aash durai'வாஞ்சிநாதனை சாதியவாதி என்றழைக்கும் ஓர் அமைப்பினர்' என தலைப்பிட்டு கடந்த ஜூன் 18 தேதியிட்ட டெக்கான் க்ரானிக்கிள் இதழில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது 1911ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் எனக் கருதப்படும் வாஞ்சிநாதன் ஆங்கிலேய கலெக்டர் எஸ்கார்ட் ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற ஜூலை 17ஆம் நாளன்று திருநெல்வேலியில் ஆதித் தமிழர் பேரவையைச் சார்ந்த சிலர் பாளையங்கோட்டை இங்கிலீஷ் சர்ச்சில் உள்ள அவரது நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அதற்கு அவர்கள் கூறிய காரணம் ஆஷ் துரை சாதியத்துக்கு எதிராக செயல்பட்டவர் எனவும் வாஞ்சிநாதன் ஒரு சாதியவாதி என்பதாகும். இக் கருத்தை மறுத்துள்ள வாஞ்சி மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இக்கருத்தை மறுத்துள்ளனர்.

இது குறித்த உண்மை என்ன என்பதைத் தமிழ்நாட்டின் மூத்த ஆளுமைகள் ஆஷ் கொலை பற்றிச் சொன்ன கருத்தோடு ஆராய்வோம்:

வாலாசா வல்லவன்

வாலாசா வல்லவன் எழுதியுள்ள 'திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்' என்ற புத்தகத்தில் ஆஷ் துரையைக் கொலை செய்த வாஞ்சி அய்யர் பற்றி சொல்கிறபோது,

“ஆஷ் துரையைக் கொலை செய்ய வ.வே‌.சு அய்யர், வாஞ்சி அய்யருக்கு ஒரு மாதம் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தார்” என்று குறிப்பிடுகிறார்.

ஆஷ் துரையைச் சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என்பது பாரதியாருக்கு தெரிந்திருக்கிறது. 7.6 1911 அன்று ஆஷ் ஐக் கொலை செய்துவிட்டு தன்னையே சுட்டுக் கொண்டு இறந்த வாஞ்சி அய்யரின் சட்டையில் பாரதியின் 'மறவன்' பாட்டு என்ற காகிதமும் ஒரு கடிதமும் இருந்ததாகவும், எனவே இக்கொலைக்கு பாரதியாரும் உடந்தை என அரசு குற்றம் சாட்டியது. பாரதியைப் பிடித்துக் கொடுப்பவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு என்று அரசு அறிவித்திருந்தது.

‘ஆஷ் துரையை ஏன் சுட்டேன்?’ என்ற வாஞ்சி அய்யரின் கடிதத்தில், “ஆங்கில சத்துருக்கள்(விரோதிகள்) நமது தேசத்தை ஆக்ரமித்து கொண்டு சனாதான (நால்வர்ண) தர்மத்தை அழித்து வருகிறார்கள். இந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தை, கேவலம் மாட்டிறைச்சி சாப்பிடும் மிலேச்சன் ஆள்கிறான். ஆகையாலே சுட்டேன்” என்று வாஞ்சி அய்யர் கடிதம் சொல்கிறதாம்.

எஸ் ராமகிருஷ்ணன்

சாதியால், வர்ணத்தால், பிளவுண்டு இருக்கும் நாட்டையே வாஞ்சி அய்யர் விரும்பியதாகவும் அதற்கு கேடு விளைவித்த ஆங்கிலேயனைச் சுட்டுக் கொன்றதாக இந்தப் புத்தகம் தெரிவிக்கிறது.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'எனது இந்தியா' புத்தகத்தில், ஆஷ் அதிகார வெறியராக இருந்தார். குற்றாலத்தில் காலை நேரத்தில் ஆங்கிலேயர் மட்டுமே இரண்டு மணி நேரம் குளிப்பதற்கு அனுமதி! இந்தியருக்கு அனுமதி இல்லை என்று உத்தரவிட்டாராம்.( பார்ப்பன சாதி இந்துக்களால் குற்றாலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக்கு இந்தியா சுதந்திரம் அடையும் வரை குளிக்க அனுமதி இல்லை என்ற நிலையே நீடித்தது)

ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு இந்தியாவில் முடிசூட்டு விழா திட்டமிடப்பட்டது சுதேசிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், நீலகண்ட பிரம்மச்சாரி சதித்திட்டம் வகுத்து வாஞ்சி அய்யர் மூலம் ஆஷ் துரையைக் கொலை செய்தார்கள் என்று எழுதியுள்ளார்.

ஆஷ் துரையை வாஞ்சி அய்யர் கொலை செய்தது நியாயம் தான் என்ற அடிப்படையில் எஸ்.ரா கருத்து இருக்கிறது.

