டுமானால் இவர்கள் உச்சநீதிமன்றத்தின் கட்டாயத்துக்காக கொண்டு வரக் கூடும்.

- விடுதலை இராசேந்திரன்