பேரா.சுப.வீரபாண்டியன்

ஒரு யூடியூப் காணொளியில் பேரா.சுபவீ'யிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. வாஞ்சிநாதன் சாதி வெறியரா? ஆஷ் துரையை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் ஏன் வாஞ்சிநாதனை ஏற்க மறுக்கிறீர்கள் என் கேட்க, அதற்கு பதிலளித்த சுபவீ:

“ஆஷ் பற்றிய வேறுபட்ட தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

இரண்டு தரப்பினரின் தகவல்கள் அந்த தகவல்கள் இருக்கின்றன.

ரகபி என்பவர் எழுதிய புத்தகத்தில் வாஞ்சிநாதன் ஒரு சுதந்திர போராட்டத் தியாகி என்று எழுதியுள்ளார். அடுத்து திருச்சி செல்வேந்திரன் எழுதியுள்ள புத்தகத்தில் வாஞ்சிநாதன் ஒரு பார்ப்பன வெறியன் என்று எழுதியுள்ளார். அடுத்ததாக ஆ. சிவசுப்பிரமணியம், இரா வேங்கடாஜலபதி (ஆஷ் அடிச்சுவற்றில்) போன்றவர்களும் ஆஷ் கொலையைப் பற்றி புத்தகம் எழுதியுள்ளார்கள்.

ஆஷ் கொலையைப் பற்றி சொல்வதற்கு முன் பாலகங்காதர திலகரை பற்றிப் பார்ப்போம். திலகர் இந்திய சுதந்திரத்திற்கு முற்போக்கான பாத்திரம் வகித்தார், அதுவே சமூக மாற்றம் எனும் கோணத்தில் பிற்போக்குத்தனமே அவர் கருத்தாக இருந்தது என்பதை அவர் வரலாற்றை படித்தவர்களுக்கு தெரியும். தராசு தட்டைக் கையில் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஏன் படிக்க வருகிறீர்கள் என்று கேட்டவர் தான் திலகர்.

சமூக விடுதலை இல்லாமல் தேச விடுதலையை மட்டுமே முன்னிறுத்திய திலகர் போல தான் நான் வாஞ்சிநாதனையும் பார்க்கிறேன்.

ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த கருவுற்ற பெண்ணை மருத்துவமனைக்கு அக்ரஹாரம் வழியாக அழைத்துக் கொண்டு போகும் போது அதை பார்ப்பனர்கள் தடுக்கிறார்கள். ஆஷ் இடைமறித்து, “நான் வருகிறேன்! அக்ரஹாரம் வழியாக கொண்டுபோங்கள்! யார் தடுக்கிறார்கள் பார்க்கலாம்” என்றதால் பார்ப்பனர்களுக்கு அவர் மீது தீராத கோபம் ஏற்பட்டுள்ளது.

வாஞ்சிநாதன் பார்ப்பன சனாதன எண்ணம் கொண்டவர். அதை மறுக்க முடியாது. விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் இருந்திருக்கலாம். ஆனால் சாதிய ஏற்றத்தாழ்வில் உறுதியாக பற்று கொண்டு இருந்தவரை நம்மால் கொண்டாட முடியாது”.

பேரா‌.கருணானந்தன்

ஆஷ் கொலை (அ) திருநெல்வேலி சதி வழக்கு எனப்படும் இவ்வழக்கில் பார்ப்பனர்களின் ஆங்கிலேய எதிர்ப்புக்கு முக்கியமான காரணம் ஆங்கிலேயர்கள் சனாதனத்தை அழிக்கிறார்கள் என்பதே. ஆஷ் துரை கொலை வழக்கில் வா.உ.சி. க்கு எந்த சம்பந்தமும் இல்லை. வா.உ.சி. சிறைச்சாலை சென்று வந்த பின் அவருக்கு மாதந்தோறும் உதவித்தொகை அளித்தது ஆங்கிலேய கவர்னர் தான்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரை அக்ரஹாரம் வழியாக ஆஷ் துரையின் மனைவி தன்னுடைய சாரட்டு வண்டியில் கூட்டிச் சென்றார். இதற்குப் பிறகு தங்களுடைய இடத்தை அசுத்தப்படுத்தி விட்டதாக பார்ப்பனர்கள் கூக்குரல் இட்டனர். இது போன்ற தலித் விடுதலைச் செயல்களை சனாதன எதிர்ப்பாக பார்ப்பனர்கள் நிறுவ முயன்றனர்.

இப்பின்னணியில் தான் ஆஷ்துரை கொல்லப்பட்டார் என்பதற்கான வலிமையான ஆதாரங்கள் உள்ளன. இந்திய சுதந்திரப் போராட்டத்தை, சுதந்திரப் போராட்டம் என்பதைவிடவும் சனாதன மீட்புப் போராட்டம் என்றுதான் பார்ப்பனர்கள் கருதினர்.

1915க்கு முன் நிகழ்ந்த பல்வேறு கலகங்களும் போராட்டங்களும், ஆங்கிலேயர்கள் சமூகக் கட்டமைப்பையும் சனாதனத்தையும் மீறுகின்றார்கள் என்ற காரணத்தை ஒட்டியே நடந்தேறின.

Pin It